ஊது பத்தி தயாரிப்பது, விற்பது கூடுமா?
பீடி, சிகரெட், பான்பராக் போன்றவை உடல் நலத்திற்குக் கேடு விளைவிப்பவை என்பதால் அவற்றைத் தயாரிப்பதோ, விற்பதோ கூடாது என்கிறோம். இது போல் ஊது பத்திகள் பெரும்பாலும் கோவில்கள், சர்ச்சுகள், தர்காக்கள் போன்றவற்றில் ஆராதனை களுக்காகவே பயன் படுத்தப் படுகின்றன. எனவே ஊது பத்திகள் தயாரித்தல், விற்பனை செய்தல் போன்றவை கூடுமா?
பதில்
கூடும்
ஹராமான பொருட்களை விற்பதும் தடுக்கப்பட்டது தான் என்பதில் சந்தேகமில்லை. உதாரணமாக பன்றி இறைச்சியை எடுத்துக் கொள்வோம். இதை பயன்படுத்துவது எப்படி ஹராமோ அது போல் விற்பதும் ஹராம் தான்.
ஆனால் ஊது பத்தியைப் பொறுத்த வரை அது ஹராமான பொருள் அல்ல! அது ஒரு நறுமணப் பொருள்! அதை ஆராதனைக்காகப் பயன்படுத்துவதால் அந்தப் பொருளே ஹராமாகி விடாது. வீடுகளில் நறுமணத்திற்காக எத்தனையோ பேர் ஊது பத்தி கொளுத்தி வைக்கின்றார்கள். எனவே பெரும்பாலும் ஆராதனைக்குத் தான் பயன்படுகின்றது என்று கூறி ஊது பத்தி விற்பனையைத் தடை செய்ய மார்க்கத்தில் ஆதாரம் இல்லை.
ஒரு நல்ல பொருள் கெட்ட செயல்களுக்குப் பயன்படுகிறது என்ற காரணத்திற்காக அந்தப் பொருளையே தடை செய்ய முடியாது.
டி.வி., வீடியோ என்று எத்தனையோ உதாரணங்களைக் காட்டலாம். இந்தப் பொருட்களின் பெரும்பாலான உபயோகம் தவறான செயல்களுக்காக இருந்தாலும் நல்ல காரியங்களுக்கும் பயன்படுவதால் அவற்றைத் தயாரிப்பதோ விற்பதோ தடுக்கப்பட்டது என்று கூற முடியாது. அந்தப் பொருட்களை வாங்குபவன் அதைக் கெட்ட வழியில் பயன்படுத்தினால் அதற்காக விற்றவன் மீது எந்தக் குற்றமும் இல்லை.
பீடி, சிகரெட், பான்பராக் போன்றவற்றை ஊது பத்தியுடன் ஒப்பிட முடியாது. இந்தப் பொருட்களை நல்ல வழியில் பயன்படுத்துகின்றேன் என்று யாரும் கூற மாட்டார்கள். அந்தப் பொருட்களே தீமை விளைவிக்கும் பொருட்களாகும். எனவே இவற்றை ஊது பத்தியுடன் ஒப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.