இறைத்தூதரின் முன்னறிவிப்புகள் (அன்று நடந்தவை)

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2

முன்னுரை

மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

இவ்வுலகத்தில் படைத்த ஒவ்வொரு குலத்தாருக்கும் ஒவ்வொரு நபிமார்களை இறைவன் அனுப்பிக்கொண்டே இருந்தான். இறுதி நபியாக முஹம்மது நபி (ஸல்) அவர்களை அனுப்பி அவர்களுக்கு கியாமத் நாள் வரை அற்புதமாக வைத்து கொள்ளக்கூடிய திருக்குர்ஆனை வழங்கி அனுப்பினான். திருக்குர்ஆனை விட சிறந்த அற்புதமாக எதுவும் இருக்கமுடியாது என்ற அளவிற்கு அதில் ஏராளமான சான்றுகள் பல உள்ளன.

மேலும், நபி (ஸல்) அவர்கள் மூலம் பல செய்திகளை அனுப்பினான். அதுவும் கூட அற்புதங்கள் தான். நபி (ஸல்) அவர்கள் தாம் வாழ்ந்த காலத்திற்கு முன்னரும் பின்னரும் நடப்பவைகளை பற்றி அல்லாஹ் அவருக்கு  அறிவித்திருந்தான். ஒரு மனிதராக அவருக்கு அது தெரியாது. மாறாக, ஒரு தூதராக அனைத்தும் அல்லாஹ் அவருக்கு அறிவித்து காட்டியிருந்தான். அப்படிப்பட்ட நிகழ்வுகளை இந்த உரையில் காண்போம்..

மூஸாவுக்கு அல்லாஹ் காட்டிய அற்புதங்கள்
وَقَالَ مُوسَى يَافِرْعَوْنُ إِنِّي رَسُولٌ مِنْ رَبِّ الْعَالَمِينَ (104) حَقِيقٌ عَلَى أَنْ لَا أَقُولَ عَلَى اللَّهِ إِلَّا الْحَقَّ قَدْ جِئْتُكُمْ بِبَيِّنَةٍ مِنْ رَبِّكُمْ فَأَرْسِلْ مَعِيَ بَنِي إِسْرَائِيلَ (105) قَالَ إِنْ كُنْتَ جِئْتَ بِآيَةٍ فَأْتِ بِهَا إِنْ كُنْتَ مِنَ الصَّادِقِينَ (106) فَأَلْقَى عَصَاهُ فَإِذَا هِيَ ثُعْبَانٌ مُبِينٌ (107) وَنَزَعَ يَدَهُ فَإِذَا هِيَ بَيْضَاءُ لِلنَّاظِرِينَ (108) قَالَ الْمَلَأُ مِنْ قَوْمِ فِرْعَوْنَ إِنَّ هَذَا لَسَاحِرٌ عَلِيمٌ (109) يُرِيدُ أَنْ يُخْرِجَكُمْ مِنْ أَرْضِكُمْ فَمَاذَا تَأْمُرُونَ (110) قَالُوا أَرْجِهْ وَأَخَاهُ وَأَرْسِلْ فِي الْمَدَائِنِ حَاشِرِينَ (111) يَأْتُوكَ بِكُلِّ سَاحِرٍ عَلِيمٍ (112) وَجَاءَ السَّحَرَةُ فِرْعَوْنَ قَالُوا إِنَّ لَنَا لَأَجْرًا إِنْ كُنَّا نَحْنُ الْغَالِبِينَ (113) قَالَ نَعَمْ وَإِنَّكُمْ لَمِنَ الْمُقَرَّبِينَ (114) قَالُوا يَامُوسَى إِمَّا أَنْ تُلْقِيَ وَإِمَّا أَنْ نَكُونَ نَحْنُ الْمُلْقِينَ (115) قَالَ أَلْقُوا فَلَمَّا أَلْقَوْا سَحَرُوا أَعْيُنَ النَّاسِ وَاسْتَرْهَبُوهُمْ وَجَاءُوا بِسِحْرٍ عَظِيمٍ (116) وَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ أَلْقِ عَصَاكَ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ (117) فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا يَعْمَلُونَ (118) فَغُلِبُوا هُنَالِكَ وَانْقَلَبُوا صَاغِرِينَ (119) وَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ (120) قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ (121) رَبِّ مُوسَى وَهَارُونَ (122)

“ஃபிர்அவ்னே! நான் அகிலத்தாருடைய இறைவனின் தூதர்” என்று மூஸா கூறினார். அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதிருக்க நான் கடமைப்பட்டவன். உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றை உங்களிடம் கொண்டு வந்துள்ளேன். எனவே என்னுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பு (எனவும் கூறினார்).

