இளைஞர்களும் இயக்கங்களும்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

முன்னுரை

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

நபித்தோழர்களில் ஏராளமான இளைஞர்கள் இருந்தனர்.  இன்னும் சொல்வதென்றால், ஆறு, ஏழு வயதுடைய சிறுவர்கள் கூட, போர்க்களங்களில் இருபது, முப்பது வயதுடையவர்களுக்கு நிகராக ஏராளமாக சாதனை புரிந்திருக்கிறார்கள்.  அவர்கள் தங்கள் காலத்தில் மிகப்பெரிய சோதனைகளை எல்லாம் கடந்து உறுதியாக திகழ்ந்தார்கள் என்றால்,

  • அவர்கள் குர்ஆனில் ஆழ்ந்த அறிவுடையவர்களாக இருந்தார்கள்.
  • அதனை முழுமையாக நம்பினார்கள்.
  • பிறகு குர்ஆனுக்கு முழுமையாக கட்டுப்படுபவர்களாகவும் இருந்தார்கள்

என்பதுதான் காரணம். பத்து வசனங்களை படித்து மனனம் செய்த ஸஹாபாக்கள் அதற்கு செயல்வடிவம் கொடுத்த பிறகே மற்ற வசனங்களைத் தெரிந்து கொண்டார்கள் என்ற தகவலும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

تفسير مجاهد (ص: 193)
عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ قَالَ:

حَدَّثَنَا أَصْحَابُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُمْ كَانُوا يَقْتَرِئُونَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَا يُجَاوِزُونَ الْعَشْرَ حَتَّى يَعْلَمُوا مَا فِيهِ مِنَ الْعِلْمِ وَالْعَمَلِ قَالَ: فَتَعَلَّمْنَا الْقُرْآنَ وَالْعِلْمَ وَالْعَمَلَ جَمِيعاً

”நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் திருக்குர்ஆனைக் கற்றோம். நபியவர்களிடமிருந்து பத்து வசனங்களைக் கற்றுக் கொள்வோம். அதில் உள்ளதை கற்றுக் கொண்டு, செயல்படுத்திய பின்னரே தவிர பத்து வசனங்களை நாங்கள் கடக்க மாட்டோம் என்று நபித்தோழர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்.”

நாங்கள் திருக்குர்ஆனையும் அதன் செயல்பாட்டையும் சேர்த்தே (நபித்தோழர்களிடம்) கற்று வந்தோம்.

அறி: அபூஅப்துர்ரஹ்மான் அஸ்ஸுலமிய்யூ
நூல் : தப்ஸீர் முஜாஹித், பாகம் : 1, பக்கம் :2

(இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபுல்காஸிம் அப்துர்ரஹ்மான் பின் ஹஸன் பொய்யர் என சந்தேகிக்கப்பட்டவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும். கட்டுரையாளர் இதைக் கவனிக்கவில்லை என தெரிகிறது) 

திருக்குர்ஆன் கட்டளைக்கு உடனே செயல்வடிவம் கொடுத்தவர்கள்

“உயைனா பின் ஹிஸ்ன் பின் ஹுதைஃபா (ரலி) அவர்கள் (மதீனாவுக்கு) வந்து, தம் சகோதரருடைய புதல்வர் ஹுர்ரு பின் கைஸ் (ரலி) அவர்களிடம் தங்கினார். உமர் (ரலி) அவர்கள் தம் அருகில் அமர்த்திக் கொள்பவர்களில் ஒருவராக (அந்த அளவுக்கு அவர்களுக்கு நெருக்கமானவராக) ஹுர்ரு பின் கைஸ் இருந்தார். முதியவர்களோ இளைஞர்களோ யாராயினும், குர்ஆனை நன்கறிந்தவர்களே உமர் (ரலி) அவர்களின் அவையினராகவும் ஆலோசகர்களாகவும் இருந்தனர்…

…ஆகவே, உயைனா, தம் சகோதரருடைய (பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால்….. (என்ன செய்வது)?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “அந்தப் பிரிவுகள் அனைத்தையும் விட்டு (விலகி) ஒதுங்கி விடு; ஒரு மரத்தின் வேர் பாகத்தை பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து, அதே நிலையில் மரணம் உன்னைத் தழுவிக் கொண்டாலும் சரி (எந்தப் பிரிவினரோடும் சேராமல் தனித்தே இரு)” என்று பதிலளித்தார்கள்.

அறி: ஹுதைஃபா பின் யமான் (ரலி)
நூல்: (புகாரி: 3606) 

குர்ஆனைத் தொகுத்த இளைஞர்

ஸஹாபாக்கள் செய்த சமூகப் பணியை விடவா நாம் அதிகமாக செய்யப்போகிறோம். இன்று உலகமே வியந்து போற்றும் உலகப் பொதுமறையாம் திருமறைக் குர்ஆனை தொகுத்தவர் ஒரு அறிவுள்ள ஆக்கப்பூர்வமான இளைஞர் என்பது பலருக்குத் தெரியாது. அவரது பெயர் ஸைத் பின் ஸாபித் அல்அன்சாரி (ரலி) ஆவார். அன்னார் வேத அறிவிப்பினை (வஹியை) எழுதுவோரில் ஒருவராக இருந்தார்.

