உலக ஆசையா? சொர்க்க ஆசையா?

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

முன்னுரை

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

அல்லாஹ் சிறந்த படைப்பாக மனிதப் படைப்பைப் படைத்து, மனிதனுடைய உள்ளங்கள் விரும்புகின்ற அளவிற்கு இவ்வுலக வாழ்க்கையில் (இன்பமாக இருப்பதற்கு) எண்ணற்ற அருட்கொடைகளை ஏற்படுத்தியுள்ளான். உலக இன்பங்களின் பல வகைகளை அல்லாஹ் பட்டியலிடுகிறான்.

உலகத்தின் நிலை
زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَآءِ وَالْبَـنِيْنَ وَالْقَنَاطِيْرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَـيْلِ الْمُسَوَّمَةِ وَالْاَنْعَامِ وَالْحَـرْثِ‌ؕ ذٰ لِكَ مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا ‌ۚ وَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الْمَاٰبِ‏

பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள் ஆகிய ஆசைப்படும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது.

(அல்குர்ஆன்: 3:14)

اِعْلَمُوْۤا اَنَّمَا الْحَيٰوةُ الدُّنْيَا لَعِبٌ وَّلَهْوٌ وَّزِيْنَةٌ وَّتَفَاخُرٌۢ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِى الْاَمْوَالِ وَالْاَوْلَادِ‌ؕ كَمَثَلِ غَيْثٍ اَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهٗ ثُمَّ يَهِيْجُ فَتَرٰٮهُ مُصْفَرًّا ثُمَّ يَكُوْنُ حُطٰمًا‌ؕ وَفِى الْاٰخِرَةِ عَذَابٌ شَدِيْدٌ ۙ وَّمَغْفِرَةٌ مِّنَ اللّٰهِ وَرِضْوَانٌ‌ؕ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ‏

“விளையாட்டும், வீணும், கவர்ச்சியும், உங்களுக்கிடையே பெருமையடித்தலும், பொருட் செல்வத்தையும், மக்கட் செல்வத்தையும் அதிகமாக்கிக் கொள்வதும் ஆகியவையே இவ்வுலக வாழ்க்கை.” என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (இவ்வுலகின் நிலை) மழையைப் போன்றது. அதன் (காரணமாக முளைத்த) பயிர்கள் (ஏக இறைவனை) மறுப்போருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

பின்னர் அது காய்ந்து விடுகிறது. அது மஞ்சள் நிறமாக மாறுவதைக் காண்பீர். பின்னர் கூளமாக ஆகிறது. மறுமையில் (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.

(அல்குர்ஆன்: 57:20)

இவ்வுலகத்திலுள்ள இன்பங்களை மனிதன் விரும்பினாலும், இவ்வுலக வாழ்க்கைதான் நிம்மதியான வாழ்க்கை, நிரந்தரமான வாழ்க்கை என்று நினைத்து விட கூடாது என்பதற்காகவும், மரணத்திற்குப் பின்னால் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை நினைவூட்டவும் இவ்வுலகத்தை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

உலகத்தை அஞ்சுதல்

இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கும் இன்பங்கள், அருட்கொடைகள் அனைத்திலும் நமக்குச் சோதனைகள் இருக்கின்றன.

عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ
 إِنَّ الدُّنْيَا حُلْوَةٌ خَضِرَةٌ وَإِنَّ اللَّهَ مُسْتَخْلِفُكُمْ فِيهَا فَيَنْظُرُ كَيْفَ تَعْمَلُونَ فَاتَّقُوا الدُّنْيَا وَاتَّقُوا النِّسَاءَ فَإِنَّ أَوَّلَ فِتْنَةِ بَنِى إِسْرَائِيلَ كَانَتْ فِى النِّسَاءِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த உலகம் இனிமையானதும் பசுமையானதும் ஆகும். அதில் உங்களை அல்லாஹ் பொறுப்பாளர்களாக ஆக்கி, நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்க்கிறான். ஆகவே, இவ்வுலகத்தின் சோதனையிருந்தும், பெண்களின் சோதனையிலிருந்தும் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், பனூ இஸ்ராயீல் சமதாயத்தாரிடையே நடைபெற்ற முதல் குழப்பம் பெண்களால் தான் ஏற்பட்டது.

அறி : அபூசயீத் அல்குத்ரீ (ரலி),
நூல் : (முஸ்லிம்: 5292) 

நபி (ஸல்) அவர்களின் பயம்

பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில் கலந்து கொண்டவருமான அம்ர் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை, “ஜிஸ்யா’ (காப்பு) வரி வசூலித்துக் கொண்டு வரும்படி பஹ்ரைனுக்கு அனுப்பினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அக்னி ஆராதனையாளர்களாயிருந்த) பஹ்ரைன்வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு, அவர்களுக்கு அலா பின் அல்ஹள்ரமீ (ரலி) அவர்களைத் தலைவராக நியமித்திருந்தார்கள்.

அபூஉபைதா (ரலி) அவர்கள் (வரி வசூலித்துக் கொண்டு) பஹ்ரைனிலிருந்து நிதியுடன் (மதீனாவுக்கு) வந்தார்கள். அபூஉபைதா (ரலி) அவர்கள் வந்து விட்டதைக் கேள்விப்பட்ட அன்சாரிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்ல, அது சரியாக ஃபஜ்ருத் தொழுகையின் நேரமாக இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அன்சாரிகள் தொழுகையை நிறைவேற்றினார்கள்.