“நீர் உண்மை கூறுபவராக இருந்து, சான்றைக் கொண்டு வந்திருந்தால் அதைக் கொண்டு வாரும்!” என்று அவன் கூறினான். அப்போது அவர் தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது உண்மையாகவே பாம்பாக ஆனது. அவர் தமது கையை வெளியே காட்டினார். உடனே அது பார்ப்போருக்கு வெண்மையாகத் தெரிந்தது.

“இவர் தேர்ந்த சூனியக்காரராக உள்ளார். உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். என்ன கட்டளையிடப் போகிறீர்கள்?” என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர். “இவருக்கும், இவரது சகோதரருக்கும் அவகாசம் அளிப்பீராக! (சூனியக்காரர்களைத்) திரட்டி வருவோரைப் பல ஊர்களுக்கும் அனுப்புவீராக! அவர்கள் தேர்ந்த சூனியக்காரர் ஒவ்வொருவரையும் உம்மிடம் கொண்டு வருவார்கள்” என்றும் (ஃபிர்அவ்னிடம்) கூறினர்.

சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் வந்தனர். “நாங்கள் வெற்றிபெற்றால் எங்களுக்குப் பரிசு உண்டா?” என்று அவர்கள் கேட்டனர். “ஆம்! நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்கள்” என (அவன்) கூறினான். “மூஸாவே! (வித்தைகளை) நீர் போடுகிறீரா? நாங்களே போடட்டுமா?” என்று அவர்கள் கேட்டனர். “நீங்களே போடுங்கள்!” என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்டபோது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர்.

“உமது கைத்தடியைப் போடுவீராக!” என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது. உண்மை நிலைத்தது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாயின. அங்கே அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்; சிறுமையடைந்தனர். சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர். “அகிலத்தாரின் இறைவனாகிய மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்” என்றும் கூறினர்.

(அல்குர்ஆன்: 7:104-122)

இறைதூதரின் முன்னறிவிப்பு

நபி (ஸல்) அவர்கள் தம் மக்களிடத்தில் அல்லாஹ்வின் தூதர் என்று பிரகடனப்படுத்திய பின்னர், ஒரு உத்தரவாதத்தை மக்களிடத்தில் கூறினார். மக்களாகிய உங்களால் என்னுடைய உயிருக்கு எந்தயோரு இடையூறும் செய்ய முடியாது என்று கூறுகிறார். அன்று இருந்த காலகட்டத்தில் அவரை கொல்ல பல கூட்டங்கள் தயாராக இருந்தன. அவருடைய பிரச்சாரத்தை பிடிக்காதவர்கள் உலகம் முழுவதும் இருந்தனர்.

எப்படியாவது இந்த முஹம்மதை ஒலித்தால் தான் நமக்கெல்லாம் நிம்மதி என்று எண்ணக் கூடியவர்கள் கணிசமாக இருந்தார்கள். நாலாபுரத்தில் இருந்தும் படை திரட்டி வந்தார்கள். அது மட்டுமல்லாமல், பல போர்க்களங்களில் மற்ற தளபதிகளை போன்றல்லாமல் நேரடியாக களத்தில் இறங்கி சண்டையிடுபவர்களாக இருந்தார்கள். அப்படியிருந்தும் இவ்வாறு கூறுகிறார் என்றால் அது வெறும் மனிதர்களுடைய வார்த்தைகள் அல்ல. இறைவன் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கிறான்.

 يٰۤـاَيُّهَا الرَّسُوْلُ بَلِّغْ مَاۤ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ‌ ؕ وَاِنْ لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسٰلَـتَهٗ‌ ؕ وَاللّٰهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الْـكٰفِرِيْنَ

தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்.

(அல்குர்ஆன்: 5:67)

இவ்வசனம் அறிவிக்கப்படுவதற்கு முன் மெய்க்காப்பாளர்கள் இருந்தார்கள். அல்லாஹ்விடமிருந்து இவ்வசனம் அருளப்பட்டதற்குப்பின் மெய்க்காப்பாளர்களை போக்கிவிடுமாறு கூறினார்கள். 

