இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் – 1

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

முன்னுரை

இஸ்லாத்தின் சிறப்புகளைக் கூறும், இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்ற தொடர் உரையில், நம்மை பங்கு பெறச் செய்த இறைவனுக்கே புகழனைத்தும் உரியது!

ஸலாத்தும், ஸலாமும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மீதும், சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக!

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்று அறிந்திருக்கிறோம்; இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்று அறிந்திருக்கிறோம். அது என்ன? இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம்? என்று கேட்கலாம்.

இன்று நாம் சுவாசிக்கின்ற காற்றில் கலந்திருக்கும் நைட்ரஜன், ஆக்ஸிஜன் போன்ற வாயுக்கள் அனைத்தையும் சரியான விகிதாச்சாரத்தில் அல்லாஹ் அமைத்திருக்கின்றான்.

அது போன்று நமது உடல் சீராக இயங்குவதற்கு உடலில் இவ்வளவு கொழுப்புச் சத்து இருக்க வேண்டும்; இவ்வளவு இனிப்புச் சத்து இருக்க வேண்டும் என எல்லாமே ஒரு சரியான கணக்கின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விகிதாச்சாரத்தைத் தாண்டினால் உடல் கடுமையான நோய்களுக்கு இலக்காகின்றது. இதைத் தான் இயற்கை வகுத்த விதி என்கிறார்கள். இஸ்லாத்தின் அடிப்படையில் இது இறைவன் வகுத்த விதியாகும்.

இப்படியொரு இயற்கை விதியை வகுத்த அந்த நாயன், அதற்கேற்ப மனித சமுதாயம் வாழ்வதற்காக அளித்த விதிகள் தான் திருக்குர்ஆன்.

மார்க்கச் சட்டங்கள், மார்க்க விதிகள் என்பவை, ஏற்கனவே இந்த உலகம் இயங்குவதற்காக அல்லாஹ் வகுத்திருக்கின்ற இயற்கை விதிகளுக்கு ஏற்ப அமைந்தவை தான் என்ற கருத்தை விளக்கவே இந்தத் தலைப்பு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.

உலகில் உள்ள அறிவியல் அறிஞர்கள் மட்டுமல்லாது நாத்திகர்கள் கூட ஒப்புக் கொள்ளும் விஷயம் அந்த இயற்கை விதிகள் தான். இயற்கை விதிகளை அனைவரும் நம்புகின்றார்கள்.

இவர்கள் நம்பும் அந்த இயற்கை விதிகளை வகுத்த அதே இறைவன் தான் இஸ்லாம் எனும் இந்த விதிகளையும் வகுத்திருக்கிறான் என்பதை உற்று நோக்கச் சொல்வது தான் இந்தத் தலைப்பின் நோக்கம்.

இதைத் தான் வல்ல அல்லாஹ்வும் தனது திருமறையில் கூறுகின்றான்.

 

فَاَقِمْ وَجْهَكَ لِلدِّيْنِ حَنِيْفًا ‌ؕ فِطْرَتَ اللّٰهِ الَّتِىْ فَطَرَ النَّاسَ عَلَيْهَا ‌ؕ لَا تَبْدِيْلَ لِخَـلْقِ اللّٰهِ‌ ؕ ذٰ لِكَ الدِّيْنُ الْقَيِّمُ ۙ  وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ ۙ

உண்மை வழியில் நின்று உமது முகத்தை இம்மார்க்கத்தை நோக்கி நிலைப்படுத்துவீராக! இது அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கம். இதன் மீதே மனிதர்களை அல்லாஹ் அமைத்துள்ளான். அல்லாஹ்வின் படைப்பில் எந்த மாற்றுதலும் இல்லை. இதுவே நேரான மார்க்கம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 30:30)

இந்த இயற்கை மார்க்கத்தில் ஓர் இனிய உலா சென்று வருவோம்.

