உளூவினால் கிடைக்கும் உடனடியான பலன்கள்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

ஒருவர் உறக்கத்தை விட்டு எழுந்தவுடன் மீண்டும் உறங்கவேண்டும் என்ற சோர்வூட்டும் எண்ணம் உள்ளிருந்து பிறந்து கொண்டிருக்கும். மீண்டும் படுக்கைக்குப் போய் விடுவோமா என்ற போராட்டம் நடந்து கொண்டிருக்கும். சொக்குப்பொடி போட்டு இரு கண்களையும் சொருக வைத்து சொக்குகின்ற, தூக்கப்பிடியில் நம்மைச் சிக்க வைக்கும் ஷைத்தானின் சூழ்ச்சிக்கு முடிவு கட்டுவது நாம் செய்கின்ற உளூதான். அந்த உளூவினால் கிடைக்கும் பலன்களைப் பற்றி இந்த உரையில் சிலவற்றை பார்ப்போம்..

ஷைத்தானின் முடிச்சை அவிழ்க்கும் உளூ
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«يَعْقِدُ الشَّيْطَانُ عَلَى قَافِيَةِ رَأْسِ أَحَدِكُمْ إِذَا هُوَ نَامَ ثَلاَثَ عُقَدٍ يَضْرِبُ كُلَّ عُقْدَةٍ عَلَيْكَ لَيْلٌ طَوِيلٌ، فَارْقُدْ فَإِنِ اسْتَيْقَظَ فَذَكَرَ اللَّهَ، انْحَلَّتْ عُقْدَةٌ، فَإِنْ تَوَضَّأَ انْحَلَّتْ عُقْدَةٌ، فَإِنْ صَلَّى انْحَلَّتْ عُقْدَةٌ، فَأَصْبَحَ نَشِيطًا طَيِّبَ النَّفْسِ وَإِلَّا أَصْبَحَ خَبِيثَ النَّفْسِ كَسْلاَنَ»

உங்களில் ஒருவர் உறங்கும் போது அவரது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் ‘இரவு இன்னும் இருக்கின்றது, உறங்கு’ என்று கூறுகின்றான். அவர் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவர் உளூ செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால் மற்றொரு முடிச்சும் அவிழ்கிறது.

அவர் மகிழ்வுடனும் மனஅமைதியுடனும் காலைப் பொழுதை அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராக காலைப் பொழுதை அடைகிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 1142) , 3269(முஸ்லிம்: 1295)

ஷைத்தானின் இரண்டாம் முடிச்சை அவிழ்க்கும் அற்புத இயந்திரம் உளூவாகும் என்பதை இந்த ஹதீஸ் தெளிவாக்குகின்றது. உளூ செய்தவுடன் உடலில் ஒரு புத்துணர்ச்சியையும் அமல்கள் செய்யச் சரியான சத்துணர்ச்சியையும் பெற்று விடுகிறோம். இது நாம் நேரடியாகக் காணும் உளூவின் பயன்பாடு மற்றும் சிறப்பாகும். இந்த உளூவைச் செய்து முடித்தவுடன் இரண்டு ரக்அத்துக்கள் தொழுது விட்டால் மறுமையில் கிடைக்கப் போகும் பயனும் சிறப்பும் தெரிந்துக் கொள்வோம்.

உளூ செய்த பின் இரண்டு ரக்அத் தொழுதல்
أَنَّهُ رَأَى عُثْمَانَ بْنَ عَفَّانَ دَعَا بِوَضُوءٍ، فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ مِنْ إِنَائِهِ، فَغَسَلَهُمَا ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ أَدْخَلَ يَمِينَهُ فِي الوَضُوءِ، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَاسْتَنْثَرَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلاَثًا وَيَدَيْهِ إِلَى المِرْفَقَيْنِ ثَلاَثًا، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ غَسَلَ كُلَّ رِجْلٍ ثَلاَثًا، ثُمَّ قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ نَحْوَ وُضُوئِي هَذَا، وَقَالَ: «مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ لاَ يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ، غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி, தம் இரு முன் கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தம் வலக்கரத்தைப் பாத்திரத்தில் செலுத்தி, வாய்க் கொப்புளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்திச் சிந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். தமது இரு கைகளையும் மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். பின்பு தலையை ஈரக் கையால் தடவினார்கள்.

