ஊதி அணைக்க முடியாத ஜோதி
ஊதி அணைக்க முடியாத ஜோதி
எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! சகோதர, சகோதரிகளே!
இஸ்லாம் என்பது இறைவனால் மனித குலத்திற்கு அருட்கொடையாக வழங்கப்பட்ட மார்க்கம். அல்லாஹ் ஒருவனே என்றும் முஹம்மது நபி இறைவனின் தூதர் என்றும் நான் சாட்சி கூறுகிறேன். இறைவனின் அருள் மழையின் காரணமாக நாமெல்லாம் இங்கே அமர்ந்திருக்கிறோம்.
கத்தோலிக்க மதத்தின் தலைவரான போப் ஆண்டவர் என்று அழைக்கப் படும் போப் 16ஆம் பெனடிக்ட் தனது சொந்த நாடான ஜெர்மனிக்குச் சென்றிருந்த போது பவேரியா நகரிலுள்ள ரீஜன்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் உரையாற்றினார். அப்போது அவர் தனது உரையில், “இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம்” என்ற விஷக் கருத்தை அவிழ்த்து விட்டார். அதற்கு ஆதாரமாக 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பைசாந்திய மன்னர் இரண்டாம் மேனுவல் பலாயலோகஸ் என்பவர் இவ்வாறு கூறியதாக மேற்கோள் காட்டியிருக்கிறார்.
இஸ்லாத்தை நோக்கி போப் வீசியிருக்கும் இந்த விஷக் கணை ஒன்றும் புதிதல்ல! இஸ்லாத்தின் வளர்ச்சியை ஜீரணிக்க முடியாத கிறித்தவ உலகம் காலம் காலமாகக் கூறி வரும் குற்றச்சாட்டு தான். இதை அவர் காட்டியுள்ள மேற்கோளில் இருந்தே அறிந்து கொள்ளலாம். கிறித்தவம், யூதம் மற்றும் இந்து மதம் ஆகியவை பொதுவாக இஸ்லாத்தை அழிப்பதற்காக இந்த வாதத்தை அடிக்கடி எடுத்து வைக்கின்றன. ஆனாலும் இந்தப் பொய் வாதத்தால் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திட முடியவில்லை. இஸ்லாம் அத்தனை தடைகளையும் தாண்டி வேகமாக விரிந்து பரந்து வளர்ந்து கொண்டிருக்கின்றது. இதை செப்டம்பர் 26ஆம் தேதி ஹிந்து பத்திரிகை, “பன்மதக் கலந்துரையாடலுக்கு போப் அழைக்கிறார்” என்ற தலைப்பிட்டு, மதங்களின் வளர்ச்சி பற்றிய ஒரு வரைபடத்தை வெளியிட்டிருக்கின்றது.
இஸ்லாம் முழுமையடையும்
இதில் 1900 முதல் 2000 வரையிலான ஆண்டுகளில் இஸ்லாம் மற்றும் கிறித்தவர்களின் வளர்ச்சியை ஒப்பு நோக்கியுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 6 மடங்கு அதிகம் என்று குறிப்பிடுகின்றது. இதிலிருந்து இஸ்லாத்தின் வளர்ச்சியை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இதைத் தான் வல்ல அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிடுகின்றான்.
يُرِيْدُوْنَ اَنْ يُّطْفِــُٔــوْا نُوْرَ اللّٰهِ بِاَ فْوَاهِهِمْ وَيَاْبَى اللّٰهُ اِلَّاۤ اَنْ يُّتِمَّ نُوْرَهٗ وَلَوْ كَرِهَ الْـكٰفِرُوْنَ
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான்.
(அல்குர்ஆன்: 9:32) ➚
يُرِيْدُوْنَ لِيُطْفِــُٔـوْا نُوْرَ اللّٰهِ بِاَ فْوَاهِهِمْ وَاللّٰهُ مُتِمُّ نُوْرِهٖ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப் படுத்துபவன்.
