ஊழலில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

ஊழலில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்

சி.எம்.எஸ். இந்தியா என்ற நிறுவனம் ‘ஊழல் ஆய்வு 2018’ என்ற தலைப்பில் பல மாநிலங்களில் உள்ள ஊழல் குறித்து ஒரு ஆய்வை நடத்தியது. இதில் தமிழ்நாடு முதல் இடத்திலும், தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான தெலுங்கானா இரண்டாவது இடத்திலும், இன்னொரு அண்டை மாநிலமான ஆந்திரா நான்காவது இடத்திலும் உள்ளன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சி.எம்.எஸ். இந்தியா நிறுவன அதிகாரி அலோக் ஸ்ரீ வந்தவா ‘அரசு சேவைகளை பொது மக்கள் பெறுவதில் நிலவும் ஊழல் குறித்து நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

இது எங்கள் நிறுவனத்தின் 12வது ஆய்வாகும். அந்த ஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மாநிலங்கள் வரிசைப் படுத்தப் பட்டுள்ளன. அதில் தமிழ்நாட்டில் ஊழல் அதிகரித்து முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன. எனவே இந்த மாநிலங்கள் ஊழலை கட்டுப் படுத்த அரசு ஏஜென்ஸிகளை முடுக்கி விட வேண்டும். குஜராத், பஞ்சாப் மாநிலங்களிலும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் மிக மோசமாகவே உள்ளன.

ராஜஸ்தான், கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்கள் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகின்றன. மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், பீகார், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வசிக்கும் மக்கள் ஊழலை எதிர்ப்பதில் தீவிரம் காட்டுகின்றனர். ஆந்திரா, மேற்கு வங்கம், கர்நாடகா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வசிக்கும் மக்கள் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் குறைந்த அளவே ஈடுபடுகின்றன. கடந்த ஓராண்டில் அரசு சேவைகளைப் பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது என்று தெலுங்கானாவில் உள்ள 73 சதவீத குடும்பங்கள் தெரிவித்தன.     

நாடு முழுவதும் அரசு சேவைகளைப் பெறுவதற்கு லஞ்சம் கேட்கும் நிலை அதிகரித்துள்ளது. அல்லது அதே நிலை நீடிக்கிறது என 75 சதவீதம் பேர் கூறியுள்ளனர். குறிப்பாக போக்குவரத்து, காவல்துறை, வீட்டு வசதி, நில ஆவணம், சுகாதாரம், மருத்துவமனை போன்ற இடங்களில் தான் ஊழல் அதிகமாக நடைபெறுகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆதார் அட்டை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக 7 சதவீதம் பேரும், வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக 3 சதவீதம் பேரும் தெரிவித்தனர்’ என்றார். இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் ஊழல் அதிகமாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

இந்தியாவில் 29 மாநிலங்களும், 6 மத்திய ஆட்சிப் பகுதிகளும், தேசிய தலைநகரப் பகுதியாக டெல்லியும் உள்ளன. இதில் 12 மாநிலங்களைத் தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் ஊழலை ஒழிக்கும் லோக் ஆயுக்தா அமைப்பு உள்ளது. இந்த லோக் ஆயுக்தா அமைப்பு இல்லாத மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். லோக் ஆயுக்தா அமைப்பு இல்லாத 10 மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டம் இயற்றப்படாத இரண்டே இரண்டு மாநிலங்கள் தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர் மட்டுமே! குறித்த காலத்தில் அரசு சேவைகளை பொது மக்கள் பெறுவதற்கான சேவை பெறும் உரிமைச் சட்டம் இந்தியாவில் 18 மாநிலங்களில் உள்ளன.

இந்த சட்டம் அமலில் இல்லாத மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். எனவே தமிழ்நாட்டில் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை கொண்டு வந்து, அரசு அதிகாரிகளின் ஊழல்களை விசாரித்து தண்டனை தரும் லோக் ஆயுக்தா அமைப்பையும் தமிழ்நாட்டில் அமைத்து விட்டால் நிச்சயம் ஊழல் குறையும். வருகிற 29ஆம் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது. ஜூலை 10ஆம் தேதிக்குள் தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்பட வேண்டும் என உச்சநீதி மன்றம் கெடு விதித்துள்ளது. எனவே தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப் பட்டு, லோக் ஆயுக்தா அமைப்பும் ஏற்படுத்தப் பட வேண்டும். அதோடு பிற மாநிலங்களில் உள்ளது போல் சேவை பெறும் உரிமைச் சட்டமும் கொண்டு வர வேண்டும் என தமிழக மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

தமிழக அரசு தமிழக மக்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றி, இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த மாநிலம் தமிழகம் தான் என்ற இழிவை அகற்ற முன் வருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Source : unavu ( 25/05/18 )