பின்னர் தமது இரு கால்களையும் கரண்டை வரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு “நான் உளூ செய்வதைப் போன்று தான் நபி (ஸல்) அவர்கள் உளூ செய்வதை நான் பார்த்திருக்கிறேன்’ என்று கூறி விட்டு, நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “யாரேனும் என்னுடைய இந்த உளூவைப் போன்று செய்து, பின்னர் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் இரண்டு ரக்அத்துகள் தொழுதால் அவர் முன் செய்த (சிறு) பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹும்ரான்
நூல்: (புகாரி: 164) , 160,1934, 6433, (முஸ்லிம்: 331, 332, 333, 336)

இந்த ஹதீஸ் உளூச் செய்த உடன் இரண்டு ரக்அத்துகள் தொழ வேண்டும் என்று காட்டுகின்றது. அது கடமையான தொழுகையாகக் கூட இருக்கலாம். அல்லது உளூச் செய்தவுடன் நாம் தொழக்கூடிய லுஹரின் முன் சுன்னத் அல்லது பஜ்ரின் முன் சுன்னத் போன்ற ஏதேனும் ஒரு தொழுகையாகக் கூட அது இருக்கலாம்.

ஆனால் பிலால் (ரலி) அவர்கள் நம்மிடமிருந்து வேறுபட்டு நிற்கின்றார்கள். அவர்கள் கடமையான மற்றும் அறியப்பட்ட நபிலான தொழுகை நேரத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களில் உளூச் செய்யும் போதெல்லாம் அவர்கள் இரு ரக்அத்கள் தொழத் தவறியதில்லை.

 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِبِلاَلٍ: «عِنْدَ صَلاَةِ الفَجْرِ يَا بِلاَلُ حَدِّثْنِي بِأَرْجَى عَمَلٍ عَمِلْتَهُ فِي الإِسْلاَمِ، فَإِنِّي سَمِعْتُ دَفَّ نَعْلَيْكَ بَيْنَ يَدَيَّ فِي الجَنَّةِ» قَالَ: مَا عَمِلْتُ عَمَلًا أَرْجَى عِنْدِي: أَنِّي لَمْ أَتَطَهَّرْ طَهُورًا، فِي سَاعَةِ لَيْلٍ أَوْ نَهَارٍ، إِلَّا صَلَّيْتُ بِذَلِكَ الطُّهُورِ مَا كُتِبَ لِي أَنْ أُصَلِّيَ

ஒரு ஃபஜ்ரு தொழுகையின் போது பிலால் (ரலி) இடம் “பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த அமல் பற்றிக் கூறுவீராக! ஏனெனில் உமது செருப்போசையை சொர்க்கத்தில் நான் கேட்டேன்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால் (ரலி) “இரவிலோ பகலிலோ நான் உளூச் செய்தால் அவ்வுளூவின் மூலம் நான் தொழ வேண்டுமென்று நாடியதைத் தொழாமல் இருப்பதில்லை. இதுதான் நான் செய்யும் செயல்களில் சிறந்த செயல்’’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 1149) ,(முஸ்லிம்: 4497)

நாம் ஒருவரின் செருப்போசையை வைத்து அவர் இன்னார் தான் என்று அடையாளங்கண்டு கொள்கின்றோம் என்றால் அந்த அளவுக்கு அவர் நம்மிடம் அடிக்கடி வந்து சென்றிருக்க வேண்டும். நிச்சயமாக பிலால் (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் அடிக்கடி பள்ளிக்கும் வீட்டுக்கும் வந்து சென்றவர்கள் என்பதில் நமக்குக் கடுகளவும் சந்தேகமில்லை.

அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு பிலால் (ரலி)யின் இந்த அமலை நேரடியாக அறிவித்திருக்கலாம். சுவனத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு பிலாலின் செருப்போசையைச் செவியுற வைத்து, பிலால் செய்த அமல் என்ன? நபி (ஸல்) அவர்களை பிலால் (ரலி)யிடம் சஸ்பென்ஸாகக் கேட்க வைக்கின்றான்.

பிலால் (ரலி) இன்ன அமல் தான் என்று பதில் சொல்கின்றார். இவ்வாறு அல்லாஹ் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி இந்த அமலுக்கான பரிசை அறிவிப்பதன் நோக்கம் பிலால் (ரலி)யைப் போன்று மற்றவர்கள் இதில் ஆர்வமாக ஈடுபட வேண்டும் என்பதற்காகத் தான்.

எனவே, உளூச் செய்து விட்டு இரண்டு ரக்அத்கள் தொழுகின்றோம் எனில் அந்த அமல் நம்மை பிலால் (ரலி)யைப் போன்று சுவனத்திற்குச் சொந்தக்காரராக்கி விடுகின்றது. உளூச் செய்த பின் நாம் செய்கின்ற இந்தச் சிறிய அமல் பெரிய சுவனத்தைப் பெற்றுத் தருகின்றது. நபிவழிப்படி நடக்கும் கூட்டம் நாங்கள் என்று சொல்கின்ற நம்மில் எத்தனை பேரிடம் இந்த அமல் உள்ளது என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இங்கே நாம் இன்னோர் எச்சரிக்கையையும் கவனிக்கத் தவறி விடக்கூடாது. உளூவின் சிறப்பைப் பற்றி கூறக்கூடிய ஹதீஸில் ஒவ்வொரு உறுப்பிலிருந்தும் பாவங்கள் கரைந்து விடுகின்றன. சுவனம் கிடைத்து விடுகின்றது என்பதை வைத்துக் கொண்டு நாம் சூதாடலாம், விபச்சாரம் செய்யலாம், வட்டி வாங்கலாம், கொலை செய்யலாம், கொள்ளையடிக்கலாம், மது அருந்தலாம்! என்ன செய்தாலும் நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும் என்று தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்புண்டு.

யார் நான் உளூச் செய்தது போல் செய்து, பள்ளிக்கு வந்து இரு ரக்அத்கள் தொழுது அமர்ந்திருந்தால் அவரது முந்தைய பாவம் மன்னிக்கப்பட்டு விடும். நீங்கள் ஏமாந்து விடாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் வேறொரு இடத்தில் பதிவாகியுள்ளது.

أَتَيْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ، بِطَهُورٍ وَهُوَ جَالِسٌ عَلَى المَقَاعِدِ، فَتَوَضَّأَ فَأَحْسَنَ الوُضُوءَ، ثُمَّ قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ وَهُوَ فِي هَذَا المَجْلِسِ، فَأَحْسَنَ الوُضُوءَ ثُمَّ قَالَ: «مَنْ تَوَضَّأَ مِثْلَ هَذَا الوُضُوءِ، ثُمَّ أَتَى المَسْجِدَ فَرَكَعَ رَكْعَتَيْنِ، ثُمَّ جَلَسَ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ» قَالَ: وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَغْتَرُّوا»

(மதீனாவிலுள்ள) ‘மகாயித்’ எனுமிடத்தில் அமர்ந்திருந்த உஸ்மான் (ரலி) அவர்களிடம் நான் தண்ணீருடன் சென்றேன். அப்போது அவர்கள் பரிபூரணமாக உளூ செய்தார்கள். பிறகு ‘நபி (ஸல்) அவர்கள் இந்த இடத்தில் பரிபூரணமாக உளூ செய்யக் கண்டேன்’ என்று கூறிவிட்டு,

‘யார் இதைப் போன்று (முழுமையாக) உளூ செய்து, பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டுப் பிறகு அமருவாரோ அவர் அதற்கு முன்செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடுகின்றன’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘(ஆனால், இதைக் கொண்டு) ஏமாந்து (பாவங்களில் மூழ்கி) விடாதீர்கள்’ என்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள்.

