11) உடல்ரீதியாக கவனிக்கவேண்டியவை

நூல்கள்: பயான் செய்யும் முறைகள்

 உடல்ரீதியாக கவனிக்கவேண்டியவை.

v சுறுசுறுப்பு உற்சாகம்.

பயான் நிகழ்த்தும்போது உற்சாகமாக இருந்தால், குறைவான குறிப்புகள் இருந்தாலும், நிறைவாகவும் தெளிவாகவும் பேசமுடியும். எனவே, பயான் நிகழ்த்தும் போது, ஃபிரஷ்ஷாக உற்சாகமாக இருக்க, முடிந்தவரை முயற்சியுங்கள். வெளியூருக்கு போகும்போது, முடிந்தால் ஓய்வு எடுப்பதற்கு தகுந்தவாறு 2 மணி நேரம் முன்னதாகவே செல்லுங்கள்.

உரை நிகழ்த்துவதற்கு முன்னர், குளிர்ந்த நீரை குடிக்கலாம். உளு செய்து கொள்ளலாம். எப்போதும் ஒரு எலக்ட்ரால் பவுடரை பையில் வைத்துக் கொண்டு சோர்வாக உள்ள போது பயன்படுத்திக்கொள்ளுங்கள். பழச்சாறு, குறிப்பாக எலுமிச்சை மற்றும் கரும்புச்சாறு உடனடி ஆற்றலுக்கு உதவும். எந்த வகையிலாவது, பயான் நிழ்த்தும் போது மக்கள் உங்களைப் பார்த்து உற்சாகம் அடையும் வகையில் தெம்பாக, ஃபிரஷ்ஷாக இருப்பது மிகவும் அவசியம். பயானுக்கு இடையில் தேவைப்பட்டால் குடிப்பதற்கு, மேடைக்கு அருகில் தண்ணீரை வைத்துக் கொள்ளுங்கள்.

அதுபோல, ஆள் பாதி ஆடை பாதி என்பதற்கேற்ப அழகான சுத்தமான ஆடை அணியுங்கள். உங்களுக்கு வசதியிருந்தால் நல்ல தோற்றமுடைய (Rich ஆன) ஆடையை அணியுங்கள். “அல்லாஹ் ஒருவருக்கு அருட்கொடைகளை வழங்கியிருந்தால் அதை அவர் வெளிப்படுத்தட்டும்” என நபியவர்கள் கூறினார்கள். (பைஹகீ). இதில் மற்றொரு நன்மையும் இருக்கிறது, நீங்கள் விரும்பும் அழகான ஆடை அணிந்துகொண்டு நறுமணம் பூசிக்கொண்டு மேடையில் நின்று பாருங்கள். மிகவும் உற்சாகமாகவும் தன்னம்பிக்கையுடனும் பேசுவதை கண்கூடாக பார்ப்பீர்கள்!

 

Ì சிறுதூக்கம் புத்துணர்வு தரும்

பயானுக்கு அரைமணிநேரம் முன்னதாக ஒரு குட்டித்தூக்கம் போடுங்கள். உங்கள் செயல்திறன் அதிகரிக்கும். பத்ருப்போரில், 300 பேர் கொண்ட சிறுபடை, 1000 பேர் கொண்ட பெரும் படையை வெற்றிகொண்டதற்கு, சஹாபாக்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்திய சிறுதூக்கமும் ஒரு காரணம் என்று திருக்குரான் சொல்கிறது.

إِذْ يُغَشِّيكُمُ النُّعَاسَ أَمَنَةً مِنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُمْ مِنَ السَّمَاءِ مَاءً لِيُطَهِّرَكُمْ بِهِ وَيُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّيْطَانِ وَلِيَرْبِطَ عَلَىٰ قُلُوبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْأَقْدَامَ

”(பத்ர் போர்களத்தில், போருக்கு முன்) அவன் உங்களுக்கு சிறு தூக்கத்தை ஏற்படுத்தியதை எண்ணிப் பாருங்கள். அது அவனிடமிருந்து வந்த மனஅமைதியாக இருந்தது” (அல்குர்ஆன்: 8:11). எனவே பயானுக்கு முன்னர் சிறுதூக்கம் போடுவது மிகவும் நல்லது. பகலில் தூங்குவது உடலுக்கு நல்லதல்ல என்று டூபாக்கூர் தத்துவம் பேசக்கூடாது.

உங்களுக்குத் தெரியுமா?

நாசாவின் அறிவுரையின் பேரில் அமெரிக்க விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை ஊழியர்களுக்கு பணியின் இடையே ஒருதடவை சிறுதூக்கம் தூங்க அனுமதிக்கப்படுகிறது. இது அவர்களின் செயல்திறனை 34 சதவீதமும், விழிப்புணர்வை 54 சதவீதமும் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. (பிபிசி. வாஷிங்டன் 28-April-2011)

 

v தெளிவான குரல்

எந்த உரைக்கும், கருத்துக்கள் தெளிவாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அதேஅளவுக்கு குரல் தெளிவாக இருப்பதும் முக்கியம். குரல் தெளிவு என்றால், அழகான குரல் என்று அர்த்தம் இல்லை. உளரல் இல்லாத, பேசும் வார்த்தை புரியும்படியான கணீரென்ற குரல். குரல் சரியில்லாவிட்டால், உண்மையிலேயே உங்கள் பேச்சில், சிறந்த கருத்துகள் இருந்தாலும், நீங்கள் பேசும் பேச்சு கேட்பவர்களுக்கு புரியாத காரணத்தினால், பயான் சரியில்லை என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிடுவார்கள்.

وَأَخِي هَارُونُ هُوَ أَفْصَحُ مِنِّي لِسَانًا فَأَرْسِلْهُ مَعِيَ رِدْءًا يُصَدِّقُنِي ۖ إِنِّي أَخَافُ أَنْ يُكَذِّبُونِ

قَالَ سَنَشُدُّ عَضُدَكَ بِأَخِيكَ وَنَجْعَلُ لَكُمَا سُلْطَانًا فَلَا يَصِلُونَ إِلَيْكُمَا ۚ بِآيَاتِنَا أَنْتُمَا وَمَنِ اتَّبَعَكُمَا الْغَالِبُونَ

ஃபிர்அவ்னிடம் பிரச்சாரம் செய்ய போகும்போது, தெளிவாகப் பேசும் ஹாரூனை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு மூஸா நபியவர்கள் இறைவனிடம் கோரிக்கை வைக்கிறார்கள். ”என் சகோதரர் ஹாரூன் என்னை விட தெளிவாகப் பேசுபவர். எனவே அவரை என்னுடன் உதவியாக அனுப்பிவை! அவர் என்னை உண்மைப் படுத்துவார். அவர்கள் என்னை பொய்யராக கருதுவார்கள் என்று அஞ்சுகிறேன்” (என்றும் மூஸா கூறினார். அதற்கு அல்லாஹ்). ”உம் சகோதரர் மூலம் உமது தோளைப் பலப்படுத்துவோம்…… (என்று கூறினான்) (அல்குர்ஆன்: 28:34),35)

எனவே, உங்களின் பேச்சை தெளிவாக்குவதற்கு, இறைவனிடம் துஆச் செய்துவிட்டு, கீழே உள்ள அறிவுரைகளை முயற்சி செய்துபாருங்கள்.