யூதப்பெண் நபியவர்களை கொள்ள வேண்டி விருந்திற்கு அழைப்பு
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ يَهُودِيَّةً أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ مَسْمُومَةٍ، فَأَكَلَ مِنْهَا، فَجِيءَ بِهَا فَقِيلَ: أَلاَ نَقْتُلُهَا، قَالَ: «لاَ»، فَمَا زِلْتُ أَعْرِفُهَا فِي لَهَوَاتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

யூதப் பெண் ஒருத்தி நபி(ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். ‘அவளைக் கொன்று விடுவோமா?’ என்று நபி (ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், ‘வேண்டாம்’ என்று கூறிவிட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : (புகாரி: 2617) 

யூதப்பெண்மணி நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் கொடுத்து கொள்ள நினைத்தார். ஏனென்றால், யூதர்களுக்கு வட்டித்தொழில் தான் பிரதான தொழிலாக இருந்தது. வட்டி தொழிலின் முதுகெலும்பை வேறோடு கலையெடுத்தார். அதற்கு பங்கம் வகுக்கும் வகையில் நபி (ஸல்) அவர்கள் தடையாக இருந்ததால் அவர்களை கொள்ள நினைத்து விஷம் கலந்த உணவை உண்ண கொடுத்தார். அதை உண்ட நபியவர்களுக்கு விஷம் கலந்த உணவினால் சிறிய பாதிப்புகள் இருந்ததே தவிர, அவர்களை கொல்ல முடியவில்லை. ஏனென்றால், அல்லாஹ் நபியவர்களை காப்பாற்றினான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு

நபித் தோழர்களும் மனிதர்களே! அவர்களிடமும் தடுமாற்றங்களும், தவறான முடிவுகளும் ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னறிவிப்புச் செய்து சென்றுள்ளனர்.

நியாயத் தீர்ப்பு நாளில் மக்களெல்லாம் பதை பதைப்புடன் நிற்கும் போது நடக்கும் ஒரு நிகழ்ச்சியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

 وَإِنَّ أُنَاسًا مِنْ أَصْحَابِي يُؤْخَذُ بِهِمْ ذَاتَ الشِّمَالِ، فَأَقُولُ أَصْحَابِي أَصْحَابِي، فَيَقُولُ: إِنَّهُمْ لَمْ يَزَالُوا مُرْتَدِّينَ عَلَى أَعْقَابِهِمْ مُنْذُ فَارَقْتَهُمْ، فَأَقُولُ كَمَا قَالَ العَبْدُ الصَّالِحُ “: {وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِي} [المائدة: 117]- إِلَى قَوْلِهِ – {العَزِيزُ الحَكِيمُ} [البقرة: 129]

என் தோழர்களில் சிலர் இடது புறமாகப் பிடிக்கப்படுவார்கள். (அதாவது நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படுவார்கள்) அப்போது நான், “அவர்கள் என் தோழர்கள்! அவர்கள் என் தோழர்கள்! என்று கூறுவேன். அதற்கு இறைவன், `நீ அவர்களைப் பிரிந்தது முதல் வந்த வழியே அவர்கள் திரும்பிச் சென்று கொண்டே இருந்தனர் என்று கூறுவான். அப்போது நான், அவர்களுடன் நான் இருந்த வரை அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தேன். எப்போது என்னை நீ கைப்பற்றிக் கொண்டாயோ (அப்போது முதல்) நீயே அவர்களைக் கண்காணிப்பவனாவாய் என்று என் சகோதரர் ஈஸா கூறியது போல் நானும் கூறிவிடுவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : (புகாரி: 3349) , 3447

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் சில நபித்தோழர்கள் தவறான பாதைக்குச் சென்று விடுவார்கள் என்பது முன்னரே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவனால் அறிவிக்கப்பட்டு அவர்கள் அதனை நமக்கு அறிவித்துச் சென்று விட்டனர். நபித்தோழர்களில் சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தராத பித்அத்களை உருவாக்குவார்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு முன்னறிவிப்புச் செய்துள்ளனர்.

பிரயாணத்தில் மதிய ஓய்வின் போது வாளை மரத்தில் தொங்க விடுவது

நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் நஜ்து நாட்டை நோக்கி ஒரு புனிதப் போருக்காகச் சென்றேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பியபோது அவர்களுடன் நானும் திரும்பினேன். அப்போது முள்மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கில் நாங்கள் வந்து கொண்டிருந்தபோது மதிய ஓய்வு கொள்ளும் நேரம் வந்துவிட்டது.

