உருவப்படத்திற்கு அனுமதி உண்டா?
கேள்வி
இஸ்லாத்தில் உருவம் வரைவது ஹராம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. எனக்குப் படம் வரைவதில் ஆர்வம் அதிகம். புகைப்படத்தைப் பார்த்து சிலரது முகத்தை வரைந்திருக்கிறேன். என் பொழுது போக்கிற்காக மட்டும் தான் வரைந்திருக்கிறேன். எவரேனும் நான் வரைந்த உருவப் படத்தைக் கேட்டால் அதை நான் அன்பளிப்பாக கொடுக்கலாமா? இது ஹராமா? இஸ்லாத்தில் உருவம் வரைவது எந்த அளவில் தடுக்கப்பட்டிருக்கிறது.
பதில்
உருவச்சிலைகள்
உருவச்சிலைகள், உருவப்படங்கள், புகைப்படங்கள், நிழற்படங்கள், எலக்ட்ரான் கதிர் அலைகளால் தெரியும் படங்கள் என பல்வேறு வகைகள் உள்ளன. இவை குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்.
எந்த வீட்டில் உருவச்சிலைகளும், நாய்களும் உள்ளனவோ அங்கே மலக்குகள் நுழைய மாட்டார்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூரினார்கள்.
அறிவிப்பவர் : அபூதல்ஹா (ரலி)
உருவச் சிலைகள் என்று நாம் மொழிபெயர்த்த இடத்தில் திம்ஸால்’ என்ற சொல்லின் பன்மைச் சொல்லான தமாஸீல்’ என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.
இந்த ஹதீஸில் உருவச் சிலைகள் உள்ள இடங்களில் மலக்குகள் வர மாட்டார்கள் என்று கடுமையான வார்த்தையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளதால் உருவச்சிலைகளுக்கு அறவே அனுமதி இல்லை என்று தெளிவாக உணரலாம்.
இந்தத் தடை எல்லா உருவச் சிலைகளுக்கும் பொதுவானதா? அல்லது இதில் விதி விலக்கு ஏதும் உள்ளதா? என்று பார்ப்போம்.
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடனிருக்கும் போது பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருப்பேன். என்னுடன் விளையாடுவதற்கு சில தோழிகளும் இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) நுழையும் போது அவர்கள் ஓடி ஒளிந்து கொள்வர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (என்னுடன் விளையாட) அவர்களைத் திருப்பி அனுப்புவார்கள். அதன் பின் அவர்கள் என்னோடு விளையாடுவார்கள்”
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
பொம்மைகளும் உருவச்சிலைகள் என்றாலும் குழந்தைகள் விளையாடுவதற்காக பொம்மைகளைச் செய்யலாம்; வாங்கிக் கொடுக்கலாம்; வீட்ட்டில் வைத்திருக்கலாம் என்று இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.
உயிருள்ளவைகளின் பொம்மைகளா? உயிரற்ற சட்டி பானை போன்ற பொம்மைகளா என்ற சந்தேகம் இதில் எழலாம்.
