உலகை விரும்பாத உத்தம தூதர்
உலகை விரும்பாத உத்தம தூதர்
இவ்வுலகில் மனிதர்களின் புறத்திலிருந்து நிகழும் பல்வேறு தீமைகளுக்கு அச்சாரமாக திகழ்வது உலக ஆசையே! உலக இன்பங்களின் மீதுள்ள அளவற்ற மோகமும் அதீத பற்றும் தான் மனிதனைத் தீமைகள் செய்யத் தூண்டுகிறது. பணம், பொருள், பதவி, அந்தஸ்து என இவற்றில் ஒன்றின் மீது கொண்டுள்ள மோகம் மனிதனை எந்த நிலைக்கும் கொண்டு சென்று விடுகிறது.
ஒரு கட்டத்தில் இவையே வாழ்க்கை, குறிக்கோள், இலட்சியம் இவை இல்லையேல் வாழ்க்கையே இல்லை. என்ற நிலைக்குச் சிலர் சென்றுவிடுகிறார்கள். தாங்கள் அடைய விரும்பிய பணம், பொருள், பதவி, அந்தஸ்து இவற்றில் ஒன்றை அடையாத போது வாழ்க்கையே வீணாகி விட்டது எனக் கருதுகின்றனர்.
ஆனால் ஒரு முஸ்லிமைப் பொறுத்த அளவில் இவ்வுலக இன்பத்தில் எந்தவொன்றை இழந்தாலும் அது அவனைப் பாதிக்காது. மறுமையின் மீது ஆழ்ந்த பற்று கொண்ட எந்த ஒரு இறைவிசுவாசியும் இவ்வுலகில் எது இல்லை என்றாலும் அதற்காகக் கவலை கொள்ள மாட்டான். வருந்திக் கொள்ள மாட்டான். வாழ்க்கையின் விரக்தி நிலைக்குச் செல்ல மாட்டான்.
மறுமையின் இன்பமே நிலையானது என்றெண்ணி உலக இன்பத்தில் பற்றற்ற தன்மையைக் கடைப்பிடிப்பவராக ஒரு முஸ்லிம் திகழ்வார். பற்றற்ற தன்மை என்றால் எதற்கும் ஆசைப்படக் கூடாது என்பதல்ல. மாறாக எந்த ஒன்று கிடைக்காமல் போனாலும் அதற்காக அலட்டிக் கொள்ளாமல் இருப்பதாகும்.
மார்க்கம் அனுமதித்த முறைகளில், உலகத்தில் தாம் எதிர்பார்த்த ஒன்று கிடைத்தால் அல்ஹம்துலில்லாஹ். கிடைக்காவிட்டாலும் பாதிப்பில்லை என்ற மனநிலையைப் பெற்றவராக ஒரு முஸ்லிம் இருப்பார்.
உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும் (விதியை ஏற்படுத்தியுள்ளான்). கர்வமும், பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
விதி மீது நம்பிக்கை கொண்ட முஸ்லிம் இவ்வாறே இருப்பார் என்று திருக்குர்ஆன் உறுதிபடத் தெரிவிக்கின்றது.
இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக நபிகள் (ஸல்) அவர்களைக் குறிப்பிடலாம்.
உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்போம். இதில் எந்த ஒன்றிலும் நபி (ஸல்) அவர்கள் முழுமை பெற்றவர்களாக இல்லை என்ற போதும் அவர்கள் துளியும் துவண்டு விடவில்லை.
உணவு
நபியவர்கள் பல நாட்கள் பட்டினி கிடந்துள்ளார்கள். வெறும் தண்ணீரையும் பேரீச்சம் பழத்தையும் உண்டு காலம் கழித்துள்ளார்கள்.
(நூல்: (முஸ்லிம்: 5688))
தொடர்ந்து 3 நாட்கள் வயிறார உண்டதில்லை. அவர்கள் மரணிக்கும் வரை இதே நிலை தான் இருந்தது.
(நூல்: (புகாரி: 5416) , 5374)
‘சாப்பாடு உள்ளதா?’ என்று வீட்டில் கேட்பார்கள். துணைவியார் ‘இல்லை’ எனும் போது ‘அப்படியெனில் நான் நோன்பிருக்கிறேன்’ என்பார்கள்.
