உலகின் முதல் இறையில்லம்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

அல்லாஹ் கூறுகிறான்:

وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَـرَامِؕ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَڪُمْ شَطْرَهٗ ۙ لِئَلَّا يَكُوْنَ لِلنَّاسِ عَلَيْكُمْ حُجَّةٌ اِلَّا الَّذِيْنَ ظَلَمُوْا مِنْهُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِىْ وَلِاُتِمَّ نِعْمَتِىْ عَلَيْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۙ‌ۛ‏

”நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக! எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்.

அவர்களில் அநீதி இழைத்தோரைத் தவிர (மற்ற) மக்களுக்கு உங்களுக்கு எதிராக எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதும், என் அருட்கொடையை உங்களுக்கு நான் முழுமைப் படுத்துவதும், நீங்கள் நேர்வழி பெறுவதுமே இதற்குக் காரணம்.

(அல்குர்ஆன்: 2:150)

முதல் ஆலயம்

அல்லாஹ் கூறுகிறான்:

 اِنَّ اَوَّلَ بَيْتٍ وُّضِعَ لِلنَّاسِ لَـلَّذِىْ بِبَكَّةَ مُبٰرَكًا وَّهُدًى لِّلْعٰلَمِيْنَ‌‌ۚ‏

”மனிதர்கள் (அல்லாஹ்வை வணங்குவதற்கு) அமைக்கப்பட்ட முதல் வீடு ‘பக்கா’ (மக்கா)வில் உள்ளது தான். அது பரக்கத்துச் செய்யப்பட்டதாகவும், அகிலத்தாருக்கு நேர்வழியாகவும் இருக்கிறது.”

(அல்குர்ஆன்: 3:96)

‘கஅபா’ ஆலயத்தை முதன் முதலில் கட்டியவர்கள் நபி ஆதம் (அலை) அவர்களாவார்கள். அதை புணர் நிர்மாணம் செய்தவர்கள் நபி இபுறாஹீம் (அலை) ஆவார்கள். ஆதம்(அலை) அவர்கள் முதலில் கஅபாவைக் கட்டினார்கள். பிறகு 40 வருடங்களுக்குப் பிறகு பாலஸ்தீனத்தில் உள்ள ”மஸ்ஜிதுல்அக்ஸா”வைக் கட்டினார்கள். இதற்குப் பின்வரும் செய்தி சான்றாக உள்ளது.

அபூதர் (ரலி) அறிவிக்கிறார்கள்:

حَدَّثَنَا إِبْرَاهِيمُ التَّيْمِيُّ ، عَنْ أَبِيهِ ، قَالَ : سَمِعْتُ أَبَا ذَرٍّ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ
قُلْتُ يَا رَسُولَ اللهِ أَيُّ مَسْجِدٍ وُضِعَ فِي الأَرْضِ أَوَّلُ قَالَ الْمَسْجِدُ الْحَرَامُ ، قَالَ : قُلْتُ : ثُمَّ أَيٌّ ؟ قَالَ الْمَسْجِدُ الأَقْصَى قُلْتُ كَمْ كَانَ بَيْنَهُمَا قَالَ أَرْبَعُونَ سَنَةً

”நான் நபி(ஸல்) அவர்களிடம் பூமியில் முதலில் அமைக்கப்பட்ட பள்ளி எது? எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல்மஸ்ஜிதுல் ஹராம்’ (கஅபா) என்று கூறினார்கள். பிறகு எது? என்றேன். ‘அல்மஸ்ஜிதுல் அக்ஸா’ என்று கூறினார்கள். இந்த இரண்டிற்கும் மத்தியில் எத்தனை (வருடங்கள் இடைவெளி?) என்று கேட்டேன். நாற்பது வருடங்கள் என்று கூறினார்கள்.

நூல்: (புகாரி: 3366) 

ஆதம் (அலை) அவர்களால் கட்டப்பட்ட ‘கஅபா’ நாளடைவில் பாழடைந்து செடி, கொடிகள் சூழப்பட்டதாக மாறியது. இஸ்மாயில் (அலை) அவர்கள் வாலிப பருவத்தை அடையும் பொழுது தான் அல்லாஹ் கஅபாவை புணர் நிர்மாணம் செய்யுமாறு கட்டளையிடுகிறான். ஆனால் இபுறாஹீம் (அலை) அவர்கள் கட்டுவதற்கு முன்பாகவே ‘கஅபா’ கட்டப்பட்டிருந்தது என்பதை பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகிறது.