ஆயிஷா (ரலி) அவர்கள் உயிருள்ளவைகளின் பொம்கைளையே வைத்து விளையாடி இருக்கிறார்கள்” என்பதை வேறு ஒரு செய்தி தெளிவாக அறிவிக்கின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தபூக், அல்லது ஹுனைன் இரண்டில் ஏதோ ஒரு போர்க்களத்திலிருந்து திரும்பி வந்தனர். அப்போது காற்று வீசி எனது விளையாட்டுப் பொம்மைக்குப் போடப்பட்டிருந்த திரை விலகியது. அதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷாவே! என்ன இது?” என்றார்கள். என் பொம்மைகள்” என்று கூறினேன். அவற்றுக்கிடையே இரண்டு இறக்கைகளைக் கொண்ட குதிரை பொம்மை ஒன்றையும் கண்டு, அதோ நடுவில் உள்ள அந்தப் பொம்மை என்ன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். குதிரை” என்று கூறினேன். குதிரையின் மேல் என்ன? என்று கேட்டார்கள். இறக்கைகள்” என்று பதில் கூறினேன். குதிரைக்கு இரண்டு இறக்கைகளா? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்க, ஏன் சுலைமான் நபியிடம் இறக்கைகள் உள்ள குதிரை இருந்ததாக நீங்கள் கேள்விப்பட்டதில்லையோ?” என்று நான் கேட்டேன். இதைக் கேட்டதும், அவர்களின் கடவாய்ப்பற்களை நான் காணும் அளவுக்குச் சிரித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : (அபூதாவூத்: 4932)
உயிருள்ள குதிரையின் உருவச் சிலையைக் கண்ட பின்னும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைக் கண்டிக்காதது மட்டுமல்ல; தமது சிரிப்பின் மூலம் அதற்கு அங்கீகாரமும் அளிக்கிறார்கள். இதன் மூலம் உயிரற்றவைகள் மட்டுமல்ல; உயிருள்ளவைகளின் பொம்மைகளைக் கூட சிறுவர்கள் விளையாடலாம். அதை வீட்டில் வைத்திருக்கலாம் என்பது தெளிவாகின்றது. உருவச்சிலைகள் உள்ள இடங்களில் மலக்குகள் நுழைய மாட்டார்கள் என்பது, சிறுவர்களின் விளையாட்டுக்காக இல்லாமல் ஏனைய நோக்கங்களுக்காக உள்ள உருவச்சிலைகளுக்கே என்று உணரலாம்.
சிறுவர்கள் கற்றுக் கொள்வதற்காக யானை, சிங்கம் போன்ற விலங்குகளை வரைந்து கற்றுக் கொடுப்பது, இது அல்லாத அறிவைப் பெருக்குவதற்குத் தேவையான உருவப்படங்களை சிறுவர்களுக்குக் கொடுப்பதும், வீட்டில் வைத்திருப்பதும் குற்றமாகாது என்பதையும் இதில் இருந்து அறியலாம்.
பயனில்லாமல் விளையாட்டுப் பொருளாகவே பொம்மைகளை வைத்துக் கொள்ளலாம் என்றால் அறிவை வளர்ப்பதற்காக உருவப்படங்களை வைத்து சொல்லிக் கொடுக்கலாம் என்பதை அறியலாம்.
உயிரற்ற பொருட்களாகிய மரம், செடி, கப்பல், வீடு, கார் போன்ற உருவங்களுக்குத் தடை ஏதுமில்லை. இவை உருவச் சிலையாக இருந்தாலும் உருவப்படங்களாக இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சயீத் பின் அபில் ஹசன் அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் இருந்த போது ஒரு மனிதர் வந்து, இப்னு அப்பாஸ் அவர்களே! நான் கைத்தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் ஒரு மனிதன். நான் உருவங்களை வரைகிறேன் எனக் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் செவியுற்றதையே உமக்கு அறிவிக்கிறேன். யாரேனும் ஒரு உருவத்தை வரைந்தால் வரைந்தவர் அதற்கு உயிர் கொடுக்கும்வரை அல்லாஹ் அவரை வேதனை செய்வான்; அவன் ஒருக்காலும் அதற்கு உயிர் கொடுக்க முடியாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன் என்றனர். கேட்டவர் அதிர்ச்சியுடன் பெருமூச்சுவிட்டார். அவரது முகம் (பயத்தால்) மஞ்சள் நிறமாக மாறியது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், உமக்குக்கேடு உண்டாகட்டும்! நீர் உருவம் வரைந்து தான் தீரவேண்டும் என்றால் மரம் மற்றும் உயிரற்றவைகளை வரைவீராக! என்றனர்.
உயிரற்ற பொருட்களை வரைவதற்கு ஒரு தடையுமில்லை என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.
ஆனால் இந்த அனுமதியிலும் விதிவிலக்கு இருக்கின்றது. உயிரற்றவைகளான ஒரு சில பொருட்களை வைத்துக் கொள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி மறுக்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வீட்டில் சிலுவைகளைப் பொறித்த எந்தப் பொருளையும் அழிக்காமல் விட மாட்டார்கள்’ என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பிற மதத்தினரால் புனிதப் பொருளாகக் கருதப்படும் உயிரற்றவைகளின் உருவங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.