(அல்குர்ஆன்: 61:8) ➚
இஸ்லாத்தில் நிர்ப்பந்தம் இல்லை
செப்டம்பர் 11ல் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட பிறகு, இஸ்லாம் ஒரு வன்முறை மார்க்கம் என்ற கருத்து பரப்பப்பட்ட பிறகும் இஸ்லாம் இன்று மக்கள் மத்தியில் மிக வேகமாகப் பரவி வருகின்றது. இஸ்லாம் தன்னகத்தே கொண்டிருக்கும் அழகான, அறிவுப் பூர்வமான, அற்புதமான கொள்கை மற்றும் செயல்பாடுகள் அடிப்படையில் தான் இஸ்லாத்தின் வளர்ச்சியே தவிர இந்த மார்க்கத்தில் நிர்ப்பந்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெளிவாகவே திருக்குர்ஆன் பிரகடனப்படுத்துகின்றது.
இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன். (அல்குர்ஆன்: 2:256) ➚
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற குற்றச்சாட்டுக்கு இவ்வசனம் தெளிவாக விடையளிக்கின்றது.
وَقُلِ الْحَـقُّ مِنْ رَّبِّكُمْفَمَنْ شَآءَ فَلْيُؤْمِنْ وَّمَنْ شَآءَ فَلْيَكْفُرْ ۙاِنَّاۤ اَعْتَدْنَا لِلظّٰلِمِيْنَ نَارًا ۙ اَحَاطَ بِهِمْ سُرَادِقُهَا ؕ وَاِنْ يَّسْتَغِيْثُوْا يُغَاثُوْا بِمَآءٍ كَالْمُهْلِ يَشْوِى الْوُجُوْهَؕ بِئْسَ الشَّرَابُ وَسَآءَتْ مُرْتَفَقًا
“இவ்வுண்மை உங்கள் இறைவனிடமிருந்து உள்ளது” என்று (முஹம்மதே) கூறுவீராக! விரும்பியவர் நம்பட்டும்! விரும்பியவர் மறுக்கட்டும். அநீதி இழைத்தோருக்கு நரகத்தை நாம் தயாரித்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும். அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கும் உருக்கிய செம்பு போன்ற கொதி நீர் வழங்கப்படும். அது கெட்ட பானம். கெட்ட தங்குமிடம். (அல்குர்ஆன்: 18:29) ➚
“இந்த உண்மை இறைவனிடமிருந்து வந்ததாகும். விரும்பியவர் இதை நம்பட்டும். விரும்பியர் இதை நம்பாதிருக்கலாம். நம்பாதவர்கள் மறுமையில் இறைவன் முன்னே குற்றவாளியாவார்கள்” என்பது தான் இவ்வசனத்தின் கருத்தாகும்.
இந்தப் பிரகடனம் இஸ்லாம் பலவீனமாக இருந்த காலத்தில் செய்யப்பட்டதன்று! இஸ்லாத்தின் கை ஓங்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைமையில் ஆட்சி உருவான பின் செய்யப்பட்ட பிரகடனம்.
இது போன்ற பிரகடனம் கீழ்க்காணும் வசனங்கள் மூலமும் செய்யப்படுகின்றது.
