இழிந்தவர்களை வெளியேற்றி விடுவோம்

முக்கிய குறிப்புகள்: குர்ஆன் வசனம் இறங்கிய காரணம்

63:8 يَقُوْلُوْنَ لَٮِٕنْ رَّجَعْنَاۤ اِلَى الْمَدِيْنَةِ لَيُخْرِجَنَّ الْاَعَزُّ مِنْهَا الْاَذَلَّ ‌ؕ وَلِلّٰهِ الْعِزَّةُ وَلِرَسُوْلِهٖ وَلِلْمُؤْمِنِيْنَ وَلٰـكِنَّ الْمُنٰفِقِيْنَ لَا يَعْلَمُوْنَ
63:8. “நாங்கள் அல்மதீனாவுக்குத் திரும்புவோமானால், கண்ணியமானவர்கள் தாழ்ந்தவர்களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றிவிடுவார்கள்” என்று அவர்கள் கூறுகின்றனர்; ஆனால் கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஃமின்களுக்குமே உரியது; எனினும், இந்நயவஞ்சகர்கள் (அதை) அறிந்து கொள்ளமாட்டார்கள்.  
ஜாபிர்(ரலி) கூறினார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (பனூ முஸ்தலிக்) புனிதப் போருக்குச் சென்றோம். நபியவர்களுடன் முஹாஜிர்களும் ஒருவர் இருவராகப் புறப்பட்டு நிறையப் பேராகிவிட்டனர். முஹாஜிர்களிடையே விளையாட்டுக்காட்டும் ஒருவர் இருந்தார். அவர் அன்சாரி ஒருவரின் புட்டத்தில் (விளையாட்டாக) அடித்துவிட்டார். எனவே, அந்த அன்சாரி கடும் கோபம் அடைந்தார். (தகராறு முற்றி) இருவரும் தத்தம் குலத்தாரை உதவிக்கு அழைத்தார்கள். அன்சாரி, ‘அன்சாரிகளே!’ என்றழைத்தார். முஹாஜிர், ‘முஹாஜிர்களே!’ என்றழைத்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் வெளியே வந்து, ‘அறியாமைக் கால மக்களின் அழைப்பு இங்கே கேட்கிறதே, ஏன்?’ என்று கேட்டுவிட்டு, ‘அவ்விருவரின் விவகாரம் என்ன?’ என்று கேட்டார்கள். முஹாஜிர், அன்சாரியைப் புட்டத்தில் அடித்தது. நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இந்த அறியாமைக் கால அழைப்பைவிட்டு விடுங்கள். இது அருவருப்பானது’ என்று கூறினார்கள். (நயவஞ்சகர்களின் தலைவனான) அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல், ‘நமக்கெதிராக (இந்த அகதிகளான முஹாஜிர்கள் தம் குலத்தாரிடம்) உதவி கேட்டு அழைத்தார்களா?’ நாம் மதீனாவுக்குத் திரும்பிச் சென்றால் வலிமையுள்ளவர்கள் நகரத்திலிருந்து இழிந்தவர்களை வெளியேற்றி விடுவார்கள்’ என்று (விஷமமாகச்) சொன்னான். உடனே உமர்(ரலி), ‘இந்தத் தீயவனை நாம் கொன்று விட வேண்டாமா? இறைத்தூதர் அவர்களே!’ என்று அப்துல்லாஹ் இப்னு உபையைக் குறித்துக் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(அவனைக்) கொல்ல வேண்டாம். மக்கள், ‘முஹம்மது தன் தோழர்களை கூட கொல்கிறார்’ என்று பேசுவார்கள்’ என்று பதிலளித்தார்கள். (புகாரி: 3518)