தொழுகை முடிந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்ப, அன்சாரிகள் தம் எண்ணத்தைச் சைகையால் வெளியிட்டனர். (ஆர்வத்துடன் இருந்த) அவர்களைக் கண்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்து விட்டு, “அபூஉபைதா சிறிது நிதியுடன் பஹ்ரைனிலிருந்து வந்துவிட்டார் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்” என்றார்கள்.

அதற்கு அன்சாரிகள், “ஆம்; அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள். “அவ்வாறாயின், ஒரு நற்செய்தி. உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்” என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சவில்லை.

ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் தாராளமாகக் கொடுக்கப்பட்டதைப் போன்று உங்களுக்கும் தாராளமாகக் கொடுக்கப்பட்டு, அதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட, (மறுமையின் எண்ணத்திலிருந்து திருப்பி) அவர்களை அழித்துவிட்டதைப் போன்று உங்களையும் அ(ந்த உலகாசையான)து அழித்துவிடுமோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்” என்று கூறினார்கள்.

அறி : மிஸ்வர் பின் மக்ரமா (ரலி),
நூல் : (முஸ்லிம்: 5668) 

இவ்வுலகத்தில் பொருளாதரம் அதிகமாக வழங்கப்பட்டால் நன்மைகளை செய்யாமல், மறுமையை மறந்து இவ்வுலக வாழ்க்கையில் மூழ்கியிருப்போம் என்பதை நபி (ஸல்) அவர்கள் உணர்த்துகிறார்கள்.

எந்த விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் அஞ்சினார்களோ அதைத்தான் மனிதன் அதிகமதிகமாக விரும்பக் கூடியவனாக இருக்கிறான்.

மனிதனின் விருப்பம்
عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ
قَلْبُ الشَّيْخِ شَابٌّ عَلَى حُبِّ اثْنَتَيْنِ طُولُ الْحَيَاةِ وَحُبُّ الْمَالِ.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முதியவரின் மனம் கூட இரண்டை நேசிப்பதில் இளமையாகவே உள்ளது: 1. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை. 2. பொருளாசை.

அறி : அபூஹுரைரா (ரலி),
நூல்: (முஸ்லிம்: 1891) 

عَنْ أَنَسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-
لَوْ كَانَ لاِبْنِ آدَمَ وَادِيَانِ مِنْ مَالٍ لاَبْتَغَى وَادِيًا ثَالِثًا وَلاَ يَمْلأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلاَّ التُّرَابُ وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரு ஓடைகள் (நிரம்ப) செல்வம் இருந்தாலும், மூன்றாவது ஓடையை அவன் தேடுவான். மனிதனின் வாயை (சவக்குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது. (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.

அறி : அனஸ் (ரலி),
நூல் : (புகாரி: 1894) 

உலகத்தில் எவ்வாறு வாழ வேண்டும்
كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக்கொண்டு “உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு” என்று சொன்னார்கள்.

நூல்: (புகாரி: 6416)(திர்மிதீ: 2333)

என்னதான் செல்வத்தை அதிகமாகச் சேகரித்தாலும், ஒருவர் முழுமையாக அதனை அனுபவிக்க முடியாது. ஏனென்றால் அவன் மரணத்தைத் தழுவக் கூடியவன். இவ்வுலகம் நிரந்தரம் இல்லை, மறு உலகம் தான் நிரந்தரமானது என்பதைக் கவனத்தில் கொண்டு செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வுலகம் நிரந்தரம் இல்லை
حَدَّثَنَا سَهْلُ بْنُ سَعْدٍ السَّاعِدِيُّ
كُنَّا مَعَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فِي الْخَنْدَقِ وَهْوَ يَحْفِرُ وَنَحْنُ نَنْقُلُ التُّرَابَ وَيَمُرُّ بِنَا فَقَالَ اللَّهُمَّ لاَ عَيْشَ إِلاَّ عَيْشُ الآخِرَهْ فَاغْفِرْ لِلأَنْصَارِ وَالْمُهَاجِرَهْ.

அகழ்ப் போரின்போது நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்கள் அகழ் தோண்டிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் மண் சுமந்து எடுத்து வந்து கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களைப் பார்த்து விட்டு, “இறைவா! மறுமையின் வாழ்க்கையைத் தவிர வேறு (நிரந்தரமான) வாழ்க்கை இல்லை; ஆகவே, (அதற்காக உழைக்கும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் மன்னிப்பு வழங்குவாயாக!” என்று (பாடியபடி) கூறினார்கள்.

அறி : சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாயிதீ (ரலி),
நூல் : (புகாரி: 6414) 

அல்லாஹ்வை மட்டும் முழுமையாக நம்பி, இவ்வுலக வாழ்க்கையில் அற்பமான பொருட்களை விரும்பாமல் மறுமையை நோக்கி முன்னேறக் கூடிய இறைநம்பிக்கையாளர்களுக்கு இவ்வுலகம் சிறைச்சாலையைப் போன்றது.

இறைநம்பிக்கையாளருக்கு இவ்வுலகம் சோதனை

இவ்வுலக வாழ்க்கை இறைநம்பிக்கையாளருக்கு ஒரு சிறைச்சாலை போன்றது. உலகத்தில் வாழும்போது இறைவன் கட்டளையிட்ட அனைத்து காரியங்களையும் கடைப்பிடித்து வாழ வேண்டும். தனது மனோ இச்சைகளுக்கு கட்டுப்பட்டு இறைவன் தடுத்த காரியங்களைச் செய்ய கூடாது. இவ்வாறு வாழ்ந்தால்தான் மறுமையில் இறைவன் தயார் செய்து வைத்துள்ள சொர்க்கத்தை அடைய முடியும்.

عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-
« الدُّنْيَا سِجْنُ الْمُؤْمِنِ وَجَنَّةُ الْكَافِرِ ».

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இவ்வுலகம், இறைநம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகும்; இறைமறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும்.

அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : (முஸ்லிம்: 5663) 

சிறைச்சாலையில் நாம் விரும்பியவாறு சுற்றித் திரியவோ, விரும்பியதைச் சாப்பிடவோ, இன்பத்தை அனுபவிக்கவோ முடியாது. குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும். அது போன்றுதான் இறை நம்பிக்கையாளர்களுக்கு இந்த உலக வாழ்க்கையும் உள்ளது.

இவ்வுலகத்தில் வாழும்போது சிரமங்களுக்கு உள்ளாக்கப்படுவோம். அந்த நேரங்களில் மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் ஈடுபடக் கூடாது. சிரமங்களைச் சகித்துக்கொண்டால் நாம் மறுமையில் வெற்றி பெற முடியும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ
حُجِبَتِ النَّارُ بِالشَّهَوَاتِ وَحُجِبَتِ الْجَنَّةُ بِالْمَكَارِهِ.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது.

அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 6487) 

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் (நிலத்தில்) ஒரு சதுரக் கட்டம் வரைந்தார்கள். அதன் நடுவிலிருந்து சதுரத்திற்கு வெளியே செல்லுமாறு ஒரு கோடு வரைந்தார்கள். பின்னர் நடுவிலுள்ள அந்தக் கோட்டின் ஓர் ஓரத்திலிருந்து (சதுரத்துடன் முடியும்) மறு ஓரம் வரை சிறு சிறு கோடுகள் வரைந்தார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்:

عَنْ عَبْدِ اللهِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ
خَطَّ النَّبِيُّ صلى الله عليه وسلم خَطًّا مُرَبَّعًا وَخَطَّ خَطًّا فِي الْوَسَطِ خَارِجًا مِنْهُ وَخَطَّ خُطُطًا صِغَارًا إِلَى هَذَا الَّذِي فِيالْوَسَطِ مِنْ جَانِبِهِ الَّذِي فِي الْوَسَطِ وَقَالَ هَذَا الإِنْسَانُ وَهَذَا أَجَلُهُ مُحِيطٌ بِهِ ، أَوْ قَدْ أَحَاطَ بِهِ – وَهَذَا الَّذِي هُوَ خَارِجٌ أَمَلُهُ وَهَذِهِ الْخُطُطُ الصِّغَارُ الأَعْرَاضُ فَإِنْ أَخْطَأَهُ هَذَا نَهَشَهُ هَذَا وَإِنْ أَخْطَأَهُ هَذَا نَهَشَهُ هَذَا.

(நடுவிலுள்ள மையப் புள்ளியான) இதுதான் மனிதன். இந்தச் சதுரம்தான் அவனைச் “சூழ்ந்துள்ள’ அல்லது “சூழ்ந்து கொண்டுவிட்ட’ வாழ்நாளாகும். (நடுவிலிருந்து) வெளியே செல்லும் கோடுதான் அவனுடைய எதிர்பார்ப்புகளாகும். இதோ இந்தச் சிறிய கோடுகள் (மனிதனை வந்தடையும்) சோதனைகளாகும்.

(சோதனைகளில்) ஒன்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் மற்றொன்று அவனைத் தீண்டவே செய்யும். (இடையில் ஏற்படும் சோதனைகளான) இவற்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் இ(யற்கை மரணமான)து அவனைத் தீண்டவே செய்யும்.

அறி : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),
நூல் : (புகாரி: 6417) 

யார் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்ற மன உறுதியில் இருக்கின்றார்களோ அவர்களுக்குப் பல்வேறு சோதனைகளை வழங்கி அல்லாஹ் சோதிப்பான். இச்சோதனைகள் எல்லாம் அல்லாஹ்வை உண்மையில் நம்புகிறார்களா என்பதை மறுமையில் அடையாளம் காட்டுவதற்காகத்தான் என்பதை அறிய வேண்டும்.

தம்மைவிடக் கீழ் உள்ளவரைப் பார்க்க வேண்டும்

பல்வேறு சோதனைகளுக்கு நாம் உள்ளாக்கப்படும்போது, அதிலும் குறிப்பாக பொருளாதாரத்தில் சோதிக்கப்படும்போது நம்மைவிட உயர்ந்தவரைப் பார்க்காமல், நம்மைவிட தாழ்ந்தவரைப் பார்க்க வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது.

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قَالَ
 إِذَا نَظَرَ أَحَدُكُمْ إِلَى مَنْ فُضِّلَ عَلَيْهِ فِي الْمَالِ وَالْخَلْقِ فَلْيَنْظُرْ إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْهُ.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
செல்வத்திலும், தோற்றத்திலும் தம்மைவிட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்.

அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 6490) 

போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும்.

இவ்வுலகத்தில் வாழக்கூடிய அனைவரும் இன்பங்களுக்கு ஆசைப்படகூடியவர்கள்தான். ஆனால் இன்பங்களை அடையவேண்டுமென மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் ஈடுபடாமல், இருப்பதை வைத்து, போதும் என்ற மனம் உள்ளவரே வெற்றி பெற்றவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-
« لَيْسَ الْغِنَى عَنْ كَثْرَةِ الْعَرَضِ وَلَكِنَّ الْغِنَى غِنَى النَّفْسِ ».

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாக, போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்.

அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : (முஸ்லிம்: 1898) 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ

« قَدْ أَفْلَحَ مَنْ أَسْلَمَ وَرُزِقَ كَفَافًا وَقَنَّعَهُ اللَّهُ بِمَا آتَاهُ ».

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் முஸ்லிமாகி போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு, அல்லாஹ் வழங்கியதைப் போதுமெனக் கருதினாரோ அவர் (வாழ்க்கையில்) வெற்றி பெற்றுவிட்டார்.

அறி : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),
நூல் : (முஸ்லிம்: 1903) 

நபிகளின் நிலை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் இறைத்தூதராக தேர்ந்தெடுத்த பிறகு தம்முடைய பொருளாதாரத்தையும், முதல் மனைவியான பெரும் செல்வந்தராகத் திகழ்ந்த அன்னை கதிஜா (ரலி) அவர்களிடத்தில் இருந்த பொருளாதாரத்தையும் அல்லாஹ்வின் பாதையில் செலவிட்டார்கள். அவர்கள் மரணத்தருவாயில் யூதர்களிடத்தில் அடகு வைத்த தனது கவசத்தை மீட்க முடியாமல் மரணித்தார்கள் என்ற செய்திகளையும் நாம் அறிந்து வைத்துள்ளோம்.

நபி (ஸல்) அவர்கள் இவ்வுலக வாழ்க்கையை விரும்பாமல், மறுமையில் கிடைக்கக் கூடிய இன்பங்களை எதிர்பார்த்த காரணத்தினால்தான் தன்னுடைய பொருளாதாரத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்துள்ளார்கள்.

உஹது மலை அளவு

நான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் உஹுத் மலையைப் பார்த்தபோது, “இந்த மலை எனக்காகத் தங்கமாக மாற்றப்பட்டு, அதிலிருந்து ஒரேயொரு தீனாரும்கூட என்னிடம் மூன்று நாட்களுக்கு மேல் தங்கியிருப்பதை நான் விரும்பமாட்டேன்; கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கின்ற தீனாரைத் தவிர” என்று கூறினார்கள்.

பிறகு, “(உலகில் செல்வம்) அதிகமானவர்கள்தான் (மறுமையில் நற்பலன்) குறைந்தவர்கள்; “(என்) செல்வத்தை இப்படியெல்லாம் செலவு செய்யுங்கள்’ என்று கூறிய(துடன் அவ்வாறே செலவும் செய்த)வனைத் தவிர.

அறி : அபூதர் (ரலி),
நூல் : (புகாரி: 2388) 

நபி (ஸல்) அவர்களிடத்தில் யார் வந்து உதவி கேட்டாலும் தன்னிடத்தில் இருந்தால் அவர்களுக்கு உதவி செய்பவர்களாக இருந்தார்கள். முடித்துவைத்துக் கொள்ள மாட்டார்கள்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, “ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும், இனிமையானதுமாகும். யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு இதில் வளம் ஏற்படுத்தப்படும்; யார் இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கின்றாரோ அவருக்கு அதில் வளம் ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது” என்று கூறினார்கள்.

அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீதாணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும் வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன்” எனக் கூறினேன்.

அபூபக்கர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார்கள். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள் “முஸ்லிம் சமுதாயமே! தமது உரிமையைப் பெற்றுக் கொள்ளுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற்றுக் கொள்ள மறுக்கிறார். இதற்கு நீங்களே சாட்சி!’ எனக் கூறினார்கள். ஹகீம் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும் வரை எதையும் கேட்கவேயில்லை என சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

அறி : ஹகீம் பின் ஹிஸாம் (ரலி),
நூல் : (புகாரி: 1472) 

நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தாருடைய நிலை

நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய குடும்பத்தாருக்கு போதுமான உணவுகளை வழங்க முடியமால் ஏழ்மை நிலையில் இருந்தார்கள். மறுமையிலுள்ள வாழ்வு தான் நிரந்தர வாழ்வு என்று அவர்கள் விரும்பிய காரணத்தால்தான் இவ்வாறு நடந்து கொண்டார்கள்.

عَنْ عَائِشَةَ قَالَتْ
إِنْ كُنَّا آلَ مُحَمَّدٍ -صلى الله عليه وسلم- لَنَمْكُثُ شَهْرًا مَا نَسْتَوْقِدُ بِنَارٍ إِنْ هُوَ إِلاَّ التَّمْرُ وَالْمَاءُ.

முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாரான நாங்கள் அடுப்பு பற்றவைக்காமல் ஒரு மாதத்தைக் கழித்திருக்கிறோம். அப்போது பேரீச்சம் பழமும் தண்ணீருமே எங்கள் உணவாக இருந்தன.

அறி : ஆயிஷா (ரலி),
நூல் : (முஸ்லிம்: 5688) 

நபி (ஸல்) அவர்கள் மனைவிக்குக் கூறிய அறிவுரை

நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்கள் மனைவிமார்களுக்கும் மத்தியில் மனஸ்தாபம் ஏற்படும்போது ஒரு மாத காலம் அவர்களுடன் ஒன்று சோராமல் இருந்தார்கள். ஒரு மாதத்திற்குப் பிறகு அவர்களை சந்திக்கும்போது உங்களுக்கு உலக வாழ்க்கை வேண்டுமா? மறுமை வாழ்க்கை வேண்டுமா? என்று கேள்வி எழுப்பி, நீங்கள் உலக வாழ்க்கை விரும்பினால் அதற்குத் தேவையான ஏற்பாடுகளை தயார் செய்துவிடுகிறோன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறும்போது ஆயிஷா (ரலி) அவர்களும், மற்ற மனைவிமார்களும் இவ்வுலக வாழ்க்கையை விரும்பாமல், மறுமை வாழ்க்கையை தேர்வு செய்தார்கள் என்ற செய்தி பின்வரும் ஹதிஸின் மூலம் அறியலாம்.

