4) இஸ்லாம் காட்டும் எளிய திருமணம்

நூல்கள்: இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

இஸ்லாம் காட்டும் எளிய திருமணம்

வீட்டைக் கட்டிப் பார்! கல்யாணத்தை நடத்திப் பார்! என்று கூறும் அளவுக்குத் திருமணம் என்பது மிகவும் சிரமமான காரியமாக ஆக்கப்பட்டு விட்டது. ஒருவன் திருமணம் முடிக்க வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பணம் இருந்தால் தான் திருமணம் முடிக்க முடியும் என்ற நிலை சமுதாயத்தில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இஸ்லாம் மார்க்கம் திருமணத்தை மிகவும் எளிமையாக ஆக்கி வைத்துள்ளது.

அப்பெண்கள் உங்களிடமிருந்து கடுமையான உடன்படிக்கை செய்துள்ளனர். (அல்குர்ஆன்: 4:21)

திருமணம் என்றால் லட்சக் கணக்கில் செலவு செய்து நடத்த வேண்டிய ஒரு நிகழ்ச்சி அல்ல; அது ஒரு வாழ்க்கை ஒப்பந்தம் தான் என்று இந்த வசனம் தெளிவாக்குகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இதை வலியுறுத்தி உள்ளார்கள்.

“குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரகத் (இறைவனின் மறைமுகமான பேரருள்) நிறைந்தது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(அஹ்மத்: 23388)

நபி (ஸல்) அவர்களது காலத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தைப் பாருங்கள்.

ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்து கொள்ள) வந்துள்ளேன்” என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்து விட்டு பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள். பிறகு, தமது தலையைத் தொங்க விட்டுக் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் விஷயத்தில் எந்த முடிவையும் செய்யவில்லை என்பதைக் கண்ட அந்தப் பெண் (அந்த இடத்திலேயே) அமர்ந்து கொண்டார். அப்போது நபித் தோழர்களில் ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு அவர் தேவையில்லையென்றால் அவரை எனக்கு மணமுடித்து வையுங்கள்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “(மஹ்ராகச் செலுத்த) உம்மிடம் ஏதேனும் பொருள் உண்டா?” என்று கேட்டார்கள். அதற்கவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஏதுமில்லை, அல்லாஹ்வின் தூதரே!” என்றார். நபி (ஸல்) அவர்கள், “உம் குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா என்று பார்!” என்றார்கள். அவரும் போய் பார்த்து விட்டுத் திரும்பி வந்து “அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை, அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார். “இரும்பாலான ஒரு மோதிரமாவது கிடைக்குமா என்று பார்!” என நபி (ஸல்) அவர்கள் சொல்லி அனுப்பினார்கள். அவர் மீண்டும் சென்று விட்டுத் திரும்பி வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இரும்பாலான மோதிரம் கூடக் கிடைக்கவில்லை. ஆனால் இதோ இந்த எனது வேட்டி உள்ளது” என்று சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்த வேட்டியை நீர் அணிந்து கொண்டால் அவள் மீது ஏதும் இருக்காது. அவள் அணிந்து கொண்டால் உம்மீது ஏதும் இருக்காது” என்று கூறினார்கள். பிறகு அந்த மனிதர் நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்து கொண்டார். பிறகு அவர் எழுந்தார். அவர் திரும்பிச் செல்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்த போது அவரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார்கள். அவர் வரவழைக்கப்பட்ட போது, “உம்முடன் குர்ஆனில் என்ன (அத்தியாயங்கள் மனப்பாடமாக) உள்ளது?” என்று கேட்டார்கள். அவர், “இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம் என்னுடன் உள்ளன” என்று எண்ணி எண்ணிச் சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “அவற்றை நீர் மனப்பாடமாக ஓதுவீரா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம் (ஓதுவேன்)” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “உம்முடன் உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண்ணை உமக்குத் திருமணம் முடித்துக் கொடுத்தேன். நீர் செல்லலாம்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)

(புகாரி: 5030)

இந்த அளவுக்குத் திருமணத்தை மிகவும் எளிமையாக ஆக்கி வைத்துள்ள இந்த மார்க்கத்தில் இன்று வரதட்சணை, ஆடம்பர விருந்துகள் போன்ற காரணங்களால் திருமணம் என்றாலே லட்சக் கணக்கில் பணம் வேண்டும் என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள்.