முப்பரிமாணம் உள்ள உருவச் சிலைகளைப் பொருத்தவரை சிறுவர்கள் விளையாடும் சிறு பொம்மைகள், வைத்துக் கொள்ள அனுமதி உள்ளது என்பதையும், பிறரால் புனிதமாகக் கருதப்படாத உயிரற்ற ஏனைய உருவச்சிலைகளையும் வைத்துக் கொள்ளலாம் என்பதையும் இதன் மூலம் அறிகிறோம். இவற்றைத் தவிர எல்லா உருவச்சிலைகளையும் இஸ்லாம் முற்றாகத் தடை செய்கிறது.
உருவப்படங்கள்
உருவப்படங்கள் வரைவதையும், வைத்திருப்பதையும் இஸ்லாம் தடை செய்கின்றது.
எந்த வீட்டில் உருவப்படங்கள் உள்ளனவோ அந்த வீட்டில் மலக்குகள் நுழைய மாட்டார்கள் என்பது நபிமொழி.
அறிவிப்பவர் : அபூ தல்ஹா (ரலி)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்த போது உருவங்கள் உள்ள திரைச் சீலையைத் தொங்க விட்டிருந்தேன். அதைக் கண்டதும் அவர்களின் முகம் மாற்றமடைந்தது. அதைக் கிழித்து எறிந்து விட்டு ஆயிஷாவே! அல்லாஹ்வின் படைப்பைப் போல் படைக்க முற்படுபவர்களே கியாமத் நாளில் கடுமையான தண்டனைக்குரியவர்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
உருவப்படங்கள் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டதா? அதில் ஏதேனும் விதிவிலக்கு உண்டா? என்பதை இனி காண்போம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து வந்த போது உருவப்படம் வரையப்பட்ட திரைச்சீலைகளைக் கண்டதும். அதை அகற்றினார்கள். நான் அதை இரண்டு தலையணைகளாக ஆக்கினேன். அதில் அவர்கள் சாய்ந்து கொள்பவர்களாக இருந்தனர்”
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நான் இதை இரண்டு தலையணைகளாக ஆக்கினேன். அதில் உருவப்படங்கள் இருக்கும் நிலையிலேயே அதில் அவர்கள் சாய்ந்திருந்ததை நான் பார்த்திருக்கிறேன்
என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிக்கும் மற்றொரு ஹதீஸ் அஹ்மதில் இடம் பெற்றுள்ளது.
சென்ற இரவு உங்கள் வீட்டுக்கு நான் வருவதற்குத் தடையாக இருந்தவை என்னவென்றால், உங்கள் வீட்டில் ஒரு மனிதனது உருவச் சிலையும், உருவம் பொறித்த திரைச்சீலை ஒன்றும், நாய் ஒன்றும் இருந்தது தான். உருவச் சிலையின் தலையை அகற்றுமாறும், உருவப்படங்கள் உள்ள திரைச்சீலையைக் கிழித்து மதிப்பில்லாமல் மிதிபடும் இரண்டு தலையணைகளாக்கிக் கொள்ளுமாறும், நாயை வெளியேற்றுமாறும் உங்கள் (குடும்பத்துக்கு) கட்டளையிடுங்கள்” என்று ஜிப்ரீல் (அலை) என்னிடம் கூறினார்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல்கள் :(அபூதாவூத்: 3627), அஹ்மத், திர்மிதீ
தன்னிடம் இறக்கைகள் உடைய குதிரைகளின் படம் பொறிக்கப்பட்ட திரைச்சீலை இருந்ததாகவும், அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கிழித்ததும், அதில் இரண்டு தலையணைகள் செய்ததாகவும் அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ்களைக் கவனமாகப் பார்க்கும் போது, உருவப் படங்களில் அனுமதிக்கப்பட்டவை எவை? தடுக்கப்பட்டவை எவை? என்பதை அறிய முடியும். மதிப்பு வழங்கப்படும் உருவப்படங்களே தடுக்கப்படுகின்றன. மதிப்பில்லாமல் மிதிபடும் தலையணைகளாக மாற்றுமாறு’ ஜிப்ரீல் (அலை) கூறிய வார்த்தை இதைத் தெளிவாக விளக்கும்.
