உலகப் பிரச்சினைகளுக்கு இஸ்லாமே ஒரே தீர்வு!
இனவெறி ஒழித்த இஸ்லாம்:
உலகப் பிரச்சினைகளுக்கு இஸ்லாமே ஒரே தீர்வு!
தற்போது அமெரிக்காவில் இனவெறி தலைவிரித்து ஆட ஆரம்பித்துள்ளது. கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் மூன்று இந்தியர்கள் அமெரிக்க இன வெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். அமெரிக்காவின் புளோரிடாவில் இந்தியருக்குச் சொந்தமான கடை ஒன்றின்மீது தாக்குதல் குறி வைக்கப்பட்டது, அதாவது 64 வயது ரிச்சர்ட் லாய்ட் என்பவர் இந்தியர் கடைக்கு தீ வைக்க முயன்றார். ‘அராபியர்களை அமெரிக்காவை விட்டு விரட்டுவோம்’ என்று அவர் கூறினார். போலீஸ் சம்பவ இடத்துக்கு வந்தவுடன் அவர் சரணடைந்தார்.
இதுபோல நாளுக்கு நாள் வெளிநாட்டவர்கள் மீது இனவெறித் தாக்குதல் அதிகமாகிக் கொண்டே போக இந்திய மாப்பிள்ளைகளுக்கு அமெரிக்காவில் தற்போது மவுஸ் குறைந்துவிட்டது என்று செய்திகள் வரத் துவங்கிவிட்டன. அதற்குக் காரணம் அந்நிய நாட்டவர் அமெரிக்காவில் எப்படி வந்து வேலை பார்க்கலாம் என்ற அந்த இனவெறிதான்; கம்ப்யூட்டர் காலத்திலும் கூட ஒழிக்க முடியாத அளவிற்கு தலை விரித்தாடும் இந்த இனவெறியை,
1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே காட்டுமிராண்டிகள் வாழ்ந்த காலத்திலேயே இஸ்லாம் ஒழித்துக் காட்டியது. ஏக இறைக் கொள்கை என்ற தாரக மந்திரம்:
நான் அமெரிக்காக்காரன்; நீ இந்தியாக்காரன்; நான் சிறந்தவன்; நீ தாழ்ந்தவன்; நான் வெள்ளை இனத்தவன்; நீ கருப்பினத்தவன்; நான் சிறந்த மொழி பேசுபவன்; நீ மட்டமான மொழி பேசுபவன்; இப்படி பல்வகையான பிரிவுகளை சொல்லித்தான் மனிதர்களுக்கு மத்தியில் பேதம் காட்டி இனவெறி, நிறவெறி, குலவெறி, சாதி வெறி, ஊர் வெறி ஆகியனவற்றைத் தூண்டிவிட்டு துண்டாடுகின்றார்கள்.
இவை அனைத்திற்கும் இஸ்லாம் ஒரே வாசகத்தை மொழியவைத்து ஒரு கனத்தில் முற்றுப்புள்ளி வைக்கின்றது. இஸ்லாம் சொல்லித்தரும் தாரக மந்திரம் இதுதான்:
மனிதர்களே! உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையருவர் அறிந்து கொள் வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். (அல்குர்ஆன்: 49:13) ➚
அதாவது நாம் அனைவரும் ஒரே தாய் தந்தையருக்குத்தான் பிறந்தவர்கள்; நம் அனைவரையும் படைத்த இறைவன் ஒருவன்தான் என்பதுதான் இஸ்லாம் அனைவரையும் ஒன்றாக இணைக்க கூறும் தாரக மந்திரம். இதை ஒருவர் நம்பும்போது நம் அனைவரையும் படைத்த இறைவன் ஒருவன்தான்; அவன் முன்னாள் நாம் அனைவரும் சமம்; நம்மில் யார் நற்செயல் புரிகின்றார்களோ அவர்கள்தான் இறைவனிடத்தில் சிறந்தவர்கள் என்ற நம்பிக்கை வரும் போது இனவெறி, மொழி வெறி, ஊர் வெறி, நிற வெறி. சாதி வெறி அனைத்தும் ஒழிந்துவிடுகின்றது.
