இறை மறுப்பைத் தூண்டும் பெருமை!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

முன்னுரை

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

அனைத்துவிதமான மோசமான தன்மைகள், தீய செயல்பாடுகள் மற்றும் வழிகேடுகளை விட்டும் விலகியிருக்குமாறும், அவற்றிலிருந்து மீண்டுவருமாறும், மனித சமுதாயத்திற்கு இஸ்லாமிய மார்க்கம் வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வகையிலே இன்று சர்வசாதாரணமாக சகமனிதர்களிடத்தில் தென்படுகின்ற பெருமையடிக்கின்ற பண்பைப் பற்றியும் குர்ஆன் ஹதீஸிலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொதுவாகவே பெருமையடிப்பவர்கள் தங்களுடைய தொழில், நற்செயல்கள், குடும்பம் மற்றும் பழக்கவழக்கங்களைப் பற்றி அடுத்தவர்களிடம் அவசியமின்றி கூறி ஆனந்தமடைவதை அறிந்துள்ளோம். மேலும் இப்பண்புடையவர்களுக்கு மற்றொரு வரையறையை நபி (ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

மட்டமாக கருதுவது
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ
 لاَ يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِى قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ ». قَالَ رَجُلٌ إِنَّ الرَّجُلَ يُحِبُّ أَنْ يَكُونَ ثَوْبُهُ حَسَنًا وَنَعْلُهُ حَسَنَةً. قَالَ « إِنَّ اللَّهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ الْكِبْرُ بَطَرُ الْحَقِّ وَغَمْطُ النَّاسِ

“சிறிய அளவேனும் தன் உள்ளத்தில் பெருமை கொண்ட ஒருவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், ஒரு மனிதர் தன் ஆடை அழகாகவும் தன் செருப்பு அழகாகவும் இருந்திட விரும்புகிறார். இது (பெருமையாகுமா?)” என்று கேட்டார்.

“நிச்சயமாக அல்லாஹ் அழகானவன், அழகை விரும்புகிறான். பெருமை கொள்வது என்பது சத்தியத்தை நிராகரிப்பதும், மக்களை இழிவாக எண்ணுவதுமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)
நூல் : (முஸ்லிம்: 147) (131)

அல்லாஹ்வால் அருளப்பட்ட அருட்கொடைகளின் அடிப்படையை விளங்காமல், தங்களை தாங்களே உயர்வாகவும் சிறப்பாகவும் கருதிக்கொண்டு, மற்றவர்களை மட்டமாகவும் இழிவாகவும் நினைப்பவர்களெல்லாம் பெருமையடிப்பவர்கள்தான் என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து அறியமுடிகின்றது.

கடுமையான வேதனைகள்

பெருமையடிப்பவர்களுக்கு மறுமையிலே கடுமையான வேதனைகள் காத்திருப்பதோடு, இம்மையிலே அவர்களுக்கு வழங்கப்படுகின்ற தண்டனையைப் பற்றி அல்லாஹ் அருள்மறையிலே கூறுகிறான்.

سَاَصْرِفُ عَنْ اٰيٰتِىَ الَّذِيْنَ يَتَكَبَّرُوْنَ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَـقِّ ؕ وَاِنْ يَّرَوْا كُلَّ اٰيَةٍ لَّا يُؤْمِنُوْا بِهَا‌ ۚ وَاِنْ يَّرَوْا سَبِيْلَ الرُّشْدِ لَا يَتَّخِذُوْهُ سَبِيْلًا‌ ۚ وَّاِنْ يَّرَوْا سَبِيْلَ الْغَىِّ يَتَّخِذُوْهُ سَبِيْلًا‌ ؕ

“நியாயமின்றி பூமியில் கர்வம் கொண்டிருப்பவர்களை எனது சான்றுகளை விட்டும் திருப்புவேன். அவர்கள் எந்தச் சான்றைக் கண்டாலும் அவற்றை நம்பமாட்டார்கள். நேரான வழியை அவர்கள் கண்டால் அதை (தங்களது) வழியாகக் கொள்ள மாட்டார்கள். வழிகேடான பாதையை அவர்கள் கண்டால் அதை (தமது) வழியாக்கிக் கொள்வார்கள்.