அவர்கள் கூறியதாவது:

யமாமா போர் நடைபெற்ற பின் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்கள், எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்துவரச் சொன்)னார்கள். (நான் சென்றேன். அங்கே) அவர்களுக்கு அருகில் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் இருந்தார்கள்.

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: உமர் அவர்கள் என்னிடம் வந்து, “இந்த யமாமாப் போரில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுவிட்டனர். (இறைமறுப்பாளர்களுடன் போர் நடக்கும்) பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு, அதனால் குர்ஆனை நீங்கள் திரட்டினால் தவிர, அதன் பெரும் பகுதி (நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (ஆகவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க வேண்டுமென நான் கருதுகின்றேன்” என்று கூறினார்கள்.

நான்”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்வேன்?”என்று உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்” என்று கூறினார்கள். இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும் வரை இது விஷயத்தில் (தொடர்ந்து) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக்கொண்டேயிருந்தார்கள்.

(முடிவில்) உமர் அவர்கள் கருதியதை(யே) நானும் (உசிதமானதாகக்) கண்டேன். (இதை அபூபக்ர் அவர்கள் என்னிடம் கூறியபோது) உமர் (ரலி) அவர்கள் (ஏதும்) பேசாமல் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். (பிறகு) அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னிடம்) “நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும்) சந்தேகப்படமாட்டோம். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக வஹி (வேத வசனங்களை) எழுதக்கூடியவராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும்கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது; குர்ஆனை ஒன்று திரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், நபி (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச் செய்யப்போகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி)தான்” என்று பதிலளித்தார்கள்.

இதையே நான் தொடர்ந்து (அவர்கள் இருவரிடமும்) வலியுறுத்திக் கொண்டிருந்தேன். முடிவில் எதற்காக அபூபக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்று திரட்ட முன்வந்தேன்.) ஆகவே, நான் எழுந்து சென்று (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை துண்டுத் தோல்கள், அகலமான எலும்புகள், பேரீச்சமட்டைகள் மற்றும் (குர்ஆன் வசனங்களை மனனம் செய்திருந்த) மனிதர்களுடைய நெஞ்சுகள் ஆகியவற்றிலிருந்து திரட்டினேன்.

(இவ்வாறு திரட்டியபோது) “அத்தவ்பா’ எனும் (9ஆவது) அத்தியாயத்தின் (கடைசி) இரு வசனங்களை குஸைமா பின் ஸாபித் அல்அன்சாரி (ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன்; இவை வேறெவரிடமிருந்தும் (எழுதப்பட்டு) கிடைக்கவில்லை. (அவை:) “உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்கள் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கின்றார்.

(நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கின்றேன். மேலும், அவன் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதியாயிருக்கின்றான்.” (அல்குர்ஆன்: 9:128,129)

(என் வாயிலாக) திரட்டித் தொகுக்கப் பெற்ற குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்(து வந்)தது. பின்னர் (கலீஃபாவான) உமர் (ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்தது. பிறகு உமர் அவர்களின் புதல்வியார் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் இருந்தது.

அறி: ஸைத் பின் ஸாபித் அல்அன்சாரி (ரலி)
நூல்: (புகாரி: 4679) 

ஸைத் அவர்கள் இவ்வளவு பெரிய பணியை சிறப்பாக செய்ய முடிந்ததென்றால் அதற்குக் காரணம் இறைவனைப் பற்றிய ஆழமான அறிவும் இறைத் தூதரின் பொன்மொழிகளைப் பற்றிய அறிவும் அதற்கான செயலாக்கமும்தான். நம்மால் குர்ஆனைத் தொகுக்கத்தான் பாடுபடமுடியாதென்றாலும், அதனைக் கற்று செயல்படுத்தி பிறருக்குக் கற்றுக் கொடுத்து குர்ஆன்படி வாழ்கின்ற சமூகத்தை உருவாக்கவாவது பாடுபட்டோமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மாறாக எவனோ ஜிகாத் செய்ய சொன்னானென்றால் அவனுக்கு ஜால்ரா அடிப்பதற்கு நமது உழைப்பை வீண்விரயம் செய்கிறோம். எவனோ ஒருவன் மத்ஹபைப் பின்பற்றச் சொன்னால் அவனுக்குப் பின்னால் நின்று தவ்ஹீதை எதிர்த்து உலகத்திலேயே இழிவை சுமக்கிறோமே.

தனிமனிதனுக்குப் பின்னால் நின்றுகொண்டு நமக்குக் கிடைக்கவிருக்கும் சொர்க்கம் என்ற சுயநலத்தைப் பாழாக்குகிறோமே. இதைப்பற்றி என்றாவது சிந்தித்தோமா? எனவே குர்ஆன் மற்றும் ஸஹீஹான நபிவழிப்படி நம்மை மாற்றிக் கொண்டு நமது சுயநலத்தை அடைய வழிசெய்வோம்.

திருக்குர்ஆனை தெரிந்தவர்கள் எத்தனை இளைஞர்கள்?

இன்றைய சூழல் ஒவ்வொரு இயக்கத்திலும் சமூகப் பணிக்கு தலைமை தாங்கவோ அல்லது போராட்டத்திற்கும் ஆர்ப்பாட்டத்திற்கும் உலக தேவைகளை அடைவதற்கு மக்களுக்குத் தலைமை தாங்கவோ நிர்வாகத்திற்கு அடித்துக் கொள்ளுகிற இளைஞர்கள், குர்ஆனை மனனம் செய்து மக்களுக்கு தலைமை தாங்கி இமாமத் செய்யத் தெரியுமா? என்று கள ஆய்வு செய்தால் நிச்சயமாக இல்லை என்பதே நமது முடிவாக அமையும்.

மக்களுக்கு தொழுகைகூட நடத்தத் தெரியாத இளைஞன் எப்படி நம்மை தெளிவாக வழிநடத்த இயலும் என்பதை சிந்திக்க வேண்டாமா மக்கள். ஆம் உண்மையில் இது மிக வேதனைக்குரிய விஷயம் தான்.

இரகசியக் கூட்டம் போடும் இளைஞர்கள், நாங்கள் இஸ்லாத்தின் போர்வாள் என்றெல்லாம் மேடைகளில் கொக்கரிக்கின்றவர்கள், நாங்கள் ஆப்கானுக்குப் போறோம், இஸ்ரேலுக்குப் போறோம் குஜராத்திற்கு போறோம் குல்பர்க்காவிற்கு போறோம் என்றெல்லாம் வாய்ச்சவடாலடிக்கும் வெற்று வீரசேவகர்கள் குர்ஆனைக் கற்று மக்களுக்கு தொழுகை நடத்த முன்வருவார்களா?

ஸஹாபாக்கள் மக்களுக்கு தொழுகை நடத்துவதில் போட்டி போட்டார்கள். மார்க்கத்தைக் கற்றுக் கொள்ள போட்டி போட்டார்கள், குர்ஆனை ஒழுங்காகக் கற்றுக் கொண்டதினால்தான் ஜிகாதைக் கூட சிறப்பாகச் செய்தார்கள்.

நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர் நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம், “மக்களுக்கென்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?” என்று கேட்டுக் கொண்டிருந்தோம். அதற்கு அவர்கள், “அந்த மனிதர் தன்னை அல்லாஹ் (இறைத் தூதராக) அனுப்பியிருப்பதாக…. அல்லது அல்லாஹ் அவரை இன்ன (குர்ஆன்) போதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாகக்…. கூறுகிறார்” என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக் காட்டிக்) கூறுவார்கள்.

உடனே நான் அந்த (இறை)வாக்கை மனப்பாடம் செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிக்கப்பட்டது போல ஆகிவிட்டது. அரபுகள், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மக்கா வெற்றியை (தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே அவர்கள், “அவரை, அவருடைய குலத்தா(ரான குறைஷிய)ருடன் விட்டு விடுங்கள். ஏனெனில், அவர்களை அவர் வென்றுவிட்டால் அவர் உண்மையான இறைத்தூதர் தாம் (என்று நிரூபணமாகிவிடும்)” என்று சொன்னார்கள்.

மக்கா வெற்றியாளர்கள் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார். நபி (ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்த போது, “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி (ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன்.

நபி (ஸல்) அவர்கள், “இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் எவர் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளாரோ அவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்’ என்று சொன்னார்கள்” எனக் கூறினார்கள்.

ஆகவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்த போது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும் (எங்களிடையே) இருக்கவில்லை. ஆகவே, (தொழுவிப்பதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய(சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன்.

நான் சஜ்தா செய்யும் போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டிவந்தது. ஆகவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், “உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?” என்று கேட்டார். ஆகவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போல வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை.

அறி: அம்ர் பின் ஸலமா (ரலி)
நூல் : (புகாரி: 4302) 

பத்து வயதில் திருக்குர்ஆன் வசனங்கள் மனனம்
وَقَالَ ابْنُ عَبَّاسٍ
تُوُفِّيَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم وَأَنَا ابْنُ عَشْرِ سِنِينَ وَقَدْ قَرَأْتُ الْمُحْكَم

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கும் போது நான் பத்து வயதுடைய (சிறு)வனாக இருந்தேன். அப்போது நான் “அல்முஹ்கம்’ அத்தியாயங்களை ஓதி முடித்திருந்தேன்.

