உயர்வடைய வேண்டும்

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

உயர்வடைய வேண்டும்

பெண்’ இந்தச் சொல்லுக்கு எத்தனையோ விதமான பொருள்கள் நடைமுறையில் வழங்கப்படுகின்றது. அமைதியின் பிறப்பிடம் அன்பின் உறைவிடம் சகிப்புத்தன்மையின் உச்சக்கட்டம் இன்னும் இது போன்று பல விளக்கங்களுக்கு அந்த ஒற்றை வார்த்தை இலக்காகிறது. ஆனால் நடைமுறை வாழ்வில் மேற்கண்ட விளக்கங்களில் ஒன்று கூடப் பொருந்தாத நிலையில்தான் நிகழ்காலப் பெண்களின் வாழ்க்கைத் தரம் அமைந்துள்ளது.

நவீன நாகரீகமங்கைகள் என்றாலும் பழமையான பழக்கவழக்கம் கொண்டவர்கள் என்றாலும் அகம்பாவம் கொண்டவர்களாக இருக்கும் பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பது கண்கூடு. எனவே பெண் என்பவள் அமைதியின் வடிவா? அல்லது ஆணவத்தின் பிரதிபலிப்பா? என்பதை பார்ப்போம்.

பெண் என்னும் படைப்பினம் உருவாக்கப்பட்டது எதற்காக எனும் சிறு ஆராய்ச்சி:

பெண் (வளைந்த) விலா எலும்பைப் போன்றவள் ஆவாள். அவளை நீ (ஒரேயடியாக) நிமிர்த்தப் போனால் அவளை ஒடித்தே விடுவாய். அவளை நீ அப்படியே விட்டுவிட்டால், அவளில் கோணல் இருக்கவே அவளை அனுபவிக்க வேண்டியது தான் என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: (முஸ்லிம்: 2912) 

இந்த நபிமொழி பெண்களின் இயற்கை தன்மை குறித்து தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. பெண்களைப் பொருத்தவரை வேகமாக உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள், தொலை நோக்கு பார்வை குறைவாக உள்ளவர்கள், விரைவாக தீர்வு எடுக்க அவசரப்படுபவர்கள் என்ற குணங்கள் இயல்பாக பெரும்பாலான பெண்களிடம் உண்டு. எனவே அவர்களது சிந்தனையும் செயலும் கோணலாக அமையும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவேதான் அக்கோணலை சரியாக்கும் முயற்சியில் ஈடுபடும் போது எதிர்மறையாக மணமுறிவு கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆண் மணமுறிவு வேண்டும் போது அவசரம் காட்டுதல் கூடாது என்றும் அவளை வெறுப்பது என்றால் கூட நிதானம் வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் விளக்கிக் கூறியுள்ளார்கள்.

لَا يَفْرَكْ مُؤْمِنٌ مُؤْمِنَةً، إِنْ كَرِهَ مِنْهَا خُلُقًا رَضِيَ مِنْهَا آخَرَ

‘இறை நம்பிக்கைகொண்ட ஓர் ஆண் இறைநம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும், மற்றொரு குணத்தைக் கண்டு திருப்திகொள்ளட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: (முஸ்லிம்: 2915) 

எனவே பெண்களை ஆண்கள் வெறுக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ள தகவல்கள் பெண்களைப் பாதுகாக்க வேண்டிய முழுப் பொறுப்பும் ஆணிடம் இருப்பதாகக் விளக்குகின்றன.

அதே சமயம் பெண்கள் கோருகின்ற மணமுறிவு (குலா) குறித்து விளக்கும் ஹதீஸ்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன.

ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்ற ஒரு நபிமொழி பல அறிவிப்பாளர் தொடர்களில் அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா, போன்ற நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا طَلَاقًا فِي غَيْرِ مَا بَأْسٍ، فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةُ الْجَنَّةِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்தப் பெண் தகுந்த காரணமின்றி அவளது கணவனிடமிருந்து மணமுறிவு கோருகிறாளோ அவள் சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர முடியாது.

நூல்: (அபூதாவூத்: 2226)

பெண்களைப் பொறுத்தவரை ஆணிடம் இருந்து மணமுறிவு பெற, தகுந்த காரணம் வேண்டும். அதாவது அவளது கணவன் ஆண்மையற்றவனாக இருத்தல், பைத்தியமாக இருத்தல், இஸ்லாத்தை விட்டும் வெளியேறச் செய்துவிடும் காரியத்தை செய்தல், போன்ற காரணங்களாக இருக்க வேண்டும். ஆனால் அதை அவர்கள் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சேர்ந்து வாழ முயற்சிக்க வேண்டும். முடியாது என்ற நிலைவரும் போது தான் பெண்கள் மணமுறிவை கேட்கவேண்டும்.

எனவே இவ்விசயத்தில் பெண்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். எல்லா பெண்களும் மோசமானவர்கள் என்று பொதுப்படையாக கூற முடியாது. மிகச்சிறந்தவர்களும் பெண்களில் இருக்கத் தான் செய்கிறார்கள்.

الدُّنْيَا مَتَاعٌ، وَخَيْرُ مَتَاعِ الدُّنْيَا الْمَرْأَةُ الصَّالِحَةُ

இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி),
நூல்: (முஸ்லிம்: 2911) 

நல்ல பெண்மணி, மார்க்க விவரம் தெரிந்தவளாகவும் இறையச்சம் நிறைந்தவளாகவும் கற்பொழுக்கம் நிறைந்தவளாகவும் பாவமில்லா காரியங்களில் கணவனுக்கு கட்டுப்பட்டு நடப்பவளாகவும் மொத்தத்தில் நற்குணம் நிறைந்த மங்கையாக திகழவேண்டும்…