(அல்குர்ஆன்: 7:146)

எவர்களெல்லாம் நியாயமின்றி பெருமையடிக்கின்றார்களோ அவர்களை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறான். அவர்கள் இறைவசனங்களைச் செவியேற்றாலும் அதற்கு கட்டுப்படாமல் உண்மையை உதாசினப்படுத்தியவர்களாக, அசத்தியத்திலேயே தங்களை அர்ப்பணித்தவர்களாக மாறிவிடுவார்கள். இந்தப் படிப்பினையை நமக்கு புரியவைப்பதற்காக, பெருமையடித்து வரம்பு மீறியோரின் வரலாற்றை திருமறையிலே அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். அவற்றில் சிலவற்றறை நாம் காண்போம்.

இறுமாப்புக் கொண்ட இப்லீஸ்

ஆதம் (அலை) அவர்களுக்கு மரியாதை செய்யுமாறு அல்லாஹ் ஆணையிடும்போது, மலக்குமார்கள் இறைவனின் கட்டளைக்கு முழுமையாகக் கட்டுப்படுகிறார்கள். ஆனால் இப்லீஸ் மட்டும் இரட்சகனின் போதனைக்குப் பணியாமல் இறுமாப்பு கொண்டவனாக வழிதவறிப் போகின்றான். வானவர்களின் அவையிலே அங்கம் வகிக்கின்ற அளவிற்கு அந்தஸ்தைப் பெற்றிருந்தவன், அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவனாகவும் எச்சரிக்கப் பட்டவனாகவும் வெளியேற்றப்படுகிறான். இதைப்பற்றி அல்லாஹ் அருள் மறையில் இவ்வாறு கூறுகிறான்.

قَالَ مَا مَنَعَكَ اَلَّا تَسْجُدَ اِذْ اَمَرْتُكَ‌ ؕ قَالَ اَنَا خَيْرٌ مِّنْهُ‌ ۚ خَلَقْتَنِىْ مِنْ نَّارٍ وَّخَلَقْتَهٗ مِنْ طِيْنٍ‏
قَالَ فَاهْبِطْ مِنْهَا فَمَا يَكُوْنُ لَـكَ اَنْ تَتَكَبَّرَ فِيْهَا فَاخْرُجْ اِنَّكَ مِنَ الصّٰغِرِيْنَ

“நான் உனக்குக் கட்டளையிட்டபோது பணிவதை விட்டும் உன்னைத்தடுத்தது எது? என்று (இறைவன்) கேட்டான். நான் அவரை விடச்சிறந்தவன். என்னை நீ நெருப்பால் படைத்தாய்! அவரைக் களிமண்ணால் படைத்தாய்!” என்று கூறினான். இங்கிருந்து இறங்கிவிடு! இங்கே நீ பெருமையடிப்பது தகாது. எனவே வெளியேறு! நீ சிறுமையடைந்தவனாவாய்” என்று (இறைவன்) கூறினான்.

(அல்குர்ஆன்: 7:12,13)

”ஆதம் (அலை) அவர்கள் கீழ்நோக்கி விழுகின்ற களிமண்ணால் படைக்கப்பட்டவர். ஆனால் நான் எப்போதும் மேல்நோக்கி எழுகின்ற நெருப்பால் படைக்கப்பட்டவன். ஆதலால் அவரைவிட நான்தான் உயர்ந்தவன்” என்று இப்லீஸ் பெருமையடித்தான். இவ்வாறு அவன் படைப்பின் விதத்தைக் கொண்டுப் பெருமையடித்ததால் வழிகேட்டிலே வீழ்ந்துவிட்டான்.