அறி : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : (புகாரி: 5035) 

அல்முஹ்கம் என்பது திருக்குர்ஆனின் ஹுஜ்ராத்தின் (49),அத்தியாயத்திலிருந்து 114 (இக்லாஸ்) வரை உள்ள அத்தியாயங்களை குறிக்கும்.

நபித்தோழர்கள் தங்கள் இளமை பருவத்தில் திருக்குர்ஆன் ஓதுதல், மனனம்செய்தல் போன்ற காரியங்களில் ஈடுபட்டதையும் அதை நடைமுறை படுத்தியதையும் காணமுடிகிறது.

இளம் வயது பெண்களிடம் திருக்குர்ஆன் தொடர்பு

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், நபிகளார் இறக்கும் போது அவர்களின் வயது 18 ஆகும். நபிகளார் காலத்தில் இளம் வயதில் இருந்த அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் திருக்குர்ஆனுடன் ஆழ்ந்த தொடர்புள்ளவர்களாக இருந்துள்ளார்கள்.

நபிகளார் பனு முஸ்தலிக் போரிலிருந்து திரும்பிய போது அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு கூறிய போது அவர்களின் நிலையை அழகிய திருக்குர்ஆன் வசனங்களுடன் ஒப்பிட்டு பேசியது மெய்சிலிர்க்க வைக்கிறது.

ஒரு மாத காலம் வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு) எதுவும் அவர்களுக்கு வஹீயாக அருளப்படவில்லை. பிறகு நபி (ஸல்) அவர்கள், “லாஇலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை)”என்று கூறிவிட்டு, “ஆயிஷாவே! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி கிடைத்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான்.

நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி, அவன் பக்கம் திரும்பி விடு. ஏனெனில், அடியான் தன் பாவத்தை ஒப்புக்கொண்டு (மனம் திருந்தி) பாவ மன்னிப்புக் கோரினால் அவனது கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கின்றான்” என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது பேச்சை முடித்த போது என் கண்ணீர் (முழுவதுமாக) நின்று போய் விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் எஞ்சியிருக்கவில்லை. நான் என் தந்தையிடம், “அல்லாஹ்வின் தூதருக்கு என் சார்பாக பதில் கூறுங்கள்” என்று சொன்னேன். அதற்கு என் தந்தை, “அல்லாஹ்வின் தூதரிடம் என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள்.

நான் என் தாயாரிடம், “அல்லாஹ்வின் தூதர் சொன்னதற்கு என் சார்பாக பதில் கூறுங்கள்” என்று சொன்னேன். அதற்கு என் தாயார், “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள். நானோ இளவயதுடைய சிறுமியாக இருந்தேன். குர்ஆனிலிருந்து அதிமாக (ஓதத்) தெரியாதவளாகவும் இருந்தேன்.

ஆகவே, “அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள், மக்கள் என்னைப் பற்றிப் பேசிக்கொண்டவற்றைக் கேட்டிருக்கிறீர்கள் என்பதையும் அது உங்கள் மனத்தில் பதிந்து போய், அதை உண்மையென்று நீங்கள் நம்பிவிட்டீர்கள் என்பதையும் நான் அறிவேன். நான் குற்றமற்றவள் என்று நான் தங்களிடம் சொன்னால். …..நான் குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் அறிவான்….. நீங்கள் அதை நம்பப்போவதில்லை; நான் குற்றமேதும் புரிந்திருப்பதாக ஒப்புக் கொண்டால் (நான் சொல்வதை அப்படியே உண்மையென்று ஏற்று) என்னை நம்பிவிடுவீர்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கும் உங்களுக்கும் (நபியூசுஃப் (அலை) அவர்களின் தந்தையை (யஃகூப் (அலை) அவர்களை)யே நான் உவமையாகக் கருதுகிறேன்.

 فَصَبْرٌ جَمِيْلٌ‌ؕ وَاللّٰهُ الْمُسْتَعَانُ عَلٰى مَا تَصِفُوْنَ‏

(அதாவது): (இதை) சகித்துக் கொள்வதே நல்லது; நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம் தான் நான் பாதுகாப்புக் கோர வேண்டும்.

(அல்குர்ஆன்: 12:18)

நூல் : (புகாரி: 2661) 

இதைப் போன்று நபிகளாரின் கருத்து திருக்குர்ஆன் வசனங்களுக்கு மோதுவதைப் போன்று தெரிந்தால் அந்த வசனங்களை கூறி விளக்கம் கேட்டவர்கள் இளம் வயது அன்னை ஆயிஷா (ரலி) ஆவார்கள்.

