உறுதிமிக்க தோழர் உமர்(ரலி)

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

முன்னுரை

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் உமர் (ரலி) அவர்கள் தான் மிகவும் கம்பீரமாகவும், எதையும் எவ்வித அச்சமின்றி எடுத்துரைக்கும் தன்மையும், பெரும் வீரராகவும் திகழ்ந்தார். உமர் (ரலி) அவர்களின் கூற்றுக்கும் அல்லாஹ்வின் சொல்லுக்கும் சில நேரங்களில் மட்டும் ஒத்துமை உண்டு என நபி (ஸல்) அவர்களே கூறியுள்ளார்கள். 

உமர் (ரலி) அவர்களின் தனிச்சிறப்பு

நபி (ஸல்) அவர்கள் எந்த ஒரு செய்தியை கூறினாலும், முடிவெடுப்பது என்றாலும், ஆலோசனை செய்வதென்பதாலும் அதிலே அபூபக்கர் (ரலி) & உமர் (ரலி) அவர்களையும் சேர்க்காமல் சொல்ல மாட்டார்கள். அந்த அளவிற்கு அவர்கள் இரண்டு பெரும் தனிச்சிறப்பு பெற்றனர்.

நான் சில மக்களிடையே நின்று கொண்டிருக்க, அவர்கள் உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்களுக்காக பிரார்த்திதார்கள். அப்போது உமர் அவர்கள் (இறந்து) கட்டிலின் மீது கிடத்தப்பட்டிருந்தார்கள். அப்போது என் பின்னாலிருந்து ஒருவர் தன் முழங்கையை என் தோளின் மீது வைத்து (உமர்  (ரலி) அவர்களை நோக்கி,) ‘அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்.

அல்லாஹ் (உங்கள் உடல், அடக்கம் செய்யப்படும் போது) உங்களை உங்களுடைய இரண்டு தோழர்க(ளான நபி (ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்கர் (ரலி)  அவர்க)ளுடன் (அவர்களின் மண்ணறைகளுக்கே அருகே) அடங்கச் செய்ய வேண்டும் என்று நான் விரும்பிக் கொண்டிருந்தேன். ஏனெனில், பெரும்பாலான நேரங்களில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நானும் அபூபக்கரும், உமரும் (இப்படி) இருந்தோம்; நானும் அபூபக்கரும், உமரும் (இப்படிச்) செய்தோம்; நானும் அபூபக்கரும், உமரும் (இங்கே) சென்றோம்’ என்று சொல்ல கேட்டிருக்கிறேன்.

எனவே, உங்களை அல்லாஹ் அவ்விருவருடன் (அவர்களின் மண்ணறைகளுக்கு அருகே) அடங்கச் செய்திட வேண்டுமென்று விரும்புகிறேன்’ என்று கூறினார். நான் திரும்பிப் பார்த்தேன். இப்படிச் சொன்ன அந்த மனிதர் அலீ இப்னு அபீ தாலிப் (ரலி) அவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : புஹாரி 3677

உண்மையான மூஃமீன்

நபி (ஸல்) அவர்கள் கூறுகையில், நீங்கள் உண்மை மூஃமினாக விரும்பினால் என்னை நேசிக்க வேண்டும். இதனை செவியுற்ற உமர் (ரலி) அவர்கள், என் தாய், தந்தை, மனைவி, மக்களை விட உங்களைத்தான் நான் அதிகம் நேசிக்கின்றேன். அதுவே, நானா அல்லது நீங்களா என்று பார்க்கும் போது என்னளவில் நான் அதிகம் நேசிக்கின்றேன். அதனை செவியுற்றே நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால் நீ உண்மையாக நேசம் கொள்ளவில்லை. பிறகு சிறிது காலம் தன்னை பக்குவப்படுத்தி நீங்கள் தான் நேசிக்கத் தகுதியானவர்கள் என்று கூறினார். அதனை கேட்ட, நபி (ஸல்) அவர்கள் இப்போது தான் நீங்கள் உண்மை மூஃமினாக ஆகிவிட்டீர் என்று கூறினார்.