  • வாயை விரித்து, அகலமாக்கி பேசினால், வார்த்தை புரியும். வாயை சுருக்கி பேசினால், உச்சரிப்பு சரியாக வராது. வார்த்தைகள் புரியாது. எனவே வாயை பெரிதாக்கிப் பேசுங்கள்.
  • மிகவேகமாக பேசுவதும் சிலநேரம் வார்த்தை புரியாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கும். கடுமையாகவும், வேகமாகவும் பேசியிருக்கிற நபியவர்கள், பலநேரங்களில் சொல்லும் செய்தி மனதில் பதிவதற்காக, மிகவும் நிதானமாக பேசியிருக்கிறார்கள். ”நபியவர்கள் ஒரு விஷயத்தைப் பற்றி பேசினால் (அந்த பேச்சில் உள்ள வார்த்தைகளை) எண்ணக் கூடியவர் எண்ணியிருந்தால் ஒன்று விடாமல் எண்ணியிருக்கலாம். (அந்த அளவிற்கு நிறுத்தி நிதானமாக தெளிவாகப் பேசி வந்தார்கள்.) என்று ஆயிஷா அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி: 3567)
  • எனவே, பேசும் வார்த்தைகளை, வரிகளை அதிகநேரம் எடுத்து, அழுத்தம் கொடுத்து, (Articulate செய்து) பேசிப் பேசிப்பாருங்கள். அதாவது, ”சமூக சீர்திருந்தங்கள் தேவை” என்ற வரியை உச்சரிப்பதற்கு குறைந்தது 3 வினாடிகள் தேவை. முனுமுனுக்கிறவர்கள் இந்த வரியை இரண்டு வினாடிகளில் பேசுவார்கள். எனவே, ஒரு கடிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு, மேற்குறிப்பிட்ட வரியை 4 வினாடிகள் எடுத்து, நன்றாக நீட்டி சொல்லிப்பாருங்கள். இதுபோன்ற இருபது முப்பது வரிகளை எடுத்துக்கொண்டு, இந்த பயிற்சியை எடுங்கள். முனுமுனுக்கிறவர்களுக்கும், வார்த்தை தெளிவில்லாதவர்களுக்கும், வேகமாக பேசுகிறவர்களுக்கும் இந்த பயிற்சி நன்றாக பயனளிக்கும்.
  • அதுபோல, ஏற்கனவே இரண்டு முறை (நண்பர்களிடம் பயிற்சிக்காக) பேசிய பயானை மீண்டும், நிதானமாக நிறுத்தி நிறுத்தி பேசிப்பழகினால், வார்த்தை தெளிவாக இருக்கும். ஒரே தலைப்பையே பல இடங்களில் பேசுவதில் தவறொன்றுமில்லை. ஒரே செய்தியை மீண்டும் மீண்டும் பேசுவதன் மூலம் பேச்சு நிதானம் கிடைக்கும்.
  • ஆடியோவில் பதிவு செய்து, உங்களை பேச்சை நீங்களே ஒருமுறை கேட்டுப்பாருங்கள். பிறரிடம், உங்கள் நண்பர்களிடம் குறைகளை கேட்டுத் தெரிந்துகொண்டு, அந்த இடங்களை சரிசெய்யுங்கள். எந்த வார்த்தை சரியாக வரவில்லையோ, அந்த வார்த்தைகளை மட்டும் திரும்பத்திரும்ப சொல்லிப் பார்த்து சரிசெய்யுங்கள்.
  • நீளமான வரிகளை பேசுவதற்கு சிரமமாக இருந்து அதனால் வார்த்தை குளறுபடி ஏற்பட்டால், அந்த வரியை துவங்குவதற்கு முன் மூச்சை ஓரளவு உள்இழுத்துக்கொள்ளுங்கள். பேசப்பேச மூச்சு தானாக வெளியேறும். ”இவ்வளவு பெரிய ஆயத்தை எப்படி மூச்சு விடாம ஓதுறாரு?” என்று நீங்கள் ஆச்சர்யப்படும் பிரபலமான குர்ஆன் காரிகள் பலரும் கடைபிடிக்கும் வழிமுறை இதுதான்.

இதுபோன்ற வழிகளை செயல்படுத்தி உங்கள் பேச்சை தெளிவாக்கிக் கொள்ளுங்கள். பேச்சு தெளிவாக இருந்தால் தான், சொல்லும் செய்தி மக்களிடத்தில் போய்ச்சேரும்.

Ì இப்படியும் ஒரு கருவி உள்ளது : உங்களின் குரல் எப்படி இருந்தாலும், கனீரென்ற குரலாக மாற்றி ஆம்ப்ளிபையருக்கு தரக்கூடிய கருவிகளுக்கு Professional Voice Changer என்று பெயர். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பலநிறுவனங்கள் இந்த கருவியை விற்பனை செய்கின்றன.

 

v உடல்மொழி – பாடி லாங்குவேஜ்

வார்த்தை தெளிவாக இருப்பதோடு, பாடிலாங்குவேஜிலும் கண்டிப்பாக கவனம் செலுத்தவேண்டும். அதாவது, சொல்லும் செய்திகளுக்கு தகுந்தார்போல, கைகளை உயர்த்திப் பேசவேண்டும். தலையை ஆட்டிப் பேசவேண்டும். சரியான பாடி லாங்குவேஜோடு பேசினால், சொல்லும் செய்திகள் உள்ளத்தில் நன்றாக பதியும்.

புதிதாக பேசுபவர்கள், தவறாக பேசிவிடுவோமோ என்ற பயத்தினாலும், அடுத்தடுத்த குறிப்புகளின் மீது உள்ள கவனத்தினாலும் கைகளை அசைப்பதில் கவனம் செலுத்துவதில்லை. கைகளை, தலையை ஆட்டாமல் அசைக்காமல் மரம்போல நின்று பேசினால், ஆவேசமான கருத்துக்கள் இருந்தாலும், உங்கள் பேச்சு மந்தமாக காட்சியளிக்கும். அதேநேரம் அதிகப்படியாக கையை, தலையை ஆட்டிப் பேசினாலும், நடிப்பது போல இருக்கும். சகிக்காது. எனவே நடுத்தரமானதை கடைபிடியுங்கள். முயற்சி செய்தும் முகபாவனைகள் வராதவர்கள், ஆவேசமான பயானை சப்தமில்லாமல்(Mute செய்து) பேசுபவரின் முகபாவனைகளை கவனித்து அதுபோன்றே செய்து பாருங்கள். இது நன்றாக பயனிக்கும்.

உங்களுக்குத் தெரியுமா? : பிறவியிருந்தே கண்தெரியாத குருடர்கள் கூட, பிற குருடர்களிடத்தில் பேசும்போது, தேவையான முகபாவனைகளுடன், கைகளை அசைத்து தான் பேசுகிறார்களாம். பாடிலாங்குவேஜுடன் பேசும் போது தான், அவர்களின் பேச்சு கவனிக்கத்தக்க வகையில் உள்ளது என்று ஜவர்ஸன் மற்றும் கோல்டின்மேடோ நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (அவர்களின் ”Why People Gesture When they Speak”  என்ற நூலில் இருந்து)
Ì எல்லோரையும் பார்த்து பேசுங்கள்.

மக்களின் முகத்தையும், கண்களையும்பார்த்துப் பேசுவது, இருவருக்குமிடையே ஒரு இணைப்பை ஏற்படுத்துகிறது. உரை நிகழ்த்துபவர் என்னை கவனித்துப் பேசுகிறார், என்ற உணர்வின் காரணமாக, அதிக ஈடுபாட்டுடன் மக்கள் உரையை கவனிப்பார்கள். எனவே முடிந்தஅளவு மக்களின் முகத்தை கவனித்துப் பேசுங்கள்.

பேசும் போது, ஒரு பக்கம் மட்டுமே பார்த்து பேசக்கூடாது.  நிதானமாக, அவையின் இருபக்கத்திலும் தலையை திருப்பி திருப்பி பேசுங்கள். தலையை திருப்பும் போது, வெறும் தலையை மட்டும் திருப்பாமல், உடலையும் சேர்த்து திரும்பி பேசுவது தான் இயல்பாக இருக்கும்.

இரண்டு கைகளையும், மேசையின் போடியத்தின் மீது வைத்துக்கொண்டு, உடலை நேராக மரம் போல ஆக்கிக்கொண்டு, வெறும் தலையை மட்டும் கடமைக்கு அங்கும் இங்கும் ஆட்டினால், செயற்கையாகத் தோன்றும். எனவே முடிந்தஅளவு உடலையும் சேர்த்து இருபுறமும் திரும்பி, கைகளை அசைத்து, தலையை ஆட்டி, உணர்ச்சிகளை முகத்தில் வெளிப்படுத்திப் பேசுங்கள். பேண்ட் பாக்கெட்டிற்குள் இரு கைகளையும் வைத்துக்கொண்டு பேசுவது, ஈடுபாடு இல்லாமல் பேசுவது போன்று காட்சியளிக்கும்.

Ì பல உலகளாவிய பேச்சாளர்கள், போடியத்தைக்கொண்டு தனது உடலை மறைப்பதை விரும்புவதில்லை. பாடிலாங்குவேஜ் முழுமையாக வெளிப்படுவதற்காக, தனது முழு உடலும் தெரியும் வண்ணம், மேடையில் நின்று உரை நிகழ்த்துகிறார்கள். வெறும் ஸ்டான்டிங் மைக் மட்டுமே அவர்களது முன்னால் இருக்கும். எனவே, நமது உடலின் அசைவுகளை மக்கள் பார்க்கும் வண்ணம், மிகக்குறுகிய போடியத்தை பயன்படுத்துவதும் நல்லதுதான்.