உடனே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அங்கு தங்கினார்கள். மக்கள் (ஓய்வெடுப்பதற்காக) மரங்களின் நிழல் தேடி (பல திசைகளிலும்) பிரிந்து போய்விட்டனர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு (கருவேல) மரத்தின் கீழே தங்கினார்கள். தம் வாளை மரத்தில் மாட்டித் தொங்கவிட்டார்கள்.

நாங்கள் சற்று நேரம் உறங்கினோம். அதற்குள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். (நாங்கள் கண்விழித்துப் பார்த்தால்) அப்போது அவர்களுக்கு அருகே ஒரு கிராமவாசி நின்றிருந்தார். நபி (ஸல்) அவர்கள், ‘இவர் நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது (நான் மரத்தில் தொங்க விட்டிருந்த என்னுடைய) வாளை எனக்கெதிராக உருவினார்.

நான் கண்விழித்துப் பார்த்தபோது இவரின் கையில் உறையிலிருந்து உருவிய (என்னுடைய) வாள் இருந்தது. இவர், ‘என்னிடமிருந்து உன்னை யார் காப்பாற்றுவார்?’ என்று கேட்டார். நான் ‘அல்லாஹ்’ என்று (மூன்று முறை) கூறினேன்’ என்றார்கள். அந்த கிராமவாசி (அங்கே) அமர்ந்திருந்தும் கூட, அவரை நபியவர்கள் தண்டிக்கவில்லை.

அறிவிப்பவர் : ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி)
நூல் : (புகாரி: 2910) , 2913, 4137, 4139

மக்கா வெற்றி பற்றிய முன்னறிவிப்பு

நபி (ஸல்) அவர்கள் எதிரிகளின் தொல்லையால் மக்காவை விட்டு தமது தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களுடன் வெளியே செல்லக்கூடிய நிலையிலும் கூட கம்பீரமாக தனது இறைவனிடத்தில் இருந்து வந்த முன்னறிவிப்புகளை அறிவிக்கிறார்கள். தன்னை எதிர்த்தவர்களிடத்தில் தான் திரும்ப வருவதாக கூறி செல்கிறார். என்னை படைத்த இறைவன் என்னை இங்கு திரும்ப கொண்டு வருவதாக கூறினார்.

اِنَّ الَّذِىْ فَرَضَ عَلَيْكَ الْقُرْاٰنَ لَرَآدُّكَ اِلٰى مَعَادٍ‌ ؕ قُلْ رَّبِّىْۤ اَعْلَمُ مَنْ جَآءَ بِالْهُدٰى وَمَنْ هُوَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ‏

(முஹம்மதே!) உமக்கு இந்தக் குர்ஆனை விதித்தவன் உம்மை வந்த இடத்திலேயே மீண்டும் சேர்ப்பவன். “நேர்வழியைக் கொண்டு வந்தவன் யார்? தெளிவான வழிகேட்டில் உள்ளவன் யார்? என்பதை என் இறைவன் நன்கறிந்தவன்” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 28:85)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை விரட்டிய சொந்த ஊரைத் தமது ஆளுகையின் கீழ் கொண்டு வருவார்கள் என கனவின் மூலம் இறைவன் காட்டினான். கீழ் கூறப்பட்டவாறு அந்த முன்னறிவிப்பு நிறைவேறியது.

لَـقَدْ صَدَقَ اللّٰهُ رَسُوْلَهُ الرُّءْيَا بِالْحَـقِّ‌ ۚ لَـتَدْخُلُنَّ الْمَسْجِدَ الْحَـرَامَ اِنْ شَآءَ اللّٰهُ اٰمِنِيْنَۙ مُحَلِّقِيْنَ رُءُوْسَكُمْ وَمُقَصِّرِيْنَۙ لَا تَخَافُوْنَ‌ؕ فَعَلِمَ مَا لَمْ تَعْلَمُوْا فَجَعَلَ مِنْ دُوْنِ ذٰلِكَ فَتْحًا قَرِيْبًا‏

அல்லாஹ் தனது தூதருக்கு (அவர் கண்ட) கனவை உண்மையாக்கி விட்டான். (எனவே) அல்லாஹ் நாடினால் நீங்கள் பாதுகாப்பாகவும், உங்கள் தலைகளை மழித்தும், தலை முடியைக் குறைத்தும், அஞ்சாமலும் (கஅபா எனும்) புனிதப்பள்ளியில் நுழைவீர்கள். நீங்கள் அறியாததை அவன் அறிவான். இது அல்லாத சமீபத்திய வெற்றியையும் அவன் ஏற்படுத்தி விட்டான்.

