6) உணவளிக்கும் அதிகாரம் நபிகள் நாயகத்துக்கு உண்டா?

நூல்கள்: சுப்ஹான மவ்லித் ஓர் ஆய்வு

உணவளிக்கும் அதிகாரம் நபிகள் நாயகத்துக்கு உண்டா?

بَسَطْتُّ كَفَّ فَاقَتِيْ وَالنَّدَمِ

اَرْجُوْ جَزِيْلَ فَضْلِكُمْ وَالْكَرَمِ

مُسْتَشْفِعًا نَزِيْلَ هَذَالْحَرَمِ

فَلاَحِظُوْنِيْ بِدَوَامِ الْمَدَدِ
فَاَنْجِدُوالْمِسْكِيْنَ قَبْلَ الْغَرَقِ

وَاَطْفِئُوْا بِالْبَسْطِ وَهْجَ الْحُرَقِ

وَاَبْرِدُوْا بِاللُّطْفِ حَرَّ الْكَبِدِ

எனது வறுமை, கவலை காரணமாகக் கையேந்துகிறேன்.

உங்களின் அளப்பரிய அருளையும், வள்ளல் தன்மையையும் நான் நம்பியுள்ளேன்.

இந்த ஹரமில் (மதீனாவில் தங்கியிருக்கும் உங்களின் பரிந்துரையை வேண்டுகிறேன்.

என்னை நிரந்தரமான உதவி கொண்டு கவனித்து விடுங்கள்!

மூழ்குவதற்கு முன் இந்த ஏழையைக் காப்பாற்றி விடுங்கள்!

உங்கள் தாராளத் தன்மையால் எரியும் வெப்பத்தை அணைத்து விடுங்கள்!

உங்கள் இரக்கத்தால் ஈரலின் வெப்பத்தைக் குளிரச்செய்யுங்கள்!

اِنَّا بِهِ نَسْتَجِيْر

فِيْ دَفْعِ كُلِّ انْتِقَامِ
எல்லாத் துன்பங்களையும் நீக்கிட அவரிடம் நாம் அடைக்கலம் தேடுகிறோம்.

இவை யாவும் ஸுப்ஹான மவ்லிதில் காணப்படும் நச்சுக் கருத்துக்கள்!

மனிதர்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் உணவளிப்பவன் அல்லாஹ் தான் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. திருக்குர்ஆன் நெடுகிலும் இந்தக் கொள்கை பரவலாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெற்றோருக்கு உதவுங்கள்! வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். (அல்குர்ஆன்: 6:151)

மக்கள் உங்களை வாரிச் சென்று விடுவார்களோ என அஞ்சி, குறைந்த எண்ணிக்கையில் இப்பூமியில் நீங்கள் இருந்ததை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்களை அரவணைத்தான். தனது உதவியால் உங்களைப் பலப்படுத்தினான். நீங்கள் நன்றி செலுத்திட தூய்மையானவற்றை உங்களுக்கு உணவாக அளித்தான்.

(அல்குர்ஆன்: 8:26)

பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். அவற்றின் வசிப்பிடத்தையும், அவை சென்றடையும் இடத்தையும் அவன் அறிவான். ஒவ்வொன்றும் தெளிவான பதிவேட்டில் உள்ளது.

(அல்குர்ஆன்: 11:6)

தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான்.

(அல்குர்ஆன்: 13:26)

அல்லாஹ் தான், வானங்களையும், பூமியையும் படைத்தான். வானிலிருந்து தண்ணீரை இறக்கினான். அதன் மூலம் உங்களுக்கு உணவாகக் கனிகளை வெளிப் படுத்தினான். அவனது கட்டளைப்படி கடலில் செல்வதற்காக கப்பலையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான். ஆறுகளையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான்.

(அல்குர்ஆன்: 14:32)

உங்களுக்கும், நீங்கள் யாருக்கு உணவளிப்போராக இல்லையோ அவர்களுக்கும் அதில் வாழ்வதற்குத் தேவையானவற்றை அமைத்தோம்.

(அல்குர்ஆன்: 15:20)

உங்களில் ஒருவரை விட மற்றவரை செல்வத்தில் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். (செல்வத்தால் சிறப்பிக்கப் பட்டோர் தமது செல்வத்தைத் தமது அடிமைகளிடம் கொடுத்து, தங்களுக்குச் சமமாக அவர்களை ஆக்குவதில்லை. அல்லாஹ்வின் அருட்கொடையையா நிராகரிக்கிறார்கள்?