அதுபோல, நமக்கு முன்னால் நேரில் அமர்ந்திருக்கும் மக்கள் நமது உரையை கேட்கும்போது, நமது உடலின் அசைவுகளை கண்ணில் பார்த்தவண்ணம், உரையை கேட்பதால், நாம் பேசுவது எளிதில் அவர்களுக்கு புரியும். ஆனால், வேறு அறைகளிலோ, மாடியிலோ அமர்ந்திருக்கும் மக்களுக்கு நமது உடலின் அசைவுகள்  தெரியாமல் ஆடியோ மட்டுமே கேட்கிற காரணத்தினால், சொல்லும் செய்திகளை கிரகிப்பது அவர்களுக்கு சிரமமாக இருக்கும். எனவே, பள்ளிவாசல் போன்ற இடங்களில் பெண்கள் பகுதிக்காக, ஒரு மினி சிசிடிவி கேமராவும், AV கேபிளும், தொலைக்காட்சி பெட்டியையும் நிரந்தரமாக அமைத்துக்கொள்ளுங்கள்.

 

v மேடையின் அமைப்பும், தோற்றமும் முக்கியமானவை

ஒரு பிரச்சாரகரின் பேச்சு எந்தஅளவிற்கு முக்கியமானதோ, அதே அளவிற்கு, மேடையின் தோற்றமும், ஆடியோ சிஸ்டமும் முக்கியமானவை. இதன் முக்கியத்துவத்தை பெரும்பாலானவர்கள் விளங்கி வைத்திருப்பதாக தெரியவில்லை. மேடையின் தோற்றம் குழப்பம் இல்லாத வகையில் அமைக்கப்பட வேண்டும். அதற்காக, ஒருசில ஆயிரங்கள் அதிகப்படியாக செலவிட்டாலும் கூட தவறில்லை.

சில பொதுக்கூட்டங்களில் பார்க்கிறோம், தெளிவாக இருக்கும் மேடையைக்கூட ஜந்தாறு பேனர்களை கட்டி, அதற்கு மேலே இரண்டு போர்வைகளையும் கட்டி, அழகு என நினைத்துக்கொண்டு காய்ந்துபோன பூச்செடிகளையும் உள்ளே நுழைத்து மேடையை நாறடித்துவிடுவார்கள். போதாக்குறைக்கு மேடையில் இருபது, முப்பது நபர்கள் வேறு. போடியத்தில் செய்யப்பட்டிருக்கும் ஜோடனைகளை பார்த்தால், மணவறையில் அமர்ந்திருக்கும் புதுப்பெண் போன்று இருக்கும். மொத்தத்தில் மேடை, பத்து பதினைந்து இடியாப்பங்களை போட்டு குழப்பி வைத்தார்போல் குழப்பமாக இருக்கும்.

பார்வையையும் சிந்தனையையும் ஓர்முகப்படுத்தி, பயானை கேட்கவிரும்பும் மக்களுக்கு இது மிகப்பெரும் எரிச்சல் தரும். தெளிவான மனநிலை இருக்காது. எனவே, முடிந்தஅளவு மேடையில் எந்த பொருட்களும் இன்றி தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். மேடையின் தோற்றமும், பேச்சாளரின் தோற்றமும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக இருக்கவேண்டும்.

Ì மேடையில் அங்குமிங்கும் நடந்துகொண்டே பேசலாமா? நம்மவர்கள் மேடையில் நடந்துகொண்டே பயான் செய்வதில்லை. அப்படி செய்வதும் கூடாது. அங்கும் இங்கும் அலைந்தால் சொல்லும் செய்தியில் மக்கள் கவனத்தை ஒருமுகப்படுத்த முடியாது. கிருஸ்தவர்கள் மேடையில் அலைந்து கொண்டே உரை நிழக்த்துகிறார்களே! என்றால், அவர்கள் உரை நிகழ்வதில்லை. மாறாக நாடகம் போல நடித்துக்காட்டுகின்றனர். ”யேசப்பா, இர்றங்ங்குமப்பா….” என்று கூறி மேடையின் ஒருபகுதியில் அவர் இறங்குவது போல ஓடுவார்கள். ”சாத்தான் நிற்கிறான், அவனை விரட்டப்போகிறேன்” என்று மேடையின் மறுபகுதிக்கு தாவுவார்கள். இவ்வாறு ஓடுவது நாடகத்திற்கு சரிப்படலாம். நம் பயானுக்கு ஒத்துவராது.

 

v ஆடியோ சரியில்லாவிட்டால், பேசுவதில் பயனில்லை.

பேசும் இடத்தில் ஆடியோ சிஸ்டம் சரியில்லாவிட்டால், உங்கள் எனர்ஜி தான் வேஸ்ட் ஆகும். எவ்வளவு சிறந்த கருத்துக்களை பேசினாலும், அதனால் பிரயோஜனமில்லை. ஆடியோ சரியில்லாத காரணத்தினால், கத்திகத்தி பேசினால் இயல்பாகவும், புத்துணர்ச்சியோடும் பேசமுடியாது. அதாவது, முகத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது, ஏற்றி, இறக்கிப்பேசுவது, டெவலப் செய்து பேசுவது, லோக்கல் பாஷையில் பேசுவது போன்றவைகள் தான் பேச்சுக்கு சுவை கூட்டும் செயல்கள். ஆடியோ சரியில்லாமல் கத்திகத்தி பேசினால் மேற்குறிப்பிட்ட எதையும் செய்யஇயலாது.

ஆடியோ சிஸ்டம் தான் பிரச்சனை என்பது பொதுமக்களுக்கு தெரியாது, ”இவுரு பேச்சு சரியில்லை” என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிடுவார்கள். எனவே பேசும் இடத்தில், மைக், ஸ்பீக்கர், ஆடியோ சிஸ்டம் சரியாக இல்லாவிட்டால் அதன் முக்கியத்துவத்தை நிர்வாகிகளிடம், நட்பு ரீதியில் விளக்கி புரியவையுங்கள். ஆள்பாதி ஆடைபாதி என்று சொல்வது போல, பேச்சு பாதி, ஆடியோ பாதி என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இது முக்கியமானது. எனவே, ஜும்மா போன்ற முக்கியமான நேரங்களில் வாடகைக்காவது எடுத்துக்கொள்ளுங்கள், என்று நிர்வாகிகளுக்கு யோசனை தெரிவியுங்கள்.

இதுதவிர, உங்கள் உயரத்திற்கு தகுந்தார்போல, மைக்கை சரிசெய்துகொண்டு, பேச்சு தெளிவாக இருக்கிறதா என உறுதிசெய்துகொண்டு பிறகு பேசஆரம்பியுங்கள். இதற்கு அதிகபட்சம் ஒரு நிமிடம் ஆகும். இதை கவனிக்காமல் பயான் செய்தால், ஒரு மணிநேரம் பயான் செய்தும் முழுமையான பலன் கிடைக்காது.

பேசும் மேடைக்கு மேலே மின்விசிறி இருந்தால், சில நேரம், பேச்சு தெளிவாக இருக்காது. கவனத்தில் வைய்யுங்கள். மைக்கிற்கு நேராக நின்றுகொண்டு, தும்மாதீர்கள். அதுபோல, மைக்கை விட்டு விலகிப் பேசாதீர்கள். உங்கள் அருகில் உள்ள ஸ்பீக்கரில் இருந்து உங்களுக்கு எதிரொலி கிடைத்துவிடும். ஆனால் மற்ற பகுதிகளில் உள்ள மக்களுக்கு, உங்கள் பேச்சு விட்டுவிட்டு கேட்கும். எனவே ஆடியோவில் அதிக கவனம் செலுத்துங்கள்.

அதுபோல, மேடையில் அமைக்கப்பட்டிருக்கும் விளக்குகள் பொதுமக்கள் கண்ணில் வெளிச்சம் படும்படி இருக்கக்கூடாது. மக்களுக்கு எரிச்சலாக இருக்கும். பொதுக்கூட்டங்களில், மெகா ஸ்பீக்கர்கள் இன்று பெரும்பாலும் மக்களின் அருகிலேயே வைக்கப்படுகின்றன. குறைந்த பட்ஜெட் பொதுக்கூட்டங்களில் இதைத்தான் செய்யமுடியும். முடியுமானால், மெகாஸ்பீக்கர்களை மக்களின் தலைக்குமேலே சிலஅடி உயரத்தில் சப்தம் சமமாக பரவும் வகையில் அமைக்கப்படவேண்டும்.
v ஆடியன்ஸை தெரிந்துகொள்ளுங்கள்.