  رَبَّنَاۤ اِنِّىْۤ اَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِىْ بِوَادٍ غَيْرِ ذِىْ زَرْعٍ عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِۙ رَبَّنَا لِيُقِيْمُوْا الصَّلٰوةَ

”எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியை, சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே அவர்கள் தொழுகையை நிலை நாட்டுவதற்காக குடியேற்றியிருக்கிறேன்”

(அல்குர்ஆன்: 14:37) என இபுறாஹீம் (அலை) அவர்கள் கூறினார்கள்.

மேற்கண்ட ‘துஆ’வை ஹாஜரா அம்மையாரையும் கைக்குழந்தை இஸ்மாயீலையும் பாலைவனத்தில் விட்டு வரும் போது நபி இபுறாஹீம் (அலை) கூறினார்கள் என்பது ஹதீஸின் தெளிவாகிறது.

(நூல்: (புகாரி: 3364))

இதன் மூலம் எனவே சிதிலமடைந்த பள்ளிவாசலை தூய்மை செய்யுமாறும், அதன் அடித்தளத்தை உயர்த்துமாறும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

وَاتَّخِذُوْا مِنْ مَّقَامِ اِبْرٰهٖمَ مُصَلًّى‌ ؕ وَعَهِدْنَآ اِلٰٓى اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ اَنْ طَهِّرَا بَيْتِىَ لِلطَّآٮِٕفِيْنَ وَالْعٰكِفِيْنَ وَالرُّکَّعِ السُّجُوْدِ‏

”என் வீட்டை சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள் ஆகியோருக்காக தூய்மை செய்யுமாறும், இபுறாஹீமிடமும், இஸ்மாயீலிடமும் நாம் உறுதிமொழி வாங்கினோம்.”

(அல்குர்ஆன்: 2:125)

 وَاِذْ يَرْفَعُ اِبْرٰهٖمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَاِسْمٰعِيْلُؕ

இபுறாஹீமும், இஸ்மாயீலும் அவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்தினார்கள். (அல்குர்ஆன்: 2:127)

மக்காவிற்கு பல பெயர்கள் உள்ளது

1 மக்கா, 2. பக்கா, 3. அல்பைத்துல் ஹராம் (புனித மிக்க வீடு), 4. அல்பலதுல் அமீன் (அபயமளிக்கும் ஊர்), 5. உம்முல் குரா (நகரங்களின் தாய்), 6. உம்மு ரஹீம் (கருணையின் தாய்), 7. அல்மஃமூன் (பாதுகாக்கப்பட்டது), 8. அல்காதிஸ் (பாவங்களை விட்டும் தூய்மையாக்கக் கூடியது), 9. அல்பைத்துல் அதீக் (பூர்வீக வீடு), 10. அல்முகத்திஸா (பாவங்களை விட்டும் தூய்மையாக்கப்பட்டது).

இது போன்ற இன்னும் பல சிறப்புப் பெயர்களும் உள்ளன.

நபி(ஸல்) அவர்களின் பற்று

நபி (ஸல்) அவர்கள் மக்காவின் மீது அளப்பரிய பாசம் வைத்திருந்தார்கள். அங்கேயே வாழ்ந்திருக்க வேண்டும் என எண்ணினார்கள்.

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَدِيِّ بْنِ حَمْرَاءَ ، قَالَ
رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاقِفًا عَلَى الحَزْوَرَةِ فَقَالَ : وَاللَّهِ إِنَّكِ لَخَيْرُ أَرْضِ اللهِ ، وَأَحَبُّ أَرْضِ اللهِ إِلَى اللهِ ، وَلَوْلاَ أَنِّي أُخْرِجْتُ مِنْكِ مَا خَرَجْتُ