உமர் (ரலி) கண்டு சைத்தான் விரண்டோடுதல்

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் தனது மனைவி மற்றும் மனைவியின் சகத் தோழிகள் சகஜமாக பேசி சிரித்துக் கொண்டிருக்க உமர் (ரலி) அவர்கள் முகமன் கூறி உள்ளே வர அணைத்து பெண்களும் அலறியபடி ஓடிவிட்டனர். உடனே உமர் (ரலி) அவர்கள் என்னவென்று கேட்க உங்களைப் பார்த்துதான் அனைவரும் பயந்தபடி ஓடிவிட்டனர். என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, நீர் ஒரு தெருவில் நடந்து வந்தால் சைத்தான் அடுத்த தெருவில் ஓடி விடுவான் என்று தனக்கு கொடுக்காத மரியாதையை உமர் (ரலி) அவர்களுக்கு கொடுத்தார்கள்.

(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதரிடம் (அவர்களின் மனைவிமார்களான) குறைஷிப் பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் (ஜீவனாம்சத் தொகையை) அதிகமாகத் தரும்படி தம் குரல்களை உயர்த்தி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர்(ரலி) வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். உமர்(ரலி) அனுமதி கேட்டபோது அப்பெண்கள் அவரச அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்தபடி எழுந்தனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சிரித்தபடியே உமர் (ரலி) அவர்களுக்கு (உள்ளே வர) அனுமதி கொடுத்தார்கள்.

உமர் (ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! தங்களை ஆயுள் முழுதும் அல்லாஹ் சிரித்தபடி (மகிழ்ச்சியாக) இருக்கச் செய்வானாக’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (என்னிடம் சகஜமாக அமர்ந்திருந்தவர்கள்) உங்கள் குரலைக் கேட்டவுடன் அவரச அவசரமாகப் பர்தா அணிந்தார்களே’ என்றார்கள். உமர்(ரலி), ‘எனக்கு அஞ்சுவதை விட அதிகமாக அஞ்சத் தாங்கள் தாம் தகுதியுடையவர்கள் இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறிவிட்டு, (அப்பெண்களை நோக்கி) ‘தமக்குத் தாமே பகைவர்களாகிவிட்ட பெண்களே! அல்லாஹ்வின் தூதருக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள்.

அதற்கு அந்தப் பெண்கள், ‘ஆம், அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பிடும்போது நீங்கள் கடின சித்தமுடையவராகவும் அதிகக் கடுமை காட்டக் கூடியவராகவும் இருக்கிறீர்கள்’ என்று பதிலளித்தார்கள். (அப்போது) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (உமரே!) நீங்கள் ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கையில் உங்களை ஷைத்தான் கண்டால் உங்களுடைய பாதையல்லாத வேறொரு பாதையில் தான் அவன் செல்வான்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி), நூல் : புஹாரி 3294

உமர் (ரலி) அவர்களின் சொல்லும், வஹீயும்

முந்தைய சமுதாயத்தில் அல்லாஹ் நபியல்லாத மனிதர்களிடையே ஒரு சிலரிடம் அவர் எண்ணத்தில் தான் சொல்ல நினைப்பதை அவர்கள் மனதில் போடுவான். அவர்கள் செய்வது அல்லாஹ் நினைப்பதை போன்றாகும். ஆனால், என் சமுதாயத்தில் அவ்வாறு இல்லை. அப்படி ஒருவர் இருப்பாரேயானால் அது உமர் (ரலி) ஆகத்தான் இருக்க முடியும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனென்றால், உமர் (ரலி) அவர்கள், வஹீயை ஒட்டி பேசுவார். அவர் பேசுவதும் வஹீ போலவே அமையும்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன் சென்ற சமுதாயங்களில், (பல்வேறு பிரச்சினைகளில் சரியான தீர்வு எது என்பது குறித்து இறையருளால்) முன் கூட்டியே அறிவிக்கப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். அத்தகையவர்களில் எவராவது என்னுடைய இந்தச் சமுதாயத்தில் இருப்பாராயின் அது உமர் இப்னு கத்தாப் அவர்கள் தாம்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல் : புஹாரி 3469