(அல்குர் ஆன் 48:27)

நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்த முன்னறிவிப்புகளை போல மக்கா நகரத்திற்கு திரும்ப வருகிறார்கள். பெரிய யுத்தம் ஏதும் செய்யாமலும், கத்தியின்றி இரத்தமின்றி மிகச் சாதாரணமாக மக்காவிற்கு வருகை தருகிறார்கள். மக்களுக்கும் அவரை எதிர்க்கும் வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. ஏனென்றால், இது அல்லாஹ்வின் கட்டளை.

மக்களும் இதை பார்த்து நபி அவர்கள் கூறியது போல வந்து விட்டார்களே! ஆம் இது உண்மையாக இறைவனின் வார்த்தைகள் தாம் என்று நம்பி அன்றைய தினத்தில் தான் அபூசுபியான், காலித் பின் வலீத் போன்ற அதிகமானோர் இஸ்லாத்தை ஏற்றனர்.

மஸ்ஜிதை பற்றிய முன்னறிவிப்புகள்

நபி (ஸல்) அவர்கள் தமது மக்களிடம் தம்மை கொல்வதற்காகவும், சில முனாஃபிக்குகள் குழப்பம் ஏற்படுத்தவும், சிலர் மஸ்ஜித்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு அங்கு சென்றார்கள். அல்லாஹ் முஹம்மது நபிக்கு முன்னரே அறிவித்து காட்டினான்.

وَالَّذِينَ اتَّخَذُوا مَسْجِدًا ضِرَارًا وَكُفْرًا وَتَفْرِيقًا بَيْنَ الْمُؤْمِنِينَ وَإِرْصَادًا لِمَنْ حَارَبَ اللَّهَ وَرَسُولَهُ مِنْ قَبْلُ وَلَيَحْلِفُنَّ إِنْ أَرَدْنَا إِلَّا الْحُسْنَى وَاللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ
لَا تَقُمْ فِيهِ أَبَدًا لَمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَى مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَنْ تَقُومَ فِيهِ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ
أَفَمَنْ أَسَّسَ بُنْيَانَهُ عَلَى تَقْوَى مِنَ اللَّهِ وَرِضْوَانٍ خَيْرٌ أَمْ مَنْ أَسَّسَ بُنْيَانَهُ عَلَى شَفَا جُرُفٍ هَارٍ فَانْهَارَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ

தீங்கிழைப்பதற்காகவும், (ஏகஇறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் “நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை” என்று சத்தியம் செய்கின்றனர். “அவர்கள் பொய்யர்களே” என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.

அதில் நீர் ஒருபோதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.

அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தின் மீதும், அவனது திருப்தியின் மீதும் தனது கட்டடத்தை நிர்மாணித்தவன் சிறந்தவனா? அல்லது அரிக்கப்பட்டு விழுந்து விடும் கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன் நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன் சிறந்தவனா? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன்: 9:107,108,109)

இறுதிப்பேருரையில் கூறிய  முன்னறிவிப்புகள்

நபி (ஸல்) அவர்கள் தமது இறுதி பேருரையில் துல்ஹஜ் மாதம் மக்கா நகரத்தில் மக்களை ஒன்று திரட்டி தாம் சொல்ல வந்த அனைத்து செய்திகளையும் உள்ளடக்கி கூறிவிட்டு இவ்வருடத்திற்கு பிறகு நான் உங்களை காண மாட்டேன் என்று அல்லாஹ் அறிவித்த செய்தியை கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதால்தான் வாழும் காலத்திலே இயற்கையாக மரணம் அடைவேன் என்றும் யாராலும் கொல்லப்பட மாட்டேன் என்றும் கூறினார்கள். 

إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ (1) وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا (2) فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا (3)

அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் வரும்போது, அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும்போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 110:1,2,3)

மேலும், அந்நஸ்ர் என்ற அத்தியாயம் வந்த போது சில ஸஹாபாக்கள் அதை கேட்டு அழுதனர். ஏனென்றால், இச்செய்தி நபி (ஸல்) அவர்களின் முடிவை காட்டுவதாக கூறினார்கள்.