(அல்குர்ஆன்: 16:71)

தான் நாடியோருக்கு உமது இறைவன் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.

(அல்குர்ஆன்: 17:30), 31)

(முஹம்மதே! உமது குடும்பத்தினரைத் தொழுமாறு ஏவுவீராக! அதில் (ஏற்படும் சிரமங்களை சகித்துக் கொள்வீராக! உம்மிடம் நாம் செல்வத்தைக் கேட்கவில்லை. நாமே உமக்கு செல்வத்தை அளிக்கிறோம். (இறைஅச்சத்திற்கே (நல்ல முடிவு உண்டு.

(அல்குர்ஆன்: 20:132)

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது படைப்பினங்களை முதலில் படைத்து பின்னர் மறுபடியும் படைப்பவனா? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள்!என்று கேட்பீராக!

(அல்குர்ஆன்: 27:64)

அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனையாகப் படைத்த சிலைகளையே வணங்குகிறீர்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை வணங்குகிறீர்களோ அவர்கள் உங்களுக்குச் செல்வம் வழங்க இயலாது. எனவே அல்லாஹ்விடமே செல்வத்தைத் தேடுங்கள்! அவனையே வணங்குங்கள்! அவனுக்கு நன்றி செலுத்துங்கள்! அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்! (அல்குர்ஆன்: 29:17)

எத்தனையோ உயிரினங்கள் தமது உணவைச் சுமந்து செல்வதில்லை. அல்லாஹ்வே அவற்றுக்கும், உங்களுக்கும் உணவளிக்கிறான். அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.

(அல்குர்ஆன்: 29:60)

அல்லாஹ் தனது அடியார்களில், தான் நாடியோருக்கு செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு அளவுடனும் வழங்குகிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்

(அல்குர்ஆன்: 29:62)

தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாராளமாகவும், குறைத்தும் வழங்குகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

(அல்குர்ஆன்: 30:37)

வானங்களிலும், பூமியிலும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? என்று (முஹம்மதே! கேட்டு, அல்லாஹ் என்று கூறுவீராக! நாமோ அல்லது நீங்களோ நேர் வழியிலோ பகிரங்கமான வழி கேட்டிலோ இருக்கிறோம்.

(அல்குர்ஆன்: 34:24)

என் இறைவன், தான் நாடியோருக்கு செல்வத்தைத் தாராள மாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். எனினும் மனிதர் களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள் என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 39:36)

எனது இறைவன் தனது அடியார்களில் தான் நாடியோருக்குச் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு அதை குறைத்தும் கொடுக்கிறான். நீங்கள் எப்பொருளை (நல் வழியில் செலவிட்டாலும் அவன் அதற்கான பிரதி பலனை அளிப்பான். அவன் வழங்குவோரில் சிறந்தவன் என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 39:39)

மனிதர்களே! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருளை எண்ணிப் பாருங்கள்! வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிக்கிறான். அல்லாஹ்வைத் தவிர படைப்பவன் உண்டா? அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?

(அல்குர்ஆன்: 35:3)

தான் நாடியோருக்கு செல்வத்தைத் தாராளமாகவும், குறைத்தும் அல்லாஹ் வழங்குகிறான் என்பதை அவர்கள் அறியவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

(அல்குர்ஆன்: 39:52)

வானங்கள் மற்றும் பூமியின் திறவு கோல்கள் அவனுக்கே உரியன. தான் நாடியோருக்குச் செல்வத்தை அவன் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

(அல்குர்ஆன்: 42:12)

அவன் தனது உணவை நிறுத்தி விட்டால் உங்களுக்கு உணவளிப்பவன் உண்டா? மாறாக வரம்பு மீறுவதிலும் வெறுப்பிலுமே அவர்கள் மூழ்கி விட்டனர்.

(அல்குர்ஆன்: 67:21)

மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பே அவனது உணவு மற்றும் வசதிகள் இறைவனால் முடிவு செய்யப்பட்டு விடுகின்றன என்று கூறும் நபிமொழிகள் ஏராளமாக உள்ளன.