فَاِنْ حَآجُّوْكَ فَقُلْ اَسْلَمْتُ وَجْهِىَ لِلّٰهِ وَمَنِ اتَّبَعَنِؕ وَقُل لِّلَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ وَالْاُمِّيّٖنَ ءَاَسْلَمْتُمْؕ فَاِنْ اَسْلَمُوْا فَقَدِ اهْتَدَوْا ۚ وَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَيْكَ الْبَلٰغُ ؕ وَاللّٰهُ بَصِيْرٌۢ بِالْعِبَادِ
(முஹம்மதே!) அவர்கள் உம்மிடம் விதண்டா வாதம் செய்வார்களானால் “என் முகத்தை அல்லாஹ்வுக்கே வழிபடச் செய்து விட்டேன். என்னைப் பின்பற்றியோரும் (இவ்வாறே செய்து விட்டனர்)” எனக் கூறுவீராக! வேதம் கொடுக்கப் பட்டோரிடமும், எழுதப் படிக்கத் தெரியாதோரிடமும் “இஸ்லாத்தை ஏற்கிறீர்களா?” என்று கேட்பீராக! அவர்கள் இஸ்லாத்தை ஏற்றால் நேர் வழி பெற்றனர். புறக்கணித்தால் எடுத்துச் சொல்வதே உமக்குக் கடமை. அல்லாஹ் அடியார்களைப் பார்ப்பவன். (அல்குர்ஆன்: 3:20) ➚
وَاِنْ اَحَدٌ مِّنَ الْمُشْرِكِيْنَ اسْتَجَارَكَ فَاَجِرْهُ حَتّٰى يَسْمَعَ كَلَامَ اللّٰهِ ثُمَّ اَبْلِغْهُ مَاْمَنَهٗ ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْلَمُوْنَ
இணை கற்பிப்போரில் உம்மிடம் அடைக்கலம் தேடுபவர் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம். (அல்குர்ஆன்: 9:6) ➚
நடைமுறைப்படுத்தப் பட்ட சட்டம்
இவை வெறும் வெற்றுப் பிரகடனமாக இருக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் முழுமையாக நடைமுறைப்படுத்தப் பட்டன.
அவர்களின் ஆட்சியின் கீழ் யூதர்களும், கிறித்தவர்களும் சகல உரிமைகளும் பெற்று வாழ்ந்தனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன் யூதர் ஒருவரிடம் தமது கவச ஆடையை அடைமானம் வைத்து அதை மீட்காமலேயே மரணித்து விட்டார்கள்.
احمد
நாட்டின் ஆட்சித் தலைவர் அடைமானம் வைக்கக் கூடியவராகவும் சிறுபான்மை மதத்தவர் அடகு பிடிப்பவராகவும் இருந்திருக்கின்றனர் என்பதிலிருந்து சிறுபான்மை மதத்தினர் பெற்று வந்த சுதந்திரத்தை அறிந்து கொள்ளலாம்.
யூதப் பெண்ணொருத்தி நபி (ஸல்) அவர்களிடம் விஷம் கலந்த ஆட்டிறைச்சியை பொறித்துக் கொண்டு வந்தார். அதை நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள். உடனே அவள் பிடித்துக் கொண்டு வரப்பட்டாள். “நாங்கள் அவளைக் கொன்று விடவா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. “வேண்டாம்” என்று அவர்கள் பதிலளித்தார்கள். அந்த விஷத்தின் பாதிப்பை அவர்களது உள் வாயின் மேற்பகுதியில் நான் பார்த்தேன்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)(புகாரி: 2617)
வாள் அல்ல, மன்னிப்பும், கருணையுமே ஆயுதம்
பொதுவாகக் குற்றவியல் சட்டங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாட்சண்யமின்றி நடைமுறைப்படுத்துவார்கள். எந்தக் குற்றவாளியையும் நபிகள் நாயகத்தின் அரசு மன்னித்ததில்லை. அதே சமயத்தில் குற்றச் செயலால் பாதிக்கப்பட்டவர் மன்னித்தால் மட்டும் அரசும் அவரை மன்னிக்கும். இதுதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சி முறையாக இருந்தது.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப் பட்டவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம். எனவே அவர்கள் தமக்குச் செய்யப்பட்ட அநீதியை மன்னித்து விட்டதால் அப்பெண் தண்டிக்காது விடப்பட்டாள்.
ஆட்சித் தலைவருக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்யும் அளவுக்கு சிறுபான்மை சமூகத்தில் சிலர் இருந்த நிலையிலும் சிறுபான்மை மக்களுக்கு நபிகள் நாயகம் ஆட்சியில் எந்த அச்சுறுத்தலும் இருக்கவில்லை.
நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்ட போது அவர்களுடைய எதிரிகள் அனைவரும் அவர்கள் முன்னிலையில் நின்றார்கள். கருணை வடிவான நபி (ஸல்) அவர்கள் அவர்கள் அனைவருக்கும் மன்னிப்பு வழங்கி விட்டார்கள்.
நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையான ஹம்ஸா (ரலி) அவர்களை வஹ்ஷீ என்ற கருப்பு நிற அடிமை கொன்றார். பெருமானாருக்கு விருப்பமாக இருந்த ஹம்ஸா (ரலி) அவர்கள் கொலையுண்டதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
أَلاَ تُخْبِرُنَا بِقَتْلِ حَمْزَةَ قَالَ نَعَمْ إِنَّ حَمْزَةَ قَتَلَ طُعَيْمَةَ بْنَ عَدِيِّ بْنِ الْخِيَارِ بِبَدْرٍ فَقَالَ لِي مَوْلاَيَ جُبَيْرُ بْنُ مُطْعِمٍ إِنْ قَتَلْتَ حَمْزَةَ بِعَمِّي فَأَنْتَ حُرٌّ قَالَ فَلَمَّا أَنْ خَرَجَ النَّاسُ عَامَ عَيْنَيْنِ – وَعَيْنَيْنِ جَبَلٌ بِحِيَالِ أُحُدٍ بَيْنَهُ وَبَيْنَهُ وَادٍ – خَرَجْتُ مَعَ النَّاسِ إِلَى الْقِتَالِ فَلَمَّا اصْطَفُّوا لِلْقِتَالِ خَرَجَ سِبَاعٌ ، فَقَالَ : هَلْ مِنْ مُبَارِزٍ قَالَ فَخَرَجَ إِلَيْهِ حَمْزَةُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ فَقَالَ يَا سِبَاعُ يَا ابْنَ أُمِّ أَنْمَارٍ مُقَطِّعَةِ الْبُظُورِ أَتُحَادُّ اللَّهَ وَرَسُولَهُ صلى الله عليه وسلم قَالَ : ثُمَّ شَدَّ عَلَيْهِ فَكَانَ كَأَمْسِ الذَّاهِبِ قَالَ : وَكَمَنْتُ لِحَمْزَةَ تَحْتَ صَخْرَةٍ فَلَمَّا دَنَا مِنِّي رَمَيْتُهُ بِحَرْبَتِي فَأَضَعُهَا فِي ثُنَّتِهِ حَتَّى خَرَجَتْ مِنْ بَيْنِ وَرِكَيْهِ قَالَ : فَكَانَ ذَاكَ الْعَهْدَ بِهِ فَلَمَّا رَجَعَ النَّاسُ رَجَعْتُ مَعَهُمْ فَأَقَمْتُ بِمَكَّةَ حَتَّى فَشَا فِيهَا الإِسْلاَمُ ثُمَّ خَرَجْتُ إِلَى الطَّائِفِ فَأَرْسَلُوا إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم رَسُولاً فَقِيلَ لِي إِنَّهُ لاَ يَهِيجُ الرُّسُلَ قَالَ : فَخَرَجْتُ مَعَهُمْ حَتَّى قَدِمْتُ عَلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَلَمَّا رَآنِي قَالَ آنْتَ وَحْشِيٌّ قُلْتُ نَعَمْ قَالَ : أَنْتَ قَتَلْتَ حَمْزَةَ قُلْتُ قَدْ كَانَ مِنَ الأَمْرِ مَا بَلَغَكَ ، قَالَ : فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تُغَيِّبَ وَجْهَكَ عَنِّي قَالَ فَخَرَجْتُ فَلَمَّا قُبِضَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فَخَرَجَ مُسَيْلِمَةُ الْكَذَّابُ قُلْتُ لأَخْرُجَنَّ إِلَى مُسَيْلِمَةَ لَعَلِّي أَقْتُلُهُ فَأُكَافِئَ بِهِ حَمْزَةَ قَالَ : فَخَرَجْتُ مَعَ النَّاسِ فَكَانَ مِنْ أَمْرِهِ مَا كَانَ قَالَ : فَإِذَا رَجُلٌ قَائِمٌ فِي ثَلْمَةِ جِدَارٍ كَأَنَّهُ جَمَلٌ أَوْرَقُ ثَائِرُ الرَّأْسِ قَالَ : فَرَمَيْتُهُ بِحَرْبَتِي فَأَضَعُهَا بَيْنَ ثَدْيَيْهِ حَتَّى خَرَجَتْ مِنْ بَيْنِ كَتِفَيْهِ قَالَ : وَوَثَبَ إِلَيْهِ رَجُلٌ مِنَ الأَنْصَارِ فَضَرَبَهُ بِالسَّيْفِ عَلَى هَامَتِهِ قَالَ : قَالَ عَبْدُ اللهِ بْنُ الْفَضْلِ فَأَخْبَرَنِي سُلَيْمَانُ بْنُ يَسَارٍ أَنَّهُ سَمِعَ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ يَقُولُ فَقَالَتْ جَارِيَةٌ عَلَى ظَهْرِ بَيْتٍ وَا أَمِيرَ الْمُؤْمِنِينَ قَتَلَهُ الْعَبْدُ الأَسْوَدُ.