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள், தமக்குப் புரியாத ஒரு செய்தியைக் கேட்டால் அதனை அவர்கள் நன்கு புரிந்துகொள்ளும் வரை (அதையொட்டி) மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்வார்கள்.

مَنْ حُوسِبَ عُذِّبَ قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ أَوَ لَيْسَ يَقُولُ اللَّهُ تَعَالَى : {فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا} قَالَتْ فَقَالَ إِنَّمَا ذَلِكَ الْعَرْضُ وَلَكِنْ مَنْ نُوقِشَ الْحِسَابَ يَهْلِكْ

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள், “எவர் (மறுமை நாளில் துருவித் துருவி) விசாரிக்கப்படுவாரோ அவர் வேதனை செய்யப்படுவார்” என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ் (குர்ஆனில்) “வலக்கரத்தில் தமது வினைப்பதிவுச் சீட்டு வழங்கப்பட்டவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும்’ (அல்குர்ஆன்: 84:8) என்றல்லவா கூறுகின்றான்?” என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “இது (கேள்விக் கணக்குத் தொடர்பானது அன்று: மாறாக, மனிதர்களின் நன்மை தீமைகளின் பட்டியலை அவர்களுக்கு முன்) சமர்ப்பிக்கப்படுவதுதான். துருவித் துருவி விசாரிக்கப்படுபவர் அழிந்தே போய்விடுவார்” என்று கூறினார்கள்.

நூல் : (புகாரி: 103) 

பித்அத்திற்கெதிராக களம் காணுதல்

இஸ்லாத்திற்காக எதையும் செய்யத் தயார் என்றால் முஸ்லிம் மக்களுக்கு மத்தியில் மார்க்கம் என்ற பெயரில் மலிந்து கிடக்கும் பித்அத்துகளை அனாச்சாரங்களையும் மூடநம்பிக்கைகளையும் களையெடுக்க களம் காணட்டும். அவன்தான் உண்மையில் உழைக்கிற இளைஞன்.

மக்களை தங்கள் வசம் வைத்துக் கொள்ள சும்மா வெறுமனே வெற்றுக் கோஷமிட்டுவிட்டு மக்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி அவர்களை நல்லவழிப்படுத்த முயலாதவன் தன்னையும் தனது மக்களையும் உலகாதாயத்திற்கு ஏமாற்றுகிறான் என்பதை உணர வேண்டும். அதை உணராத வரைக்கும் ஈடேற்றமென்பதே இல்லை.

ஆனால் ஸஹாபா பெருமக்கள் தங்கள் சக நண்பர்களாகிய ஸஹாபாக்கள் தவறு செய்தால் அல்லது தவறான கருத்தை வெளிப்படுத்தினால் அதற்காக நட்பை முறிக்கவும் அதற்கெதிராக குரல் கொடுத்து பித்அத்தைத் தடுப்பதற்கும் அஞ்சவில்லை.

மேலும் நமது நண்பர் அல்லது ஆட்சியாளர் தவறாக நினைப்பார் என்றெல்லாம் அக்கம் பக்கம் பார்த்தும் தடுக்கவில்லை. எதிர்விளைவுகளை எதிர் நோக்கித் தடுக்கவில்லை. தவறு என்றவுடன் தாட்சணயமின்றி தடுத்தார்கள் என்பதையே நம் ஆய்வில் கிடைத்த முடிவு. உண்மையில் இப்படியான நிலையை கைக்கொள்பவனே சிறந்த இளைஞன் என்பதை உணர வேண்டும்.

أَنَّهُ سَمِعَ رَجُلاً مِنْ أَهْلِ الشَّامِ وَهُوَ يَسْأَلُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ عَنِ التَّمَتُّعِ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ هِىَ حَلاَلٌ. فَقَالَ الشَّامِىُّ إِنَّ أَبَاكَ قَدْ نَهَى عَنْهَا. فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَرَأَيْتَ إِنْ كَانَ أَبِى نَهَى عَنْهَا وَصَنَعَهَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- أَأَمْرَ أَبِى نَتَّبِعُ أَمْ أَمْرَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فَقَالَ الرَّجُلُ بَلْ أَمْرَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم فَقَالَ لَقَدْ صَنَعَهَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم

ஹஜ் மாதத்தில் உம்ராவை முடித்து இஹ்ராமைக் களைந்து ஹஜ்ஜுக்காக தனியாக இஹ்ராம் கட்டுவது பற்றி அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் ஷாம் நாட்டைச் சேர்ந்த மனிதர் கேட்டார். அதற்கு அவர், “அது அனுமதிக்கப்பட்டதே!” என்று கூறினார். அதற்கு ஷாம் நாட்டைச் சேர்ந்த அம்மனிதர், “உங்கள் தந்தை (உமர்) அதைத் தடை செய்திருக்கின்றாரே!” என்று கூறினார்.