எந்த உருவம் திரைச்சீலையாக தொங்கிக் கொண்டிருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தடை செய்யப்பட்டதோ அதே உருவம் தலையணையாகத் தரையில் போடக் கூடியதாக ஆகும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தடுக்கப்படவில்லை. மாறாக அதை அவர்களே பயன்படுத்தியிருக்கிறார்கள்.
அந்தத் திரைச்சீலையை இரண்டாகக் கிழித்த போது உருவமும் பாதி பாதியாகச் சிதறுண்டு போயிருக்கலாம். அதனால் அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்று சிலருக்குத் தோன்றக் கூடும். அது சரியான அனுமானம் அல்ல. ஏனெனில் ஆயிஷா (ரலி) அவர்கள்
அதில் உருவம் இருக்கும் நிலையிலேயே அதில் சாய்ந்து கொண்டிருந்ததை நான் பார்த்தேன்” என்கிறார்கள்.
மதிப்பற்ற விதத்தில் பொறிக்கப்பட்டுள்ள படங்களைப் பயன்படுத்தத் தடை இல்லை என்பதே சரியான கருத்தாகும்.
உருவப் படங்கள் பொறித்த திரைச் சீலைகள், பிரேம் செய்து மாட்டப்படும் உருவப் படங்கள், ஆல்பத்தில் வைத்து அழகு பார்க்கும் போட்டோக்கள், பெட்டியில் பூட்டி வைத்து பாதுகாக்கும் உருவப் படங்கள் இவயெல்லாம் தடுக்கப்படுகின்றன. அதைப் பற்றி மதிப்பிருக்கின்ற காரணத்தினால் தான் பெட்டிக்குள் வைத்துப் பாதுகாக்கிறார்கள். ஆல்பத்தில் வைத்து அழகு பார்க்கிறார்கள். உயர்ந்த இடத்தில் வைத்துப் பேணுகிறார்கள். இது போன்ற வழிகளில் பயன்படுத்த இஸ்லாம் தடுக்கின்றது.
செய்தித்தாள்களில் காணப்படும் உருவப்படங்கள், பொட்டலம் கட்டிக் கொடுக்கப் பயன்படும் உருவப்படங்கள் பொறித்த காகிதங்கள், பொருட்களைப் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பெட்டிகளில் பொறிக்கப்பட்ட உருவப் படங்களுக்கு (உதாரணம்: தீப்பெட்டி) எவ்வித மதிப்பும் அளிக்கப்படுவதில்லை. இவைகளை வைத்திருக்கத் தடையும் இல்லை. ஒரு செய்திப் பத்திரிகை நம் வீட்டில் இருந்தால் மலக்குகள் நுழைய மாட்டார்கள் என்பதில்லை.
அது போல் சாட்சியங்களாகப் பயன்படக் கூடிய வகையிலும் படங்களைப் பயன்படுத்தலாம்.
ஒரு ஊரில் ஒரு சமுதாயத்தினர் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை அம்பலப்படுத்திட புகைப்படங்கள் சிறந்த சாட்சியமாகப் பயன்படும். சிலரது சந்திப்புகளை நிரூபிக்கும் அவசியம் ஏற்படும் என்றால் அப்போதும் புகைப்படங்களைத் தடுக்க முடியாது.
இன்று பாஸ்போர்ட், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை ஓட்டுனர் உரிமம் போன்றவற்றுக்கு புகைப்படம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுக்களிலும் உருவங்கள் அச்சிடப்படுகின்றன. இவை மதிப்பளித்து பாதுகாக்கப்பட்டாலும் உருவப்படம் என்பதற்காக இவற்றை நாம் பாதுகாப்பதில்லை. ஆவணமாகப் பயன்படும் என்பதற்காக அதில் உள்ள தகவல்களுக்காகவே பாதுக்காக்கிறோம்.
இது தவிர சிறிய அளவிலான உருவப்படங்களுக்கும் அனுமதி இருக்கிறது.
பின்வரும் ஹதீஸில் இருந்து இதை அறியலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உருவப்படம் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள்.