நாம் பேசப்போகும் மக்கள் எப்படிப்பட்டவர்கள், என்ன கருத்து தேவையுடையவர்கள், எந்த பகுதியில் வாழ்பவர்கள், எந்த கொள்கையினால் இத்தனை காலம் வழிநடத்தப்பட்டவர்கள் என தெரிந்து அதற்கு தகுந்தார்போல பேசினால், நம் பேச்சு கேட்பவர்களுக்கு பயனுள்ள பேச்சாக இருக்கும். உதாரணமாக)

  • சோற்றுக்கு வழியில்லாத மக்களிடத்தில் போய், நீங்களெல்லாம் உடனே ஹஜ் செய்யவேண்டும், தானதர்மங்களை வாரி வழங்கவேண்டும் என்று பொத்தாம் பொதுவாக பேசிவிட்டு வந்தால், அதனால் எந்த பலனும் ஏற்படாது.
  • அதுபோல, தர்காவை நம்பும் மக்களிடத்தில், அடிப்படையை விளக்காமல், வெறும் அமல்களின் சிறப்புகளை மட்டும் பேசிவிட்டுவந்தால், அனைத்து அமல்களையும் சீறும் சிறப்புமாக, அவ்லியாக்களுக்கு செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.
  • பெண்கள் பயானில் மறுமையில் ஆண்களுக்கு பலதுணைவியர் கிடைப்பதை வர்ணித்துவிட்டு வந்தால், இனிமேல் அவர்கள் பள்ளி பக்கமே, தலைவைத்து படுக்கமாட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள் தன்னிடத்தில் உபதேசம் கேட்டு வருபவர்களின் தன்மைக்கேற்ப அறிவுரை வழங்கியிருக்கிறார்கள்.

¢ பலவருடம் குர்ஆன் ஹதீஸ் கொள்கையிலே ஊறிய மக்களிடத்தில், பெரும்பாலான நேரம், அடிப்படையான செய்திகளையும், ஷிர்க், தர்கா, அவ்லியா, கத்தம், பாத்தியா போன்றவற்றையும் சொல்லவேண்டியிருக்காது. மாற்றப்பட்ட சட்டங்கள், அமல்களின் சிறப்பு, அதில் கவனம், இஸ்லாமிய ஒழுங்குகள், இஸ்லாத்தை மெய்ப்பிக்கும் அறிவியல் செய்திகள், முஸ்லிம் இஸ்லாஹ், நான்முஸ்லிம் தாவா என மற்ற அனைத்தையும் பேசலாம். புதியபுதிய தலைப்புகளை பேசுவதை இவர்கள் எதிர்பார்ப்பார்கள்.

¢ அடிப்படைகளே தெரியாத கிராமவாசிகளிடம் போய், பிக்ஹு சட்டங்களை விளக்கிக் கொண்டிருக்கக்கூடாது. வீடே இல்லாத நாடோடி மக்களிடத்தில் போய், வாரிசுரிமை சட்டங்களை பேசிக்கொண்டிருக்கக் கூடாது. பாமர மக்களிடத்தில், இஸ்லாத்தின் அடிப்படையை முதலில் புரியவைக்க வேண்டும். தர்கா, அவ்லியா, ஜோதிடம், பேய் பிசாசு, சூனியம் போன்றவற்றின் உண்மை நிலையை விளக்கவேண்டும். இஸ்லாம் பற்றி தெரிந்திருந்தாலும், அதில் ஆர்வமில்லாமலும், ஒழுக்கமில்லாமலும் வாழும் மக்களிடத்தில் இஸ்லாம் மற்றும் மறுமைவாழ்க்கை பற்றிய ஆர்வத்தை முதலில் ஊட்டவேண்டும். அதன் மதிப்பை புரியவைக்கவேண்டும். புதியபுதிய தலைப்புகள் இவர்களுக்கு தேவைப்படாது.

¢ இஸ்லாத்தின் மீது அதிக ஆர்வமும் உண்டு, தன்னால் முடிந்தவரை அதை பின்பற்றும் மக்களாகவும் இருப்பார்கள், ஆனால் மத்ஹபில் மூழ்கிக்கிடப்பார்கள். தப்லீக்கை மெய்ச்சிக்கொண்டு, அதன் விஷக்கருத்துக்களை இஸ்லாம் என்று எண்ணிக்கொண்டு மக்களிடம் பரப்பிக்கொண்டிருப்பார்கள். இவர்களுக்கும் புதியபுதிய தலைப்புகள் தேவையில்லை. மத்ஹப், தப்லீக்கின் உண்மை முகத்தை வெளிக்காட்டி, இஸ்லாத்தின் தூய வடிவத்தை புரியவைக்கவேண்டும்.

கொள்கை ரீதியாக மக்களை பிரித்து விளங்கியது போல, வயது ரீதியாகவும் ஆடியன்ஸ் வித்தியாசப்படுகிறார்கள். பெண்கள் பயானில் பேசும் அதே செய்தியை, மாணவர்களிடத்தில் பேசமுடியாது. மாணவர்களிடத்தில் பேசவேண்டிய செய்தியை வயதானவர்களிடத்தில் பேசமுடியாது. உதாரணமாக,

¢ வயதானவர்களை பொறுத்த வரையில்,
அவர்கள், எதுகை மோனைக்கு முக்கியத்துவம் தருவதில்லை. பிக்ஹு சட்டங்களை விளக்குவதையும், புள்ளிவிபரங்கள் சொல்வதை இவர்கள் விரும்புவதில்லை. ஆதாரங்களுக்கும் அதிகமுக்கியத்துவம் தருவதில்லை. (ஆதாரங்களை விரும்பும் பண்பு முதியவர்களுக்கு குறைவாக இருப்பதால் தான், குர்ஆன்-ஹதீஸ் கொள்கைக்கு இளைஞர்கள் வரும் அளவிற்கு முதியவர்கள் வருவதில்லை)
வயதானவர்கள், நடைமுறை கருத்துக்களை எதிர்பார்ப்பார்கள். குடும்பத்தில் உள்ள சிக்கல்கள், மக்களின் அறியாமை போன்றவற்றை பேசவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். உதாரணமாக, ”பெற்றோர்கள்,  தான் உண்ணாமல், தூங்காமல் பிள்ளையை வளர்கிறார்கள். பிள்ளைகள், பெற்றோரை உதாசீனப்படுத்திவிட்டு நண்பர்களை மதிக்கிறார்கள்” என்பது போன்ற உறவுமுறை, குடும்ப, சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்வதை அதிகம் விரும்புவார்கள்.

 

¢ நடுத்தரவயது மற்றும் குடும்ப பெண்களை பொறுத்தவரையில்,

கப்ரு வாழ்க்கை, மறுமையின் நிகழ்வுகள், குற்றங்களுக்குறிய தண்டனைகள், பற்றி பேசுவதை அதிகம் விரும்புவார்கள். மறுமையில் கிடைக்கும் தண்டனைகளை ஒற்றை வரியில் சொல்லிவிட்டு போகாமல், சற்று விரிவாக, பயமுறுத்தும் விதமாக, உலக உதாரணங்களோடு பிண்ணிப்பிணைந்த வகையில் சொல்லவேண்டும்.

அதேபோல, நபிமார்கள், சஹாபாக்கள் வாழ்வில் நடந்த சம்பவங்கள், குறைவான அளவில் அறிவியல் செய்திகள், இதுவரை அறியாமல் இருந்த சட்டங்கள், குடும்ப உறவுகள், அவர்களின் உரிமைகள், கடமைகளை பற்றி பேசவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

கலீஃபாக்களின் வரலாறு, நாட்டின் வரலாறுகள், அரசியல் செய்திகளில் ஆர்வம் காட்டமாட்டார்கள். பிக்ஹு சட்டங்களை நுணுக்கமாக அனுகி விளக்குவதையும் விரும்பமாட்டார்கள். பெண்களில் 80 சதவீதம் பேருக்கு மத்ஹபு என்றால் என்வென்றே தெரியாது. எனவே அதைப்பற்றி பேசி குழப்பவேண்டிய அவசியம் இல்லை. தொழுகை, சொர்க்க, நரகம், குடும்ப வாழ்க்கையை பற்றிய அறிவுரைகளை எத்தனை தடவை சொன்னாலும் சலிக்காமல் கேட்பார்கள்.