அறிவிப்பவர்: ஹும்ரான் இப்னு அபான் (ரஹ்)
நூல்: (புகாரி: 6433) 

தொழுகையின் மூலம் மன்னிக்கப்படுவது சிறு பாவங்கள் தான். பெரும்பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நம்பி ஏமாந்து விடாதீர்கள் என்றும் அந்த ஹதீஸுக்கு விளக்கமளிக்கின்றார். இது தொடர்பாக நாம் மேலே தெரிவித்த எச்சரிக்கை நம்முடைய தன்னிச்சையான எச்சரிக்கையல்ல! நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையாகும். அந்த எச்சரிக்கையை நாம் பேணிக் கொள்வோமாக!

பல் துலக்குதல்

பல் துலக்குதல், உளூச் செய்வதுடன் ஒட்டிய செயல் என்பதால் இச்செயலை வலியுறுத்துகின்ற ஹதீஸ்களை இங்கு காண்பது பொருத்தமாக அமையும். அந்த அடிப்படையில் பல்துலக்குதல் சம்பந்தமான ஹதீஸ்களைப் பார்ப்போம். நபி வழியைப் பின்பற்றுவோம் என்று மத்ஹபுகளை எல்லாம் விட்டெறிந்து விட்ட நாம் இதுபோன்ற நபிவழியை நடைமுறையில் கொண்டு வரவேண்டும்.

அமல்களின் சிறப்புகள் என்ற இந்த தலைப்பின் கீழ் அமல்களின் சிறப்புகளை மட்டும் சொல்வது நோக்கமல்ல. சிறுசிறு நபிவழிகளை எடுத்துக் காட்டி, அவற்றைச் செயல்படுத்தி, நபி (ஸல்) அவர்களை முழுமையாகப் பின்பற்றியவர்களாக வேண்டும் என்பது தான் நமது தலையாய நோக்கமாகும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي أَوْ عَلَى النَّاسِ لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ مَعَ كُلِّ صَلاَةٍ»

எனது சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்றில்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் அவர்களைப் பல் துலக்குமாறு கட்டளையிட்டிருப்பேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 887) , 7240,(முஸ்லிம்: 370)

حَدَّثَنَا أَنَسٌ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«أَكْثَرْتُ عَلَيْكُمْ فِي السِّوَاكِ»

பல்துலக்குவது தொடர்பாக நான் உங்களுக்கு அதிகமாக வலிறுத்தியிருக்கின்றேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: (புகாரி: 888) 

இந்த ஹதீஸ்கள் நபி (ஸல்) அவர்கள் பல் துலக்கும்படி வலியுறுத்தியுள்ளார்கள் என்பதைத் தெரிவிக்கின்றன. பல் துலக்குவது ஒவ்வொரு தொழுகையின் போதும் உளூவைப் போல் கடமை என்ற இடத்தைப் பிடிக்க இருந்ததாக நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் எனில், இதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

துலக்கல் தரும் தூய்மை
السِّوَاكُ مَطْهَرَةٌ لِلْفَمِ، مَرْضَاةٌ لِلرَّبِّ

பல் துலக்குவது வாய்க்குத் தூய்மையாகும்! இறைவனுக்குத் திருப்தியாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: (நஸாயீ: 5) 

இந்த ஹதீஸ் பல்துலக்குவது இறை திருப்தியைப் பெற்றுத் தருவதாகத் தெரிவிக்கின்றது.