(ஹதிஸின் சுருக்கம்)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அப்போதுதான், (“நபி (ஸல்) அவர்களுடன் வாழ்வது, அல்லது அவர்களின் மண பந்தத்திலிருந்து விலகி விடுவது’ ஆகிய இரு விஷயங்களில்) நாங்கள் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி கட்டளையிடும் இறை வசனம் அருளப்பட்டது. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் தம்முடைய மனைவிமார்களில் முதலாவதாக என்னிடம் தொடங்கி, “உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கின்றேன்: நீ உன் தாய் தந்தையரிடம் (அதற்காக) அனுமதி வாங்கும்வரை அவசரப்படத் தேவையில்லை” என்று கூறினார்கள். அதற்கு நான், “என் தாய் தந்தையர் தங்களை விட்டுப் பிரிந்து வாழும்படி ஒரு போதும் சொல்ல மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்” என்று கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்கள், “நபியே! நீங்கள் உங்கள் மனைவிமார்களிடம் கூறிவிடுங்கள்: “நீங்கள் உலக வாழ்வையும் அதன் அழகையும் விரும்புகிறீர்களென்றால் வாருங்கள்.
நான் ஏதேனும் சிலவற்றைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை அனுப்பிவிடுகின்றேன்.

ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுவுலகையும் விரும்புகிறீர்கள் என்றால் (அறிந்து கொள்ளுங்கள்:) உங்களில் நற்செயல் புரிபவர்களுக்கு அல்லாஹ் மகத்தான பிரதிபலனைத் தயார் செய்து வைத்துள்ளான்’ என்று அல்லாஹ் கூறுகின்றான். (ஆகவே, உங்கள் முடிவு என்ன?)” என்று கேட்டார்கள். நான், “இந்த விஷயத்திலா என் தாய் தந்தையரிடம் நான் அனுமதி கேட்பேன். நானோ அல்லாஹ்வையும் அவனது தூதரையும் மறுமை உலகையும்தான் விரும்புகின்றேன்” என்று கூறினேன். பிறகு, தம் மனைவிமார்கள் அனைவருக்கும் (“தம்முடன் வாழ்வது, தம்மை விட்டுப் பிரிந்து விடுவது’ ஆகிய இரண்டில்) விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை வழங்கினார்கள். அவர்கள் அனைவருமே நான் சொன்னது போன்றே சொன்னார்கள்.

அறி : ஆயிஷா (ரலி),
நூல் : (புகாரி: 2468) 

மேற்கூறப்பட்ட அனைத்து ஹதீஸ்களையும் நினைவில் கொண்டு, இவ்வுலக வாழ்க்கையின் வசதிகளுக்காக நாம் மறுமையை பாழாக்கிவிடக் கூடாது என்பதற்காக அல்லாஹ் முஃமின்களுக்கு மறுமையை முன்னிறுத்தி உபதேசம் செய்கின்றான் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு இவ்வுலகில் வாழ வேண்டும்.

இந்த உலகத்தில் வாழக்கூடிய எந்த மனிதனாக இருந்தாலும் அவனுக்கென்று ஏதாவது நோக்கம் இருக்கும். எந்த மனிதனும் நோக்கம் இல்லாமல் வாழமாட்டான். குறிப்பாக இந்த இஸ்லாமிய சமுதாயத்தில் வாழக்கூடிய ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கண்டிப்பாக நோக்கம் இருக்கும்.

நாம் எந்தவித நரகத்தினுடைய தீண்டுதலும் இல்லாமல் சொர்க்கம் செல்ல வேண்டும் என்ற நோக்கம்தான் அது. எந்த முஸ்லிமும் சிறிது காலம் நரகத்தில் வேதனையை அனுபவித்துவிட்டு பிறகு சொர்க்கம் சென்று விடலாம் என்று நினைக்கக்கூட மாட்டோம். கேள்வி கணக்குகள் இருந்தாலும் அதை முடித்துவிட்டு சொர்க்கம் செல்லவே நாம் ஆசைப்படுவோம்.

இந்த சொர்க்கத்தை நாம் அடைவதற்கு இஸ்லாம் நமக்கு ஒரு சில கட்டளைகளை இடுகிறது.

நபி (ஸல்) அவர்கள் எந்தெந்த காரியங்களைச் செய்தால் உங்களுக்கு சொர்க்கத்தை நான் வாக்களிக்கிறேன் என்று சொன்னார்களோ அப்படிப்பட்ட சிறிய காரியங்களையும் செய்வதற்கு நாம் முன் வரவேண்டும். அந்த காரியங்க்ளைச் செய்ய வேண்டும் என்றால் முதலில் சொர்க்கத்தைப் பற்றிய செய்திகளை நாம் அறிந்து கொள்வது அவசிமாகும்.