நூஹ் நபியை நிராகரித்தவர்கள்

950 ஆண்டுகள் அசத்தியத்திற்கு எதிராக, நூஹ் (அலை) அவர்கள் அழகிய முறையில் பிரச்சாரம் செய்தும்கூட, மிகச் சொற்பமான மக்களே அவருடைய சொற்களை செவிமடுத்தார்கள். இறைத்தூதருடைய அழைப்புக்கு வளைந்து கொடுக்காமல் அவரைப் பலவிதமாக வசைபாடியதோடு, தாங்கள் இறை மறுப்பிலே வீரியமாக வீற்றிருப்பதற்குப் பல கருத்துக்களையும் காரணங்களையும் நிராகரிப்பாளர்கள் தெரிவித்தார்கள். இவர்களைப்பற்றி திருமறையிலே அல்லாஹ் கூறுகிறான்.

فَقَالَ الْمَلَاُ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ مَا نَرٰٮكَ اِلَّا بَشَرًا مِّثْلَنَا وَمَا نَرٰٮكَ اتَّبَعَكَ اِلَّا الَّذِيْنَ هُمْ اَرَاذِلُــنَا بَادِىَ الرَّاْىِ‌ۚ وَمَا نَرٰى لَـكُمْ عَلَيْنَا مِنْ فَضْلٍۢ بَلْ نَظُنُّكُمْ كٰذِبِيْنَ‏

“எங்களைப்போன்ற ஒரு மனிதராகவே உம்மைக் காண்கிறோம். எங்களில் சிந்தனைக் குறைவுடைய தாழ்ந்தவர்களே உம்மைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். உங்களுக்கு எங்களைவிட எந்தச்சிறப்பும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. மாறாக உங்களைப் பொய்யர்களாகவே கருதுகிறோம்” என்று அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள் கூறினர்.

(அல்குர்ஆன்: 11:27)

நூஹ் (அலை) அவர்களைப் பின்பற்றுபவர்கள், சிந்தனைத் தெளிவற்றவர்கள், அறியாதவர்கள் என்று குற்றம் சாட்டினர் பெரும் தலைவர்கள். ஏழையாகவும், பெரிய பொறுப்புகளில் இல்லாதவர்களாகவும் நபி நூஹ் (அலை) அவர்களை பின்பற்றியவர்கள் இருந்ததால் எங்களை விட இவர்கள் உயர்ந்தவர்களா? எங்களின் மதிப்பு என்ன? மரியாதை என்ன? தகுதி என்ன? என்று பெருமையடித்து சத்தியத்தை ஏற்காமல் இறைவனின் கோபத்திற்கு ஆளானார்கள்.

ஃபிர்அவ்ன்

மாபெரும் கொடியவனாகத் திகழ்ந்த ஃபிர்அவ்ன் இடத்திலே ஓரிறைக் கொள்கையை அறிமுகப்படுத்துமாறு மூஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் ஏவும்போது, மூஸா (அலை) அவர்கள் தமக்கு வார்த்தைகள் தடுமாறுவதால் அல்லாஹ்வின் அனுமதியோடு ஹாரூன் (அலை) அவர்களைத் துணைக்கு அழைத்துச் சென்றார்கள்.

ஃபிர்அவ்னிடம் சென்று அழகிய முறையில் ஓரிறைக் கொள்கையை தெளிவுபடுத்தினார்கள். ஆனால் அவன், மூஸா (அலை) அவர்களை மறுத்ததோடு, முஸ்லிம்களை வேரறுக்க மூர்க்கதனமாக முற்படுகிறான். இவனைப் பற்றி அல்லாஹ் இறைவேதத்தில் கூறுகிறான்.

