இளம்வயதினரை அடிமையாக்கும் டிக் டாக்: அதிர்ச்சி ரிப்போர்ட்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

இளம்வயதினரை அடிமையாக்கும் டிக் டாக்: அதிர்ச்சி ரிப்போர்ட்

இன்றைய நவீன காலகட்டத்தில் அறிவியலின் வளர்ச்சி நாளுக்கு நாள் தாறுமாறாக வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது. ஏராளமான கருவிகள், உபகரணங்கள் நாளுக்கு நாள் புதிது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்ற அறிவியல் கருவிகளினால், செயலிகளினால் மக்களுக்கு அதிகமான நன்மைகள் கிடைப்பதை விட அதிகப்படியான தீமைகளையே நவீன உபகரணங்கள் வழிகாட்டுவதைப் பார்க்கின்றோம். அதிலும் குறிப்பாக சமீப காலமாக இளம் வயதினரிடத்தில் காட்டுத் தீயாய் பரவிக் கொண்டிருக்கின்ற செயலி டிக் டாக். இந்த செயலி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அத்துணை நபர்களையும் தனக்கு கீழ் அடிமையாக்கி விட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.

அந்தளவிற்கு இந்த செயலியின் தாக்கம் சமூகத்தில் அதிகப்படியாக உலா வருவதைப் பார்க்க முடிகின்றது. மேலும், எத்தனையோ ஆபாச இணையதளங்கள் தடை செய்யப் பட்டிருக்கின்ற வேளையில், எந்த சப்தமும் இல்லாமல் அமைதியாக சென்சார் கூட இல்லாத அளவுக்கு டிக் டாக் செயலி மக்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. 15 நொடிகள் இதில் என்ன வேண்டுமானாலும் பேசலாம், நடிக்கலாம், ஆடலாம், பாடலாம். ஆனால் இந்த 15 நொடிகளில் காட்டப்படுகின்ற ஆபாசம் எல்லை தாண்டி போய்க் கொண்டிருக்கின்றது. இந்த வீடியோ காட்சிகளைப் பார்க்கும் போது, இதில் ஏற்பட்டுள்ள அதிக ஆர்வத்தின் காரணமாக தன்னைத்தானே ஒரு ஹீரோவாகவோ அல்லது ஹீரோயினாகவோ கற்பனை செய்து கொண்டு அதே போன்று வீடியோ எடுத்து அதை டிக் டாக் செயலியில் பதிவு செய்கின்றனர். இதை சமூக வலைதளங்களில் இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை பகிர்கின்றனர்.

இதில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் டிக் டாக் வீடியோ செயலியில் வரும் சில வீடியோக்கள் ஆபாசமாக இருப்பதாகத் தெரியவருகிறது. இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. டிக் டாக் செயலி மூலம் வெளியாகும் இளம் பெண்களின் சில வீடியோக்கள் ஆபாசமாக இருப்பதாகவும், அதனால் பாலியல் துன்புறுத்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் செயலியை விமர்சிக்கும் நிபுணர்கள் கூறுகின்றனர். டிக் டாக் ஆப் இந்த ஆண்டின் முதல் பாதியில் ஆப்பிள் ஸ்டோரில் இருந்து அதிகமாக டவுன்லோடு செய்யப்பட செயலி என்று சென்சார் டவர் நிறுவனம் ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்திருக்கின்றது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்நாப்சேட் போன்ற செயலிகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு டிக் டாக் முதல் இடத்தை பிடித்துள்ளது. சீனாவின் (ஙிசீஜிணி ஞிகிழிசிணி) என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது இந்த அப்பிளிகேஷன். இந்த அப்பிளிகேஷன் ஒரு குறிப்பிட்ட நபரின் தனித்திறமையை வெளிப்படுத்தும் செயலி என்று இதை உருவாக்கியவர்கள் கூறுகின்றார்கள்.

மேலும் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஒழுக்கத்தை விரும்புகின்ற மக்களிடத்தில் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் இது போன்ற மனிதர்களிடத்தில் இருக்க வேண்டிய மிக முக்கியமான குணநலன்களை டிக் டாக் செயலி குழிதோண்டி புதைத்திருக்கின்றது. மேலும் இந்த டிக்டாக் செயலி எவ்வளவு மோசமான பாதையின் பக்கமும், அழிவை நோக்கி மக்களை அழைத்துச் செல்கின்றது என்பதைப் பற்றியான ஆய்வறிக்கை இந்த ஆப் பயன்பாட்டாளர்களுக்கும், பயன்படுத்துகின்ற பிள்ளைகளை கவனிப்பாரற்று விட்டு விடக்கூடிய பெற்றோர்களுக்கும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

♦இந்த ஆப் முன்வைக்கும் சுதந்திரக் கோட்பாடு, (“raw, real and without boundaries”) அதாவது கட்டுப்பாடுகள் கிடையாது என்பதே. 12 வயது முதலான குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் இதைப் பயன்படுத்தலாம் எனக் கூறுகிறது.

♦ இந்த அப்ளிகேஷன் இந்திய சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. காரணம் இளம் பெண்கள் ஆபாசம் பொதிந்த பாடல் வரிகளை சர்வ சாதாரணமாக பாடி மகிழ்கின்றனர். இவற்றில் பெரும்பாலும் பெண்களின் மானத்தை காற்றில் பறக்க விட்டு சீர்குலைப்பதாக இருந்தாலும் கூட அதைப் பற்றி எவ்வித நெருடலும், கூச்சமும் இல்லாமல் பாடுகின்றனர்.