மக்காவை அவர்கள் கைப்பற்றிய போது வஹ்ஷீயும் பெருமானாருக்கு முன்னால் இருந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்து “நீ தான் வஹ்ஷீயா? ஹம்ஸாவைக் கொன்றவர் நீ தானா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்று கூறினார்.
வஹ்ஷீயைப் பார்க்கும் போதெல்லாம் ஹம்ஸா (ரலி) அவர்களின் ஞாபகம் வந்ததால் அவரிடத்தில் நபி (ஸல்) அவர்கள், “தயவு செய்து உங்கள் முகத்தை என்னிடத்தில் காட்டாமல் இருக்க முடியுமா?” என்று பணிவுடன் வேண்டிக் கொண்டார்கள். இதன் பின்பு வஹ்ஷீ இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டார்.
அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின் அதீ.(புகாரி: 4072)
நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையான ஹம்ஸா (ரலி) அவர்களை உஹதுப் போரில் கொடூரமாகக் கொன்றவர்களைக் கூட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மன்னித்தார்கள். அதுவும் மக்காவை வெற்றி கொண்டு, மாபெரும் தலைவராக, அரசராக இருந்த நேரத்தில் மன்னித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு போரை முடித்து விட்டுத் தம் தோழர்களுடன் வந்து கொண்டிருந்தார்கள். இளைப்பாறுவதற்காக ஒவ்வொருவரும் ஒரு மரத்தடியில் தங்கலானார்கள். நபி (ஸல்) அவர்கள் தனியாகச் சென்று ஒரு மரத்திற்கு அடியில் இளைப்பாறினார்கள்.
திடீரென்று ஒருவர் நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்வதற்காகத் தன் கையில் வாளை எடுத்துக் கொண்டு, “முஹம்மதே! இப்போது உன்னை யார் காப்பாற்றுவார்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் காப்பாற்றுவான்” என்று கூறினார்கள்.
பின்பு அவர் கையில் இருந்த வாள் கீழே விழுந்தவுடன் நபியவர்கள் அந்த வாளை எடுத்துக் கொண்டு, “இப்போது உன்னை யார் காப்பாற்றுவார்? வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறேதுவும் கடவுள் இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறாயா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு அவர், “இல்லை! இதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஆனால் இனிமேல் உங்களுக்கு எதிராக நான் போரிட மாட்டேன் என்று உறுதிமொழி அளிக்கிறேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள் அவரைத் தண்டிக்காமல் விட்டு விட்டார்கள். அந்த மனிதர் தன்னுடைய தோழர்களிடத்தில் சென்று, “மக்களிலேயே மிகவும் சிறந்த ஒருவரிடமிருந்து நான் வந்திருக்கிறேன்” என்று கூறினார்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி). நூல்: அஹமத் 14401
கொலை செய்ய வந்தவரைத் தண்டிக்காமல் நபி (ஸல்) அவர்கள் மன்னித்து விட்டது அவர்களின் பரந்த மனப்பான்மையையும் அவர்கள் எதிரிகளிடத்தில் காட்டிய மனித நேயத்தையும் காட்டுகிறது.