அல்லாஹ்வுக்கு ஒப்பான கருத்து

அல்லாஹ்விடம் இருந்து உத்தரவு வருவதற்கு முன்பே கஅபாவை தொழும் இடமாக ஆக்கலாமே என்றும், மேலும் ஜாஹிலிய்யா (அறியாமை கால பழக்க வழக்கம் ) காலத்திலே இருந்த பெண்கள் ஆடைகளை எவ்வாறு அணிவார்களோ அதேபோலத்தான் இஸ்லாத்திற்கு வந்ததன் பின்னரும் இருந்தனர். இதனை உமர் (ரலி) அவர்கள், பெண்கள் தங்களின் ஆடைகளை பேணுமாறு   வற்புறுத்தினார். அதற்கு பிறகு, பெண்களுக்கான ஹிஜாப் சட்டங்கள் அல்லாஹ்விடம் இருந்து வந்தவுடன் நடைமுறைப் படுத்தப்பட்டன.

‘மூன்று விஷயங்களில் நான் அல்லாஹ்வுக்கு இசைவான கருத்துக் கொண்டேன்’ அல்லது ‘என் இறைவன் மூன்று விஷயங்களில் எனக்கு இசைவாகக் கருத்துக் கொண்டான்’ நான் (நபி (ஸல்) அவர்களிடம்) ‘இறைத்தூதர் அவர்களே! இப்ராஹீம் (அலை) அவர்கள் (கஅபாவைக் கட்டும்போது) நின்ற இடத்தைத் தொழுமிடமாக நீங்கள் ஆக்கிக் கொள்ளலாமே!’ என்று கேட்டேன். (அவ்வாறே ஆக்கிக் கொள்ளும்படி அல்லாஹ்வும் வசனத்தை அருளினான்.)

மேலும், நான், (அவர்களிடம்), ‘இறைத்தூதர் அவர்களே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் (எல்லாவகை மனிதர்களும்) வருகிறார்கள். எனவே, (தங்கள் துணைவியரான) இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரை பர்தா அணியும் படி தாங்கள் கட்டளையிடலாமே!’ என்று கேட்டேன் உடனே, அல்லாஹ் பர்தா(சட்டம்) குறித்த வசனத்தை அருளினான்.

நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் சிலர் மீது அதிருப்தி அடைந்திருப்பதாக எனக்குச் செய்தி எட்டியது. எனவே, அவர்களிடம் நான் சென்று, ‘நீங்கள் (நபி (ஸல்) அவர்களுக்குச் சங்கடம் ஏற்படுத்துவதை) நிறுத்திக் கொள்ள வேண்டும்! இல்லையென்றால், அல்லாஹ் தன் தூதருக்கு உங்களைவிடச் சிறந்தவர்களை (உங்களுக்கு) பதிலாகத் தருவான்’ என்று சொன்னேன். இந்நிலையில் அவர்களின் துணைவியரில் ஒருவரிடம் நான் சென்றபோது, ‘உமரே! தம் துணைவியருக்கு உபதேசம் செய்ய இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குத் தெரியாதா? நீங்கள் ஏன் எங்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும்!’ என்று கேட்டார். அப்போது அல்லாஹ், ‘இறைத்தூதர் உங்களை விவாக விலக்குச் செய்தால், உங்களைவிடச் சிறந்த முஸ்லிமான துணைவியரை (உங்களுக்கு பதிலாக) அல்லாஹ் அவருக்கு வழங்கலாம்’ எனும் (அல்குர்ஆன்: 66:5)வது) வசனத்தை அருளினான்.
அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல் : புஹாரி 4483

