2) இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்

நூல்கள்: இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்

இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்

இஸ்லாத்திற்கு எதிரான பல கொள்கைகளை இஸ்லாம் என்று தமிழக முஸ்லிம்களின் பலர் எண்ணுகின்றனர். இவ்வாறு அவர்கள் எண்ணுவதற்கு கனவுகள் பற்றிய அறியாமை முக்கிய காரணமாகத் திகழ்கின்றது. அவர்களில் பலர் ஏமாற்றப்படுவதற்கும் கனவுகள் பற்றிய அவர்களின் அறியாமையே காரணமாக அமைந்துள்ளது.

தர்ஹாக்களுக்குச் சென்று வழிபாடு செய்வதற்கும்அங்கே காணிக்கைகள் செலுத்துவதற்கும் பெரும்பாலும் கனவு தான் காரணமாக உள்ளது. இந்த மகான் எனது கனவில் தோன்றி இந்த தர்ஹாவுக்குச் செல்லுமாறு கட்டளையிட்டார்‘ என்பது தான் இவர்கள் எடுத்துக் காட்டும் ஒரே ஆதாரமாகத் திகழ்கிறது. எவ்வித வரலாற்றுச் சான்றுகளும் இல்லாமல் திடீர் திடீரென்று தர்ஹாக்கள் முளைப்பதற்குக் கூட கனவு தான் காரணமாக உள்ளது.

மார்க்க அறிஞர்கள் என்ற போர்வையில் நடமாடும் போலிகள் கனவுகளுக்கு விளக்கம் கூறுகிறோம் என்று உளறிக் கொட்டி பிழைப்பு நடத்துவதையும்அவர்களின் உளறல்களை உண்மை என நம்பும் மக்கள் நிம்மதி இழந்து தவிப்பதையும் நாம் காண முடிகின்றது. கனவுகள் பற்றியும்அவற்றை எவ்வாறு எதிர் கொள்வது என்பதைப் பற்றியும் சரியான விளக்கம் இல்லாததால் இன்னும் பல மோசமான விளைவுகளும் ஏற்படுகின்றன.

  1. நாம் கனவில் காண்பது யாவும் உண்மை நிகழ்ச்சிகள் தாமா?
  2. கனவில் காண்பதை நடைமுறைப்படுத்துவது அவசியமா?
  3. நாம் காணுகின்ற கனவுகள் நமக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் அமைந்திருந்தால் என்ன செய்ய வேண்டும்கவலை தரும் கனவுகளைக் கண்டால் என்ன செய்ய வேண்டும்?
  4. நல்ல கனவுகளையும்கெட்ட கனவுகளையும் வேறு படுத்தி எவ்வாறு அறிந்து கொள்வது?
  5. கனவுகளின் பலன்களை எவ்வாறு கண்டறிவது?

என்பன போன்ற கேள்விகளுக்கு குர்ஆன் மற்றும் நபிவழியை ஆதாரமாகக் கொண்டு விளக்கத்தை அறிந்து கொண்டால் கனவுகள் மூலம் ஏற்படும் கேடுகளிலிருந்து நாம் விடுபட முடியும்.

கனவுகள் பலவிதம்

எந்தக் கனவையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்று சிலர் கூறுகின்றனர். இந்தக் கருத்தை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. காணுகின்ற கனவுகள் அனைத்துமே அர்த்தம் நிறைந்தவை. கனவில் காண்பது யாவும் கட்டாயம் பலிக்கும்.

கனவில் நமக்கு ஏதேனும் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டால் அதை அப்படியே நாம் கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என்று வேறு சிலர் கூறு கின்றனர். இந்தக் கருத்தையும் இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. கனவுகளில் அர்த்தமுள்ளவையும் உள்ளன. அர்த்த மற்றவையும் உள்ளன என்பது தான் இஸ்லாத்தின் நிலையாகும்.