இலகுவை விரும்பிய  எளிய தூதர்

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

இலகுவை விரும்பிய  எளிய தூதர்

முஹம்மத் (ஸல்) அவர்கள் தனது நாற்பதாவது வயதை எட்டியதும் இறைவனிடமிருந்து முதல் தூது வந்தது. அன்று தனி மனிதராக தனது தூதுப் பணியைத் தொடர்ந்தார்கள். ஏராளமான அடக்குமுறைகள், கஷ்டம், இன்னல்களை வாழ்க்கையில் சந்தித்துவிட்டு தனது அறுபத்தி மூன்றாவது வயதில் மரணத்தை எய்தினார்கள்.

அப்போது, அவர்கள் இறைவனிடமிருந்து பெற்ற ஓரிறைக் கொள்கையில் பெரும் மக்கள் சக்தியே சங்கமித்திருந்தது. இன்றளவும், கோடிக்கணக்கான மக்கள் நபி (ஸல்) அவர்களையும் அவர்களது கொள்கையையும் உயிருக்கும் மேலாக நேசித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

மதங்களைக் கடந்து அனைத்து சாராராலும் போற்றப்படும் முதன்மைத் தலைவராகவும் நபி (ஸல்) அவர்கள் தான் திகழ்கின்றார்கள்.

நாற்பது வயதைத் தாண்டிய, ஒரு மனிதரால் 23 ஆண்டு காலம் என்ற மிகக் குறுகிய கால கட்டத்தில் எவ்வாறு இவ்வளவு பெரிய வளர்ச்சியை எட்ட முடிந்தது என்று உலகமே ஆச்சர்யத்தில் ஆழ்ந்திருக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் தனது அயராத பிரச்சாரப் பணியால் மாத்திரம் மக்களை வென்றெடுக்கவில்லை. அவர்களது அழகான பண்பாலும் தான் வென்றெடுத்தார்கள்.

ஒரு கூட்டம் ஓரிறைக் கொள்கையினால் கவரப்பட்டார்களென்றால் இன்னொரு சாரார் இவர்களது நற்குணத்தால் கவரப்பட்டார்கள்.

 فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْ‌ۚ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ‌ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِى الْاَمْرِ‌ۚ فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ‏

(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்துவிட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.

(அல்குர்ஆன்: 3:159)

وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ‏

நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்.

(அல்குர்ஆன்: 68:4)

இறைவனால் நற்சான்று வழங்கப்பட்ட நபி (ஸல்) அவர்களின் நற்பண்புகளில் ஒன்றுதான், அவர்கள் அனைத்து காரியங்களிலும் இலகுவானதையே தேர்ந்தெடுப்பவர்களாக இருப்பது.

«مَا خُيِّرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَمْرَيْنِ إِلَّا أَخَذَ أَيْسَرَهُمَا، مَا لَمْ يَكُنْ إِثْمًا، فَإِنْ كَانَ إِثْمًا كَانَ أَبْعَدَ النَّاسِ مِنْهُ، وَمَا انْتَقَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِنَفْسِهِ إِلَّا أَنْ تُنْتَهَكَ حُرْمَةُ اللَّهِ، فَيَنْتَقِمَ لِلَّهِ بِهَا»

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அல்லாஹ்வின் தூதரிடம் கூறப்பட்டால் அவர்கள் அவ்விரண்டில் இலேசானதையே தேர்ந்தெடுப்பார்கள். (தேர்ந்தெடுக்கப்பட்ட) அக்காரியம் பாவமாக இல்லாதிருக்கும் பட்சத்தில்.

அது பாவமான விஷயமாக இருந்தால் மக்களிலேயே அதிகமாக அதிலிருந்து வெகு தொலைவில் விலகி நிற்பார்கள். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமக்காக என்று எவரையும் பழிவாங்கியதில்லை; அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ம் எதுவும் சீர்குலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினாலே தவிர.

நூல்: (புகாரி: 3560) 

ஆயிஷா (ரலி) அறிவிக்கும் இச்செய்தியில் நபி (ஸல்) அவர்களின் இரண்டு குணத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.

  1. நபி (ஸல்) அவர்கள் தாம் சந்திக்கின்ற அனைத்து காரியங்களிலும் பாவமல்லாத இலகுவானதையே தேர்ந்தெடுப்பார்கள்.
  2. தனக்காக யாரையும் தண்டிக்க மாட்டார்கள். அல்லாஹ்வின் சட்டம் மீறப்படுகின்ற போது அல்லாஹ்விற்காக மட்டும் தண்டிப்பார்கள்.