அதற்கு இப்னு உமர் (ரலி), “என் தந்தை ஒரு காரியத்தைத் தடுத்து அதை நபி (ஸல்) அவர்கள் செய்திருந்தால் அப்போது என் தந்தையின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா? அல்லது நபி (ஸல்) அவர்களின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா?”என்று கேட்டார். அதற்கு அம்மனிதர், “நபி (ஸல்) அவர்களின் கட்டளையைத் தான் பின்பற்ற வேண்டும்” என்றார். அப்போது இப்னு உமர் (ரலி), “நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துள்ளார்கள்” என்று விடையளித்தார்.

அறி : ஸாலிம்
நூல் : (திர்மிதீ: 824) (753)

عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ عَنْ مَرْوَانَ بْنِ الْحَكَمِ قَالَ
شَهِدْتُ عُثْمَانَ وَعَلِيًّا ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا وَعُثْمَانُ يَنْهَى ، عَنِ الْمُتْعَةِ ، وَأَنْ يُجْمَعَ بَيْنَهُمَا فَلَمَّا رَأَى عَلِيٌّ أَهَلَّ بِهِمَا لَبَّيْكَ بِعُمْرَةٍ وَحَجَّةٍ قَالَ مَا كُنْتُ لأَدَعَ سُنَّةَ النَّبِيِّ صلى الله عليه وسلم لِقَوْلِ أَحَدٍ

மர்வான் பின் ஹகம் கூறியதாவது:
நான் உஸ்மான் (ரலி) அவர்களுடனும், அலீ (ரலி) அவர்களுடனும் ஹஜ் செய்துள்ளேன். உஸ்மான் (ரலி) அவர்கள் ஹஜ், உம்ரா இரண்டையும் சேர்த்து (கிரான்) செய்வதையும் உம்ரா முடித்து ஹஜ் (தமத்துஉ) செய்வதையும் தடுத்தார்கள். இதைக் கண்ட அலீ (ரலி) அவர்கள், ஹஜ், உம்ரா இரண்டிற்கும் இஹ்ராம் கட்டி “லப்பைக்க பி உம்ரத்தின் வ ஹஜ்ஜத்தின்” என்று கூறிவிட்டு “நபி (ஸல்) அவர்களின் வழியை யாருடைய சொல்லிற்காகவும் நான் விட்டுவிடமாட்டேன்” எனக் கூறினார்கள்.

நூல் : (புகாரி: 1563)

விபச்சாரத்தை தடுக்க வழி காட்டுதல்

அடுத்து சமூகக் குற்றமான மாபெரும் பாதகச் செயல் விபச்சாரம். இதில் எத்தனை இளைஞர்கள் தங்களது வாழ்வைத் தொலைத்தனர். இதை எதிர்த்து பிரச்சாரம் செய்கிற இளைஞர்கள் நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவை.

قَالَ هٰٓؤُلَاۤءِ بَنٰتِىْۤ اِنْ كُنْـتُمْ فٰعِلِيْنَؕ
لَعَمْرُكَ اِنَّهُمْ لَفِىْ سَكْرَتِهِمْ يَعْمَهُوْنَ‏
فَاَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُشْرِقِيْنَۙ
فَجَعَلْنَا عَالِيـَهَا سَافِلَهَا وَ اَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِّنْ سِجِّيْلٍؕ
اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـلْمُتَوَسِّمِيْنَ

“நீங்கள் (ஏதும்) செய்வதாக இருந்தால் இதோ எனது புதல்விகள் உள்ளனர்” என்று அவர் கூறினார். உமது வாழ்நாளின் மீது சத்தியமாக! அவர்கள் தமது (காம) போதையில் தட்டழிந்தனர். அவர்கள் வெளிச்சத்தை அடைந்த போது, பெரும் சப்தம் அவர்களைத் தாக்கியது. அவர்கள் மீது சூடேற்றப்பட்ட கல் மழை பொழிந்து, அவ்வூரின் மேற்பகுதியைக் கீழ்ப்பகுதியாக்கினோம். சிந்திப்போருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. அவ்வூர் (நீங்கள் சென்று வரும்) நிலையான சாலையில் தான் உள்ளது. நம்பிக்கை கொண்டோருக்கு இதில் சான்று இருக்கிறது.