அவர்கள் நினைத்திருந்தால் ஒரு சப்தமிட்டு அனைத்துத் தோழர் களையும் வரவழைத்து, அவரை ஒரு கை பார்த்திருக்கலாம். ஆனால் நபியவர்கள் அப்படிச் செய்யவில்லை. இஸ்லாத்தை அவர் ஏற்க மறுத்த போதிலும் அவரைத் தண்டிக்கவில்லை. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்று கூறுபவர்களுக்கு இது சாட்டையடியாக அமைந்துள்ளது.
சுமாமாவை ஈர்த்த இஸ்லாம்
தன்னை எதிர்ப்பவர்களை எதிர்த்துத் தான் இஸ்லாம் போரிட்டதே தவிர, போரில் ஈடுபடாத அப்பாவிகளைத் தாக்குவதை இஸ்லாம் விரும்பவில்லை.
நபி (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் பனூ ஹனீஃபா குலத்தைச் சேர்ந்த சுமாமா பின் உஸால் என்றழைக்கப்படும் மனிதர் ஒருவரைக் (கைது செய்து) கொண்டு வந்தார்கள். பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப் போட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள், அவரிடம் வந்து, “நீ என்ன கருதுகின்றாய்? சுமாமாவே!” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “நான் நல்லதையே கருதுகின்றேன். முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப் பழி வாங்க வேண்டிய ஒருவனையே கொன்றீர்கள். (என்னை மன்னித்து) நீங்கள் உபகாரம் செய்தால் நன்றி செய்யக் கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கின்றீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் அதில் நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள்” என்று பதிலளித்தார். எனவே அவர் விடப்பட்டார். மறுநாள் வந்த போது, அவரிடம், “சுமாமாவே! நீ என்ன கருதுகின்றாய்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், “நான் ஏற்கனவே தங்களிடம் சொன்னதைத் தான் கருதுகின்றேன்” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், இஸ்லாத்தில் நிர்ப்பந்தம் இல்லைவிழ்த்து விடுங்கள்” என்று கூறினார்கள்.
உடனே சுமாமா, பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்து விட்டுப் பள்ளிவாசலுக்கு வந்து, “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு எவருமில்லை என்று நான் உறுதி கூறுகின்றேன். மேலும், முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் உறுதி கூறுகின்றேன்” என்று மொழிந்தார்.
பிறகு, “முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் முகத்தை விட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால் (இன்று) உங்களுடைய முகம் எல்லா முகங்களை விடவும் பிரியமானதாக ஆகி விட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மார்க்கத்தை விட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால் இன்று மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆகி விட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் ஊரை விட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால் இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகி விட்டது. உங்கள் குதிரைப் படையினர் என்னைப் பிடித்துக் கொண்டு விட்டனர்” என்று கூறிவிட்டு, “நான் இப்போது (மக்காவிற்குச் சென்று) உம்ராச் செய்ய விரும்புகின்றேன். நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?” என்று கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி உம்ராச் செய்ய அனுமதி அளித்தார்கள். அவர் மக்காவிற்குச் சென்ற போது, ஒருவர் அவரிடம், “நீ மதம் மாறி விட்டாயா?” என்று கேட்டார். அதற்கு சுமாமா (ரலி), “அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை. மாறாக, அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறி விட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் அனுமதி தரும் வரை (எனது நாடான) யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட (மக்காவாசிகளான) உங்களுக்கு வராது” என்று சொன்னார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).(புகாரி: 4372)
சுமாமா என்பவர் போர்க் கைதியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படுகின்றார். தனியாளாக வந்து இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் மாட்டிக் கொள்கின்றார். இந்த நேரத்தில் நபிகள் நாயகம் நினைத்திருந்தால், அவரை இஸ்லாத்தில் இணையுமாறு கட்டாயப் படுத்தியிருக்கலாம். ஆனால் அப்படி எதையும் செய்யவில்லை. அவரை மன்னித்து விடுகின்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த மன்னிக்கும் மனப்பான்மையால் ஈர்க்கப்பட்ட அந்த மனிதர் இஸ்லாத்தைத் தழுவுகின்றார். அதுவரை உலகத்திலேயே அதிக வெறுப்புக்கு உரியவராக நபி (ஸல்) அவர்களைத் தான் சுமாமா கருதியிருந்தார். ஆனால் இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, உலகத்திலேயே மிகவும் விருப்பத்திற்கு உரியவராக மாறி விட்டார்கள் என்ற செய்தியையும் சுமாமா அவர்களே தெரிவிக்கின்றார்கள்.