¢ சிறுவர்களை பொறுத்த வரையில்,
இவர்களிடம் பேசும் முறையே வித்தியாசமானது. பெரியவர்களிடத்தில் பேசுவது போன்று ”மனிதகுலம் சந்திக்கும் மொழி, இன, பொருளாதார பிரச்சனைகளுக்கு இஸ்லாத்தின் தீர்வே இணையில்லா தீர்வு” என்பது போன்று சீரியஸாக பேசமுடியாது. அவர்களின் உலகமாக இருக்கும், பள்ளிக்கூடம், நண்பர்கள், பெற்றோர்கள், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை நகைச்சுயைாக பேசி இஸ்லாத்தின் அடிப்படைகளை புரியவைக்கவேண்டும். சிறுவர்களிடத்தில் அதிக அளவு கதைகளை (வரலாறுகளை) பயன்படுத்துங்கள். அதன் மூலம் போதனை செய்வது இவர்களுக்கு அதிக பயனிக்கும். சொர்க்க, நரகத்தைப் பற்றி பேசுவதை விரும்பி கேட்பார்கள். ஒருபக்க உரையாக இல்லாமல், அவர்களிடம் எதையாவது கேட்டுகேட்டு, அதிக ஆடியன்ஸ் இன்ட்ராக்ஷனுடன் போதனை செய்வது நல்லது.

¢ இளவயது மக்களை பொறுத்த வரையில்,

அவர்கள் சவால்விடும் பேச்சுக்கள், புதுமொழிகள், நகைச்சுவை, புதுமையான செய்திகள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தருவார்கள். மேலும், தான் எதிர்க்கும் கொள்கைகளை பற்றி விமர்சனம் செய்வதை, இஸ்லாத்தை உண்மைப்படுத்தும், நவீன அறிவியல் உண்மைகளை பேசவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். எந்த கருத்தையும் அறிவியல் ரீதியாக அணுகவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

கடவுள் இல்லை என்று சொல்வதை, பகுத்தறிவு என்றும், ஸ்டைல் என்றும் கருதும் மாணவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு அறிவியல் ரீதியாக இஸ்லாத்தை எடுத்துச்சொல்ல வேண்டும். இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகளை சொல்லிவிட்டு, பிறகு மறுமையை பற்றிய அச்சத்தை ஊட்டவேண்டும். நபி(ஸல்) கூறிய முன்னறிவிப்புகளையும், அதில் நிறைவேறியவற்றையும் பேசவேண்டும். அவர்களிடம் உள்ள (பகுத்தறிவாதிகளின்) அறியாமையையும், விதண்டாவாதத்திற்கான பதில்களையும் சொல்லவேண்டும். குறிப்பாக இளைய சமுதாயம் சிக்கித்தவிக்கும் தீமைகளிலிருந்து விடுபடுவதற்குரிய வழிமுறைகளையும் சொல்லித்தரவேண்டும். இதன் மூலம் ஆற்றல்மிகு இளைஞர் படையை இஸ்லாத்திற்காக தயார் செய்யமுடியும்.

கவனம் : ”இப்படி, இப்படியெல்லாம் நூதன வழிகளில் தீமை நடக்கிறது. நீங்கள் அப்படி செய்யாதீர்கள்” என்பது போன்ற அறிவுரைகளை செய்யும் போது, கவனமாக இருங்கள். தீமை செய்வதற்குரிய வழிமுறைகளை நாமே கற்றுக்கொடுத்து விடக்கூடாது.

உதாரணமாக, ”ஜவுளிக்கடையில் துணியை திருடுவதற்கு இப்படியெல்லாம் செய்கிறார்கள். இன்றைக்கு கஞ்சா கிடைப்பதெல்லாம் மிகவும் எளிதாகிவிட்டது, அதுக்கு ஒரு மேசேஸ் அனுப்பினால் போதும் வீட்டிற்கே புத்தகவடிவில் பார்சல் வந்துவிடும். நாம் இதுபோன்று செய்துவிடக்கூடாது(?)” என்பது போன்று பேசிவிட்டு சென்றால், மனிதன் நன்றாக இருக்கும் போது பிரச்சனை இல்லை. தீய எண்ணங்கள் தலைதூக்கும் நேரத்தில், உங்களின் பேச்சு அவருக்கு ஒரு யோசனையை ஏற்படுத்தலாம். எனவே தீமைகளை சுட்டிக்காட்டும் போது, அதிக வார்த்தை கவனத்தோடு பேசுங்கள்.
¢ மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், அறிவாளிகளின் சபைகள்.

உலகரீதியாக அறிவாளிகளாக கருதப்படும் இதுபோன்ற மக்களிடத்தில் பேசும் போது, வழவழா பேச்சை விரும்பமாட்டார்கள், எனவே லோக்கல் பாஷையை குறைத்துக்கொள்ளுங்கள். இவர்களிடத்தில் குடும்ப ரீதியான சிக்கல்களுக்கு இஸ்லாம் தரும் தீர்வை சொல்வதாக இருந்தாலும், நறுக்கென்று பாயிண்ட் பாயிண்டாக பேசவேண்டும் என்று விரும்புவார்கள்.

பிரச்சனைகளுக்கு நமது மார்க்கநிலைப்பாடு மட்டுமல்லாமல் உலகரீதியாகவும் ஆதாரங்கள் முன்வைக்கப்படுவதை விரும்புவார்கள். செய்தித்தாள்கள், இணையதளம், நீதிமன்ற தீர்ப்புகள், முன்சென்ற வரலாறுகள், ஆய்வறிக்கைகள் போன்றவைகளை எதிர்பார்ப்பார்கள்.

அதனால் தான், இஸ்லாம் இனியமார்க்கத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அறிஞர்கள் பதில் சொல்லும் போது, வெறும் கருத்துக்களை மட்டும் சொல்வதில்லை. இதுபோன்ற ஆதாரங்களையும் சமர்ப்பிப்பதை பார்க்கலாம். இந்த ஆதாரங்கள், சாதாரண பெண்கள் பயானிலோ, முதியவர்கள் பயானிலோ தேவைப்படாது. வயதானவர்களிடத்தில், நீங்கள் அடுக்கடுக்காக ஆதாரங்களை சொன்னாலும், அதை அவர்கள் பொருட்படுத்தமாட்டார்கள்.

”என்னத்த. எதையெதையோ பேசுறாரு. எப்படி வாழனும். கப்ருல என்ன நடக்கும். மறுமையில எப்படி இருப்போம்-னு சொல்லமாட்டேங்குறாரு” என சலிப்போடு, பேசுவார்கள். எனவே சபையறிந்து பேசுங்கள். பயான் உங்களுக்கு அல்ல. கேட்கும் மக்களுக்கு என புரிந்துகொள்ளுங்கள்.

 

v ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள வேறுபாடுகள்

ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள மனோரீதியான வேறுபாடுகளை தெரிந்துகொண்டால் அதற்கு தகுந்தார்போல நாம் பேசும் செய்திகளை அமைத்துக் கொள்ளமுடியும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் சிந்தனையிலும், மூளையிலும் அதன் அளவிலும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. ஆண்கள் தேடுபவர்களாகவும், பெண்கள் திரட்டுபவர்களாகவும் இருக்கின்றனர் என்று டாக்டர் எட்வர்ட் காஃபி (அமெரிக்காவின் வேனே மருத்துவ பல்கலைகழக நரம்பியல் பேராசிரியர்) கூறுகிறார்.

இதுதவிர, பேச்சு, மொழி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆண்களை விடபெண்கள் அதிக அறிவுடையவர்கள், பேசிக்கொண்டே இருப்பதற்கு சலிப்படையாதவர்கள். பெண்கள் மூளையின் ஆழமான லிம்பிக்(DeepLimibicBrain) அமைப்பு காரணமாக, அதிகம் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள், பிறர் மீது அக்கறை காட்டுபவர்கள். (Body language) உடல்மொழியை ஆண்களை விட நன்றாக புரிந்துகொள்கின்றனர்.

ஆண்கள் ஒரு காரியத்தை காரணத்தோடு, (Logical thinking) தர்க்க ரீதியில் அனுகுகின்றனர். எனவே சொல்லும் செய்திகளுக்குரிய ஆதாரத்தை எதிர்பார்ப்பார்கள். பெண்கள் எதனையும் உணர்வுப்பூர்வமாக அனுகுகின்றனர். ஆதாரங்களை அதிகமாக எதிர்பார்ப்பதில்லை. இது பொதுவான இயற்கை குணம். வளர்ப்பு முறை, வாழ்க்கை முறையினால் இதில் மாற்றங்கள் ஏற்படலாம்.  (Source: article of Amber Hensley, MasterofHealthcare)

 

v ஆடியன்ஸ் இன்ட்ராக்ஷன்..