இதை அபூதல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) புஸ்ர் பின் சயீத் (ரஹ்) கூறுகிறார்:
(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள், பின்னர் நோய்வாய்ப்பட்ட போது நாங்கள் அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது அவர்களுடைய வீட்டுக் கதவில் உருவப்படம் உள்ள திரையொன்று தொங்கிக் கொண்டிருந்தது. மைமூனா (ரலி) அவர்களுடைய பராமரிப்பில் வளர்ந்த உபைதுல்லாஹ் பின் அஸ்வத் அல்கவ்லானீ (ரஹ்) அவர்களிடம் , உருவப்படங்களைப் பற்றி ஸைத் (ரலி) அவர்கள் நமக்கு (ஒரு ஹதீஸ்) அறிவிக்கவில்லையா? என்று கேட்டேன். உடனே உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள், துணியில் வரையப்பட்டதைத் தவிர’ என்று அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா? என்று கேட்டார்கள்.
மேலும்(புகாரி: 3226)ஹதீஸையும் பார்க்க!
ஆடைகளில் அழகுக்காக சிறு சிறு உருவங்கள் பதிப்பதை நாம் காண்கிறோம். அருகில் சென்று பார்த்தால் தான் அந்த உருவம் இன்னது எனத் தெரியும். தூரத்தில் இருந்து பார்த்தால் அது ஒரு வேலைப்பாடாகத் தான் தெரியும். இது தான் அரபு மொழியில் ர(க்)கம் என்று கூறப்பட்டும். அந்தச் சொல் தான் மூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தூரத்தில் இருந்து பார்த்தாலும் அது என்ன உருவம் என்பது தெரியுமானால் அந்த உருவம் முக்கியப்படுத்தப்பட்டு பொரிக்கப்பட்டுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. உருவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சிறிது சிறிதாக வேலைப்பாடு என்ற அடிப்படையில் வரையப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட உருவமாக இருந்தால் அதற்குத் தடை இல்லை என்பதை இந்த ஹதீஸில் இருந்து அறியலாம்.
எனவே உருவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வேறு காரணத்துக்காக சிறிய அளவில் வரையப்பட்ட உருவங்களைப் பயன்படுத்துவது தவறல்ல.
மேலும் நஸாயி, திர்மிதி ஆகிய நூல்களில் இடம் பெற்ற பின்வரும் ஹதீஸையும் காண்க!
அபூ தல்ஹா ரலி அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது அவரை நான் நோய் விசரிக்கச் சென்றேன். அவருடன் ஸஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அபூதல்ஹா அவர்கள் ஒரு மனிதரை அழைத்து தனக்குக் கீழே உள்ள விரிப்பை நீக்குமாறு கூறினார்கள். இதைக் கண்ட ஸஹ்ல் (ரலி) அவர்கள் ஏன் இதை நீக்குகிறீர் என்று கேட்டார்கள்.
அதற்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் அதில் உருவப்படங்கள் உள்ளன; உருவப்படங்கள் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது தான் உமக்குத் தெரியுமே என்று கூறினார்கள். அத்ற்கு ஸஹ்ல் (ரலி) அவர்கள் ஆடையில் வேலைப்பாடு செய்யப்பட்ட உருவங்களைத் தவிர என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லையா என்று அபூதல்ஹாவிடம் கேட்டார்கள். அதற்கு அபூ தல்ஹா அவர்கள் ஆம்! ஆனாலும் என் மன திருப்திக்காக (அதாவது பேணுதலுக்காக) அகற்றச் சொன்னேன் என்று கூறினார்கள்.
மேற்கண்ட விதிவிலக்கை இந்த ஹதீஸும் உறுதிப்படுத்துகிறது.
இது போன்ற விதிவிலக்கு இல்லாமல் உருவப்படங்கள் வரைய அனுமதி இல்லை.
எனவே பொழுதுபோக்கிற்காக உயிருள்ளவர்களின் உருவப்படங்களை நீங்கள் வரைவதும் இந்த அடிப்படையில் தடை செய்யப்பட்டதாகும். உருவம் வரைபவர்கள் நரகில் தண்டிக்கப்படுவார்கள் என்பதால் இதை நீங்கள் கைவிட வேண்டும். அடுத்தவர்களுக்கு இதை அன்பளிப்பாக வழங்குவதும் கூடாது.