சொர்க்கத்தின் இன்பங்கள் சொர்க்கத்தை விளங்குதல்
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-
 يُؤْتَى بِأَنْعَمِ أَهْلِ الدُّنْيَا مِنْ أَهْلِ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ فَيُصْبَغُ فِى النَّارِ صَبْغَةً ثُمَّ يُقَالُ يَا ابْنَ آدَمَ هَلْ رَأَيْتَ خَيْرًا قَطُّ هَلْ مَرَّ بِكَ نَعِيمٌ قَطُّ فَيَقُولُ لاَ وَاللَّهِ يَا رَبِّ.
وَيُؤْتَى بِأَشَدِّ النَّاسِ بُؤْسًا فِى الدُّنْيَا مِنْ أَهْلِ الْجَنَّةِ فَيُصْبَغُ صَبْغَةً فِى الْجَنَّةِ فَيُقَالُ لَهُ يَا ابْنَ آدَمَ هَلْ رَأَيْتَ بُؤْسًا قَطُّ هَلْ مَرَّ بِكَ شِدَّةٌ قَطُّ فَيَقُولُ لاَ وَاللَّهِ يَا رَبِّ مَا مَرَّ بِى بُؤُسٌ قَطُّ وَلاَ رَأَيْتُ شِدَّةً قَطُّ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“இந்த உலகத்தில் கடுமையான துன்பத்தில் வாழ்ந்த சொர்க்கவாசிகளில் ஒருவர் மறுமைநாளில் கொண்டுவரப்பட்டு சிறிது நேரம் சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார். பிறகு அவரிடம், “ஆதமின் மகனே! (உலகில்) எப்போதேனும் சிரமத்தைக் கண்டாயா? எப்போதேனும் துன்பம் ஏதும் உனக்கு ஏற்பட்டதா?” என்று கேட்கப்படும். அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை என் இறைவா! ஒருபோதும் எனக்கு எந்தத் துன்பமும் ஏற்பட்டதில்லை. ஒருபோதும் நான் சிரமத்தைக் கண்டதில்லை” என்று கூறுவார் என்றார்கள்.

அறி : அனஸ் பின் மாலிக்(ரலி),
நூல் : (முஸ்லிம்: 5407) 

சொர்க்கத்தை விளங்குவதற்காக இந்த சம்பவத்தை நமக்கு நபி(ஸல்) அவர்கள் சொல்லிக்காண்பிக்கிறார்கள்.

சொர்க்கத்தில் இடம் கிடைப்பது

இன்னும் இலகுவாக சொர்க்கம் என்பது நிலையானது என்றும் நமக்குப் புரிய வைக்கிறார்கள்.

مَوْضِعُ سَوْطٍ فِي الْجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا وَلَغَدْوَةٌ فِي سَبِيلِ اللهِ ، أَوْ رَوْحَةٌ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا.

“சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவுக்கு இடம்(கிடைப்பது), உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : சஹ்ல் பின் சஅத் (ரலி),
நூல் : (புகாரி: 6415) 

இந்த உலகத்தில் 10சென்ட் வைத்திருப்பவர்கள்கூட இன்றைக்கு 50லட்சம் இன்னும் 5வருடத்தில் 1கோடி என்று மகிழ்ந்து ஆட்டம் போடுவதைப் பார்க்கிறோம். இரவெல்லாம் அதை நினைத்துக்கொண்டு தூங்காமல் சந்தோசத்தில் மிதப்பதைப் பார்க்கிறோம். இதெல்லாம் இருந்து எத்தனை நாட்களுக்கு ஆடுவார்கள்? தமது வீட்டில் ஆசை ஆசையாக வாங்கிய ஏசி இருக்கும். அதை அனுபவிக்க இவர்கள் இருப்பார்களா?

ஆனால் மறுமையில் ஒரு சாட்டை வைக்கக்கூடிய அளவு இடம் கிடைப்பது என்பது இந்த பூமியும் அதில் உள்ளவற்றில் உள்ள அனைத்தையும்விட சிறந்தது என்றால் அந்த சொர்க்க வாழ்க்கைக்கு அழிவே கிடையாது என்பதுதான் இதன் அர்த்தம்.

சொர்க்கத்தின் பிரம்மாண்டம்

சொர்க்கத்தில் இருக்கக்கூடிய இடங்களை நாம் யோசித்து பார்த்தால் அது போன்று இடங்களெல்லாம் இருக்குமா என்று நாம் கேட்கும் அளவிற்கு அதன் பிரம்மாண்டத்தை நமக்கு நபி (ஸல்) அவர்கள் விளக்குகிறார்கள்.

حَدَّثَنِي أَبُو سَعِيدٍ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ :
إِنَّ فِي الْجَنَّةِ لَشَجَرَةً يَسِيرُ الرَّاكِبُ الْجَوَادَ الْمُضَمَّرَ السَّرِيعَ مِئَةَ عَامٍ مَا يَقْطَعُهَا

“சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. (அதன் நிழலில்) விரைந்து செல்லும் கட்டான உடலுள்ள உயர் ரகக் குதிரை நூறாண்டுகள் பயணித்தாலும் அதைக் கடக்க முடியாது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அபூசயீத்(ரலி),
நூல் : (புகாரி: 6553) 

ஒரு வருடமல்ல, இரண்டு வருடமல்ல. வேகமாக ஓடக்கூடிய குதிரை நூறு வருடங்கள் ஓடினாலும் அதன் நிழலைக்கூட கடக்க முடியாது என்றால் சொர்க்கம் எந்த அளவிற்கு பிரம்மாண்டமாக இருக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். இந்த உலகத்தில் அதிகபட்சம் ஐநூறு நபர்கள் உட்காரும் அளவிற்கு கூட ஒரு மரத்தை காண்பது அரிது. ஆனால் சொர்க்கம் அப்படிப்பட்டது அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கேட்டதெல்லாம் கிடைக்கும்

இந்த உலகத்தில் நாம் நினைத்த எதுவும் நடக்கவில்லை, நாம் நினைத்த எதுவும் நமக்கு கிடைக்கவில்லை என்று புலம்பும் மக்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் என்ன தேவையோ, அதெல்லாம் அந்த சொர்க்கவாசிகளுக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ் சொல்கிறான்.