اَمْ اَنَا خَيْرٌ مِّنْ هٰذَا الَّذِىْ هُوَ مَهِيْنٌ ۙ وَّلَا يَكَادُ يُبِيْنُ‏
فَلَوْلَاۤ اُلْقِىَ عَلَيْهِ اَسْوِرَةٌ مِّنْ ذَهَبٍ اَوْ جَآءَ مَعَهُ الْمَلٰٓٮِٕكَةُ مُقْتَرِنِيْنَ‏
فَاسْتَخَفَّ قَوْمَهٗ فَاَطَاعُوْهُ‌ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِيْنَ‏

“இழிந்தவரும், தெளிவாகப் பேசத்தெரியாதவருமான இவரைவிட நான் சிறந்தவனில்லையா?” இவருக்குத் தங்ககாப்புகள் அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது இவருடன் இணைந்து வானவர்கள் வரக்கூடாதா?” என்றும் கேட்டான். அவன் தனது சமூகத்தாரை அற்பமாகக் கருதினான்.

(அல்குர்ஆன்: 43:52-54)

மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்பதற்குறிய அத்தாட்சிகளை நேரடியாக பார்த்தபிறகும் கூட அவரை நம்பாமல், தன்னைத்தானே கடவுள் என்று ஃபிர்அவ்ன் பிடிவாதமாக வாதிட்டுக்கொண்டிருந்தான். மேலும் சரியாகப் பேசத்தெரியாத மூஸா (அலை) அவர்களை விட தெளிவாகப் பேசுகின்ற நான்தான் உயர்ந்தவன்” என்றும் நான்தான் பெரிய கடவுள் என்றும் தன்னிடம் இருந்த ஆட்சி, படைபலத்தை கவனத்தில் கொண்டு பெருமையடித்துத் திரிந்தான். இறுதியில் அவன் அல்லாஹ்வால் ஆழ்கடல் அலையிலே மூழ்கடிக்கப்பட்டான்.

மக்கத்துக் காஃபிர்கள்

பரிசுத்தவாழ்விற்கு சொந்தக்காரராகிய நபி (ஸல்) அவர்கள், இணைவைக்கின்ற இரத்த பந்தங்களின் கடும் எதிர்ப்புகளைத் தாங்கிக்கொண்டு, அரும்பாடுபட்டு இறைப்பணியாற்றினார்கள். ஆனால் அன்றைய காஃபிர்களோ, நபி (ஸல்) அவர்களை தங்களின் வழிக்கு இழுக்கவும், சத்தியத்திலே சமரசம் செய்து கொள்ளவும் அளவற்ற ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி னார்கள்.

பிறகு அல்லாஹ்வின் அடியார்களுடைய உறுதியை அசைக்க முடியாதபோது, அவர்களுக்கு எதிராக அவதூறுகளையும் இழிவான கருத்துகளையும் பரப்பினார்கள். பல கொடுமைகளைக் கட்டவிழ்த்துவிட்டு கொலை செய்யத் துடித்தார்கள். இவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்…

وَكَذٰلِكَ فَتَـنَّا بَعْضَهُمْ بِبَـعْضٍ لِّيَـقُوْلُـوْۤا اَهٰٓؤُلَآءِ مَنَّ اللّٰهُ عَلَيْهِمْ مِّنْۢ بَيْنِنَا ؕ اَلَـيْسَ اللّٰهُ بِاَعْلَمَ بِالشّٰكِرِيْنَ‏

“நம்மில் இ(ந்த அற்பமான)வர்களுக்குத்தானா அல்லாஹ் அருள்புரிய வேண்டும்?” என்று அவர்கள் கூறுவதற்காக அவர்களில் ஒருவர் மூலம் மற்றவரை இவ்வாறு சோதித்தோம். நன்றி செலுத்துவோரை அல்லாஹ் நன்கறிந்தவன் அல்லவா?