”நபி(ஸல்) அவர்கள் ”ஹஸ்வரா” என்ற ஒட்டகத்தின் மீது நின்றவர்களாக மக்காவை நோக்கி, ”நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! என்னுடைய சமுதாயம் (உன்னை விட்டும்) என்னை வெளியேற்றி இருக்காவிட்டால் நான் வெளியேறி இருக்கமாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்) என்று கூறினார்கள்

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அதீ(ரலி),
நூல்: (திர்மிதீ: 3925) (3860)

அபய பூமி
 وَقَالُوْۤا اِنْ نَّـتَّبِعِ الْهُدٰى مَعَكَ نُـتَخَطَّفْ مِنْ اَرْضِنَا ؕ اَوَلَمْ نُمَكِّنْ لَّهُمْ حَرَمًا اٰمِنًا يُّجْبٰٓى اِلَيْهِ ثَمَرٰتُ كُلِّ شَىْءٍ رِّزْقًا مِّنْ لَّدُنَّا وَلٰـكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ

”நாம் அவர்களை அபயமளிக்கும் புனித பூமியில் (பாதுகாப்பாக) வசிக்கும்படி செய்யவில்லையா? அவ்விடத்தில் ஒவ்வொரு வகைக் கனிவர்க்கமும் நம்மிடமிருந்து ஆகாரமாகக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களின் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள்.”

(அல்குர்ஆன்: 28:57)

وَمَنْ دَخَلَهٗ كَانَ اٰمِنًا ‌ؕ

அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். (அல்குர்ஆன்: 3:97)

இப்றாஹீம் (அலை) அவர்களின் ‘துஆ’வின் காரணத்தால் அல்லாஹ் மக்காவை புனித நகரமாக்கினான்.

عَنْ عَبْدِ اللهِ بْنِ زَيْدٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم
أَنَّ إِبْرَاهِيمَ حَرَّمَ مَكَّةَ وَدَعَا لَهَا وَحَرَّمْتُ الْمَدِينَةَ كَمَا حَرَّمَ إِبْرَاهِيمُ مَكَّةَ وَدَعَوْتُ لَهَا فِي مُدِّهَا وَصَاعِهَا مِثْلَ مَا دَعَا إِبْرَاهِيمُ – عَلَيْهِ السَّلاَمُ – لِمَكَّة

நபி (ஸல்) கூறினார்கள்:
”இபுறாஹீம் மக்காவை புனிதமாக்கினார். அதற்காக பிரார்த்தனை செய்தார். இபுறாஹீம் மக்காவை புனிதமாக்கியது போல் நான் மதீனாவை புனிதமாக்கியுள்ளேன். நபி இபுறாஹீம் (அலை) மக்காவிற்காக பிரார்த்தனை செய்தது போல், நான் மதீனாவிற்கு அதனுடைய ஸாவு (என்ற அளவையிலும்) முத்து (என்ற அளவையிலும் அபிவிருத்தி செய்யுமாறு) பிரார்த்தனை செய்துள்ளேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி) ,
நூல்: (புகாரி: 2129) 

இபுறாஹீம் நபி செய்த பிரார்த்தனையை அல்லாஹ் திருக்குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான்.

 رَبِّ اجْعَلْ هٰذَا بَلَدًا اٰمِنًا وَّارْزُقْ اَهْلَهٗ مِنَ الثَّمَرٰتِ مَنْ اٰمَنَ مِنْهُمْ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ؕ

”இறைவா இவ்வூரை பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்கு கனிகளை வழங்கு வாயாக!”

(அல்குர்ஆன்: 2:126)

அல்லாஹ்வுடைய பாதுகாப்பு

”அப்ரஹா எனும் மன்னன் தன்னுடைய யானைப் படையுடன் கஅபாவை தகர்ப்பதற்காக வந்தான். அவனை எதிர்த்துப் போராடக் கூடிய எந்தப் படையும் அப்போது மக்காவில் இல்லை. என்றாலும், அல்லாஹ் ஒரு வகையான பறவைகளை அனுப்பி, அந்த யானைப் படையை அழித்து தன்னுடைய ஆலயத்தைப் பாதுகாத்தான்.

  اَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِاَصْحٰبِ الْفِيْلِؕ‏
   اَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِىْ تَضْلِيْلٍۙ
وَّاَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا اَبَابِيْلَۙ
تَرْمِيْهِمْ بِحِجَارَةٍ مِّنْ سِجِّيْلٍ
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّاْكُوْلٍ

அல்லாஹ் கூறுகிறான்:
”(முஹம்மதே!) யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான்? என்பதை நீர் அறியவில்லையா? அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா? அவர்களிடம் பறவைகளைக் கூட்டம், கூட்டமாக அனுப்பினான். சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது அவை வீசின. உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான்.

(அல்குர்ஆன்: 105:1-5)

மேலும் கியாமத் நாள் நெருங்கும் போது ஒரு படை ‘கஅபா’வை இடிப்பதற்காக படையெடுத்து வருவார்கள். அல்லாஹ் அவர்களையும் அழித்து கஅபாவைப் பாதுகாப்பான் என்ற செய்தியை பின்வரும் நபிமொழி மூலம் அறிந்து கொள்ளலாம்.

حَدَّثَتْنِي عَائِشَةُ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم
يَغْزُو جَيْشٌ الْكَعْبَةَ فَإِذَا كَانُوا بِبَيْدَاءَ مِنَ الأَرْضِ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللهِ كَيْفَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ وَفِيهِمْ أَسْوَاقُهُمْ ، وَمَنْ لَيْسَ مِنْهُمْ قَالَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ ثُمَّ يُبْعَثُونَ عَلَى نِيَّاتِهِم

”ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள். வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும் போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் முதலாம் நபர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கு அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே! எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத்தான் செய்வார்கள். எனினும் அதற்குப் பிறகு அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)
நூல்: (புகாரி: 2118) 

கொலை, போர், செடி, கொடிகளை பிடுங்குவது கூடாது
عَنْ مُجَاهِدٍ
أَنَّ رَسُولَ اللهِ قَامَ يَوْمَ الْفَتْحِ فَقَالَ إِنَّ اللَّهَ حَرَّمَ مَكَّةَ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالأَرْضَ فَهْيَ حَرَامٌ بِحَرَامِ اللهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لَمْ تَحِلَّ لأَحَدٍ قَبْلِي ، وَلاَ تَحِلُّ لأَحَدٍ بَعْدِي وَلَمْ تَحْلِلْ لِي إِلاَّ سَاعَةً مِنَ الدَّهْرِ لاَ يُنَفَّرُ صَيْدُهَا ، وَلاَ يُعْضَدُ شَوْكُهَا ، وَلاَ يُخْتَلَى خَلاَهَا ، وَلاَ تَحِلُّ لُقَطَتُهَا إِلاَّ لِمُنْشِدٍ فَقَالَ الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ إِلاَّ الإِذْخِرَ يَا رَسُولَ اللهِ فَإِنَّهُ لاَ بُدَّ مِنْهُ لِلْقَيْنِ وَالْبُيُوتِ فَسَكَتَ ثُمَّ قَالَ إِلاَّ الإِذْخِرَ فَإِنَّهُ حَلاَلٌ …

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்:
”அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது (மக்களிடையே) எழுந்து நின்று, ”அல்லாஹ் வானங்களையும், பூமியை யும் படைத்த போதே மக்காவை புனிதப்படுத்தி விட்டான். ஆகவே, அது அல்லாஹ் புண்ணியப்படுத்திய காரணத்தால் இறுதி நாள் வரை புனிதமானதாகும். எனக்கு முன்பும் எவருக்கும் இங்கு போர் புரிவது அனுமதிக்கப் படவில்லை. எனக்குக் கூட (மக்கா வெற்றி கொள்ளப்படும் இத்தருணத்தில்) சிறிது நேரம் மட்டுமே இங்கு போர் புரிய அனுமதிக்கப்பட்டது.

இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக் கூடாது. இங்குள்ள மரங்களை வெட்டக் கூடாது. இங்குள்ள புற்பூண்டுகளை கிள்ளக் கூடாது. பிறர் தவறவிட்ட பொருளை அதை அறிவிப்பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது” என்று சொன்னார்கள். உடனே அப்பாஸ் பின் அப்துல் முத்தலிஃப் (ரலி) அவர்கள் ”அல்லாஹ்வின் தூதரே! ‘இத்கிர்’ எனும் புல்லைத் தவிரவா? ஏனெனில், அது உலோகத் தொழிலாளர்களுக்கும், வீடுகளுக்கும் தேவைப்படுகின்றதே” என்று கேட்க நபி(ஸல்) அவர்கள் (சிறிது நேரம்) மௌனமாயிருந்து விட்டு பிறகு ”இத்கிரைத் தவிரத் தான். ஏனெனில் அதை வெட்டிப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டதாகும்” என்று பதிலளித்தார்கள்.

(நூல்: (புகாரி: 4313) , 1834)

புனிதமிக்க மக்கா நகரில் தடை செய்யப்பட்ட இக்காரியங்களையும், பாவமான காரியங்களைச் செய்வோருக்கும் கடுமையான வேதனை உள்ளது என அல்லாஹ் எச்சரித்துள்ளான்.

وَمَنْ يُّرِدْ فِيْهِ بِاِلْحَـادٍۢ بِظُلْمٍ نُّذِقْهُ مِنْ عَذَابٍ اَ لِيْمٍ‏

”அல்மஸ்ஜிதுல் ஹராமில்” அநீதியின் மூலம் குற்றம் புரிய நாடுவோருக்கு துன்புறுத்தும் வேதனையை சுவைக்கச் செய்வோம்” (அல்குர்ஆன்: 22:25)

عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ
أَبْغَضُ النَّاسِ إِلَى اللهِ ثَلاَثَةٌ مُلْحِدٌ فِي الْحَرَمِ وَمُبْتَغٍ فِي الإِسْلاَمِ سُنَّةَ الْجَاهِلِيَّةِ وَمُطَّلِبُ دَمِ امْرِئٍ بِغَيْرِ حَقٍّ لِيُهَرِيقَ دَمَهُ

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்,
”அல்லாஹ்விடத்தில் மூன்று நபர்கள் மிகவும் வெறுப்புக்குரியவர்கள். 1. ஹரம் ஷரீஃபில் அநீதியின் மூலம் குற்றம் புரிபவன், 2. இஸ்லாத்தில் அறியாமைக் கால நடைமுறையை நாடக்கூடியவன், 3. தகுந்த காரணமின்றி ஒரு உயிரை பறிக்க நாடுபவன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)
நூல்: (புகாரி: 6882) 

காஃபிர்கள் நுழைவதற்குத் தடை
   يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْمُشْرِكُوْنَ نَجَسٌ فَلَا يَقْرَبُوا الْمَسْجِدَ الْحَـرَامَ بَعْدَ عَامِهِمْ هٰذَا‌ ۚ

நம்பிக்கை கொண்டோரே! இணைகற்பிப்போர் அசுத்தமாவர். எனவே அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமை இவ்வாண்டுக்குப் பின் நெருங்கக் கூடாது.
(அல்குர்ஆன்: 9:28)

أَنَّ أَبَا هُرَيْرَةَ أَخْبَرَهُ
أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، بَعَثَهُ فِي الْحَجَّةِ الَّتِي أَمَّرَهُ عَلَيْهِ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم قَبْلَ حَجَّةِ الْوَدَاعِ يَوْمَ النَّحْرِ فِي رَهْطٍ يُؤَذِّنُ فِي النَّاسِ أَلاَ لاَ يَحُجُّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ ، وَلاَ يَطُوفُ بِالْبَيْتِ عُرْيَانٌ

அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்,
ஹஜ்ஜத்துல் வதாவுக்கு முந்தைய வருடம் நபி (ஸல்) அவர்கள் அபூபக்கர் (ரலி) தலைமையில் மக்களை ஹஜ்ஜுக்கு அனுப்பி வைத்தார்கள். துல்ஹஜ் பிறை பத்தாம் நாள், ”எச்சரிக்கை! இந்த வருடத்திற்குப் பின்னர் இணை வைப்பவர்கள் யாரும் ஹஜ் செய்யக் கூடாது. கஅபாவை நிர்வாணமாகத் தவாஃப் செய்யக் கூடாது” என அறிவிக்கச் செய்தார்கள்.