   لَّهُمْ فِيْهَا مَا يَشَآءُوْنَ

“அவர்கள் நினைத்தவை அவர்களுக்கு அங்கே உண்டு”.

(அல்குர்ஆன்: 25:16)

என்ன கேட்டாலும் நமக்கு அங்கே கிடைக்கும் என்பதை அல்லாஹ் கூறுகிறான். இதற்காக அந்த சொர்க்கத்திற்கு நாம் ஆசைப்பட வேண்டும்.

முதல் உணவு

ஒரு சந்தோஷமான காரியம் நடக்கிறது என்றால் அதில் முதல் காரியம் எதுவாக இருக்குமோ அதை நினைவில் வைத்துக்கொள்ள அனைவரும் ஆர்வமாக இருப்போம். அது போன்றே சொர்க்கவாசிகள் முதன் முதலில் சாப்பிடக்கூடிய உணவும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்.

 وَأَمَّا أَوَّلُ طَعَامِ أَهْلِ الْجَنَّةِ فَزِيَادَةُ كَبِدِ حُوتٍ

“சொர்க்கவாசிகள் உண்ணும் முதல் உணவு, பெரிய மீனின் ஈரல் பகுதியிலுள்ள கூடுதலான சதையாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அனஸ் (ரலி),
நூல் : (புகாரி: 4480) 

இளமை இளமை

சொர்க்கத்தில் எந்த ஒரு மனிதனுக்கும் இளமை அழியவே அழியாது. என்றும் இளமையோடு இருக்கும் இடமாக சொர்க்கம் இருக்கும் என்பதை நபி (ஸல்) அவர்கள் நமக்கு சொல்லிக் காண்பிக்கிறார்கள்.

عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ
مَنْ يَدْخُلُ الْجَنَّةَ يَنْعَمُ لاَ يَبْأَسُ لاَ تَبْلَى ثِيَابُهُ وَلاَ يَفْنَى شَبَابُهُ

அவரது இளமை அழிந்துபோகாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : (முஸ்லிம்: 5456) 

இந்த உலகத்தில் போன வருடம் எடுத்த புகைப்படத்தைக் கூட நாம் இப்போது பார்க்க இயலாது. நாம்தானா என்ற சந்தேகம் கூட நமக்கு வரும். போன வருடம் உடல் பருமன் இருந்திருக்கும். ஆனால் இந்த வருடம் உடல் மெலிந்து போய் இருக்கும். கேட்டால் சர்க்கரை நோய் வந்துவிட்டது என்று பதில் கூறுவதைப் பார்க்கிறோம். எனவே இந்த உலகத்தில் நமது இளமை மாறிக்கொண்டே செல்கிறது. அடையாளம் தெரியாத அளவிற்கு செல்கிறது. தலைமுடிகள் உதிர்வதையும், அதன் நிறங்கள் மாறுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. அதைத் திரும்பப் பெறவே இயலாது என்பதே இந்த உலக வாழ்க்கை. ஆனால் இளமை மாறாமல் சொர்க்கவாசிகள் இருப்பார்கள்.

நோய் இல்லை

சொர்க்க வாழ்க்கையை அனுபவிக்கும்போது எந்தத் தடையும் வரக்கூடாது என்பதற்காகவே அல்லாஹ் நோயில்லாத சொர்க்க வாழ்க்கையை சொர்க்கவாசிகளுக்கு தந்திருக்கிறான்.

 لاَ يَبْصُقُونَ فِيهَا وَلاَ يَمْتَخِطُونَ

“மூக்கு சிந்தமாட்டார்கள். சளி துப்பவும் மாட்டார்கள்.” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : (முஸ்லிம்: 5451) 

இந்த உலகத்தில் ஏதேனும் பெரிய நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இந்த சிறிய நோய்கள்தான் காரணமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஜலதோஷம்தான் பெரும்பங்கு வகிக்கிறது. ஜலதோஷம் பிடித்துவிட்டால் எந்த வேலையும் மனிதனுக்கு செய்ய முடிவது கிடையாது. மிகவும் சிரமப்படக்கூடிய நிலைமையை அடைகின்றனர். ஆனால் சொர்க்கத்தில் இது போன்ற எந்த பிரச்சனையும் இல்லை என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நமக்கு சொல்லுகிறார்கள்.

சொர்க்கவாசிகளின் துணைகள்

சொர்க்கவாசிகளுக்கு கிடைக்கின்ற அந்தத் துணைகளை நாம் சிந்தித்துப்பார்த்தால் இந்த உலகத்தில் வாழக்கூடிய ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் அழகா என்று கேட்கக்கூடிய நிலைமை வரும்.

فِيْهِنَّ قٰصِرٰتُ الطَّرْفِۙ لَمْ يَطْمِثْهُنَّ اِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ‌ۚ‏

“அவற்றில் பார்வைகளைத் தாழ்த்திய கன்னியர் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர் அவர்களை எந்த மனிதனும், ஜின்னும் தீண்டியதில்லை.”

(அல்குர்ஆன்: 55:56)

மற்றொரு வசனத்தில்,

كَاَمْثَالِ اللُّـؤْلُـوٴِالْمَكْنُوْنِ‌ۚ‏

“மறைத்துவைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்.”