நபிகளாரின் மனைவிமார்களின் வைராக்கியமும், உமர் (ரலி) அவர்களின் அதிரடி முடிவுகளும்

நபி (ஸல்) அவர்களின் சம்பாத்தியம் மிகக் குறைவாகவே இருந்தது. அவருக்கென்று ஆட்டு மந்தைகள் போன்றவற்றை வைத்து வாழ்ந்து வந்தார்கள். பைத்துல் மால் பணத்தை மற்றும் ஜகாத் பொருளை தொடக் கூடாது. அப்படி உள்ள சூழ்நிலைகளை தெரிந்த மனைவிமார்கள் அனைவரும் தமக்கு கிடைக்கும் வருவாய் போதாது என்று விளங்கி போராட்டம் நடத்த முயன்றனர். உமர் (ரலி) அவர்களின் மகளான ஹப்ஸா (ரலி) அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை கேட்ட உமர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு செய்த உபதேசம் என்னவென்றால், இது தான் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறை. இப்படித்தான் இருக்கும். இஷ்டம் இருந்தால் வாழவும்; இல்லாவிட்டால் விவாகரத்து வாங்கிக் கொண்டு செல்லவும் என்று ஒரே பேச்சில் கூறிவிட்டார். அனால், நபி (ஸல்) அவர்கள் பொறுமையாக இருந்தார்கள். ஆனால், அல்லாஹ்விடம் இருந்தும் அப்படியே வஹீ வர அதனை அவர்களிடம் கூறப்பட்டது.

நபி (ஸல்) அவர்களின் துணைவியர் அனைவரும் சேர்ந்து கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வைராக்கியமாக நடந்து கொண்டபோது, ‘நபி(ஸல்) அவர்கள் உங்களை விவாக விலக்குச் செய்தால் உங்களைவிடவும் சிறந்த துணைவியரை உங்களுக்கு பதிலாக இறைவன் அவர்களுக்குத் தர முடியும்’ என்று சொன்னேன். அப்போது (நான் கூறியவாறு) இந்த (அல்குர்ஆன்: 66:5)வது) இறைவசனம் அருளப்பட்டது.
அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல் : புஹாரி 4916

நபி அவர்களுக்கு உமர் (ரலி) செய்த உபதேசம்

அப்துல்லாஹ் இப்னு உபை என்ற ஒரு முனாஃபிக் ஒருவர் இருந்தார். அல்லாஹ் தான் எவருக்கும் அறிவிக்காத முனாஃபிக்குகளை பற்றி நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் அறிவித்திருந்தான். நபி (ஸல்) அவர்கள், அதனை ஒரு சிலருக்கு மட்டும் அல்லாஹ்விடம் வந்த செய்தியை தெரிவித்திருந்தார். அதில் உமர் (ரலி) அவர்களும் ஒருவர். அப்துல்லாஹ் இப்னு உபைத் அவர்கள் இறந்துவிட அவருக்கு ஜனாஸா தொழ வைக்க நபி (ஸல்) அவர்கள் புறப்படுகிறார்கள். ஆனால், உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை அவன் ஒரு முனாஃபிக்காக இருக்க அவருக்கு எப்படி தொழவைப்பீர்கள். அவருக்காக எழுபது முறை கேட்டாலும் அல்லாஹ் கொடுக்க மாட்டான் என்றதும் நபி அவர்கள், அப்படியென்றால்  நான் அவருக்காக எழுபத்தி ஒரு முறையாவது கேட்பேன் என்று கூறிவிட்டு தொழுகை நடத்திவிட்டார்கள். உமர் (ரலி) அவர்களின் வலியுறுத்துதலை போல அல்லாஹ்விடமிருந்து முனாஃபிக்குகளுக்கு தொழுகை நடத்தக் கூடாதென்று வஹீ வந்தது.

