உழைப்பதின் சிறப்புகள்!

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

உழைப்பதின் சிறப்புகள்! 

நமக்கு கிடைத்துள்ள இஸ்லாமிய மார்க்கம் வாழ்வின் அனைத்து துறைகளிலும் வழிகாட்டியாக அமைந்துள்ளது. அதன் போதனைகள் இம்மைக்கும் மறுமைக்கும் பயனளிக்கும் விதத்தில் அமைந்துள்ளன. உலகத்தில் நிம்மதியாக வாழ்வதற்கு இஸ்லாமிய மார்க்கம் அனைத்து வழிகளையும் காட்டியுள்ளது. வெறும் இறைவனுக்கு செய்ய வேண்டிய வணக்கங்களை மட்டும் இஸ்லாமிய மார்க்கம் போதிக்காமல், ஒரு நிம்மதியான குடும்ப வாழ்க்கைக்கு தேவையான அனைத்து உபதேசங்களையும் வழங்கியுள்ளது.

நிம்மதியான குடும்ப வாழ்விற்கு பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. பொருளாதாரத்தை ஈட்டுவதற்கு உழைப்பதை இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துகிறது. உழைப்பின் சிறப்பைப் பற்றி வல்ல அல்லாஹ் தன் திருமறைக் குர்ஆனில்…

فَاِذَا قُضِيَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوْا فِى الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللّٰهِ وَاذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ

“தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்”

(அல்குர்ஆன்: 62:10)

நல்லடியார்களைப்பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறும் போது, அவர்கள் அவனை எப்போதும் நினைவு கூறுபவர்களாக மட்டுமின்றி, பொருளாதாரத்தை ஈட்ட வியபாரத்தையும் செய்து கொண்டு, இறைவனின் கடமைகளையும் ஒரு சேர செய்வார்கள் எனக் கூறுகிறான்.

رِجَالٌ ۙ لَّا تُلْهِيْهِمْ تِجَارَةٌ وَّلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللّٰهِ وَاِقَامِ الصَّلٰوةِ وَ اِيْتَآءِ الزَّكٰوةِ  ۙ يَخَافُوْنَ يَوْمًا تَتَقَلَّبُ فِيْهِ الْقُلُوْبُ وَالْاَبْصَارُ

“வணிகமோ, வர்த்தகமோ அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை நிலை நாட்டுவதை விட்டும், ஸகாத் கொடுப்பதை விட்டும் திசை திருப்பாது. பார்வைகளும் உள்ளங்களும் தடுமாறும் நாளை அவர்கள் அஞ்சுவார்கள்”

(அல்குர்ஆன்: 24:37)

அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பதற்கு கூட உழைத்து சம்பாதித்து அதில்தான் செலவிட வேண்டும் என அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَنْفِقُوْا مِنْ طَيِّبٰتِ مَا كَسَبْتُمْ وَمِمَّاۤ اَخْرَجْنَا لَـكُمْ مِّنَ الْاَرْضِ وَلَا تَيَمَّمُوا الْخَبِيْثَ مِنْهُ تُنْفِقُوْنَ وَلَسْتُمْ بِاٰخِذِيْهِ اِلَّاۤ اَنْ تُغْمِضُوْا فِيْهِ‌ؕ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ غَنِىٌّ حَمِيْدٌ

“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல் வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவையற்றவன், புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!”

(அல்குர்ஆன்: 2:267)

مَنْ تَصَدَّقَ بِعَدْلِ تَمْرَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ، وَلاَ يَقْبَلُ اللَّهُ إِلَّا الطَّيِّبَ، وَإِنَّ اللَّهَ يَتَقَبَّلُهَا بِيَمِينِهِ، ثُمَّ يُرَبِّيهَا لِصَاحِبِهِ، كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ، حَتَّى تَكُونَ مِثْلَ الجَبَلِ

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்…
“அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக்கொள்வதில்லை. யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ, அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலக்கரத்தால் ஏற்றுக்கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்துவிடுவான்”

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: (புகாரி: 1410) 

அல்லாஹ்வின் கட்டளைகளை மக்களுக்கு போதிக்க வந்த நபிமார்களும் கூட உழைத்து தான் உண்டு இருக்கிறார்கள்.