(புகாரி: 318, 3333, 6595)

உணவளிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ள தனிப்பட்ட அதிகாரம். அதில் நபிமார்கள் உள்ளிட்ட எவருக்கும் எந்தப் பங்கும் இல்லை என்று இந்த வசனங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி அறிவிக்கின்றன. அல்லாஹ்வின் இந்தப் பிரகடனத்துக்கு எதிராக ஸுப்ஹான மவ்லிதின் இந்த வரிகள் அமைந்துள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஏகத்துவப் பிரச்சாரத்தை எதிர்த்து வந்த காபிர்கள், பல தெய்வங்களை வழிபட்டு வந்த முஷ்ரிக்குகள் கூட உணவளிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்று நம்பி வந்ததாகத் திருக்குர்ஆன் கூறுகின்றது.

வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப் புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்? என்று கேட்பீராக! அல்லாஹ் என்று கூறுவார்கள். அஞ்ச மாட்டீர்களா? என்று நீர் கேட்பீராக!

(அல்குர்ஆன்: 10:31)

மக்கத்துக் காபிர்கள் கூட உணவளிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான தனியுரிமை என்று நம்பியிருந்தார்கள் என்பதற்கு இவ்வசனம் சான்றாக உள்ளது. உணவளிக்கும் அதிகாரம் தனக்கு மட்டுமே உரியது என்பதை அல்லாஹ் பல இடங்களில் தெளிவாகக் குறிப்பிடுகிறான்.

அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களுக்கு உணவளித்தான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்வான். பிறகு உங்களை உயிர்ப்பிப்பான். உங்கள் தெய்வங்களில் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்வோர் உள்ளனரா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்.

(அல்குர்ஆன்: 30:40)

படைத்தல், மரணிக்கச் செய்தல், மீண்டும் உயிர்ப்பித்தல் ஆகியவை எப்படி இறைவனின் தனிப்பட்ட உரிமையோ அது போன்று உணவளிப்பதும் அவனது தனிப்பட்ட உரிமையாகும். இந்த நான்கில் எந்த ஒன்றையும் எவரும் செய்ய முடியாது என்று தெளிவான பிரகடனம் இது.

இந்த உரிமை இறைவனுக்கு மாத்திரம் சொந்தமானது என்பதால் தான் எத்தனையோ நபிமார்களை இறைவன் வறுமையில் வைத்திருந்தான். நபித்தோழர்கள் பசியால் துடித்திருக்கின்றனர்.

நபியவர்களுக்கு வறுமையை விரட்டும் அதிகாரம் இருந்திருந்தால் அவர்களே வறுமையில் வாடியிருக்க மாட்டார்கள்.

நி பல நாட்கள் பட்டினி கிடந்த நபித்தோழர்கள்,

நி வயிற்றில் கற்களைக் கட்டிக் கொண்டவர்கள்,

நி ஒரேயொரு பேரீச்சம் பழத்தைச் சாப்பிட்டு உயிரைத் தக்க வைத்துக் கொண்டவர்கள்,

நி தங்குவதற்குக் கூட சொந்த இடமில்லாமல் பள்ளிவாசலில் தங்கியவர்கள்,

நி இறந்த பின் போர்த்துவதற்குக் கூடப் போதிய ஆடையில்லாமல் புல் பூண்டுகளால் மறைக்கப்பட்டவர்கள்,

நி ஒட்டுப்போட்ட ஆடைகளை அணிந்தவர்கள்,

நி வீட்டில் விளக்கெரிக்கக் கூட வழியில்லாதவர்கள்,

நி வெறும் தண்ணீரைக் கொடுத்து குழந்தைகளை உறங்க வைத்தவர்கள்

என்று பல்வேறு வகைகளில் வறுமை அவர்களை ஆட்டிப் படைத்தது.

அவர்களில் எவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தங்கள் வறுமையை நீக்குமாறு வேண்டவில்லை. அல்லாஹ்விடமே வேண்டினார்கள். அவனிடமே வேண்டுமாறு தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் போதித்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்தும் அவர்களை நேரில் கண்டிருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வறுமையை நீக்குமாறு கோரவில்லை.

ஆனால் ஸுப்ஹான மவ்லூதில் வறுமையை நீக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பிரார்த்திக்கப்படுகின்றது. அவர்கள் தான் வறுமையை நீக்க முடியும் என்று கூறப்படுகின்றது.

ஸுப்ஹான மவ்லூது திருக்குர்ஆன் வசனங்களுடன் நேரடியாக மோதுகின்றதா? இல்லையா? சிந்தியுங்கள்!