அதனால்தான் காட்டுமிராண்டிகள் வாழ்ந்த காலத்திலும்கூட அனைவரையும் இஸ்லாம் ஒரே நேர்கோட்டில் நிறுத்தியது. இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையிலும் பிரகடனப்படுத்தினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களே! உங்கள் இரட்கன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே! ஒரு அரபிக்கு அரபி அல்லாதவனை விட எந்தச் சிறப்பும் இல்லை. ஒரு அரபி அல்லாதவனுக்கு அரபியை விட எந்தச் சிறப்பும் இல்லை. ஒரு சிகப்பு நிறத்தவனுக்கு கருப்பு நிறத்தவனைவிட எந்தச் சிறப்பும் இல்லை. ஒரு கருப்பு நிறத்தவனுக்கு சிகப்பு நிறத்தவனைவிட எந்தச் சிறப்பும் இல்லை. இறையச்சத்தைக் கொண்டே தவிர. நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லிவிட்டேனா? என நபியவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள் அல்லாஹ்வின் தூதர் எங்களுக்கு எடுத்துரைத்துவிட்டார் எனக் கூறினார்கள். (அஹ்மத்: 22, 391)
இதுபோன்ற ஒரு பிரகடனத்தைச் செய்ததன் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த அறியாமைக்கால மக்களிடத்தில் மிகப்பெரும் புரட்சியை செய்தார்கள். இனவெறியிலும், மொழி வெறியிலும், நிற வெறியிலும், ஊர் வெறியிலும், குல வெறியிலும் ஊறிப்போயிருந்த அந்த அரபுகளுக்கு அபீசீனிய நாட்டிலிருந்து அரபு தேசத்திற்கு வந்த நீக்ரோ இனத்தைச் சேர்ந்த கருப்பின அடிமையான பிலால் (ரலி) அவர்களை பாங்கு சொல்லும் பொறுப்பாளராக நியமித்தார்கள்.
அதை இஸ்லாத்தை ஏற்ற அனைத்து குலத்தவரும் ஏற்றுக் கொண்டார்கள்; இதுதான் இஸ்லாம் நிகழ்த்திக்காட்டிய அற்புதம். நீக்ரோ இனத்தைச் சேர்ந்த, அபீசீனிய மொழி பேசக்கூடிய, அபீசீனிய நாட்டைச் சேர்ந்த பிலால் (ரலி) அவர்களை தலைமை பொறுப்பேற்க நியமித்ததன் மூலம் வெள்ளையர் – கருப்பர் என்ற நிற வெறி ஒழிக்கப்பட்டது; அரபு நாட்டுக்காரர் அபீசீனிய நாட்டுக்காரர் என்ற ஊர் வெறி ஒழிக்கப்பட்டது. அரபி மொழிக்காரர் அபீ சினிய மொழி பேசுபவர் என்ற மொழி வெறியும் ஒழிக்கப்பட்டது என்றால் இத்தகைய அற்புதம் நிகழ்த்த காரணமாக இருந்தது ஏக இறைக்கொள்கை ஒன்றுதான்.
இதை ஒருவர் உறுதியாக நம்பும்போது இத்தகைய பேதங்கள் குழிதோண்டி புதைக்கப் பட்டுவிடுகின்றன. மேலும், மக்காவிலிருந்து ஒரு பெரும் கூட்டம் மதீனா என்ற ஊருக்கு ஹிஜ்ரத் செய்து சென்றது. மக்காவிலிருந்து தங்களது வியாபாரம், வீடு, சொத்து பத்துக்கள், தோட்டம் உள்ளிட்ட அனைத்தையும் கொள்கைக்காக தியாகம் செய்து வந்த முஹாஜிர்களை மதீனாவில் வாழ்ந்த அன்சாரித் தோழர்கள் தங்களது உடன்பிறந்த சகோதரர்கள் போல கருதி அவர்களது வீட்டில் இடமளித்தார்கள்; அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவி களையும் செய்தார்கள்;
தங்களது சொத்து பத்துக்களை வெளியூர்க் காரர்களுக்காக தியாகம் செய்தார்கள். இப்படி ஊர் வெறியை ஒழித்துக்கட்டி அனைவரும் சகோதரர்கள் என்பதை நிலைநாட்டியது இஸ்லாம். அதோடு மட்டுமல்லாமல், ஊர் விட்டு ஊர் வந்து குடியேறிய முஹாஜிர்கள்தான் மதீனாவையே சொந்த நாடாகக் கொண்டு இருந்த அன்சாரிகளுக்கு தலைமை ஏற்றார்கள்; மக்காவைச் சேர்ந்த முஹாஜிர்களின் தலைமையை அவர்களும் மனதார ஏற்றுக் கொண்டார்கள்;
இவை அனைத்திற்குமே இஸ்லாம் கற்றுத்தரும் ஏக இறைக்கொள்கையே காரணம். இதை ஒருவர் மனதார ஏற்பாரேயானால், ஒரு நொடியில் இனவெறி, மொழி வெறி, நிற வெறி, ஊர் வெறி, குல வெறி, சாதி வெறி என அனைத்தும் குழிதோண்டிப் புதைக்கப்படும் அற்புதத்தை கண்முன் காணலாம். இதை இனவெறி பிடித்த அமெரிக்கர்களும் புரிந்து கொண்டால் உலகம் அமைதி பெறும்.
Source : unarvu ( 31/03/17 )