ஆடியன்ஸ் இன்ட்ராக்ஷனுடன் ஒரு பாயன் இருந்தால் கண்டிப்பாக அது நல்லது தான். நாம் செய்யும் பயான் ஒருபக்க கருத்தாக இல்லாமல், மக்களோடு உரையாடி மக்களின் கவனத்தை நம்பக்கம் திருப்பி, நம் கருத்தை தெரிவிப்பதே ஆடியன்ஸ் இன்ட்ராக்ஸன் எனப்படும்.

நபி(ஸல்) அவர்களின், பெரும்பாலான உபதேசங்களில் ஆடியன்ஸ் இன்ட்ராக்ஷனை பார்க்கமுடியும். ”திவாலாகிப்போவனை தெரியுமா?”, ”மனிதர்களுக்கு அல்லாஹ் செய்யவேண்டிய கடமை என்ன தெரியுமா?” என்பதுபோல எதாவது கேட்டுகேட்டு உபதேசம் செய்வார்கள். நம்முடைய பயான்களிலும், இந்த முறையை செயல்படுத்தலாம். ஜும்மா அல்லாத உரைகளில், ஒரு தலைப்பை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, அது தொடர்பான எதாவது கேள்வியை, முன்னால் அமர்ந்திருக்கும் மக்களிடம் கேட்டு, பின்னர் தொடர்ந்து பேசுவது.

உதாரணமாக) பித்அத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, ”இந்த பகுதியில பூரியான் பாத்தியா இருக்கா?”, ”கத்னா செய்தவங்கள கழுதையில கூட்டிகிட்டு போற பழக்கம் இருக்கா?” என்பது போன்று எதாவது கேட்டு மக்களை பதில் சொல்லவைத்து, பிறகு தொடர்ந்து பேசுவது. இவ்வாறு செய்வதன் மூலம், பயான் கேட்கும் மக்களை, அந்த பயானில் ஈடுபடுத்த முடியும்.

அதுபோல, நரகத்தின் கடுமையை பற்றி பேசும் போது, ”இதில் ஒருவராக நாம் ஆகிவிடக்கூடாது என்று அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்” என்றோ, சுவனத்தின் இன்பங்களை பற்றி பேசும் போது, ”அந்த உயர்ந்த சொர்க்கத்துல இங்கு உள்ள அனைவரும் நுழையனும்” என்பது போன்றோ, முன்னால் அமர்ந்திருக்கும் மக்களை தொடர்புபடுத்தி பேசுவதும் மக்களை அந்த உரையோடு ஒன்றிணையச்செய்யும். இவைவெல்லாம் ரசிக்கத்தகுந்த பேச்சுக்கள். நினைவில் வையுங்கள்.

 

Ì இம்சையை கொடுக்காதீர்கள்.

ஆடியன்ஸ் இன்ட்ராக்ஷன் என்பது அளவோடு இருக்கவேண்டும். கண்டிப்பாக பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கக்கூடாது. அதுபோல, ”இப்ப எல்லாரும் குர்ஆனை எடுங்க. நான் சொல்ற இந்த வசனம் குர்ஆன்-ல இருக்கானு பாருங்க” என்று இம்சை தரக்கூடாது.

”காலைல பஜ்ர் தொழுகிறவங்கல்லொம் கைதூக்குங்க. தினமும் குர்ஆன் ஓதுறவங்கெல்லாம் தலையை ஆட்டுங்க. எல்லாரும் நேரா உக்காருங்க. சுவத்துல சாயாதிங்க” என்பது போல இம்சை தரும் செயல்பாடுகளை ஒருபோதும் செய்யாதீர்கள்.

 

Ì மக்கள் தான் மாடுகள் அல்ல.

சமீபத்தில் ஒரு உரையை கேட்டேன். உரை நிகழ்த்துபவர் ”என்ன புரியுதா? இல்ல. தலையை மட்டும் ஆட்டிகிட்டு இருக்கிங்களா?” என்று இடையிடையே கேட்டுக்கொண்டே இருக்கிறார். புதியவர்கள் இவ்வாறு செய்வதில்லை. பெரும்பாலும் மெத்தப்படித்த ஒருசிலர் தான் இதுபோன்று நடக்கிறார்கள். நீங்கள் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் சரி, மக்களிடத்தில் பேசும் போது, அவர்களுக்குறிய கண்ணியத்தை கொடுத்துத்தான் பேசவேண்டும்.

 

Ì மக்களை கைதூக்கச் சொல்லலாமா?

கைதூக்கச் சொல்வதை பொறுத்தவரையில், பாடம் நடத்துவது போன்ற சபைகளிலும், நிர்வாகிகள் மட்டும் அமர்ந்திருக்கும் சபைகளிலும், தர்பியா போன்ற இடங்களிலும் இவ்வாறு செய்யலாம். அவர்கள் ஒரிரு தடவை கைதூக்குவதை சிரமமாக கருதமாட்டார்கள்.

முதியவர்கள் உட்பட பலரும் அமர்ந்திருக்கும் பொதுமக்கள் சபைகளில் கைதூக்கச்சொல்வதை முடிந்தஅளவு தவிர்த்துக் கொள்ளுங்கள். அதை சிரமமாக கருதுவார்கள். எப்போதாவது ஒருதடவை, மக்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், ”சொர்க்கத்துல நபியின் அருகில் இருக்க விரும்புவது யாரு?” என்பது போன்று எல்லோரும் கைதூக்கும் விதத்தில் கைதூக்கச் சொன்னால் கூட பிரச்சனையில்லை. மக்களின் குறைகளை வெளிப்படுத்தும் விதத்தில் கைதூக்கச்சொல்வது பொதுமக்கள் சபையில் ஒருபோதும் கூடாது.

 

v மக்களின் முகக்குறிகளை கவனித்து உரை நிகழ்த்துங்கள்

மக்களின் முகக்குறிகளை கவனித்து உரை நிகழ்த்த வேண்டியது, ஒரு பிரச்சாளரின் மிகமுக்கிய கடமை. நாம் சொல்லும் செய்தி கவனிக்கும்படி உள்ளதா? சொதப்பலாக உள்ளதா? என்பதை மக்களின் முகத்தை வைத்தே ஓரளவு கணிக்கமுடியும். ஒரிருவர் தூங்குவதைப் பற்றியோ, நம் முகத்தை கவனிக்காமல் தரையை பார்த்துக்கொண்டிருப்பதைப் பற்றியோ பெரிதாக கலைப்படவேண்டாம். ஆனால், 80 சதவீத மக்கள் அப்படி இருந்தால், எதாவது சுவையான சம்பவத்தை சொல்லி மக்களின் கவனத்தை ஈர்க்கவேண்டும், முடியாவிட்டால், நம் பேச்சை சுருக்கமாக முடித்துக்கொள்வதுதான் சரி.

 

ஒருசில பேச்சாளர்கள், தூங்கிவழியும் மக்களைப் பார்த்து டென்ஷனாகி எதாவது பேசிவிடுகிறார்கள். இது தவறு. தூங்குபவரைப் பார்க்காதீர்கள், யார் நம்மை உற்று கவனிக்கிறார்களோ, தலையை ஆட்டுகிறார்களோ, அங்கீகார சிரிப்பு சிரிக்கிறார்களோ அவர்களை மட்டும் பாருங்கள். அது தான் உங்களின் உற்சாகத்தை அதிகப்படுத்தும்.
Ì சமீபத்தில் ஒரு பெண்கள் பயானுக்கு சென்றிருந்தேன். ஒருமணி நேர உரை அது. மக்களைப் பார்த்தால், காடுகளுக்கு சென்று மரம் வெட்டிவிட்டு வந்தவர்களைப் போல சோர்வாக அமர்ந்திருந்தார்கள். மக்களின் கவனத்தை ஈர்க்க நகைச்சுவைகளை சொல்லிப்பார்த்தேன். ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை. நான் மிகப்பெரும் யுக்தியாக பயன்படுத்தும், உணர்வுப்பூர்வமான செய்திகளையும் பயன்படுத்தினேன். எந்த பெரிய மாற்றமும் இல்லை. ஒரு மணி நேர உரையை, 25 நிமிடத்தில் முடித்துக்கொண்டு, ”இது கேள்விபதில் நேரம். சந்தேகங்களை கேளுங்கள்” என்று சொன்னதுதான் தாமதம், கேள்விகள் வரிசையாக வந்தன.