இவ்விரு தன்மைகளுக்குமே நபி (ஸல்) அவர்களது வாழ்க்கையின் ஏராளமான நிகழ்வுகள் சான்று பகர்கின்றன.

மேலும், நபி (ஸல்) தனது அனைத்து வணக்க வழிபாடுகளிலும் சிரமத்தை தேடிக்கொள்ளவில்லை. எளிமையையே கடைபிடித்தார்கள்.

அனஸ்  பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), “முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே?’’ நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர்.

அவர்களில் ஒருவர், “(இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்’’ என்றார். இன்னொருவர், “நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்’’ என்று கூறினார். மூன்றாம் நபர் “நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன்’’ என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, “இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்’’ என்று சொன்னார்கள்.

நூல்: (புகாரி: 5063) 

இவ்வாறு, நபி(ஸல்) அவர்கள் தனது வாழ்நாளில் சந்தித்த அத்துணை விஷயங்களிலும், வணக்க வழிபாடுகளிலும் பாவமல்லாத இலகுவையே தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

மார்க்கமும் நமக்கு லேசானதாகவே வழங்கப்பட்டுள்ளது

அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
இந்த மார்க்கம் எளிதானது. இந்த மார்க்கத்தை எவரேனும் (தம்மீது) சிரமமானதாக ஆக்கிக் கொண்டால், அது அவரை மிகைத்துவிடும். எனவே, நடுநிலையையே கடைப்பிடியுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்; காலையையும் மாலையையும் இரவில் சிறிது நேரத்தையும் ஒத்தாசையாக்கிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: (புகாரி: 39) 

மார்க்கம் எளிதானதுதான். மக்கள் சிரமங்களை ஏற்படுத்திக் கொண்டால் தான் மார்க்கம் அவர்களுக்கு சிரமமாகக் காட்சியளிக்கும் என்ற தனது சொல்லின் அடிப்படையிலேயே தனது வாழ்க்கையிலும் எளிதைத் தேர்ந்தெடுத்து கஷ்டத்தைப் புறக்கணிப்பவர்களாக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள்.

ஆனால், இன்றைக்கு மக்களுக்கு மார்க்கத்தை எளிதாக எடுத்து சொல்லி அவர்களை மார்க்கத்தில் சங்கமிக்கச் செய்ய வேண்டிய மார்க்க அறிஞர்களே(?) மார்க்கத்தைக் கடினமாக்கி வைத்திருக்கின்றார்கள்.

மணமகன்தான் மஹர் கொடுக்க வேண்டும், வலீமா கொடுக்க வேண்டும் என்று மார்க்கம் எளிய சட்டத்தை சொல்லியிருக்க, மணமகளிடமிருந்து வரதட்சணையையும், வலீமாவையும் பெற வேண்டும் என்று கடினத்தைப் புகுத்தி, திருமண வழிமுறையை கஷ்டமாக்கியிருக்கிறார்கள்.

மேலும், நோன்பு நோற்றவர் எச்சிலை விழுங்கக் கூடாது; பல் துலக்க கூடாது என்பன போன்ற மார்க்கத்தில் இல்லாத சட்டங்களை இயற்றி நோன்பைக் கடினமாக்கியிருக்கின்றார்கள்.

இன்னும், பயணம் செய்பவர் தொழுகையை சுருக்கித் தொழுது கொள்ளலாம் என்று மார்க்கம் சலுகை தருகிறது. ஆனால் பயணி தொழ வைத்தால் அவரைப் பின்பற்றித் தொழுதவர்கள் திரும்பத் தொழ வேண்டும் என்று மார்க்கத்தில் இல்லாத சட்டம் இயற்றி கஷ்டமாக்கியிருக்கிறார்கள்.

இவ்வாறு மார்க்கத்தில் இல்லாத ஏராளமான சட்டங்களை இயற்றி மக்களுக்குக் கஷ்டம் கொடுப்பவர்களாக இன்றைய மார்க்க அறிஞர்கள் (?) இருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு மக்களுக்கு எளிதை நாடுகின்ற குணம் படைத்தவர்களாக இருந்தார்களோ அதுபோன்று மக்களுக்கு மார்க்கத்தில் உள்ள பாவமல்லாத, இலகுவான சட்டத்தைக் கற்றுக் கொடுத்து அவர்களை வென்றெடுக்க வேண்டும்.