(அல்குர்ஆன்: 6:53)

عَبَسَ وَتَوَلّٰٓىۙ‏
اَنْ جَآءَهُ الْاَعْمٰىؕ‏
وَمَا يُدْرِيْكَ لَعَلَّهٗ يَزَّكّٰٓىۙ‏
اَوْ يَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرٰىؕ‏
اَمَّا مَنِ اسْتَغْنٰىۙ‏

முஹம்மத் நபி (ஸல்) அவர்களை தூதர் என்று முன்மொழிந்தவர்களை விட, தாங்கள்தான் குலத்தால், இனத்தால் உயர்ந்தவர்கள் என்று பெருமையடித்தவர்களாக நேர்வழியைப் புறக்கணித்தார்கள். இன்னும் இறைத் தூதரிடம் உமது அறிவுரையை ஏற்றுக்கொண்ட வறியவர்களையும் அடிமைகளையும் விரட்டிவிட்டு வந்தால்தான் உமது வழிமுறையை ஏற்றுக் கொள்வோம் என்று பேரம்பேசினார்கள். இது தொடர்பான சம்பவத்தில் தான் கண் தெரியாத உம்மி மக்தூம் (ரலி) அவர்கள் அங்கே வரும்போது, அல்லாஹ்வின் துதர் அவரைக் கடிந்து பேசிவிடுகிறார்கள். ஆனால் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களைக் கண்டித்து வசனங்களை இறக்கினான்.

பார்க்க: (அல்குர்ஆன்: 80:1-5)

ஆகவே அசத்தியத்தில் அழிந்து போனவர்களில் அதிகமானவர்கள், பெருமையடித்து ஆணவத்தால் தட்டழிந்தவர்கள்தான் என்பதை மேற்கண்ட ஆயத்துக்கள் அடையாளம் காட்டுகின்றன. இதற்கேற்ப மறுமையிலே நரகத்தில் கருகும் குற்றவாளிகளைப்பற்றி அல்லாஹ் கூறுகிறான்…

اِنَّا كَذٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِيْنَ‏
اِنَّهُمْ كَانُوْۤا اِذَا قِيْلَ لَهُمْ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُۙ يَسْتَكْبِرُوْنَۙ‏

“குற்றவாளிகளை இப்படித்தான் நாம் நடத்துவோம். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை” என்று அவர்களிடம் கூறப்பட்டால் பெருமையடிப்போராக அவர்கள் இருந்தனர்.

(அல்குர்ஆன்: 37:34-35)

முடிவுரை

இன்றும் கூட வெள்ளையன், கருப்பன் என்று நிறத்தைக் கொண்டும், ஏழை, பணக்காரன் என்று செல்வத்தைக்கொண்டும், உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று குலத்தைக்கொண்டும், படித்தவன், படிக்காதவன் என்று கல்வியைக்கொண்டும் இன்னும் பல விஷயங்களைக்கொண்டும் பெருமையடிப்பர்களைப் பார்க்கிறோம். இதனால் இழிவாகக் கருதப்படுபவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதையும், உண்மைகள் மூடிமறைக்கப்படுவதையும் நாம் காண்கிறோம்.

இதற்கெல்லாம் மேலாக முஸ்லிம்களில் பலர் இணைவைப்பு, பித்அத், ஹராமான காரியங்கள் மற்றும் அனாச்சாரங்களில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய செயல்களுக்கு எதிராகவுள்ள மார்க்க ஆதாரங்களை சமர்ப்பித்து, அவர்களின் வழிகேட்டை விளக்கிய பிறகும், ”எங்களுடைய மூதாதயர்கள் உங்களை விடச் சிறந்த பண்டிதர்கள்; அவர்களின் வழிகாட்டுதல்கள் எப்படி வழிகேடாக இருக்கும்?

நீங்களெல்லாம் இப்போது முளைத்தவர்கள்; ஆனால் நாங்கள் இக்காரியங்களை காலம்காலமாக செய்து கொண்டிருக்கிறோம்” என்று பெருமையடித்தவர்களாக மார்க்கத்திற்கு விரோதமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே இறைமறுப்பின் பக்கம் தூண்டக்கூடிய பெருமையடிக்கின்ற பண்பை விட்டும் விலகியிருப்போமாக.

அப்படி ஒரு வாய்ப்பினை வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்து அருள் புரிவானாக.! வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.

எம். முஹம்மத் சலீம், இஸ்லாமியக் கல்லூரி, கடையநல்லூர்