நூல்: (புகாரி: 1622) 

புனிதப் பயணம் மேற்கொள்ளுமிடம்

புண்ணியத்தை நாடி பயணம் செய்யும் மூன்று இடங்களில் முதலாவது இடமாக நபி (ஸல்) அவர்கள் கஃபதுல்லாவைக் கூறியுள்ளார்கள்.

 عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
لاََ تُشَدُّ الرِّحَالُ إِلاَّ إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ الْمَسْجِدِ الْحَرَامِ وَمَسْجِدِ الرَّسُولِ صلى الله عليه وسلم وَمَسْجِدِ الأَقْصَى

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:
”(புண்ணியத்தைத் தேடி) மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறு எங்கும் பயணம் மேற்கொள்ளக் கூடாது. 1. அல்மஸ்ஜிதுல் ஹராம், 2. மஸ்ஜிதுன் நபவி, 3 . பைத்துல் முகத்தஸ் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

நூல்: (புகாரி: 1189) 

மேலும் செல்வமும், உடல் வலிமையும் உடையவர்கள் தம்முடைய வாழ்நாளில் ஒரு தடவையாவது ”கஃபா” ஆலயம் சென்று ”ஹஜ்” செய்வது கட்டாயக் கடமையாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:

وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا

மனிதர்களில் யார் (உடலாலும் செல்வத்தாலும்) அங்கு செல்வதற்கு சக்தி பெற்றிருக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்விற்காக ‘கஅபா’ எனும் அவ்வீட்டை ஹஜ் செய்வது கடமையாகும்.

(அல்குர்ஆன்: 3:97)

அளவற்ற நன்மை
 عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ
صَلاَةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلاَةٍ فِيمَا سِوَاهُ إِلاَّ الْمَسْجِدَ الْحَرَامَ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”என்னுடைய பள்ளி(மஸ்ஜிதுன் னபவி)யில் தொழுவது மற்ற பள்ளிகளில் தொழுகின்ற ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்.  அல்மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா)வைத் தவிர! (ஏனென்றால் அதற்கு அதை விட அதிகமான நன்மைகள் உள்ளது.)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 1190) 

 وَصَلَاةٌ فِي الْمَسْجِدِ الْحَرَامِ أَفْضَلُ مِنْ مِائَةِ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ

மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தொழுகை தொழுவது மற்ற பள்ளிகளில் ஒரு இலட்சம் தொழுகை தொழுவதை விட சிறந்ததாகும் என நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி)
நூல்: (இப்னு மாஜா: 1406) (1396), அஹ்மத்(14167)

எந்நேரமும் வழிபடலாம்
 عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
يَا بَنِي عَبْدِ مَنَافٍ ، لاَ تَمْنَعُوا أَحَدًا طَافَ بِهَذَا البَيْتِ ، وَصَلَّى أَيَّةَ سَاعَةٍ شَاءَ مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அப்து மனாஃப் குடும்பத்தினரே! இரவிலோ, பகலிலோ எந்த நேரத்திலும், ஒருவர் தான் நாடிய பொழுது இந்த (கஅபா) வீட்டை வலம் வருபவரையோ, தொழுபவரையோ தடுக்காதீர்கள்.

அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்இம்(ரலி),
நூல்: (திர்மிதீ: 868) (795)

தஜ்ஜாலை விட்டும் பாதுகாப்பு

இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்று ‘தஜ்ஜால்’உடைய வருகையாகும். இவன் உலகினுடைய அனைத்துப் பகுதிகளுக்கும் செல்வான். ஆனால் மக்காவிற்கும், மதீனாவிற்கும் மட்டும் செல்ல முடியாது.

 حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
لَيْسَ مِنْ بَلَدٍ إِلاَّ سَيَطَؤُهُ الدَّجَّالُ إِلاَّ مَكَّةَ وَالْمَدِينَةَ لَيْسَ لَهُ مِنْ نِقَابِهَا نَقْبٌ إِلاَّ عَلَيْهِ الْمَلاَئِكَةُ صَافِّينَ يَحْرُسُونَهَا

”மக்கா, மதீனாவைத் தவிர, தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இருக்காது. அவற்றின் (மக்கா, மதீனா) ஒவ்வொரு நுழைவாயிலிலும் மலக்குகள் அணிவகுத்து அவனைத் தடுத்தவர்களாக இருப்பார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி),
நூற்கள்: (புகாரி: 1881) , முஸ்லிம் (5236)

‘கஅபா’ இடிக்கப்படுதல்

கியாமத் நாள் வரை ‘கஅபா’வில் ஒவ்வொரு ஆண்டும் ஹஜ்ஜு செய்யப்படும். கஅபாவில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் ஏற்படும்.