(அல்குர்ஆன்: 15:71-75)

மார்க்கத்தை கற்றுக் கொடுத்தல்

இஸ்லாத்தின் பெயரால் இன்று அரகேறியுள்ள புதுமைகளையும் இணைவைப்பு போன்ற கொடுமையான செயல்களையும் மக்களிடமிருந்து வெளியேற்ற என்ன நடவடிக்கைகள் எடுத்தார்கள் இந்த இளைஞர்கள்? ஏன் இந்த இளைஞர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படை விதிமுறைகள் தெரியுமா? அவற்றை படித்திருக்கிறார்களா? நபிகளாரிடம் பாடம் பயின்ற நபித்தோழர்களை கவனியுங்கள். மார்க்கத்தை கற்று கொடுக்கச் சென்று தன் உயிரை இழந்துள்ளார்கள்.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ

جَاءَ نَاسٌ إِلَى النَّبِىِّ -صلى الله عليه وسلم- فَقَالُوا أَنِ ابْعَثْ مَعَنَا رِجَالاً يُعَلِّمُونَا الْقُرْآنَ وَالسُّنَّةَ. فَبَعَثَ إِلَيْهِمْ سَبْعِينَ رَجُلاً مِنَ الأَنْصَارِ يُقَالُ لَهُمُ الْقُرَّاءُ فِيهِمْ خَالِى حَرَامٌ يَقْرَءُونَ الْقُرْآنَ وَيَتَدَارَسُونَ بِاللَّيْلِ يَتَعَلَّمُونَ وَكَانُوا بِالنَّهَارِ يَجِيئُونَ بِالْمَاءِ فَيَضَعُونَهُ فِى الْمَسْجِدِ وَيَحْتَطِبُونَ فَيَبِيعُونَهُ وَيَشْتَرُونَ بِهِ الطَّعَامَ لأَهْلِ الصُّفَّةِ وَلِلْفُقَرَاءِ فَبَعَثَهُمُ النَّبِىُّ -صلى الله عليه وسلم- إِلَيْهِمْ فَعَرَضُوا لَهُمْ فَقَتَلُوهُمْ قَبْلَ أَنْ يَبْلُغُوا الْمَكَانَ. فَقَالُوا اللَّهُمَّ بَلِّغْ عَنَّا نَبِيَّنَا أَنَّا قَدْ لَقِينَاكَ فَرَضِينَا عَنْكَ وَرَضِيتَ عَنَّا – قَالَ – وَأَتَى رَجُلٌ حَرَامًا خَالَ أَنَسٍ مِنْ خَلْفِهِ فَطَعَنَهُ بِرُمْحٍ حَتَّى أَنْفَذَهُ. فَقَالَ حَرَامٌ فُزْتُ وَرَبِّ الْكَعْبَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- لأَصْحَابِهِ « إِنَّ إِخْوَانَكُمْ قَدْ قُتِلُوا وَإِنَّهُمْ قَالُوا اللَّهُمَّ بَلِّغْ عَنَّا نَبِيَّنَا أَنَّا قَدْ لَقِينَاكَ فَرَضِينَا عَنْكَ وَرَضِيتَ عَنَّا

மக்களில் சிலர் (ரிஅல், தக்வான், உஸய்யா, பனூ லஹ்யான் ஆகிய கூட்டத்தார்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “எங்களுக்குக் குர்ஆனையும் “சுன்னா’ வையும் கற்பிப்பதற்காக எங்களுடன் சிலரை அனுப்பிவையுங்கள்” என்று கேட்டுக்கொண்டனர். அதற்கிணங்க அன்சாரிகளில் எழுபது பேரை அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள்.

அவர்கள் குர்ஆன் அறிஞர்கள் (அல்குர்ராஉ) எனப்படுவர். அவர்களில் என் தாய்மாமா ஹராம் பின் மில்ஹான் (ரலி) அவர்களும் ஒருவர் ஆவார். அவர்கள் (எழுபது பேரும்) இரவில் குர்ஆனை ஓதுவார்கள்; ஒருவருக்கொருவர் கற்றுக்கொடுக்கவும் கற்றுக்கொள்ளவும் செய்வார்கள். பகல் நேரங்களில் (அருந்துவோருக்காகவும், அங்கத் தூய்மை செய்வோருக்காகவும்) தண்ணீர் கொண்டுவந்து (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் வைப்பார்கள். விறகு சேகரித்து வந்து அதை விற்றுக் காசாக்கி அதன் மூலம் திண்ணைவாசிகளுக்கும் ஏழைகளுக்கும் உணவு வாங்கிக் கொடுப்பார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இவர்களை அனுப்பியபோது, அவர்கள் (குறிப்பிட்ட) அந்த இடத்திற்குப் போய்ச் சேர்வதற்கு முன்பே அவர்களை இடைமறித்து, (‘பிஃரு மஊனா’ எனும் இடத்தில்) அனைவரையும் அக்கூட்டத்தார் கொன்றுவிட்டனர்.

(இறக்கும் தறுவாயில்) அவர்கள், “இறைவா! நாங்கள் உன்னிடம் வந்து சேர்ந்துவிட்டோம். உன்னை நாங்கள் உவந்துகொண்டோம்; எங்களை நீயும் உவந்துகொண்டாய் என்று எங்களைப் பற்றி எங்கள் நபியிடம் தெரிவித்துவிடுவாயாக!” என்று கூறினர்.