இஸ்லாத்தின் கொள்கைகளையும், முஸ்லிம்களின் நடத்தையையும் பார்த்து, இஸ்லாத்திற்கு வந்தவர்கள் தான் அதிகமே தவிர, நிர்ப்பந்தத்தால் யாரும் இஸ்லாத்தை ஏற்கவில்லை.
எந்த நல்லறமாயினும் உளப் பூர்வமாகச் செய்யப்பட்டால் மட்டுமே அதற்கான பயனை அடைய முடியும் என்பதும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று.
இஸ்லாத்தை உளப்பூர்வமாக ஏற்றுக் கொள்பவர், தான் செய்யும் நல்லறங்களை வேறு நோக்கங்களுக்காகச் செய்தால், பிறர் மெச்ச வேண்டும் என்பதற்காகச் செய்தால் அதற்கு இறைவனிடம் எந்த நன்மையும் கிடைக்காது என்று நபிகள் நாயகத்தின் ஏராளமான பொன் மொழிகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறிருக்க கட்டாயப்படுத்தி ஒருவரை மார்க்கத்தில் சேர்ப்பதை எவ்வாறு இறைவன் ஏற்றுக் கொள்வான்? அவனது இஸ்லாம் இறைவனிடத்தில் எவ்வாறு அங்கீகரிக்கப்படும் என்பதைச் சிந்திப்பவர்கள் கட்டாய மத மாற்றத்துக்கும் இஸ்லாத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை அறியலாம்.
பொறாமையினால் சொன்ன அவதூறு
இஸ்லாமிய மார்க்கத்தின் அபார வளர்ச்சியால் கலகலத்துப் போன மேலை நாட்டுக் கிறித்தவர்கள், இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டது என்ற அவதூறுப் பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்தனர்.
நாட்டின் விடுதலைக்காக நடந்த போரில் இந்து மற்றும் முஸ்லிம் சமுதாயங்களைப் பிரித்தாள்வதற்காக இதே குற்றச்சாட்டைச் சுமத்திய வர்களும் இவர்களே!
இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்களில் பெரும்பாலோர் இஸ்லாத்தின் கடமைகளை நிறைவேற்றாதவர்கள். இஸ்லாமிய நெறியில் வாழாதவர்கள். தங்கள் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இந்து மதக் கலாச்சாரத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டனர். தாங்களே முஸ்லிம்களாக வாழாதவர்கள் பிறரை எவ்வாறு முஸ்லிம்களாக மதம் மாற்றியிருப்பார்கள்?
ஆனாலும் வெள்ளையர்கள் தூவிய இந்த நச்சுக் கருத்துத் தான் சங் பரிவாரங்கள் தங்களுக்கு ஆள் பிடிக்கப் பயன்படுத்தும் ஒரே வலையாக அமைந்துள்ளது.
மேற்கத்திய கிறித்தவர்களும், இங்குள்ள சங்பரிவார்களும் செய்து வரும் இந்தப் பொய்ப் பிரச்சாரத்திற்கும் இஸ்லாத்திற்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்லை என்பதை மேலே நாம் எடுத்துக் காட்டிய சம்பவங்களில் இருந்தும், இன்னும் இது போன்ற ஏராளமான செய்திகளிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.
அனையா ஜோதி
என்ன தான் இவர்கள் தங்கள் அவதூறுப் பிரச்சாரத்தின் மூலம் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து விட வேண்டும் என்று நினைத்தாலும் இந்த இஸ்லாமிய ஜோதி யாராலும் அணைத்து விட முடியாத அணையா விளக்கு என்பதை போப் தலைமை தாங்கும் கிறித்தவ உலகத்திற்கும் மற்ற சிந்தனை உலகத்திற்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.