இன்னிசைக் கச்சேரிகள், வாண வேடிக்கைகள், வண்ண வண்ண அலங்காரக் கார்கள், ஊரை வளைத்துப் போடப்பட்ட பந்தல்கள் என்று ஆடம்பரத் திருமணத்தின் பட்டியல்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.

அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் மதீனவுக்கு வந்த போது, அவர்களையும் ஸஅது பின் ரபீஉ (ரலி) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅது (ரலி) வசதி படைத்தவர்களாக இருந்தார். அவர், அப்துர்ரஹ்மான் (ரலி)யிடம், “எனது செல்வத்தைச் சரிபாதியாகப் பிரித்துத் தருகிறேன். (என் மனைவியரில் ஒருத்தியை விவாகரத்துச் செய்து) உமக்கு மணம் முடித்துத் தருகின்றேன்” என்று கூறினார். அதற்கு அப்துர்ரஹ்மான் (ரலி), “உமது குடும்பத்திலும் செல்வத்திலும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக! எனக்குக் கடைவீதியைக் காட்டுங்கள்” என்று கூறினார். அவர் பாலாடைக் கட்டியையும் நெய்யையும் இலாபமாகப் பெற்று அவர் தங்கியிருந்த வீட்டாரிடம் கொண்டு வந்தார். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் கறையுடன் வந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “என்ன விசேஷம்?” என்று கேட்டார்கள். அதற்கவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு அன்சாரிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு என்ன மஹர் கொடுத்தீர்கள்?” என்று கேட்டார்கள். “ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்” என்று பதில் கூறினார். அதற்கு, “ஓர் ஆட்டையேனும் மணவிருந்தாக அளிப்பீராக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(புகாரி: 2048, 2049)

அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் என்ற இந்த நபித்தோழர் திருமணம் செய்து கொண்ட விபரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னர் தான் தெரிகின்றது என்றால் நபியவர்களின் காலத்தில் எந்த அளவுக்கு எளிமையான முறையில் திருமணங்கள் நடைபெற்றுள்ளன என்பதை அறிய முடியும்.

இந்த ஹதீஸில், திருமணத்தின் போது அதிகப்பட்சமாக மணமகன் ஒரு விருந்தை வழங்குவதற்கு நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள். இதுவும் அவரவர் சக்திக்கு ஏற்ப சாதாரண முறையில் தான் அமைய வேண்டுமே தவிர கடன் வாங்கி, லட்சக்கணக்கில் செலவு செய்து விருந்து வைப்பதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.

நபி (ஸல்) அவர்கள், (திருமணம் முடித்து வலீமா விருந்தளித்த போது) பிலால் (ரலி) அவர்களிடம் தோல் விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட அவ்வாறே அது விரிக்கப்பட்டது. பிறகு பேரீச்சம்பழம், பாலாடைக்கட்டி, நெய் போன்றவற்றை இட்டார்கள். (ஹைஸ் எனப்படும் எளிமையான உணவைத் தயாரித்து மக்களுக்கு விருந்தளித்தார்கள்)

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(புகாரி: 4213)

திருமணத்தில் விருந்து கொடுப்பது அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் நம்முடைய சக்திக்கு உட்பட்டுத் தான் வைக்க வேண்டும். கடன் வாங்கியோ அல்லது கையில் உள்ளதை விற்றோ வைக்கக் கூடாது. மேற்கண்ட ஹதீஸைப் பின்பற்றி நமது சக்திக்கு உட்பட்டு இருப்பதை வைத்து விருந்து கொடுத்துக் கொள்ளலாம்.

இது தான் இஸ்லாம் கூறும் எளிய திருமணமாகும். வரதட்சணை, ஆடம்பரங்கள், சீர் வரிசைகள், பெண் வீட்டு விருந்துகள் என மார்க்கத்திற்கு முரணான செயல்களின் மூலம் இஸ்லாம் காட்டித் தந்த எளிய திருமணத்தை, சிரமமான காரியமாக மாற்றியவர்கள் மறுமையில் இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும்.