என் தாய்மாமா ஹராம் (ரலி) அவர்களுக்குப் பின்னால் ஒரு மனிதன் வந்து ஈட்டியால் குத்திவிட்டான். அது அவர்களை ஊடுருவிச் சென்றது. அப்போது ஹராம் (ரலி) அவர்கள், “கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக! நான் வெற்றி பெற்றுவிட்டேன்” என்று கூறினார்கள். (இறையறிவிப்பின் மூலம் இது குறித்து அறிந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் தோழர்களிடம், “உங்கள் சகோதரர்கள் கொல்லப்பட்டுவிட்டனர்.

அவர்கள் (இறக்கும் தறுவாயில்) “இறைவா! நாங்கள் உன்னிடம் வந்து சேர்ந்துவிட்டோம். உன்னை நாங்கள் உவந்து கொண்டோம்; எங்களை நீயும் உவந்துகொண்டாய்’ என எங்கள் நபியிடம் தெரிவித்துவிடுவாயாக என்று கூறினர்” எனத் தெரிவித்தார்கள்.

அறி: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: (புகாரி: 4088) , (முஸ்லிம்: 3860) 

 عَنْ أَنَسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ
قَنَتَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم شَهْرًا حِينَ قُتِلَ الْقُرَّاءُ فَمَا رَأَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم حَزِنَ حُزْنًا قَطُّ أَشَدَّ مِنْهُ

ரிஃல், தக்வான் என்ற இந்த இரண்டு கூட்டத்தாருக்கெதிராகத்தான் நபியவர்கள் பஜ்ரு தொழுகையில் குனூத் ஓதினார்கள். குர்ஆன் (மனனம் செய்து அதை முறைப்படி ஓதத் தெரிந்திருந்த எழுபது) அறிஞர்கள் (வஞ்சித்துக்) கொல்லப்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் ஒரு மாதம் (தொடர்ந்து தொழுகையில்) குனூத் (எனும் சிறப்பு துஆ) ஓதினார்கள். இந்த தருணத்தைவிட வேறு எப்போதும் இவ்வளவு அதிகக் கவலை கொண்டவர்களாக அவர்களை நான் பார்த்ததில்லை.

அறி: அனஸ் (ரலி)
நூல்: (புகாரி: 1300) 

அங்கே ஆப்கானை, ஈராக்கைப் பார்த்தீர்களா? இங்கே குஜராத்தைப் பார்த்தீர்களா? மும்பையைப் பார்த்தீர்களா? உனது சகோதரன் சாவும் போது நீ மட்டும் சொகுசாக வாழ்கிறாயா? என்று கேள்வி கேட்டுவிட்டு நாங்கள் ஜிகாத் செய்யப் போறோம் என்று வெற்று வீரவசனம் பேசியவர்கள் எங்கும் சென்று ஜிஹாதும் செய்யவில்லை.

பிறகு எதற்கு இந்த வெற்று வீராப்பு வசனம் என்றால் ஜிகாதைப் பற்றி உசுப்பேற்றி விட்டால் இளைஞர்களை நம்பக்கம் கொண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். ஜிகாத் செய்வதற்குரிய விதிமுறைகளே தெரியாமல் ஜிகாத் என்றார்கள்.

ஜனநாயம் என்றால் என்ன வென்றே தெரியாமல் ஜனநாயகம் ஷிர்க் என்றவர்கள், அல்லாஹ்விற்கே ஆட்சி அதிகாரம் அனைத்தும் மனிதர்களுக்கு இல்லை, ஆகையால் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ பாடுபடுவோம் என்றெல்லாம் ஆதங்கப்பட்டவர்கள், வீரவசனம் பேசியவர்கள் இன்று டயலாக்கை அப்படியே தலைகீழாக மாற்றிக் கொண்ட மர்மமென்ன?

மக்களுக்கே அதிகாரம் என்று இறைவனுக்கு இணைவைக்கவும் துணிந்த வெற்றுத் துணிச்சனால் என்ன பயன்? ஆனால் ஸஹாபாக்கள் எங்காவது சென்று வீராப்பு பேசி வசூல் செய்து விட்டு ஏப்பம் விட்டார்களா? இல்லையே. மாறாக சிறுவர்களாக இருந்த ஸஹாபாக்கள் பென்னம் பெரிய இஸ்லாமிய எதிரியை வேறோடு சாய்த்த செய்தியை பத்ருக்களம் நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது.

இனிவருங்காலத்திலாவது எந்தத் தலைவனுக்குப் பின்னாலும் தனிமனித வழிபாடில்லாமல் காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து, குர்ஆன் மற்றும் நபிவழிப்படி ஒழுங்காக இஸ்லாத்தை விளங்கி செயல்படும் மக்களாக இறைவன் நம்மை ஆக்கி அருள்புரிவானாக! 

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.

இளைஞர்களும் இயக்கங்களும். முஹம்மது தாஹா