♦ கடந்த ஆண்டு, இந்தோனேசிய அரசாங்கம் இந்த அப்ளிகேஷனைத் தடை செய்தது. அந்நாட்டில் 1,70,000 பேர் டிக் டாக் அப்ளிகேஷனைப் பதிவிறக்கம் செய்த நிலையில் அது குழந்தைகளுக்கு உகந்ததாக இல்லை எனக் கூறி இந்தோனேசிய அரசு இந்த அப்ளிகேஷனைத் தடை செய்தது. பின்னர் சீனாவில் இருந்து டிக் டாக் பிரதிநிதிகள் ஜகார்தாவுக்கு விரைந்தனர். டிக் டாக் செயலியில் இருந்து ஆபாச கன்டன்ட்டை நீக்குவதாக உறுதியளித்த பின்னரே இந்தோனேசியா தடையை நீக்கியது.

♦ அமெரிக்காவின் இணைய கண்காணிப்புத் தளமான காமன் சென்ஸ் (Common Sense) டிக் டாக் செயலியில் உள்ள வயது வந்தோருக்கான கன்டென்ட்டும் தனிநபர் சுதந்திரம் அத்துமீறப்படுவதற்கான அபாயமும் கண்காணிக்கப்பட வேண்டியது என்கிறது. எனவே, 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு டிக் டாக்கில் செயல்பட அனுமதி அளிக்கக்கூடாது என பரிந்துரைக்கிறது.

♦ ஆனால், வயது வரம்பைக் குறைப்பது டிக் டாக்கின் அசுர வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் என்பதால் டிக் டாக் நிறுவனம் இதில் தயக்கம் காட்டக்கூடும் எனத் தெரிகிறது.

♦ பிரான்ஸ் நாட்டில், 11 வயது முதல் 14 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 38% பேர் டிக் டாக்கில் கணக்கு வைத்துள்ளதாக அந்நாட்டின் இணையப் பயன்பாடு கண்காணிப்பு அமைப்பு ஜெனரேஷன் நியூமரிக் கூறுகிறது. அதேபோல் 58% பெண் பிள்ளைகள் டிக் டாக்கில் கணக்கு வைத்துள்ளனர் என்றும்,அந்த அறிக்கை கூறுகிறது.

♦ இதனால், கடந்த மாதம் பிரான்ஸ் நாட்டு போலீஸார் பெற்றோருக்கு எச்சரிக்கை செய்துள்ளனர். டிக் டாக் செயலியால் உங்களது பிள்ளைகள் பாலியல் ரீதியான தொல்லைகளில் சிக்கலாம் என எச்சரித்துள்ளனர்.

♦ இதுமாதிரியாக குழந்தைகள் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகும் சூழல் என்பது பெற்றோர், கல்வியாளர்கள், மருத்துவர்களுக்கு புதியதொரு சவால். சமூக வலைதளங்களுக்கு அடிமையாகும் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரை எப்படி மீட்டெடுப்பது என்பதில் இன்னும் தெளிவான வரைமுறைகளை நிபுணர்களே வகுக்க முடியாத சூழலே நிலவுகிறது. புதிய தொழில்நுட்பங்கள் இளம் தலைமுறையினருக்கு பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கின்றன.

♦ மேலும், பள்ளிச் சீருடைகளை அணிந்து கொண்டு தங்களைத்தாங்களே மிகப்பெரிய சினிமாக் கதாநாயகிகளாக எண்ணிக் கொண்டு டிக்டாக் செயலியில் தங்களின் முகத்தைக் காட்டுகின்றார்கள். இதுவே ஆபாச இணையதளத்தில் தங்களைத் தாங்களே தள்ளி விடுகின்ற ஒரு காரியமாக அமைந்து விடுகின்றது.

♦ மேலும், இதில் வேதனைக்குரிய காரியம் என்னவென்றால், கண்டிக்க வேண்டிய இடத்தில் இருக்கின்ற பெற்றோர்களும், ஆசிரியர்களும் இந்த செயலியை பயன்படுத்துபவர்களோடு சேர்ந்து கூத்தும், கும்மாளமும் அடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம்.

♦ மேலும் குத்துப்பாடல்கள், கேடுகெட்ட இரட்டை அர்த்தத்தை தருகின்ற பாடல்களுக்கு நாவசைக்கின்ற பெண்களின் முகங்கள் அப்படியே ஆபாச இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றது என்ற அதிர்ச்சி தகவல்களும் வெளியாகி உள்ளது.

♦ இதுபோன்ற கைசேதத்திலிருந்து நம்மையும், நம்முடைய பிள்ளைகளையும் காக்க வேண்டிய கடமை ஒவ்வொரு மனிதர்களுக்கும் இருக்கின்றது. மேலும் இதுபோன்ற ஆபாசத்தை தூண்டுகின்ற செயலியை இந்திய அரசாங்கம் தடை செய்து. மக்களின் நலனில் அக்கரை காட்ட முன்வர வேண்டும்!! இதுவே மக்களின் எதிர்பார்ப்பு!! அரசு செய்யுமா??? திருக்குர்ஆனின் ஆணித்தனமான போதனை:

(பாவம் செய்யும்) எவரும் தமக்கு எதிராகவே சம்பாதிக்கிறார். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான். (அல்குர்ஆன்: 6:164)}

அல்லாஹ்வின் பாதையைக் கேலியாகக் கருதி அதை விட்டும் மக்களை அறிவின்றி வழிகெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்குவோர் மனிதர்களில் உள்ளனர். அவர்களுக்கே இழிவுபடுத்தும் வேதனை உள்ளது. (அல்குர்ஆன்: 31:6)