04) உடுத்தி மகிழவில்லை

நூல்கள்: மாமனிதர் நபிகள் நாயகம்

உடுத்தி மகிழவில்லை

அவர்கள் அணிந்திருந்த ஆடைகள், இன்றைக்குப் பரம ஏழை கூட அணிவதற்கு வெட்கப்படக் கூடியதாகத் தான் இருந்தன.

மேலே போர்த்திக் கொள்ளும் ஒரு போர்வை, கீழே அணிந்து கொள்ளும் முரட்டு வேட்டி ஆகிய இரண்டையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) எடுத்துக் காட்டி ‘இவ்விரு ஆடைகளை அணிந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்’ என்று குறிப்பிட்டார்.

(புகாரி: 3108, 5818)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி போர்வை ஒன்றைக் கொண்டு வந்து ‘இதை உங்களுக்கு அணிவிப்பதற்காக என் கையால் நெய்து கொண்டு வந்துள்ளேன்’ என்றார். அவர்களுக்கு அது தேவையாக இருந்ததால் அதைப் பெற்றுக் கொண்டனர். பின்னர் அதை வேட்டியாக அணிந்து கொண்டு எங்களிடம் வந்தனர் என ஸஹ்ல் (ரலி) அறிவிக்கிறார்.

(புகாரி: 1277, 2093, 5810)

போர்வையை வேட்டியாக அணிந்து கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு உடை பற்றாக்குறை இருந்துள்ளது என்பதையும், உபரியாக ஒரு ஆடை இருந்தால் நல்லது என்று ஆடையின் பால் தேவை உள்ளவர்களாக இருந்துள்ளனர் என்பதையும் இதிலிருந்து அறியலாம்.

மேலும் உடனேயே அதை வேட்டியாக அணிந்து கொண்டதிலிருந்து எந்த அளவுக்கு அவர்களுக்கு ஆடைத் தட்டுப்பாடு இருந்துள்ளது என்பதையும் இந்த நிகழ்ச்சியிலிருந்து அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓரிரு சந்தர்ப்பங்களில் இறுக்கமான கம்பளிக் குளிராடை அணிந்திருந்ததாகவும், மிகச் சில நேரங்களில் தைக்கப்பட்ட சட்டை அணிந்திருந்ததாகவும் சான்றுகள் உள்ளன. இதைத் தவிர மற்ற சந்தர்ப்பங்களில் ஒரு போர்வையை மேலே போர்த்திக் கொள்வார்கள். இரு கைகளும் வெளியே இருக்கும் வகையில் போர்வையின் வலது ஓரத்தை இடது தோளின் மீதும், இடது ஓரத்தை வலது தோளின் மீதும் போட்டுக் கொள்வார்கள். இதனால் அவர்களின் அக்குள் வரை முழுக் கைகளும் வெளியே தெரியும். பெரும்பாலும் அவர்களின் மேலாடை இதுவாகத் தான் இருந்துள்ளது. போர்வை சிறியதாக இருந்தால் கீழே ஒரு போர்வையைக் கட்டிக் கொள்வார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழும் போது (ஸஜ்தாவில்) தமது அக்குள் தெரியும் அளவுக்கு கைகளை விரித்து வைப்பார்கள்.

(புகாரி: 390, 807, 3654)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழைத் தொழுகையின் போது தமது அக்குள் தெரியும் அளவுக்கு கைகளை உயர்த்துவார்கள்.

(புகாரி: 1031, 3565)

மக்கள் அனைவரையும் திரட்டி நடத்தப்படும் மழைத் தொழுகையின் போது கூட அக்குள் தெரியும் அளவுக்கு போர்வையைத் தான் சட்டைக்குப் பதிலாக அணிந்திருந்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸகாத் வரியைத் திரட்ட ஒருவரை அனுப்பினார்கள். நிதி திரட்டி வந்த அவர் ‘இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இது உங்களுக்கு உரியது’ என்றார். இதைக் கேட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘இவர் தனது வீட்டிலோ, தனது தாய் வீட்டிலோ போய் அமர்ந்து கொள்ளட்டும்! இவருக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா? என்று பார்ப்போம்’ எனக் கோபமாகக் கூறினார்கள். பின்னர் அவர்களின் அக்குளை நாங்கள் பார்க்கும் அளவுக்கு தமது கைகளை உயர்த்தி ‘இறைவா! நான் எடுத்துச் சொல்லி விட்டேனா?’ எனக் கூறினார்கள்.

(புகாரி: 2597, 6636, 6979, 7174, 7197)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மேலாடை பெரும்பாலும் சிறு போர்வையாகத் தான் இருந்தது என்பதையும் இதன் காரணமாகவே அவர்களின் அக்குள் தெரிந்துள்ளது என்பதையும் இந்தச் சான்றுகளிலிருந்து அறியலாம்.

மாமன்னராகவும், மாபெரும் ஆன்மீகத் தலைவராகவும் இருந்த நிலையில் தம் பதவியையும் அந்தஸ்தையும் பயன்படுத்தி அணிந்து கொள்ளும் ஆடைகளைக் கூட அவர்கள் போதிய அளவுக்குச் சேர்த்துக் கொள்ளவில்லை என்பதற்கு இவை சான்றுகளாக உள்ளன.

உணவு, உடை போன்ற வசதிகளுக்காகத் தான் மனிதன் சொத்துக்களைத் தேடுகிறான். எல்லாவிதமான முறைகேடுகளிலும் ஈடுபடுகிறான். மேனியை உறுத்தாத வகையில் மெத்தைகளையும் விரும்புகிறான். இந்த வசதிகளையெல்லாம் நாற்பது வயதுக்கு முன் அனுபவித்துப் பழக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இப்போது நினைத்தால் அந்தச் சுகங்களை அனுபவிக்கலாம் என்ற நிலையில் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவற்றைத் தவிர்த்து வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும் அவர்களின் நேர்மைக்குச் சான்றாக அமைந்துள்ளது.