 

கத்னா ஓரு காப்பரண்

எல்லாம் வல்ல அல்லாஹ், இஸ்லாத்தை ஓர் இயற்கை மார்க்கம் என்று கூறுகிறான்.

கோடை காலத்தில் வெயில்; மழைக் காலத்தில் மழை என்று இவ்வுலகில் மாறி மாறி வரும் பருவ காலம், மழை பெய்ததும் பூமியில் பச்சைப் பசேல் என்ற புற்பூண்டுகளின் விளைச்சல், உயிரினங்களின் இனப் பெருக்கம், கரையைத் தொட்டு ஆடி மகிழும் கடல் அலைகள், வீசுகின்ற காற்று போன்ற இந்த அமைப்புகளை, அருள்மிகு ஆக்கங்களை இயற்கை என்று நாம் கூறுகிறோம்.

இந்த இயற்கை அமைப்பில் உட்பட்டவன் தான் மனிதன். அவனுடைய உடலில் வளரும் தலை முடி, தாடி, மீசை மற்றும் இதர பகுதிகளில் வளரும் முடிகள், நகம் அனைத்துமே இயற்கைக்கு உட்பட்டது தான்.

மனித உடலில் அமைந்திருக்கும் இந்த இயற்கை அமைப்பைப் பராமரிப்பதும் ஓர் இயற்கையான அம்சம் தான். இதை உலகில் எந்த மார்க்கமும் மனிதனுக்குக் கற்றுக் கொடுக்கவில்லை. காரணம், அந்த மார்க்கங்கள் இயற்கையானவையல்ல!

இஸ்லாம் தான் இயற்கை மார்க்கம். அதனால் தான் இயற்கை நெறிகளைக் கற்றுக் கொடுக்கிறது.

“இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்த சேதனம் செய்து கொள்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களைந்து கொள்வதற்காக சவரக் கத்தியை உபயோகிப்பது, மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது ஆகியவை தாம் அவை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 5891)

 

ஹெச்.ஐ.வி. எய்ட்சும், இயற்கை கத்னாவும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய இயற்கையான இந்த ஐந்து அம்சங்களில் கத்னா எனும் விருத்த சேதனமும் ஒன்றாகும்.

இந்த கத்னா, இன்று எய்ட்ஸ் எனப்படும் ஹெச்.ஐ.வி. வைரஸை விட்டும் காக்கும் காப்பரணாகத் திகழ்கிறது.

22.07.07 அன்று பி.பி.சி. வெளியிட்ட செய்தி இதை தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ் தொடர்பாக உலகளவிலான மிகப் பெரிய மாநாடு விரைவில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் நடைபெறவுள்ளது. அதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஆண்களுக்குச் செய்யப்படும் கத்னா (விருத்த சேதனம்) 60 சதவிகித அளவுக்கு எய்ட்ஸ் வராமல் தடுக்கிறது என்ற கண்டுபிடிப்பு உறுதியானது தான் என்பதைக் கூறும் ஆய்வறிக்கை இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த ஆய்வறிக்கையை 5000க்கும் மேற்பட்ட குழுக்கள் பெற்றுக் கொள்கின்றன என்று பி.பி.சி.யின் செய்தி தெரிவிக்கிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் முஸ்லிம்களில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர் மிகக் குறைவு தான். ஆனால் முஸ்லிமல்லாதவர்கள் மிக அதிகமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விபரம் நீண்ட நாட்களாக அறியப்பட்ட உண்மையாகும்.

தென் ஆப்பிரிக்க ஆண்களில் 60 சதவிகிதம் பேரை ஹெச்.ஐ.வி. தொற்றும் அபாயத்திலிருந்து கத்னா காக்கின்றது என்று ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் கண்டுபிடிப்பை அண்மையில் கென்யாவிலும், உகாண்டாவிலும் சேகரித்த ஆதாரம் உறுதி செய்கின்றது.

இவ்வாறு கத்னா ஒரு காவல் அரணாக அமைந்திருப்பதை அறிய முடிகின்றது என்று தனது செய்தியில் பி.பி.சி. தெரிவிக்கிறது.