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
لَيُحَجَّنَّ الْبَيْتُ وَلَيُعْتَمَرَنَّ بَعْدَ خُرُوجِ يَأْجُوجَ وَمَأْجُوجَ

لاََ تَقُومُ السَّاعَةُ حَتَّى لاَ يُحَجَّ الْبَيْتُ…

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும். உம்ராவும் செய்யப்படும். ‘கஅபா’வில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் வரும்.

அறிவிப்பவர்: அபூஸயீத்(ரலி),
நூல்: (புகாரி: 1593) 

‘கஅபா’வில் ஹஜ் செய்யப்படாத நாள் வரும் போது சிலர் அதனை இடித்துப் பாழ்படுத்துவார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
يُخَرِّبُ الْكَعْبَةَ ذُو السُّوَيْقَتَيْنِ مِنَ الْحَبَشَةِ

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அபீஸீனியாவை சேர்ந்த மெலிந்த கால்களைக் கொண்ட மனிதர்கள் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 1591) , 1896

عَنِ ابْنِ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
كَأَنِّي بِهِ أَسْوَدَ أَفْحَجَ يَقْلَعُهَا حَجَرًا حَجَرًا

மற்றொரு ஹதீஸில், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெளிப்பக்கமாக வளைந்த கால்களை உடைய, கருப்பு நிறத்தவர்கள், ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி கஅபாவை உடைப்பதை நான் பார்ப்பது போன்றிருக்கிறது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)
நூல்: (புகாரி: 1595) 

நல்லுணர்வு பெறுவோம்
عَنِ ابْنِ عُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ
قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمِنًى أَتَدْرُونَ أَيُّ يَوْمٍ هَذَا قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ فَقَالَ فَإِنَّ هَذَا يَوْمٌ حَرَامٌ أَفَتَدْرُونَ أَيُّ بَلَدٍ هَذَا قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ بَلَدٌ حَرَامٌ أَفَتَدْرُونَ أَيُّ شَهْرٍ هَذَا قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ شَهْرٌ حَرَامٌ قَالَ : فَإِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْكُمْ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا وَقَالَ هِشَامُ بْنُ الْغَازِ ، أَخْبَرَنِي نَافِعٌ ، عَنِ ابْنِ عُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا وَقَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ النَّحْرِ بَيْنَ الْجَمَرَاتِ فِي الْحَجَّةِ الَّتِي حَجَّ بِهَذَا وَقَالَ هَذَا يَوْمُ الْحَجِّ الأَكْبَرِ فَطَفِقَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ اللَّهُمَّ اشْهَدْ وَوَدَّعَ النَّاسَ فَقَالُوا هَذِهِ حَجَّةُ الْوَدَاعِ

நபி (ஸல்) அவர்கள் மினாவில் இருந்த போது ”இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா? எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள், ”அல்லாஹ் வும், அவன் தூதருமே நன்கறிவர்!” என்றனர். உடனே அவர்கள், ”இது புனிதமிக்க தினமாகும்! இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்க மக்கள் ”அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிவர்!” என்றனர். அவர்கள் (இது) ”புனிதமிக்க நகரமாகும்!” என்றனர்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா? என்றதும் மக்கள் அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிவர் என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”இது புனிதமிக்க மாதமாகும்” எனக் கூறிவிட்டு, ”உங்களுடைய இந்தப் புனித நகரத்தில், உங்களுடைய இந்த புனித மாதத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போலவே அல்லாஹ் உங்கள் உயிர்களையும், உடைமைகளையும், உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!” எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: (புகாரி: 1742)

இப்படிப்பட்ட புனிதங்களை உணர்ந்து அதன் மூலம் படிப்பினை பெற்று வாழக்கூடிய மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக!