உறவு ஓர் அருட்கொடை
முன்னுரை
எந்த ஒரு மனிதனும் உறவுகள் இல்லாமல் உறவுகளே வேண்டாம் என்று சொல்லி தன்னந்தனியாக வாழ்ந்துவிட முடியாது. உறவுகள் பெரும் சுமையாக பலநேரங்களில் இருந்தாலும் உறவுகள்தான் மனிதனின் மிகப் பெரும் பலம்.
ஆபத்துகளில் கைகொடுக்கும், துயரங்களில் ஆறுதல் கூறும்,இன்ப துன்பங்களில் அக்கரையோடு பங்கெடுக்கும் ஒன்றுதான் உறவுகள். இன்றைக்கு உறவுகளின் அவசியத்தையும்,முக்கியத்துவத்தையும் உணராமல் உறவுகளோடு சேர்ந்து வாழாமல் உறவுகளை முறித்துக் கொண்டும் பகைத்துக் கொண்டும் மனித சமுதாயம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
உறவுகள் என்றால் யார்? அவர்களால் என்ன பயன் என்பதை விளங்காமல் உறவுகளால் நமக்கு சிக்கலும், சிரமமும்தான் ஏற்படுகிறது என்று சொல்லி உறவுகளோடு சேர்ந்து வாழாமல் இருக்கிறார்கள்.
இஸ்லாமிய மார்க்கம்தான் உறவுகளின் முக்கியத்துவத்தையும்,உறவுகளால் ஏற்படும் நன்மைகளையும் தெளிவுபடுத்துகிறது.
அல்லாஹ் தனது திருமறையில் உறவுகளின்முக்கியத்துவத்தைப் பற்றி பல இடங்களில் கூறுகிறான்.
உறவினர்களுக்கு உபகாரம் செய்தல்
உறவுகளுக்குப் பொருளாதரம் தேவைப்படும்போது பொருள் மூலமாகவும், சில நேரங்களில் உடல் உழைப்பின் மூலமாகவும், சில நேரங்களில் உறவுகளுக்கு சலாம் கூறுவதன் மூலமாகவும், சில நேரங்களில் சிரித்த முகத்தோடு அவர்களைச் சந்திப்பதின் மூலமாகவும், சில நேரங்களில் அவர்களுக்கு நல்ல உபதேசங்கள் செய்வதன் மூலமாகவும், சில நேரங்களில் அவர்களுக்கு ஏற்படும் அநீதிகளுக்கு எதிராக உதவி செய்வதன் மூலமாகவும், சில நேரங்களில் அவர்கள் தங்களுக்கு தீங்கிழைத்துவிட்டால் அவற்றை மன்னிப்பது இதுபோன்ற ஏராளமான காரியங்களின் மூலமாக உறவினர்களுக்கு நாம் நன்மை செய்யலாம். இதுதான் உறவினர்களுக்கு உபகாரம் செய்வதின் பொருளாகும்.
அல்லாஹ் கூறுகிறான் :
அல்லாஹ்வை வணங்குங்கள், அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள். பெற்றோர்களுக்கும்,உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும்,நெருங்கிய அண்டைவீட்டாருக்கும், தூரமான அண்டைவீட்டாருக்கும், பயணத் தோழருக்கும்,நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள். பெருமையடித்து கர்வம் கொள்பவரை அல்லாஹ் நேசிக்கமாட்டான்.
وَآتِ ذَا الْقُرْبَىٰ حَقَّهُ وَالْمِسْكِينَ وَابْنَ السَّبِيلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا
உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரின் உரிமையை வழங்குவீராக. ஒரேயடியாக வீண்விரயம் செய்யாதீர்.
உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவர்களின் உரிமையை வழங்குவீராக. அல்லாஹ்வின் முகத்தை நாடுவோருக்கு இதுவே சிறந்தது.அவர்களே வெற்றி பெற்றோர்.
கேள்வி ஒன்று பதில் வேறொன்று
தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும்,அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும்,நாடோடிகளுக்காகவும் (செலவிடவேண்டும்). நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை நன்கறிந்தவன் எனக் கூறுவீராக.(அல்குர்ஆன்: 2:215) ➚
மேற்கண்ட பல வசனங்களில் உறவினர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும், அவர்களின் உரிமையை வழங்க வேண்டும் என்றும், இதுதான் சிறந்தது என்றும், நன்மையானது என்றும் அல்லாஹ் வலியுறுத்துகிறான்.
உறவினர்களுக்கு நன்மை செய்யாவிட்டால், அவர்களுக்குரிய உரிமையை வழங்காவிட்டால் இறைவனின் தண்டனைதான் நமக்கு கிடைக்கும் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.
அல்லாஹ் கூறுகிறான் :
உறவினர்கள் விஷயத்தில் நீங்கள் (அஞ்சுங்கள்) அல்லாஹ் உங்களை கண்காணிப்பவனாக இருக்கிறான்.
ஆயுள் அதிகமாகும்
பொருளாதார வசதியுடனும், செல்வச் சீமானாக வாழ வேண்டும். அதே நேரத்தில் நீண்ட ஆயுளோடும் வாழ வேண்டும் என்றுதான் மனிதன் ஆசைப்படுகிறான்.
அவனது ஆசைக்கேற்ப அவனுக்கு அமைய வேண்டுமானால் இஸ்லாம் சில காரியங்களைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அவற்றை செய்துவிட்டாலே அவன் நினைக்கும் பாக்கியங்களை அல்லாஹ் அவனுக்கு வழங்குகின்றான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :தமது வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதையும், வாழ்நாள் நீட்டிக்கப்படுவதையும் விரும்புகின்றவர் தமது உறவைப் பேணி வாழட்டும்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
(புகாரீ: 5986), முஸ்லிம்
முதல் பிரச்சாரம்
நபி (ஸல்) அவர்கள் நபித்துவம் கொடுத்து அனுப்பப்பட்டதும் சொந்தபந்தங்களை அரவணைக்க வேண்டும், அவர்களோடு ஒட்டி உறவாட வேண்டும் என்பதைத்தான் மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்தார்கள்.
وَكَانَ ابْنُ النَّاظُورِ صَاحِبُ إِيلِيَاءَ وَهِرَقْلَ سُقُفًّا عَلَى نَصَارَى الشَّامِ يُحَدِّثُ أَنَّ هِرَقْلَ حِينَ قَدِمَ إِيلِيَاءَ أَصْبَحَ يَوْمًا خَبِيثَ النَّفْسِ فَقَالَ بَعْضُ بَطَارِقَتِهِ قَدِ اسْتَنْكَرْنَا هَيْئَتَكَ قَالَ ابْنُ النَّاظُورِ ، وَكَانَ هِرَقْلُ حَزَّاءً يَنْظُرُ فِي النُّجُومِ فَقَالَ لَهُمْ حِينَ سَأَلُوهُ إِنِّي رَأَيْتُ اللَّيْلَةَ حِينَ نَظَرْتُ فِي النُّجُومِ مَلِكَ الْخِتَانِ قَدْ ظَهَرَ فَمَنْ يَخْتَتِنُ مِنْ هَذِهِ الأُمَّةِ قَالُوا لَيْسَ يَخْتَتِنُ إِلاَّ الْيَهُودُ فَلاَ يُهِمَّنَّكَ شَأْنُهُمْ وَاكْتُبْ إِلَى مَدَايِنِ مُلْكِكَ فَيَقْتُلُوا مَنْ فِيهِمْ مِنَ الْيَهُودِ فَبَيْنَمَا هُمْ عَلَى أَمْرِهِمْ أُتِيَ هِرَقْلُ بِرَجُلٍ أَرْسَلَ بِهِ مَلِكُ غَسَّانَ يُخْبِرُ عَنْ خَبَرِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَلَمَّا اسْتَخْبَرَهُ هِرَقْلُ قَالَ اذْهَبُوا فَانْظُرُوا أَمُخْتَتِنٌ هُوَ أَمْ لاَ فَنَظَرُوا إِلَيْهِ فَحَدَّثُوهُ أَنَّهُ مُخْتَتِنٌ وَسَأَلَهُ ، عَنِ الْعَرَبِ فَقَالَ هُمْ يَخْتَتِنُونَ فَقَالَ هِرَقْلُ هَذَا مَلِكُ هَذِهِ الأُمَّةِ قَدْ ظَهَرَ ثُمَّ كَتَبَ هِرَقْلُ إِلَى صَاحِبٍ لَهُ بِرُومِيَةَ ، وَكَانَ نَظِيرَهُ فِي الْعِلْمِ وَسَارَ هِرَقْلُ إِلَى حِمْصَ فَلَمْ يَرِمْ حِمْصَ حَتَّى أَتَاهُ كِتَابٌ مِنْ صَاحِبِهِ يُوَافِقُ رَأْيَ هِرَقْلَ عَلَى خُرُوجِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَنَّهُ نَبِيٌّ فَأَذِنَ هِرَقْلُ لِعُظَمَاءِ الرُّومِ فِي دَسْكَرَةٍ لَهُ بِحِمْصَ ثُمَّ أَمَرَ بِأَبْوَابِهَا فَغُلِّقَتْ ثُمَّ اطَّلَعَ ، فَقَالَ : يَا مَعْشَرَ الرُّومِ هَلْ لَكُمْ فِي الْفَلاَحِ وَالرُّشْدِ ، وَأَنْ يَثْبُتَ مُلْكُكُمْ فَتُبَايِعُوا هَذَا النَّبِيَّ فَحَاصُوا حَيْصَةَ حُمُرِ الْوَحْشِ إِلَى الأَبْوَابِ فَوَجَدُوهَا قَدْ غُلِّقَتْ فَلَمَّا رَأَى هِرَقْلُ نَفْرَتَهُمْ وَأَيِسَ مِنَ الإِيمَانِ قَالَ رُدُّوهُمْ عَلَيَّ وَقَالَ إِنِّي قُلْتُ مَقَالَتِي آنِفًا أَخْتَبِرُ بِهَا شِدَّتَكُمْ عَلَى دِينِكُمْ فَقَدْ رَأَيْتُ فَسَجَدُوا لَهُ وَرَضُوا عَنْهُ فَكَانَ ذَلِكَ آخِرَ شَأْنِ هِرَقْلَ.
رَوَاهُ صَالِحُ بْنُ كَيْسَانَ ، وَيُونُسُ وَمَعْمَرٌ ، عَنِ الزُّهْرِيِّ
அபீசீனியாவில் ஹிர்கல் மன்னர் தன்னுடைய நாட்டிற்கு வந்த முஸ்லிம்களிடம் நபிகளாரின் நபித்துவத்தைப் பற்றியும்,அவர்களின் பிரச்சாரத்தைப் பற்றியும் கேட்கும்போது அவர் உங்களுக்கு என்ன செய்யும்படி கட்டளையிடுகிறார்? என்று கேட்டார். அதற்கு முஸ்லிம்கள் அல்லாஹ் ஒருவனையே வழிபடுங்கள். அவனுக்கு எதனையும் யாரையும் இணையாக்காதீர்கள் உங்கள் மூதாதையர் சொல்லிவருகின்ற (அறியாமைக்கால) கூற்றுகளையெல்லாம் விட்டுவிடுங்கள் என்று கூறுகின்றார். தொழுகையை நிறைவேற்றும்படியும்,ஸகாத் கொடுக்கும்படியும், உண்மை பேசும்படியும்,தன்மானத்துடன் வாழும் படியும், உறவுகளைப் பேணும்படியும் எங்களுக்கு அவர் கட்டளையிடுகின்றார் என்று சொன்னேன்.
நபித்துவம் கொடுக்கப்படுவதற்கு முன்பு நபிகளாரின் குணங்களில் ஒன்று உறவுகளை அரவணைப்பது
நபி (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வஹீ வந்தபோது பயந்தவர்களாக கதீஜா (ரலி) அவர்களிடம் வந்த போது ஆறுதல் வார்த்தையாக சொல்லும்போது கூறிய வார்த்தை ஞாபகம் கொள்ள வேண்டும்.
(அச்சத்தால்) இதயம் படபடக்க அந்த வசனங்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியர்) கதீஜா பின்த் குவைலித் (ரலி) அவர்களிடம் வந்து எனக்குப் போர்த்துவிடுங்கள் எனக்குப் போர்த்துவிடுங்கள் என்றார்கள். அவ்வாறே வீட்டாரும் அவர்களுக்குப் போர்த்திட அச்சம் அவர்களைவிட்டு அகன்றது. பின்னர் கதீஜாவிடம் நடந்தவற்றை தெரிவித்துவிட்டு எனக்கேதும் நேர்ந்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன் என்று சொன்னார்கள். அதற்கு கதீஜா (ரலி) அவர்கள் அப்படியொன்றும் ஆகாது. அல்லாஹ்வின் மீதாணையாக உங்களை அல்லாஹ் ஒருபோதும் இழிவுபடுத்தமாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவுகளைச் சேர்ந்து வாழ்ந்துவருகிறீர்கள் (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகிறீர்கள்;விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனையில் ஆட்பட்டோருக்கு உதவி செய்கிறீர்கள் (அதனால் நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை)” என்று (ஆறுதல்) சொன்னார்கள்(புகாரீ: 3)
சொர்க்கத்தில் நுழையலாம்
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்) செயலை எனக்குக் கூறுங்கள்” என்று கேட்டார். அப்போது மக்கள், “இவருக்கென்ன நேர்ந்தது? இவருக்கென்ன நேர்ந்தது?” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவருக்கு ஏதேனும் தேவை இருக்கலாம்” என்று (மக்களை நோக்கிச்) சொல்லிவிட்டு (அந்த மனிதரை நோக்கி), “நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; (கடமையான) தொழுகையையும் (கடமையான) ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும். உறவைப் பேணி வாழ வேண்டும்” என்று கூறிவிட்டு, “உமது வாகனத்தை (உமது வீடு நோக்கி) செலுத்துவீராக” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் :அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி)
இறைநம்பிக்கையாளரின் பண்பு
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் இரத்தபந்த உறவுகளைப் பேணி வாழட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்.
அறிவிப்பவர் :அபூஹுரைரா (ரலி)(புகாரீ: 6138)
இணைவைப்பாளராக இருந்தாலும் உறவைப் பேண வேண்டும்
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடன் குறைஷியர் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டிருந்த காலத்தில் இணைவைப்பவராக இருந்த என் தாயார் தம் தந்தையுடன் (என்னைப் பார்க்க) வந்தார். நான், “என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார்; நான் அவருடன் உறவு கொண்டாடலாமா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி நடந்துகொள்” என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் பாராட்டு
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் படைப்பினங்களை படைத்து முடித்தபோது உறவானது (எழுந்து இறைவனின் அரியாசனத்தின் கால்களைப் பற்றிக் கொண்டு) “உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்” என்று கூறி(மன்றாடி)யது.
அல்லாஹ், “ஆம். உன்னை(உறவை)ப் பேணி நடந்து கொள்பவனுடன் நானும் நல்ல முறையில் நடந்து கொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்து விடுபவனை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?”என்று கேட்டான். அதற்கு உறவு, “ஆம் (திருப்தியே) என் இறைவா!” என்று கூறியது. அல்லாஹ், “இது உனக்காக நடக்கும்” என்று சொன்னான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் விரும்பினால் “(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளைத் துண்டித்துவிடவும் முனைகிறீர்களா?’ எனும் (47:22ஆவது) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)(புகாரீ: 5987)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உறவு (இறையருளின்) ஒரு கிளையாகும். ஆகவே, “அதனுடன் யார் ஒட்டி வாழ்கின்றாரோ அவருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை யார் முறித்துக் கொள்கிறாரோ அவரை நானும் முறித்துக் கொள்வேன்” (என்று உறவைப் படைத்தபோது இறைவன் சொன்னான்).
அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி)(புகாரீ: 5989)
இரு கூலிகள்
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவி ஸைனப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் பள்ளிவாசலில் இருந்தபோது நபி(ஸல்) அவாகள், “பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்” எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்கும் மற்றும் என் அரவணைப்பில் உள்ள அநாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும் எனது அரவணைப்பில் வளரும் அநாதைகளுக்காகவும் எனது பொருளைச் செலவழிப்பது ஸதகாவாகுமா என நபி(ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன்.
அப்துல்லாஹ் (ரலி-) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள்’ எனக் கூறிவிட்டார். எனவே நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் வீட்டுவாயிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால்(ரலி) வந்தார். அவரிடம் நான் எனது கணவருக்கும் எனது பராமரிப்பில் உள்ள அநாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என நபி(ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறினோம். உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்டபோது நபி (ஸல்) அவர்கள், “அவ்விருவரும் யார்?எனக் கேட்டதற்கு அவர் “ஸைனப்’ எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் “எந்த ஸைனப்?” எனக் கேட்டதும் பிலால் (ரலி), “அப்துல்லாஹ்வின் மனைவி’ எனக் கூறினார். உடனே நபி (ஸல்) “ஆம்! ஸைனபுக்கு இரு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது” எனக் கூறினார்கள்.(புகாரீ: 1466)
மிகப் பெரும் நன்மை
அன்னை மைமூனா பின்த்து ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தேன். ஆனால், நபி (ஸல்) அவர்களிடம் அதற்காக அனுமதி கேட்கவில்லை. என்னிடம் நபி (ஸல்) அவர்கள் தங்குகின்ற முறை வந்தபோது, “அல்லாஹ்வின் தூதரே! அடிமைப் பெண்ணை விடுதலை செய்துவிட்டேனே,அறிவீர்களா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ (விடுதலை) செய்து விட்டாயா?” என்று கேட்க, நான் “ஆம், (விடுதலை செய்து விட்டேன்)” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், “நீ உன் தாயின் சகோதரர்களுக்கு (தாய் மாமன்களுக்கு அன்பளிப்பாக) அவளைக் கொடுத்து விட்டிருந்தால் உனக்குப் பெரும் நற்பலன் கிடைத்திருக்கும்”என்று கூறினார்கள்.
உறவைப் பேணி வாழ்வதற்கு மாற்றமாக உறவைத் துண்டித்து வாழ்வது, உறவுக்காரர்களை வெறுப்பது, அவர்களுக்கு உபகாரம் செய்யாமல் இருப்பது பாவமான காரியமாகும். இதனால் தீமைகள் தான் நமக்கு கிடைக்கும். தீமைக்குரிய பரிசு நரகம்தான்.
நரகம்தான் கிடைக்கும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான்.
அறிவிப்பவர் :ஜுபைர் பின் முத்இம் (ரலி)(புகாரீ: 5984)
இன்றைக்கு பெரும்பான்மையான முஸ்லிம்கள் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், உறவைப் பேணாமல் உறவைத் துண்டித்து வாழக்கூடிய சூழ்நிலையில்தான் இருக்கின்றோம். இவ்வாறு நாம் நடந்து கொண்டால் நமக்கு இறுதியாக நரகம்தான் கிடைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
உறவுகளைப் பேணுவதில் சிலர் சுயநலம் கருதி உறவைப் பேணக்கூடிய சூழ்நிலையும் நம்மிடத்தில் இருக்கிறது.
நம்முடைய உறவுகளில் சிலர் மிகப் பெரிய செல்வந்தராகவோ,அல்லது ஏதாவது முக்கியமான பொறுப்பிலோ இருப்பார்கள் அவர்களுடன் உறவைப் பேணுவார்கள். காரணம் அதனால் நமக்கு பொருளாதார உதவி கிடைக்கும். பொறுப்பின் மூலமாக நாம் பயன்பெற்றுக் கொள்ளலாம் என்ற குருகிய மனப்பான்மையுடன் உறவைப் பேணக்கூடிய சூழ்நிலை நம்மிடத்தில் வந்துவிடக் கூடாது. சிலர் அந்த உறவுக்காரர் பணமோ, பொருளோ உதவி செய்தார். எனவே அவர் உதவி செய்ததினால் நாமும் பதிலுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நினைப்பும் வந்துவிடக்கூடாது. இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பதிலுக்கு பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணுகின்றவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகின்றவரே உறவைப் பேணுபவர் ஆவார்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)(புகாரீ: 5991)
உண்மையில் உறவைப் பேணுபவர் பிரதிபலன் எதிர்பார்க்காமல் பேணுவதுதான் உறவைப் பேணுவது என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவான வழிகாட்டுதலை சொன்னார்கள்.
முடிவுரை
ஒவ்வொரு மனிதனும் தாய், தந்தை, அண்ணன், தங்கை,மாமா,மாமி போன்ற பல்வேறு உறவுகளோடுதான் வடிவமைக்கப்பட்டுள்ளான். உறவுகளோடு வடிவமைக்கப்பட்டவன் அந்த உறவுகளுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையையும். உரிமையையும் சரிவர நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்றும் போது மார்க்கம் சொல்லக்கூடிய அத்துனை அருட்கொடைகளையும் அல்லாஹ் வழங்குவான். அதற்கு மாற்றமாக செயல்படும்போது நரகம் தான் பரிசாகக் கிடைக்கும் என்பதை நினைவில் கொண்டு உறவுகளோடு ஒன்றிணைந்து மகிழ்ச்சியாக நமது வாழ்க்கையை வாழ்வோம். இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவோம். அல்ஹம்துலில்லாஹ்!