ஈமானின் சுவை

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

முன்னுரை

ஈமானை சுவைப்பது என்றால் அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித்தந்த வழிமுறைப்படி தன் வாழ்க்கையை அமைத்து கொள்வதாகும். ஒரு போதும், தன சுய விருப்பத்தை திணிக்காமல் இறைவனை அஞ்சி கொள்ளுதல் வேண்டும். நபித்தோழர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நேசித்த முறையைப் பற்றி பின் வரும் செய்திகளில் பார்ப்போம்.

ஈமானை சுவைத்துவிட்டவர்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஈமானைப் பற்றி அழகிய முறையில் சொல்லிக் காட்டுகிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்து விட்டனவோ அவர் இறை நம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை:) 1. அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்ற அனைத்தையும் விட அதிக நேசத்திற்குரியோராவது. 2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது. 3. இறை மறுப்பிலிருந்து அல்லாஹ் தம்மை விடுவித்த பின், அந்த இறை மறுப்பிற்கே திரும்பிச் செல்வதை ஒருவர் நெருப்பில் வீசப்படுவதைப் போன்று வெறுப்பது.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),(புகாரி: 21)

”உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன் பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்” என்று கூறுவீராக!(அல்குர்ஆன்: 9:24)➚

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.(அல்குர்ஆன்: 33:36)➚

அல்லாஹ்வுக்காக நேசித்தல்

”செயல்களில் நஷ்டம் அடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்பீராக! இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர். அவர்களே தமது இறைவனின் சான்றுகளையும், அவனது சந்திப்பையும் மறுத்தவர்கள். அவர்களின் நல்லறங்கள் அழிந்து விட்டன. எனவே கியாமத் நாளில் அவர்(களின் செயல்)களுக்கு எந்த எடையையும் ஏற்படுத்த மாட்டோம். அவர்கள் (என்னை) மறுத்ததற்கும், எனது வசனங்களையும், தூதர்களையும் கேலியாக ஆக்கியதற்கும் இந்த நரகமே உரிய தண்டனை.
(அல்குர்ஆன்: 18:103-106)➚

நபி (ஸல்) அவர்களை நேசிப்பதென்பது, ஒருவர் உலகிலுள்ள அனைத்தையும் விட, தனது உயிரை விட நபியவர்களை மேலாக நினைத்து, தனது விருப்பு, வெறுப்பு எல்லாவற்றையும் நபி (ஸல்) அவர்களின் சொல்லின் அடிப்படையில் ஏற்படுத்திக் கொள்வதாகும். இதை நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாத வரை அவர் (உண்மையான) இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆக மாட்டார்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),(புகாரி: 15)

நபித்தோழர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசித்த விதம்

நான் அபூ தல்ஹா(ரலி) அவர்கள் வீட்டில் மக்களுக்கு மது பரிமாறுபவனாக இருந்தேன். அந்த நாட்களில் பேரீச்சம் பழ மதுவை அவர்கள் குடித்து வந்தனர். (மதுவைத் தடை செய்யும் வசனம் அருளப்பட்டவுடன்), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவரை அழைத்து, ”(மக்களே!) மது தடை செய்யப்பட்டுவிட்டது” என அறிவிக்குமாறு கட்டளை இட்டார்கள். அபூ தல்ஹா (ரலி) என்னிடம், ”வெளியே சென்று இதை ஊற்றி விடு” என்று கூறினார்கள். நான் வெளியே சென்று அதை (சாலையில்) ஊற்றி விட்டேன். மதீனா நகரின் தெருக்களில் அது ஓடியது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),(புகாரி: 2464)

நாங்கள் கைபருக்கு வந்து கைபர் வாசிகளை முற்றுகையிட்டோம். அப்போது எங்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. அதன் பிறகு (யூதர்களான) அவர்களுக்கு எதிராக அல்லாஹ் (எங்களுக்கு) வெற்றி அளித்தான். அவர்கள் வெற்றி கொள்ளப்பட்ட அன்றைய மாலை நேரத்தில் (மக்கள்) அதிகமாக நெருப்பு மூட்டினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”இது என்ன நெருப்பு? எதற்காக (இதை) மூட்டியிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.

”இறைச்சி சமைப்பதற்காக!” என்று மக்கள் பதிலளித்தனர். ”எந்த இறைச்சி?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ”நாட்டுக் கழுதைகளின் இறைச்சி” என்று மக்கள் கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”அவற்றைக் கொட்டிவிட்டு அந்தப் பாத்திரங்களை உடைத்து விடுங்கள்” என்று கூறினார்கள். அப்போது ஒருவர், ”இறைச்சிகளைக் கொட்டிவிட்டு அதன் பாத்திரங்களை நாங்கள் கழுவி (வைத்து)க் கொள்ளலாமா?” என்று கேட்டார். அப்படியே ஆகட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸலமா பின் அக்வஃ,(புகாரி: 6148)

என் தந்தை அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள், ”அல்லாஹ்வின் மீதாணையாக! என் மகள் ஆயிஷா குறித்து அவதூறு கூறிய பின்பு ஒரு போதும் மிஸ்தஹுக்காக நான் சிறிதும் செலவிட மாட்டேன்” என்று சத்தியமிட்டுக் கூறினார்கள். மிஸ்தஹ் பின் உஸாஸா, தமது உறவினர் என்பதாலும் அவர் ஏழை என்பதாலும் அவருக்காக அபூபக்கர் (ரலி) அவர்கள் செலவிட்டு வந்தார்கள்.

அப்போது அல்லாஹ், ”உங்களில் செல்வம் மற்றும் தயாள குணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கோ, ஏழைகளுக்கோ, அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் தங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அவர்கள் அதனை மன்னித்து (பிழைகளைப்) பொருட்படுத்தாமல் விட்டு விடட்டும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனும், கிருபையுடையோனுமாக இருக்கிறான்” என்ற (24:22) வசனத்தை இறக்கினான்.

அபூபக்கர் (ரலி) அவர்கள், ”ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்” என்று கூறிவிட்டு,
மிஸ்தஹுக்கு ஏற்கனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். ”அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்குச் செய்யும் இந்த உதவியை நான் ஒரு போதும் நிறுத்த மாட்டேன்” என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),(புகாரி: 2661)

நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றை அப்படியே பின்பற்றுபவர்களாக நாம் ஆக வேண்டும். நெடுங்காலமாக செய்து வரும் செயல், அச்செயல் அல்லாஹ்விற்கும், அவனது தூதருக்கு மாற்றமாக இருப்பின், அதனை நன்கு விளங்கியப்பின் ஒரு போதும் தொடராமல் விட்டுவிடுதல் வேண்டும். அப்போதுதான் நாம் ஈமானை சுவைத்தவர்களாக ஆக முடியும்.