(நயவஞ்சகர்களின்தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்துவிட்டான். அப்போது அவனுடைய (முஸ்லிமான) மகன், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! உங்கள் சட்டையைத் தாருங்கள். அவரை அதில் கஃபன் செய்யவேண்டும்; மேலும் நீங்கள் அவருக்கு ஜனாஸாத் தொழுது அவருக்காகப் பாவமன்னிப்பும் கேட்கவேண்டும்’ என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் சட்டையை அவருக்குக் கொடுத்துவிட்டு, ‘(ஆயத்தமானதும்) எனக்குத் தெரிவியுங்கள்; நான் ஜனாஸாத் தொழுகை நடத்துவேன்’ என்றார்கள்.

பிறகு அறிவிக்கப்பட்டதும் நபி(ஸல்) அவர்கள் அவனுக்கு ஜனாஸாத் தொழ நாடியபோது, உமர்(ரலி) நபி (ஸல்) அவர்களை இழுத்து, ‘நயவஞ்சகர்களுக்கு ஜனாஸாத் தொழக்கூடாது என அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லையா?’ எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘(ஜனாஸாத் தொழுவது, தொழாமலிருப்பது என) இரண்டில் எதையும் தேர்ந்ததெடுத்துக் கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது’ எனக் கூறிவிட்டு, ‘நீர் நயவஞ்சகர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லது தேடாமலிருந்தாலும் சமமே! நீர் அவர்களுக்காக எழுபது முறை பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்கப் போவதே இல்லை’ என்ற (அல்குர்ஆன்: 09:80) வசனத்தை ஓதிக்காட்டிவிட்டு ஜனாஸாத் தொழுதார்கள். உடனே ‘அ(ந்நய)வ(ஞ்சக)ர்களில் யாரேனும் இறந்தால் அவர்களுக்காக ஒருபோதும் (ஜனாஸாத்) தொழ வேண்டாம்’ என்ற (அல்குர்ஆன்: 09:84) வசனம் அருளப்பட்டது.
அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி), நூல் : புஹாரி 1269

உமர் (ரலி) அவர்களின் தனிச்சிறப்புகள்

பத்ர் போர்க்களத்தில் பிடிக்கப்பட்ட கைதிகள் பெரும் கொடியவர்கள். இஸ்லாத்தை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவெடுத்தவர்கள். அவர்களை போர்க்களத்தில் பிடிபட்டவுடன் அவர்களிடம் காசுகளை வாங்கிக் கொண்டு விட்டுவிடலாம் என்று சிலர் கூறினர். அல்லாஹ்வின் தூதர் அவர்களும் அவ்வாறே செய்ய, உமர் (ரலி) அவர்கள் அதனை கண்டிக்கும் வகையில் அவர்களுக்கு பகராமாக காசு ஏதும் வாங்கக் கூடாது. பணம் வாங்கி கொண்டு மறுமுறை வரவும் செய்வார்கள் என்று உமர் (ரலி) அவர்கள் அறிவுரை கூறினார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அதனை செவிசாய்க்காமல் போர்கைதிகளை பணம் வாங்கிக்கொண்டு விட்டுவிட்டனர். அதன் பிறகு, உமர் (ரலி) அவர்கள் கூறியது போல அல்லாஹ்விடம் இருந்து வஹீ வருகிறது.