( (முஸ்லிம்: 2125) )
குழம்பாக வினிகரைப் பயன்படுத்தி வயிற்றுப் பசியைப் போக்கியுள்ளார்கள்.
( (முஸ்லிம்: 4172) )
உடை
வண்ண வண்ண ஆடைகள் இல்லை. மெல்லிய ஆடைகள் உடுத்தியதில்லை. பெரும்பாலும் முரட்டு போர்வையே நபிகளாரின் உடை. அவற்றையும் விரல் விட்டு எண்ணிவிடலாம்.
( (புகாரி: 2597) , 6636)
இருப்பிடம்
மிக குறுகலான வீடு. விசாலமான அறைகளில்லை. ஒருவர் படுத்திருந்தால் மற்றொருவரால் தொழ முடியாது எனுமளவு இட நெருக்கடி. விளக்குகள் இல்லை.
( (புகாரி: 382) , 513)
பாயின் மீது விரிப்பில்லை
படுத்துறங்கும் பாயே வீட்டின் கதவாகவும் பயன்படும்.
( (புகாரி: 730) , 5862)
நபிகளார் தொடர்புடைய இந்தச் செய்திகள் நமக்கு உணர்த்துவது என்ன?
இவ்வுலகத்தின் மிகச் சாதாரணமான இன்ப வளங்கள் கூட அவர்களுக்கு வழங்கப் பட்டிருக்கவில்லை என்பதை உணர்த்துகிறது. ஆனாலும் நபிகளார் இந்த வாழ்க்கையை சலித்துக் கொள்ளவில்லை. இறைவிதியை மிக திருப்திகரமாகப் பொருந்திக் கொண்டு வாழ்ந்தார்கள். காரணம், நபிகளாரின் உலகப் பற்றற்ற தன்மையேயாகும்.
நபி (ஸல்) அவர்கள் உலகத்தின் மீதான பற்றை வெறுத்து, மறுமையின் மீதான பற்றை அதிகமாக்கிக் கொண்டார்கள் என்பதை இதன் மூலம் தெளிவாக புரியலாம். பின்வரும் சம்பவத்தைப் பாருங்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்து விடும். இதைக் கண்ட நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பை தயாரித்துத் தருகிறோம்; அது உங்கள் உடலைப் பாதுகாக்கும்” எனக் கேட்டோம்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் எனக்கும், “இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது? மரத்தின் நிழலில் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு பயணிக்கும், அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும், இவ்வுலகத்துக்கும் உள்ளது” எனக் கூறி அதை நிராகரித்து விட்டார்கள்.
நூல்: (திர்மிதீ: 2377) (2299)
நபி (ஸல்) அவர்களின் மேனியில் பாயின் அச்சு – தழும்புகள் பதிந்திருந்ததைக் கண்டு, விரிப்பொன்றை தயாரித்துத் தரவா என்கிறார்கள் நபித்தோழர்கள். அதற்கு நபியவர்கள் எனக்கும் இவ்வுலகிற்கும் என்ன தொடர்பு? எனக் கூறியதுடன் தனக்கும் இவ்வுலகத்திற்குமான தொடர்பை அற்புதமான உதாரணத்தின் மூலம் அருமையாக விளக்கமளிக்கின்றார்கள்.
இதோ நபிகளாரின் உலகப் பற்றற்ற தன்மையைப் புரிந்து கொள்ள மற்றொரு சம்பவத்தை பாருங்கள்.
நபி ஸல் அவர்கள் ஓர் ஈச்சம் பாயில் (அமர்ந்து) இருந்தார்கள். அவர்களுக்கும் அந்தப் பாய்க்குமிடையே (விரிப்பு) எதுவும் இருக்கவில்லை. அவர்களின் தலைக்குக் கீழே ஈச்ச நார்கள் நிரப்பப்பட்ட தோல் தலையணை ஒன்றிருந்தது. அவர்களின் கால்களுக்கருகில் கருவேலை இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அவர்களின் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம்பாயின் சுவடு (பதிந்து) இருப்பதைக் கண்டு அழுதுவிட்டேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘ஏன் அழுகிறீர்கள்?’ என்றார்கள். அதற்கு நான், ‘இறைத்தூதர் அவர்களே! (பைஸாந்திய மற்றும் பாரசீக மன்னர்களான) சீசரும் குஸ்ரூவும் (தாராளமான உலகச் செல்வங்களைப் பெற்று) வளமுடன் இருந்து வருகின்றனர். தாங்களோ அல்லாஹ்வின் தூதராயிற்றே!’ என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அ(ம்மன்ன)வர்களுக்கு இம்மையும் நமக்கு மறுமையும் இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா?’ என்று கேட்டார்கள்.