(அல்குர்ஆன்: 56:23)

என்று அல்லாஹ் கூறுகிறான். இந்த உலகத்தில் யாரையாவது முத்துக்களைப் போன்று இருக்கிறார்கள் என்று சொல்ல இயலுமா? கண்டிப்பாக சொல்ல இயலாது. இன்னும் நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்…

وَلَوْ أَنَّ امْرَأَةً مِنْ نِسَاءِ أَهْلِ الْجَنَّةِ اطَّلَعَتْ إِلَى الأَرْضِ لأَضَاءَتْ مَا بَيْنَهُمَا وَلَمَلأَتْ مَا بَيْنَهُمَا رِيحًا

“சொர்க்கத்தின் மங்கையரில் ஒருவர் பூமியில் தோன்றினால் வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள பகுதிகளெல்லாம் ஒளிரும். மேலும், அப்பகுதிகள் அனைத்திலும் நறுமணம் கமழும்.”

அறி : அனஸ் (ரலி),
நூல்: (புகாரி: 6568) 

நம்முடைய வீட்டில் மின்சாரம் இல்லாமல் இருட்டில் தீப்பெட்டி எங்கே இருக்கிறது என்று தேடிக்கொண்டிருப்போம். வீட்டில் கணவன், மனைவி இருந்தாலும் அவர்களின் முகத்தில் வெளிச்சம் கிடைக்குமா என்ன? அவர்கள் அருகில் இருந்தாலும் கூட பார்க்கவே இயலாதே. ஆனால் சொர்க்கத்தில் இருக்கும் ஒரு பெண் எட்டிப்பார்த்தால் வானம், பூமியெல்லாம் மின்னக்கூடிய வகையில் இருக்குமென்றால் அவர்களை எந்த அளவு அழகாக அல்லாஹ் படைத்திருப்பான் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இன்னும் சொல்வதாகயிருந்தால் சொர்க்கவாசிகளுக்கு அழகு கூடிக்கொண்டேதான் இருக்கும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ
إِنَّ فِى الْجَنَّةِ لَسُوقًا يَأْتُونَهَا كُلَّ جُمُعَةٍ فَتَهُبُّ رِيحُ الشَّمَالِ فَتَحْثُو فِى وُجُوهِهِمْ وَثِيَابِهِمْ فَيَزْدَادُونَ حُسْنًا وَجَمَالاً فَيَرْجِعُونَ إِلَى أَهْلِيهِمْ وَقَدِ ازْدَادُوا حُسْنًا وَجَمَالاً فَيَقُولُ لَهُمْ أَهْلُوهُمْ وَاللَّهِ لَقَدِ ازْدَدْتُمْ بَعْدَنَا حُسْنًا وَجَمَالاً. فَيَقُولُونَ وَأَنْتُمْ وَاللَّهِ لَقَدِ ازْدَدْتُمْ بَعْدَنَا حُسْنًا وَجَمَالاً

“சொர்க்கத்தில் (மக்கள் ஒன்றுகூடும்) சந்தை ஒன்று உண்டு. அங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சொர்க்கவாசிகள் வருவார்கள். அப்போது வட பருவக்காற்று வீசி அவர்களுடைய முகங்களிலும் ஆடைகளிலும் (கஸ்தூரி மண்ணை) வாரிப் போடும். உடனே அவர்கள் மென்மேலும் அழகும் பொலிவும் பெறுவார்கள். பிறகு அழகும் பொலிவும் அதிகமாகப் பெற்ற நிலையில் அவர்கள் தங்கள் துணைவியரிடம் திரும்பிச் செல்வார்கள்.

அப்போது அவர்களிடம் அவர்களுடைய துணைவியர், “எங்களிடமிருந்து சென்ற பின்னர் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றுவிட்டீர்களே!” என்று கூறுவர். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் சென்ற பிறகு நீங்களும்தான் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றிருக்கிறீர்கள்” என்று கூறுவர்.

அறி : அனஸ்(ரலி),
நூல்: (முஸ்லிம்: 5448) 

எனவே சொர்க்கவாசிகளின் அழகும் பொலிவும் கூடிக்கொண்டே போகும். அவர்களின் அழகு குறையாது என்பதை மேலுள்ள செய்தி மூலமாக நாம் அறிந்துகொள்ளலாம்.

இப்படி சொர்க்கத்தைப் பற்றி எந்த விஷயத்தை நாம் பேசினாலும் அதனை முழுமையாக உணரவும் முடியாது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சொர்க்கத்தைப் பற்றி நமக்கு அறிவித்தது கொஞ்சம் தான்.

عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ
قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ أَعْدَدْتُ لِعِبَادِىَ الصَّالِحِينَ مَا لاَ عَيْنٌ رَأَتْ وَلاَ أُذُنٌ سَمِعَتْ وَلاَ خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ ذُخْرًا بَلْهَ مَا أَطْلَعَكُمُ اللَّهُ عَلَيْهِ

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்த காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்” என்று கூறினான். எனினும், (சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) அல்லாஹ் உங்களுக்கு அறிவித்ததுள்ளது சொற்பமே! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அனஸ் (ரலி),
நூல்: (முஸ்லிம்: 5439) 

எனவே சொர்க்கத்தைப் பற்றி அதிகமாக நினைத்து இந்த உலக வாழ்வில் அல்லாஹ்வை மறந்துவிடாமல் கடமைகளை நாம் செய்ய வேண்டும்.

நபிகளாரின் பிரச்சாரத்திலும் இதுபோன்ற அணுகுமுறை இருந்ததை திருக்குர்ஆன் உறுதி செய்கிறது. 

ஆகவே மறுமையில் அல்லாஹ்விற்கு முன் நிற்கும் நாளை அஞ்சி பயந்து இவ்வுலக வாழ்கையில் நல்லடியார்களாக வாழ்ந்து மறையும் பாக்கியமிக்கவர்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்குவானாக.!