உயிர்கள் அனைத்தும் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில்!

கேள்வி-பதில்: நம்பிக்கை தொடர்பானவை

உயிர்கள் அனைத்தும் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில்!

கைப்பற்றப்பட்ட மனிதனின் உயிர்களைத் தனது கட்டுப்பாட்டில் இறைவன் வைத்திருப்பதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது.

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கிற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

(அல்குர்ஆன்: 39:42)

தூக்கத்தின் போதும், மரணிக்கும் போதும் உயிர்களைக் கைப்பற்றிக் கொள்ளும் இறைவன் தூக்கத்தில் கைப்பற்றப்பட்ட உயிர்களை இவ்வுலகில் செயல்படும் வகையில் விட்டு விடுகிறான். மரணித்தவர்களின் உயிர்களை இவ்வுலகுக்கு வர முடியாமல் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கிறான் என்பதை இவ்வசனத்தில் இருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

இறந்தவர்களின் ஆவிகள் தமது வீடுகளைச் சுற்றிக் கொண்டு இருக்கும் என்றும், மகான்களை நினைவு கூறும் சபைகளில் அவர்களின் உயிர்கள் அங்கே வருகை தரும் என்றும் நம்புவதற்கு மறுப்பாக இவ்வசனம் அமைந்துள்ளது.

இறைவனது கட்டுப்பாட்டை விட்டு தப்பித்து, ஆவிகள் இந்த உலகுக்கு வந்து விடுகின்றன என்று ஒருவர் நம்பினால் அவர் உண்மை முஸ்லிமாக இருக்க முடியாது.

மீற முடியாத தடுப்பு!

மரணித்தவர்களின் உயிர்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இறைவன் அவை இவ்வுலக்குக்கு வரமுடியாதவாறு தடையை ஏற்படுத்தியுள்ளான் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

(அல்குர்ஆன்: 23:99), 100

இறந்தவர்கள் ஆன்மாக்களின் உலகுக்குச் சென்ற பின் அவர்கள் இவ்வுலகுடன் எந்தத் தொடர்பும் கொள்ள முடியாத வகையில் ஒரு தடுப்பு ஏற்படுத்தப்பட்டு விடும் என்று இவ்வசனம் கூறுகிறது.

மனித உயிர்களை இறைவன் கைப்பற்றிக் கொள்ளும் போது, நல்லறங்கள் செய்வதற்காக மீண்டும் என்னை உலகிற்கு அனுப்பி வை என்று மனிதன் ஒரு கோரிக்கை வைக்கிறான். அந்தக் கோரிக்கை ஏற்கப்படாது என்று இறைவன் மறுக்கிறான்.

ஆன்மாக்களின் உலகில் நபிமார்கள் மட்டுமல்லாமல் இறந்து விட்ட நல்லவர்கள் – தீயவர்கள் என அனைவருமே உயிருடன் தான் உள்ளார்கள். தீயவர்கள் வேதனையை அனுபவிக்கிறார்கள். நல்லோர்கள் இன்பத்தை அனுபவிக்கிறார்கள். நபிமார்கள் மேலான உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறார்கள்.

ஆனால் ஆன்மாக்களின் உலகில் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை ஆதாரமாகக் கொண்டு அவர்கள் இவ்வுலகில் உள்ளதைப் போன்று இருக்கிறார்கள் எனப் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்கு இவ்வசனம் சான்றாக உள்ளது.

நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் கட்டுக்காவல்

நல்லவர்களாக இருந்தாலும், கெட்டவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது எல்லா நேரமும் அல்லாஹ்வில் கட்டுக்காவல் இருக்கிறது என்று நபிமொழிகளிலும் ஆதாரம் உள்ளது.

உங்களில் எவரேனும் மரணித்து விட்டால் காலையிலும், மாலையிலும் அவருக்குரிய இடம் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலுள்ள அவரது இடம் காட்டப்படும். அவர் நரகவாசியாக இருந்தால் நரகிலுள்ள அவரது இடம் எடுத்துக் காட்டப்படும். கியாமத் நாளில் அல்லாஹ் உன்னை எழுப்பும் வரை இது தான் உனது தங்குமிடம் என்று அவரிடம் கூறப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

(புகாரி: 1290, 3001, 6034)

நல்லடியார்களும், தீயவர்களும் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். தினமும் காலையில் ஒரு தடவையும், மாலையில் ஒரு தடவையும் மறுமையில் அவர்கள் அடையவிருக்கின்ற சொர்க்கமும், நரகமும் எடுத்துக் காட்டப்படுகின்றது என்று இந்த ஹதீஸ் கூருகிறது.

சுதந்திரமாகச் சுற்றித் திரியுமாறு ஆவிகள் விடப்படவில்லை என்பதை இந்த ஹதீஸில் இருந்தும் அறிந்து கொள்ளலாம்.