நூல்: (புகாரி: 4913)
பிற நாட்டு மன்னர்களுடன் ஒப்பிட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டதைப் போன்ற வசதி வாய்ப்புகள் தங்களுக்கு இல்லையே என்ற போது நபியவர்கள் இந்த ஒப்பீட்டை முற்றிலும் வெறுத்தார்கள். இறைமறுப்பாளர்களான அவர்களுக்கு இவ்வுலகம் வழங்கப்பட்டுள்ளது என்றும் இறைநம்பிக்கையாளர்களான நமக்கு மறுமையே நிலையான வாழ்க்கை என்பதையும் நினைவூட்டிச் செல்கிறார்கள். நபிகளாரின் இந்த நடைமுறையானது, அவர்களுக்கு அல்லாஹ் அறிவுறுத்திய ஓர் அறிவுரையை நினைவூட்டுகிறது.
சோதிப்பதற்காக அவர்களில் சிலருக்கு நாம் வழங்கிய இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நோக்கி உமது கண்களை நீட்டாதீர்! உமது இறைவனின் செல்வம் சிறந்ததும், நிலையானதுமாகும்.
இந்த வசனத்தில் அறிவுறுத்தப்பட்டதற்கு ஏற்பவே நபிகளாரின் வாழ்க்கை அமைந்திருந்தது என்பதை மேற்கண்ட சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன. உலக இன்பங்களில் எதுவொன்று இல்லையென்ற போதும் அதற்காகக் கலங்கி விடாமல், விரக்தி கொள்ளாமல், மறுமையை நோக்கி வீறுநடை போட்டார்கள் என்றால் உலக வாழ்வின் இன்பங்களை நபியவர்கள் எந்தளவில் மதிப்பிட்டிருந்தார்கள் என்பதை அறியலாம்.
இத்தனைக்கும் உலக வாழ்க்கையின் இன்பங்களைத் திரட்டுவதற்கு சக்தியற்றவர்களாக நபியவர்கள் இருந்தார்களா? என்றால் அதுவும் இல்லை. இளம் வயதிலேயே மிகச் சிறந்த வியாபாரி, செல்வந்தர். இறைத்தூதராக இறைவனால் தேர்வு செய்யப்பட்ட பிறகோ ஆன்மீகம் மற்றும் அரசியல் என இரட்டைத்தலைமை அவர்களது கைவசம். இதன் மூலம் நபியவர்கள் உலக செல்வத்தைப் பெருக்கிக் கொள்ள விரும்பினால் அது எளிதில் சாத்தியமாகக் கூடிய ஒன்றே. ஆனால் அதை நபியவர்கள் விரும்பவில்லை. அது தான் நபியவர்களின் ஒப்பீடற்ற உலகப் பற்றற்ற தன்மை.
நபியவர்களின் இத்தகைய மறுமைப் பற்றை நாமும் கடைப்பிடித்தால் இவ்வுலக இன்பங்கள் தான், வாழ்க்கை என்ற எண்ணம் ஏற்படாது. உலக இன்பங்களுக்குப் பிரதான முக்கியத்துவமும் அளிக்க மாட்டோம். இவ்வுலகத்தின் மீதான பற்று அதிகரிக்கும் போதெல்லாம் பின்வரும் நபிமொழியை கவனத்தில் கொள்வோம்.
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு ‘உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு’ என்றார்கள்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித் கூறுகிறார்:)
‘நீ மாலை நேரத்தை அடைந்தால் காலை வேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க் குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு’ என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள்.
நூல்: (புகாரி: 6416)