عَنْ عَائِشَةَ قَالَتْ :
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَنُّ وَعِنْدَهُ رَجُلَانِ ؛ أَحَدُهُمَا أَكْبَرُ مِنَ الْآخَرِ، فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ فِي فَضْلِ السِّوَاكِ أَنْ كَبِّرْ ؛ أَعْطِ السِّوَاكَ أَكْبَرَهُمَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல் துலக்கிக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு அருகில் இரண்டு பேர் இருந்தனர். அவ்விருவரில் ஒருவர் இன்னொருவரை விட மூத்தவராக இருந்தார். மூத்தவருக்கு முக்கியத்துவம் கொடுத்து அவ்விருவரில் பெரியவருக்கு பற்குச்சியைக் கொடுப்பீராக என்று அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்தான்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: (அபூதாவூத்: 50)

இந்த ஹதீஸில் பல்குச்சியை யாருக்கு வழங்க வேண்டும் என்று அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்துக் கொடுக்கின்ற அளவுக்குப் பல் துலக்குதல் அல்லாஹ்விடம் மாபெரும் மரியாதையையும், மதிப்பையும் பெற்றுத் திகழ்கின்றது என்பதைத் தெரிந்து கொள்கின்றோம். அல்லாஹ்விடமும் அவனது தூதர் (ஸல்) அவர்களிடமும் பெற்ற மரியாதையை நம்மிடத்தில் இது பெறவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

உளூச் செய்யும் முன் பல் துலக்கும் நேரங்கள்
عَنْ حُذَيْفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا قَامَ لِلتَّهَجُّدِ مِنَ اللَّيْلِ يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ»

நபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழும்போது பல் துலக்குவார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)
நூல்: (புகாரி: 1136) ,(முஸ்லிம்: 374)

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இரவு உறங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் கண் விழித்ததும் பல் துலக்கி உளூ செய்தார்கள். அப்போது அவர்கள் ஆல இம்ரானின் 190ஆம் வசனத்திலிருந்து அந்த அத்தியாயம் முடியும் வரை ஓதினார்கள் என முஹம்மது பின் அலீ அறிவிக்கும் நீண்ட ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெறுகின்றது.

இதில் காலை எழுந்ததும் உளூச் செய்யும் முன் நபி (ஸல்) அவர்கள் பல் துலக்குவார்கள் என்று அறிகின்றோம்.

பல் துலக்கும் குச்சிக்கு இரவிலேயே ஏற்பாடு

ஸஃத் பின் ஹிஷாம் பின் ஆமிர் என்பார் ஆயிஷா (ரலி) யைச் சந்தித்து, வித்ரு தொழுகையைப் பற்றி வினவிய போது,

…” كُنَّا نُعِدُّ لَهُ سِوَاكَهُ وَطَهُورَهُ، فَيَبْعَثُهُ اللهُ مَا شَاءَ أَنْ يَبْعَثَهُ مِنَ اللَّيْلِ، فَيَتَسَوَّكُ، وَيَتَوَضَّأُ، وَيُصَلِّي تِسْعَ رَكَعَاتٍ لَا يَجْلِسُ فِيهَا إِلَّا فِي الثَّامِنَةِ، فَيَذْكُرُ اللهَ وَيَحْمَدُهُ وَيَدْعُوهُ، ثُمَّ يَنْهَضُ وَلَا يُسَلِّمُ، ثُمَّ يَقُومُ فَيُصَلِّ التَّاسِعَةَ،…

“நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்காக பல்குச்சியையும் உளூச் செய்வதற்குரிய தண்ணீரையும் (இரவில்) தயாராக வைத்திருப்போம். இரவில் அல்லாஹ் அவர்களை எப்போது எழுப்ப வேண்டும் என்று நாடியுள்ளானோ அந்த நேரத்தில் அவர்களை எழுப்புவான். அவர்கள் எழுந்ததும், பல்துலக்கி, உளூச் செய்து பிறகு ஒன்பது ரக்அத்கள் தொழுவார்கள்’’ என்று பதிலளிக்கின்றார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

நூல்: (முஸ்லிம்: 1357) 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலையில் எழுந்ததும் முதன் முதலில் ஆற்றுகின்ற நல்ல காரியம் பல்துலக்குவது தான் என்று இந்த ஹதீஸ் நமக்கு தெரிவிக்கின்றது.

ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، قَالَ
سَأَلْتُ عَائِشَةَ، قُلْتُ: بِأَيِّ شَيْءٍ كَانَ يَبْدَأُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ بَيْتَهُ؟ قَالَتْ: «بِالسِّوَاكِ»

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் அவர்கள் செய்யும் முதல் வேலை எது? என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், பல் துலக்குவது என்று பதிலளித்தார்கள்.

நூல்: (முஸ்லிம்: 423) 

இந்த ஹதீஸ் நபி (ஸல்) அவர்கள் அடிக்கடி பல் துலக்கியுள்ளார்கள் என்று காட்டுகின்றது.

மரணவேளையிலும் பல் துலக்கிய மாநபி (ஸல்)
دَخَلَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا مُسْنِدَتُهُ إِلَى صَدْرِي، وَمَعَ عَبْدِ الرَّحْمَنِ سِوَاكٌ رَطْبٌ يَسْتَنُّ بِهِ، فَأَبَدَّهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَصَرَهُ، فَأَخَذْتُ السِّوَاكَ فَقَصَمْتُهُ، وَنَفَضْتُهُ وَطَيَّبْتُهُ، ثُمَّ دَفَعْتُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَنَّ بِهِ، فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَنَّ اسْتِنَانًا قَطُّ أَحْسَنَ مِنْهُ، فَمَا عَدَا أَنْ فَرَغَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَفَعَ يَدَهُ أَوْ إِصْبَعَهُ ثُمَّ قَالَ «فِي الرَّفِيقِ الأَعْلَى». ثَلاَثًا، ثُمَّ قَضَى،

(என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நான் நபி (ஸல்) அவர்களை என் நெஞ்சின் மீது சாய்த்து அணைத்துக் கொண்டிருந்தேன். அப்துர் ரஹ்மானிடம், அவர் பல்துலக்கும் ஈரமான(பேரீச்சங்)குச்சி இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பார்வையை அவர் பக்கம் செலுத்த, நான் அந்தப் பல் துலக்கும் குச்சியை எடுத்து அதை (வாயில் வைத்து என் பற்களால் அதன் முனையை) மென்றேன்.

அதை உதறிப் பக்குவப்படுத்திய பின் நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். அவர்கள் அதனால் பல் துலக்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை விட அழகாகப் பல் துலக்கியதை அதற்கு முன் நான் பார்த்ததில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல் துலக்கி முடித்தவுடன் ‘தம் கையை’ அல்லது ‘தம் விரலை’ உயர்த்திப் பிறகு, (“இறைவா! சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)’’ என்று மும்முறை பிரார்த்தித்தார்கள். பிறகு முடித்துக் கொண்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: (புகாரி: 4449) 

அதிகாலை எழுந்ததும் ஐந்து வேளை தொழுகையின் போதும் வீட்டிற்குள் நுழைந்ததும் பல் துலக்கிய ரசூல் (ஸல்) அவர்கள் தன் ஆயுள் முடியும் தருவாயிலும் அதில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஆர்வமும் அக்கறையும் கொண்டிருந்த விஷயத்தில் நாம் அலட்சியமாக இருக்கின்றோம். இன்றைய அறிவியல், மருத்துவ உலகம் பல் துலக்குவதைப் பற்றி அதிகமதிகம் வலியுறுத்துகின்றது. உறங்குவதற்கு முன் பல்துலக்குவதற்கு ஊக்கமூட்டுகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகம் பல்துலக்கியதையும் அதற்கு அவர்கள் அளித்த முக்கியத்துவத்தையும் இந்த ஹதீஸ்கள் நன்றாகத் தெளிவுபடுத்துகின்றன. அத்துடன் அவர்கள் படுக்கைக்குச் செல்லுமுன் உளூ செய்து விட்டு உறங்கியதையும் ஹதீஸ்களில் நாம் காண முடிகின்றது.