«مَا بَعَثَ اللَّهُ نَبِيًّا إِلَّا رَعَى الغَنَمَ»، فَقَالَ أَصْحَابُهُ: وَأَنْتَ؟ فَقَالَ: «نَعَمْ، كُنْتُ أَرْعَاهَا عَلَى قَرَارِيطَ لِأَهْلِ مَكَّةَ»

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது…
“அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும் ஆடு மேய்க்காமல் இருந்ததில்லை!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள்,“நீங்களுமா?” என்று கேட்டார்கள். “ஆம். மக்காவாசிகளின் சில கீராத் கூலிக்காக ஆடு மேய்ப்பவனாக நான் இருந்தேன்!” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

(நூல்: (புகாரி: 2262) )

தம்முடைய தேவைகளுக்காக பிறரிடம் கையேந்துவதை விட உழைத்து உண்பதை சிறப்பித்து காட்டுகிறது இஸ்லாமிய மார்க்கம்.

لَأَنْ يَحْتَطِبَ أَحَدُكُمْ حُزْمَةً عَلَى ظَهْرِهِ، خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَسْأَلَ أَحَدًا، فَيُعْطِيَهُ أَوْ يَمْنَعَهُ

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…
“பிறரிடம் யாசகம் கேட்பதைவிட ஒருவர் தமது முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து (விற்கச்) செல்வது சிறந்ததாகும். அவர் யாசிக்கும்போது யாரும் கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம்.”

(நூல்: (புகாரி: 2075))

لَأَنْ يَأْخُذَ أَحَدُكُمْ أَحْبُلًا، فَيَأْخُذَ حُزْمَةً مِنْ حَطَبٍ، فَيَبِيعَ، فَيَكُفَّ اللَّهُ بِهِ وَجْهَهُ، خَيْرٌ مِنْ أَنْ يَسْأَلَ النَّاسَ، أُعْطِيَ أَمْ مُنِعَ

“உங்களில் ஒருவர் ஒரு கயிற்றை எடுத்துக்கொண்டு தமது முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதைவிடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவருக்கு இழிவு ஏற்படாமல் தடுத்துவிடுவான். மக்கள் அவருக்குக் கொடுக்கவும் செய்யலாம் அல்லது மறுக்கவும் செய்யலாம்”

 (நூல்: (புகாரி: 2373))

مَا أَكَلَ أَحَدٌ طَعَامًا قَطُّ، خَيْرًا مِنْ أَنْ يَأْكُلَ مِنْ عَمَلِ يَدِهِ، وَإِنَّ نَبِيَّ اللَّهِ دَاوُدَ عَلَيْهِ السَّلاَمُ، كَانَ يَأْكُلُ مِنْ عَمَلِ يَدِهِ

“ஒருவர் தமது கையால் உழைத்து உண்பதைவிடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தமது கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தார்கள்”

அறிவிப்பவர்: மிக்தாம் (ரலி)
நூல்: (புகாரி: 2072) 

வல்ல அல்லாஹ்வை வணங்குகிறேன் என சொல்லிக்கொண்டு, குடும்பத்திற்காக உழைக்காமல் இருப்பதையும் இஸ்லாமிய மார்க்கம் வன்மையாக கண்டிக்கிறது. 

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ் (ரலி) அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘அப்துல்லாஹ்வே! நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே!’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்! இறைத்தூதர் அவர்களே!’ என்றேன். நபி (ஸல்) அவர்கள் ‘இனி அவ்வாறு செய்யாதீர்!

(சில நாள்கள்) நோன்பு வையும்; (சில நாள்கள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன். உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன். உம் மனைவிக்குச் செய் வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன. உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன!

ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!’ என்று கூறினார்கள். நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக் கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது! ‘

இறைத்தூதர் அவர்களே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!’ என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘தாவூத் நபி (அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதை விட அதிகமாக்க வேண்டாம்!’ என்றார்கள். தாவூத் நபி (அலை)யின் நோன்பு எது? என்று கேட்டேன். ‘வருடத்தில் பாதி நாள்கள்!’ என்றார்கள். 