மேற்க்கூறப்பட்ட அணைத்து செய்திகளையும் வைத்து உமர் (ரலி) அவர்களின் சொல்லும், வஹீயும் ஒன்று தான் என்ற முடிவுக்கு வருவது கூடாது. ஒரு சில விஷயங்களில் மட்டும் தான் உமர் (ரலி) அவர்கள் கூற்று அல்லாஹ்வின் வஹீவுடன் ஒற்று அமைந்துள்ளது தவிர அணைத்து விஷயங்களுக்கு கிடையாது. ஏனென்றால், நபி (ஸல்) அவர்கள் மரணித்த போது, திருமறை குர்ஆனிற்கு எதிராக நபியவர்கள் உயிர் அவரை விட்டு பிரியவே பிரியாது. அவர் என்றும் உயிருடன் இருக்கக்கூடியவர் என்றார்.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அதற்கு பிறகு ஆட்சி புரிந்த அபூபக்கர் (ரலி) அவர்கள் ஆட்சியிலும் மூன்று முறை ஒருவர் தலாக் என்றால் அது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது. ஆனால், உமர் (ரலி) அவர்கள் ஆட்சி புரிந்த சிறு காலத்திலே மூன்று தலாக்கென்றால் அது மூன்று தலாக்காகிவிடும் என்று நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்கு மாறாக சட்டம் வகுத்தார். அது நமக்கு மார்க்கமாகாது. ஏனென்றால், நபி (ஸல்) அவர்கள் காலம் வரை வஹீ என்று சொல்லக்கூடிய இறைச்செய்தி நின்று விட்டது.

உமர் (ரலி) அவர்கள் நபி அவர்களை தடுக்க வைத்த செயல்

ஒரு தடவை நபி (சில) அவர்கள் உடல்நிலை சரியில்லாத கடைசி நேரத்தில் தோழர்கள் மத்தியில் உங்களுக்கு குழப்பம் வராமல் இருக்க நான் சில செய்திகளை கூறுகிறேன். அதனை எழுதி கொள்ளுங்கள் என்று கூற அதனை கேட்ட உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் சிரமப்பட்டிருக்க இது தேவைதானா? நமக்குத்தான் அல்லாஹ்வின் வேதம் இருக்கின்றதே என்று கூற தோழர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. பிறகு, நபி (ஸல்) அவர்கள் அனைவரையும் என் முன்னே எவரும் சண்டையிடக் கூடாது என அனைவரையும் வெளியாக்கினார்கள்.

நபி(ஸல்) அவர்களின் மரண வேதனை அதிகமானபோது ‘என்னிடம் ஓர் ஏட்டைக் கொண்டு வாருங்கள். எனக்குப் பிறகு நீங்கள் வழி தவறி விடாதவாறு ஒரு மடலை நான் உங்களுக்கு எழுதித் தருகிறேன்’ என்று கூறினார்கள். ‘நபி (ஸல்)அவர்களுக்கு வேதனை அதிகமாகிவிட்டது; நம்மிடம் அல்லாஹ்வின் வேதம் இருக்கிறது. அது நமக்குப் போதுமானது’ என்று உமர் (ரலி) கூறினார். உடனே (தோழர்களுக்கிடையில்) கருத்து வேறுபாடு எழுந்து கூச்சலும், குழப்பமும் மிகுந்துவிட்டன. இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், ‘என்னைவிட்டு எழுந்து செல்லுங்கள்; என் முன்னிலையில் (இதுபோன்ற) சச்சரவுகள் எதுவும் இருக்கக் கூடாது’ என்றார்கள்.
‘நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்கள் (எழுத நினைத்த) மடலுக்கும் குறுக்கே தடையாக நிகழ்ந்துவிட்ட சோதனை பெரும் சோதனைதான்’ என்று கூறியவராக அங்கிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) வெளியேறிவிட்டார்’.
அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ், நூல் : புஹாரி 114

இச்செயல்களை வைத்து உமர் (ரலி) அவர்கள் நன்மை தரும் செயல்களை தடுத்தார்கள் என்ற முடிவுக்கு வரக் கூடாது. மாறாக, உமர் (ரலி) அவர்களின் ஆட்சி மிக நன்றாக இருந்தது. குழப்பங்கள் நடைபெற விடவில்லை. மனிதர் என்ற முறையில் ஒரு சில தவறுகள் செய்திருக்கின்றாரே தவிர மற்ற விஷயங்களில் மிகவும் கட்டுக்கோப்பாக செயல்பட்டார். 

கேட்டதின் படி நடக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக என்று பிரார்த்தித்தவனாக இந்த உரையை முடிக்கிறேன்.