இந்தக் காவல் அரணுக்கு கத்னா தான் காரணமா? அல்லது அவர்கள் குறைந்த அளவிலான பெண்களிடம் உடலுறவு கொள்வது தான் காரணமா? என்று தெரியவில்லை என்றும் அந்தச் செய்தி குறிப்பிடுகின்றது.

அதாவது முஸ்லிம்களிடம் உள்ள விபச்சாரத் தடை, பலதார மணம் போன்றவையும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றது.

கத்னா, விபச்சாரத் தடை, பலதார மணம் இம்மூன்றில் எதுவாக இருந்தாலும் அது இஸ்லாமிய மார்க்கத்தினால் ஏற்பட்ட கண்ணியம் தான்.

அமெரிக்காவின் “நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளிவந்த ஒரு செய்திக் குறிப்பையும் இங்கே பார்ப்போம்.

ஹெச்.ஐ.வி. பாதிப்பை விட்டும் பாதியளவுக்கு கத்னா பாதுகாக்கிறது எனறு அமெரிக்காவின் சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸின் செய்தியாளர் டொனால்டு ஜி. மெக்நெய்ல் குறிப்பிடுகிறார்.

சுரப்பிகளிலிருந்து சுரந்து வரும் உயிரணுக்கள் ஆணுறுப்பின் நுனித் தோல் பகுதியில் தேங்குகின்றன. ஹெச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வைரஸானது உடலுறவின் போது, ஏற்கனவே தேங்கி நிற்கும் இந்த உயிரணுத் தொகுதிக்குள் எளிதில் தொற்றிக் கொண்டு விடுகின்றது. அதனால் உடலுறவு கொண்ட அந்த ஆணும் ஹெச்.ஐ.வி. வைரஸின் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகி விடுகின்றான் என்று அந்தச் செய்திக் குறிப்பில் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

இங்கு தான், இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்பதை அறிந்து நாம் வியப்பில் ஆழ்கிறோம். இதைத் தான் வல்ல அல்லாஹ்வும் தன் திருமறையில் 30:30 வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

மேலே நாம் கண்ட அந்த ஹதீஸ் மீசையைக் கத்தரிக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது.

இன்று உலகில் பலர் தாடியை முழுமையாக மழித்து விட்டு மீசையை வைத்திருக்கின்றனர். அவர்களுடைய மீசை உண்மையில் வாயில் ஒரு வடிகட்டியைப் போல் அமைந்துள்ளது. அவர்கள் குடிக்கின்ற பானங்கள், சாப்பிடும் பண்டங்கள் அனைத்தும் மீசையில் பட்ட பின்னர் தான் உள்ளே செல்கின்றது.

சளி மற்றும் அசுத்தங்கள் தங்கி நிற்கும் இந்த மீசை வழியாக உணவுப் பொருட்கள் செல்வது சுகாதாரக் கேட்டை உருவாக்கும் என்பதால் இதைத் தடுக்கும் விதமாக, மீசையைக் கத்தரிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது.

இது போன்று உடல் நாற்றத்திற்குக் காரணமாக அமையும் அக்குள் முடிகளையும், இன உறுப்பின் முடிகளையும் களையச் சொல்கிறது.

நகங்களின் இடுக்குகள் தான் கிருமிகள் அடைக்கலம் புகுமிடம் என்பதால் நகங்களையும் வெட்ட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தருகின்றார்கள்.

இவற்றை வளர்ப்பது இயற்கையல்ல, களைவது தான் இயற்கை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலகுக்குப் படம்பிடித்துக் காட்டுகிறார்கள்.

இன்னும்  ஏராளமான அம்சங்கள் இஸ்லாம் ஒர் இயற்கை மார்க்கம் தான் என்பதனை பறை சாற்றுகின்றன. அடுத்தடுத்த உரைகளில் அவற்றை வரிசையாக காண்போம், இன்ஷா அல்லாஹ்!