(நூல்: (புகாரி: 1975) )

அதேபோல் குடும்பத்திற்கு உழைக்க கடல் கடந்து வந்து குடும்பத்தைப்பற்றி சிந்திக்காமலும் அவர்களுக்கு பொருளாதாரத்தை அனுப்பாமலும் அவர்களுடன் எவ்வித தொடர்பில்லாமலும், கேளிக்கைகளிலும், இஸ்லாம் தடை செய்த மது மற்றும் போதை பொருட்களுக்கு அடிமையாகி வாழ்க்கையை கழிப்பவர்கள் பின்வரும் நபிமொழிகளையாவது படித்து திருந்தி குடும்ப பொறுப்பை சரிவர நிறைவேற்ற சபதம் எடுக்க வேண்டும்.

قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَا حَقُّ زَوْجَةِ أَحَدِنَا عَلَيْهِ؟، قَالَ: «أَنْ تُطْعِمَهَا إِذَا طَعِمْتَ، وَتَكْسُوَهَا إِذَا اكْتَسَيْتَ، أَوِ اكْتَسَبْتَ، وَلَا تَضْرِبِ الْوَجْهَ، وَلَا تُقَبِّحْ، وَلَا تَهْجُرْ إِلَّا فِي الْبَيْتِ»

ஒரு மனிதர் நபியவர்களிடம் “மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?” என்று கேட்டார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும், நீ அணியும் போது அவளுக்கு அணிவிப்பதும், (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும், கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும் வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் (ரலி),
நூல்கள்: (அபூதாவூத்: 2142) (1830),(அஹ்மத்: 19162)

தன் பொறுப்பில் உள்ளவர்களை (கவனிக்காமல்) வீணாக்குவது அவன் பாவி என்பதற்குப் போதுமானதாகும்” என்று நபியவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி),
நூல்: (அபூதாவூத்: 1692) (1442)

குடும்பத்திற்காக உழைப்பவர்கள் தாம் ஈட்டும் பொருளாதாரம் ஹலாலானதா? மார்க்கம் அனுமதித்த வகையில்தான் பொருளாதாரத்தை ஈட்டுகிறோமா? என்பதையும் யோசிக்க வேண்டும். மார்க்கம் தடை செய்த வழிகளில் பொருளாதாரத்தை தேடினால் அதற்கு வல்ல அல்லாஹ் தண்டனை அளிப்பதுடன் நம்முடைய பிராத்தனைகளை ஏற்றுக்கொள்ள மாட்டான்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், 

“அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானதைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக் கொள்ளமாட்டான். அல்லாஹ் நபிமார்களுக்கு எதை ஏவினானோ அதையே முஃமின்களுக்கும் ஏவுகின்றான் என்று கூறி விட்டு

يٰۤـاَيُّهَا الرُّسُلُ كُلُوْا مِنَ الطَّيِّبٰتِ وَاعْمَلُوْا صَالِحًـا‌ ؕ اِنِّىْ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ

“தூதர்களே! தூய்மையானவற்றை உணணுங்கள்! நல்லறம்; செய்யுங்கள்! நீங்கள் செய்வதை நான் அறிந்தவன்”

(அல்குர்ஆன்: 23:51)

يٰٓاَ يُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا کُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَاشْكُرُوْا لِلّٰهِ اِنْ کُنْتُمْ اِيَّاهُ تَعْبُدُوْنَ

“நம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்!”

(அல்குர்ஆன்: 2:172)

ஆகிய வசனங்களை ஓதிக் காட்டினார்கள். பின்பு ஒரு மனிதரைப் பற்றி குறிப்பிட்டார்கள். “அவனோ நீண்ட தூரம் பயணத்தில் இருக்கின்றான். அவனுடைய தலை புழுதி படிந்து பரட்டையாக இருக்கின்றது. அவன் வானத்தின் பால் கைகளை உயர்த்தி எனது இறைவனே! எனது இறைவனே! என்று அழைக்கின்றான். அவனது ஆடை அவனது உணவு அவனது குடிப்பு ஆகிய அனைத்தும் ஹராமாக இருக்கின்றது. அவனே ஹராமில் மூழ்கி விட்டான். இந்த நிலையில் அவனது துஆ எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: (முஸ்லிம்: 1844) 

எனவே அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் காட்டிய வழியில் உழைத்து பொருளாதாரத்தை ஈட்டுவோம்! ஈருலகிலும் வெகுமதிகளைப் பெற வல்ல ரஹ்மான் துணை புரிவானாக!