இப்படி எந்த ஒரு தலைவரேனும் தம் சமுதாயத்திற்கு, பல் துலக்கலைப் பற்றிப் பாடம் நடத்தியுள்ளார்களா? என்றால் நிச்சயமாக இல்லை! அப்படி நடத்த வேண்டிய அவசியமும் இல்லை! ஆனால் இந்தத் தலைவர் மட்டும் இப்படிப் பாடம் நடத்துகிறார்களே! அது ஏன்?
அவர்கள் இயற்கை மார்க்கத்தைப் போதிக்க வந்த இறைத்தூதர். அதனால் அறிவியல் ரீதியான உள்ளர்த்தங்களைக் கொண்ட வகையில் பற்களை சரியாகப் பராமரிக்கச் சொல்கிறார்கள்.

மனிதன் சாப்பிட்ட உணவின் துகள்கள், குறிப்பாக இனிப்பு மற்றும் மாவுச் சத்துக்கள் பற்களில் ஒட்டிக் கொள்கின்றன. இவற்றிலிருந்து சில பாக்டீரியா எனும் நுண்ணுயிரிகள் வாழத் துவங்கி விடுகின்றன. வாய்க்குள் ஆக்ஸிஜன் கிடைக்காத போது அவை அமிலத்தைச் சுரக்கின்றன. இந்த அமிலம், பல் எனாமலில் இருக்கும் சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸைக் கரைத்து விடுகின்றது.

இதற்கு கனிமச் சத்து அரிமானம் என்று பெயர். இது தான் பற்சிதைவுக்கு வழிவகுக்கின்றது. நாவில் ஓடும் உமிழ் நீர் இதை ஓரளவுக்குச் சரி செய்கிறது. ஆனால் அதே சமயம் பாக்டீரியாக்கள் கொத்தாக பற்களில் படிமானத்தை ஏற்படுத்தி விட்டால் இந்த உமிழ் நீர் அதற்குள் ஊடுறுவ முடியாது. அப்போது பல்லைச் சிதைத்து வலியை ஏற்படுத்தும். அத்துடன் நிற்பதில்லை. நேரடியாக மூளையைப் பாதித்து விடுகின்றது. மனிதன் மரணத்தைத் தழுவ நேரிடுகின்றது. இது பற்கள் மூலம் ஏற்படும் அதிகப்பட்ச பாதகம்!

வாய் துர்நாற்றம்

பல் இடுக்குகளில் மாட்டிக் கொண்ட உணவுத் துகள்களில் குடித்தனம் நடத்தும் நுண்ணுயிரிகள் தான் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதனால் நம்மிடம் பேசுவோர் முகத்தைத் திருப்பிக் கொள்ள நேரிடுகிறது. அது மட்டுமின்றி ஈறுகள் தொற்று நோய்க்குள்ளாகி இரத்தம் கசியவும், சீழ் வழியவும் ஆரம்பித்து விடுகிறது. இந்நோய்க்கு பயோரிய்யா என்று பெயர். இது பற்களால் ஏற்படும் குறைந்த பட்ச பாதகமாகும்.

இதனால் தான் இயற்கை மார்க்கமான இஸ்லாத்தின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் பல் துலக்குவதில் இவ்வளவு கவனம் எடுத்துள்ளார்கள். தமது சமுதாயத்தையும் இதில் கவனம் எடுக்கச் சொல்கிறார்கள்.

அல்லாஹ்வின் மார்க்கமும் அறிவியலும் வலியுறுத்துகின்ற பல்துலக்கலைத் தான் நாம் அலட்சியம் செய்து வருகின்றோம். இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில் இருக்கும் இந்த நாற்றத்தைப் போக்குவதற்கு மார்க்கம் பல்துலக்க ஆர்வமூட்டிக் கொண்டிருக்கும் போது முஸ்லிம்கள் பீடி, சிகரட், சுருட்டு குடித்து விட்டு அந்த நாற்றத்துடன் பல சகோதரர்கள் தொழ வருவதுதான்.

எனவே இஸ்லாம் மார்க்கம் காட்டி தந்த வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவோமாக! அல்லாஹ் அப்படிப்பட்ட நன்மக்களாய் நம்மை ஆக்கி அருள் புரிவனாக..! 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.