மக்களின் நிலையை கருத்தில் கொண்டு நகைச்சுவை தொனியில் ஆடியன்ஸ் இன்ட்ராக்ஷனுடன் பதில்களை சொன்னதும், மக்கள் படுஉற்சாகமாகி விட்டார்கள். பயானில் சொல்லாமல் விட்ட செய்திகளை, கேள்விக்கு பதில் சொல்லும் சாக்கில் சொல்லி முடித்து, திருப்தியோடு திரும்பினேன். நினைவிருக்கட்டும். கேள்வி பதில் நிகழ்ச்சி மக்களை உற்சாகப்படுத்தக் கூடியது. தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Ì உற்சாகப்படுத்துவதற்காக ஆரம்பத்தில் கேள்வி கேட்பது:  மக்களின் அருகில் அமர்ந்தும் பேசும் நேரங்களில், சில பேச்சாளர்கள், எதாவது ஒரிரு கேள்விகளை கேட்டு மக்களை உற்சாகப்படுத்திவிட்டு, பிறகு பேச்சை ஆரம்பிப்பார்கள். இதுவும் மக்களை விழிப்படையச் செய்யும் நல்லமுறையாகும். கடமைக்கு வந்து, மைக்கை பிடித்து ரோபோ போல ஒருமணி பேசிவிட்டுச் செல்வதைவிட, இதுபோன்ற புறச்செயல்களின் மூலம் மக்கள் விரும்பும் வகையில் மார்க்கத்தை சொல்வது தான் சிறந்தது.

 

v மக்களின் சூழ்நிலைகளையும் கவனியுங்கள்

பயானை கேட்டுக்கொண்டிருக்கும் மக்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்படுவது தெரிந்தால் உடனே உரை நிகழ்த்துவதை ஒரிரு நிமிடம் நிறுத்திக்கொள்ளுங்கள். பல பொதுக்கூட்டங்களில் மக்களுக்கு நடுவே பாம்பு நுழைந்த போதும், இடைவிடாது உரைநிகழ்த்தி, பின்னர் சங்கடப்பட்ட நிகழ்வுகள் உண்டு.

எனவே, தீடீரென கடும் மழை பெய்ய ஆரம்பித்தாலோ, கூட்டத்தினூடே யாரேனும் விஷமி நுழைந்து பிடிபட்டாலோ, பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் நுழைந்தாலோ, குழந்தை காணாமல் போய் அதன் பெற்றோர்கள் அழுது கொண்டிருந்தாலோ, இதுபோன்ற சூழ்நிலைகளில் உரையை ஒரு நிமிடம் நிறுத்தி, பிரச்சனையை சரிசெய்யுமாறு நிர்வாகிகள் கட்டளை பிறப்பித்த பின்னர், மக்களிடம் ”நிலைமை சரியாகிவிட்டது, அமருங்கள்” என்று சொல்லி நிதானமாக பயானை தொடருங்கள்.

இப்னு அப்பாஸ் அவர்களின் அறிவுரை கவனிக்கத்தக்கது, அவர் கூறுகிறார், ”மக்கள் (முக்கியமான) எதையோ பேசிக் கொண்டிருக்கும்போது நீங்கள் அவர்களிடம் சென்று உரையாற்ற, அதையடுத்து அவர்களின் பேச்சு தடைபட்டுவிட, அதனால் அவர்களை நீங்கள் சோர்வடையச் செய்கிற நிலையில் உங்களை நான் காணக் கூடாது. மாறாக, (அப்போது) நீங்கள் மௌனமாக இருங்கள். அவர்களாக விரும்பி உங்களைக் கேட்டுக் கொண்டால் அவர்களுக்கு உரையாற்றுங்கள். (புகாரி: 6337)

எனவே, மக்களின் சூழ்நிலையை பொருட்படுத்தாமல் பேசினால், நாமாக நாற்காலியிடத்தில் பேசிக் கொண்டிருக்கவேண்டியது தான். மக்கள் தங்களது பிரச்சனையின் பக்கம் கவனத்தை திருப்பிக்கொண்டு போய்விடுவார்கள். நாம் பேசிய பேச்சுக்கு மதிப்பு கிடைக்காதது ஒருபக்கம், பேசி முடித்த பிறகு நமது ”கடமை உணர்ச்சி!”-யை ஒவ்வொருவரும் பாராட்ட(?) ஆரம்பித்து விடுவார்கள். எனவே கவனமாக இருங்கள்.

இதல்லாமல், பொதுக்கூட்டங்களில் பேசும்போது, மக்கள் அமருவதற்கு நாற்காலி பற்றவில்லை, தண்ணீர் பற்றவில்லை என்பது போன்ற சின்னச்சின்ன பிரச்சனைகளுக்காகவெல்லாம் உரையை நிறுத்தவேண்டிய அவசியம் இல்லை.
v நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்கள்

கடந்த காலங்களில் ஒரேஒரு ஹதீஸை தேடிஎடுப்பதற்கு, அந்த கிதாபுகள் உள்ள மதரஸாவை தேடிக்கண்டுபிடித்து, அங்கு சென்று பலநாட்கள் அந்த ஹதீஸை தேடி எடுக்கவேண்டியிருக்கும். இன்றைக்கு இணையதளம் மற்றும் சாஃப்ட்வேர்கள் மூலம் எந்த ஹதீஸ்களையும் ஒருசில நொடிகளில் தேடிஎடுக்க முடியும். அதற்கு கீழ்காணும் சாஃப்ட்வேர்கள் பயனுள்ளவை. உங்கள் கனினியில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துங்கள்.

  • குத்புத் திஸ்ஆ.
  • மக்தபத்து ஷாமிலா.
  • ஆலிம் ஆங்கில சாஃப்ட்வேர்,
  • “இஸ்லாம்பிரவுஸர் 2.4“ – தமிழ் குர்ஆன்-ஹதீஸ் சாஃப்ட்வேர்.
  • இணையத்தில் sunnah.com, http://www.imaanstar.com/hadith.php,
  • http://www.searchtruth.com/hadith_books.php, www.tamililquran.com

 

மேற்கண்டதில், நான் வெளியிட்டுள்ள “இஸ்லாம்பிரவுஸர்“ என்ற தமிழ் குர்ஆன் ஹதீஸ் சாஃப்ட்வேரை பயன்படுத்தும் விதம் இந்தநூலின் இறுதியில் விளக்கப்பட்டுள்ளது. கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்துபவர்கள், இந்த மென்பொருள் நிறுவப்பட்ட லேப்டாப்பை முன்னால் வைத்துக்கொள்ளுங்கள். மக்கள் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும் இடைவெளியில் அதற்குரிய ஆதாரத்தை ஹதீஸ் எண்ணோடு தேடி எடுக்க முடியும். தேடுவதற்கு அதிகபட்சம் 4 நொடிகள் போதுமானது. தேடிஎடுக்கப்பட்ட ஹதீஸ்களை பெரிய திரையில் மக்களுக்கு காண்பிக்வும் முடியும். இதுபோன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்கள்.

இன்றைக்கு, கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட எந்த பொருளும் எளிதில் தினசரி வாடகைக்கு கிடைக்கிறது. லேப்டாப்க்கு 300 ரூபாயும், 40 இன்ஞ் LCD மானிட்டர் டிவிக்கு 1500 ரூபாயும் வாங்குகின்றனர். முயற்சி செய்துபாருங்கள்.

சாஃப்ட்வேரை ரெஃபரன்ஸுக்காகவும், ஹதீஸ் எண்களை உடனுக்குடன் எடுப்பதற்காகவும், ஆதாரங்களை திரையில் காண்பிப்பதற்காகவும் மட்டுமே பயன்படுத்தவேண்டும். தெரியாத கேள்விக்குரிய பதிலை அவசரஅவசரமாக தேடிஎடுத்து பதில் சொல்வதற்கோ, சம்பவங்களை படித்துபடித்து சொல்வதற்கோ சாஃப்ட்வேரை பயன்படுத்தக்கூடாது. எல்லா சம்பவங்களையும், ஆதாரங்களையும் நினைவில் வைப்பது தான் சரியானது.

v நேரம் தாண்டாதீர்கள்.

8 மணிக்கு பேசி முடிக்கவேண்டும் என்றால், ஒருபோதும் அதற்கு மேல் பேசாதீர்கள், 15 நிமிடம் முன்னதாகவே பேசிமுடித்துவிடவும் செய்யாதீர்கள். 5 நிமிடம், அதிகபட்சம் 10 நிமிடம் முன்னதாக முடிப்பது பிரச்சனையல்ல. ஜும்மா உரை 45 நிமிடங்கள் என்றால், மழை வரும் என்ற நிலை இருந்தாலோ, கடுமையான வெயில் நேரத்தில் மக்கள் அவதிப்படுவது தெரிந்தாலோ, 5 அல்லது 10 நிமிடம் முன்னதாக முடிப்பது தவறல்ல. இதுபோன்ற இன்னல்கள் உள்ள நேரத்தில் கண்டிப்பாக ஒருநிமிடம் கூட அதிகப்படுத்தாதீர்கள். மார்க்கத்தின் மீது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்திவிடக் செய்யக்கூடாது.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَادَةَ أَخْبَرَنَا يَزِيدُ أَخْبَرَنَا سَلِيمٌ حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ حَدَّثَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ كَانَ يُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ يَأْتِي قَوْمَهُ فَيُصَلِّي بِهِمْ الصَّلَاةَ فَقَرَأَ بِهِمْ الْبَقَرَةَ قَالَ فَتَجَوَّزَ رَجُلٌ فَصَلَّى صَلَاةً خَفِيفَةً فَبَلَغَ ذَلِكَ مُعَاذًا فَقَالَ إِنَّهُ مُنَافِقٌ فَبَلَغَ ذَلِكَ الرَّجُلَ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّا قَوْمٌ نَعْمَلُ بِأَيْدِينَا وَنَسْقِي بِنَوَاضِحِنَا وَإِنَّ مُعَاذًا صَلَّى بِنَا الْبَارِحَةَ فَقَرَأَ الْبَقَرَةَ فَتَجَوَّزْتُ فَزَعَمَ أَنِّي مُنَافِقٌ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا مُعَاذُ أَفَتَّانٌ أَنْتَ ثَلَاثًا اقْرَأْ وَالشَّمْسِ وَضُحَاهَا وَسَبِّحْ اسْمَ رَبِّكَ الْأَعْلَى وَنَحْوَهَا

பனூ சலமா கூட்டத்தாருக்கு நீண்ட நேரம் தொழுகை நடத்தி மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்திய முஆத்(ரலி) அவர்களைப் பார்த்து நபிகள் நாயகம் ”முஆதே நீர் குழப்பவாதியா?” என்று மூன்று முறை கோபமாக கேட்டார்கள். (புகாரி: 6106). எனவே ஒருபோதும் நிர்ணயித்த நேரம் தாண்டாதீர்கள்.

குறிப்பாக மேடைப்பேச்சில், பிறபேச்சாளர்களின் நேரத்தை திருடிப் பேசுவது ஏற்கமுடியாத செயல். ”ப்ளீஸ். இன்னும் அஞ்சு நிமிசத்துல முடிச்சுடுறேன்” என்று அடம்பிடிப்பது நாகரீகமல்ல. இன்னும் ஜந்து நிமிடம் இருந்தால் தான் செய்திகளை சரியாக இணைத்து முடிக்கமுடியும் என்று சொல்வதும் ஏற்கத்தக்கது அல்ல. கொடுக்கப்பட்ட நேரத்தில் அதை செய்யவேண்டியது ஒரு பேச்சாளரின் பொறுப்பு.

குறிப்பாக ஜும்மா தினத்தன்று ஆர்வமிகுதியால் உரையை நீட்டிவிடாதீர்கள். கட்டாயக் கடமையான ஜும்மாவை மக்கள் வெறுக்கும் நிலையை ஏற்படுத்துவது மிகப்பெரும் தவறு. ஜாபிர் பின் ஸமுரா(ரலி அவர்கள், நபியின் ஜும்மா உரையைப் பற்றி அறிவிக்கிறார்கள். ”வெள்ளிக்கிழமை தினத்தில் நபி(ஸல்) அவர்கள் தனது உரையை நீளமாக்காதவர்களாக இருந்தார்கள். சாதாரண வார்த்தைகளைக் (கொண்டதாகவே) அவர்களது உரை அமையப்பெற்றிருந்தது” (அபூதாவூத்: 1107)

Ì பேசுவதற்கு செய்திகள் இல்லையென்றால் என்ன செய்வது?

நேரம் தாண்டுவது ஒருபுறம் இருக்க, கொண்டுவந்த குறிப்புகளையெல்லாம் கடகடவென சீக்கிரமே சொல்லி முடித்துவிட்டு, மீதி நேரத்தில் எதைப்பேசுவது என்று தெரியாமல் முழிப்பதும் பலநேரங்களில் நடக்கும் ஒரு பிரச்சனை. அவ்வாறு கடகடவென பேசாமலிருக்க இருக்க என்னசெய்யவேண்டும் என்பதை ”புதியவர்களுக்கான சில அறிவுரைகள்” என்ற தலைப்பில் பார்த்தோம்.

ஒருவேளை நிர்ணயித்த நேரத்திற்கு வெகுமுன்னதாகவே குறிப்புகள் முடிந்துவிட்டால், அதை சமாளிக்கவும் ஒரு வழி இருக்கிறது. அது தான் ஃபில்அப். (Fill up – நிரப்புதல்). அதாவது மீதி நேரத்திற்கு, பொதுவான அறிவுரைகளை பேசி நிரப்புங்கள். வேறு வழியில்லை.

அதே சமயம், நீங்கள் ஓட்டுகிறீர்கள் என்று மக்கள் வெறுப்படையும் வகையில் பேசிவிடாதீர்கள். அப்படி பேசுவதற்கு பதில், நீங்கள் முன்னதாகவே முடித்துவிடலாம். இதுவரை பேசிய செய்திகளுக்காவது மதிப்பிருக்கும். எனவே ஃபில்அப் செய்வதற்கு கீழ்காணும் அறிவுரைகளை மனதில் வைய்யுங்கள்.

தர்மம், அமல்களில் கவனம், இறையச்சம், சஹாபிகள் வரலாறு, நாட்டு நடப்புகள் போன்ற இருபது, முப்பது செய்திகளை நினைவில் வைத்து, அவற்றை பயன்படுத்துங்கள். அவற்றை பயன்படுத்தும் போது, முன்னர் பேசிய தலைப்போடு தொடர்புபடுத்தி, தொடர்புபடுத்தி பேசுங்கள். இதுதவிர, நாட்டு நடப்பை பற்றி பேசினாலே பத்து நிமிடம் தாராளமாக கடந்துவிடும். நினைவில் வைய்யுங்கள்.

அந்த மூன்று நபர்கள், நான்கு நபர்கள், என்ற ரீதியில் அமைந்த பொதுவான ஹதீஸ்களை நினைவில் வைத்து, இது போன்ற நேரத்தில் பயன்படுத்தினால், அரைமணி நேரம் என்ன, 2 மணி நேரத்திற்கு கூட பேசலாம். ஏனென்றால் மூன்று நபர் ஹதீஸில் வரும் மூன்று நபர்களையும் விவரிக்க அதிக நேரம் தேவைப்படும்.

Ì  ஃபில்அப் செய்யும் நிர்பந்தம் ஏற்பட்டால் எப்படி பேசவேண்டும் என்பதைத்தான் முன்னர் குறிப்பிட்டோம். எனினும் ஃபில்அப் செய்யும் நிலைஏற்படாத வகையில் பேசுவது தான் சரியானது. தலைப்பிற்கு பொருத்தமான ஹதீஸ்கள், சம்பவங்கள், கருத்துக்களை அதிகப்படியாகவே வைத்துக் கொள்ளவேண்டும். ஒருசில மறந்தாலும், நினைவில் உள்ள மீதியை வைத்து குறிப்பிட்ட நேரம் வரை பேசமுடியும். என்பது அனுபமுள்ளவர்களின் அறிவுரை.

பொதுவாகவே, வெறும் நாலு செய்திகளை மட்டுமே தெரிந்து வைத்துக்கொண்டு அந்த நான்கை மட்டும் பயன்படுத்தி, குறிப்புகள் முடிந்துவிடுமோ என்ற அச்சத்தோடு நிகழ்த்தும் உரையை விட, அதிகமாக அறிந்து வைத்துக்கொண்டு தேவையானதை மட்டும் பேசும் போது, பேச்சு தன்னம்பிக்கை நிறைந்ததாகவும் தடங்களின்றியும், சுவையாகவும் இருக்கும்.