உலகம் அழிவதற்கு முன் 6 நிகழ்வுகள் நடைபெறும் என்ற முன்னறிவிப்பு
أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ تَبُوكَ وَهُوَ فِي قُبَّةٍ مِنْ أَدَمٍ، فَقَالَ:  اعْدُدْ سِتًّا بَيْنَ يَدَيِ السَّاعَةِ: مَوْتِي، ثُمَّ فَتْحُ بَيْتِ المَقْدِسِ، ثُمَّ مُوْتَانٌ يَأْخُذُ فِيكُمْ كَقُعَاصِ الغَنَمِ، ثُمَّ اسْتِفَاضَةُ المَالِ حَتَّى يُعْطَى الرَّجُلُ مِائَةَ دِينَارٍ فَيَظَلُّ سَاخِطًا، ثُمَّ فِتْنَةٌ لاَ يَبْقَى بَيْتٌ مِنَ العَرَبِ إِلَّا دَخَلَتْهُ، ثُمَّ هُدْنَةٌ تَكُونُ بَيْنَكُمْ وَبَيْنَ بَنِي الأَصْفَرِ، فَيَغْدِرُونَ فَيَأْتُونَكُمْ تَحْتَ ثَمَانِينَ غَايَةً، تَحْتَ كُلِّ غَايَةٍ اثْنَا عَشَرَ أَلْفًا

தபூக் போரின்போது நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஒரு தோல் கூடாரத்தில் இருந்தார்கள். அப்போது அவர்கள், ‘இறுதி நாள் வருவதற்கு முன்பு (அதற்குரிய) ஆறு அடையாளங்கள் நிகழும். அவற்றை எண்ணிக் கொள்:

1. என்னுடைய மரணம்

2. பைத்துல் மக்திஸ் வெற்றி கொள்ளப்படுதல்.

3. ஆடுகளுக்கு வருகிற (ஒரு வகை) நோயைப் போன்று கொள்ளை நோய் ஒன்று வந்து உங்களைப் பீடிக்கும் (அதனால் ஏராளமானவர்கள் இறந்து போய் விடுவார்கள்)

4. பிறகு செல்வம் பெருகி வழியும். எந்த அளவிற்கென்றால் ஒருவருக்கு நூறு தீனார்கள் கொடுக்கப்பட்ட பின்பும் (அதனை அற்பமாகக் கருதி) அவர் அதிருப்தியுடனிருப்பார்.

5. பிறகு தீமையொன்று தோன்றும். அரபுகளின் வீடுகளில் அது நுழையாத வீடு எதுவும் இருக்காது.

6. பிறகு (ரோமர்களுக்கும்) உங்களுக்குமிடையே சமாதான ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். (அதை மதிக்காமல்) அவர்கள் (உங்களை) மோசடி செய்து விடுவார்கள். பிறகு உங்களை எதிர்த்துப் போரிடுவதற்காக எண்பது கொடிகளின் கீழே (அணி வகுத்து) அவர்கள் வருவார்கள். ஒவ்வொரு கொடிக்கும் கீழே பன்னிரண்டாயிரம் போர் வீரர்கள் இருப்பார்கள்.

அறிவிப்பவர் : அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி)
நூல் : (புகாரி: 3176) 

நபி (ஸல்) அவர்கள் அறிவித்த மரணங்கள்

நபி (ஸல்) அவர்கள் அம்மார் இப்னு யாஸிர் (ரலி) அவர்களை பார்த்து நீர் இயற்கையாக மரணிக்காமல் ஓர் போரில் குத்தி கொல்லப்படுவதாக முன்னறிவிப்பு கொடுத்தார்கள். அதேப்போன்று அம்மார் இப்னு யாசிர் (ரலி) அவர்கள் அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), ஆகியோரின் ஆட்சிக்கு பிறகு அலி (ரலி) அவர்களின் ஆட்சிக்கு எதிராக வரம்பு மீறி போர் புரிந்த முஆவியாவின் போர்களத்தில் கொல்லப்பட்டார்கள். ஒருவர் இறக்கின்ற செய்தியை ஒரு சாதாரண மனிதரால் எவ்வாறு சொல்ல முடியும். அது அல்லாஹ்வின் வார்த்தையால் என்பதால் தான் அது அவ்வாறு நடந்தது.

அதேப் போன்று நபி (ஸல்) அவர்கள் தம் மனைவிகளை பார்த்து தமக்கு பிறகு யார் முதலில் தன்னை வந்து சேர்வார் என்பதைக் கூறினார்கள்

நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘உங்களின் மரணத்திற்குப் பின் எங்களில் யார் முதலில் வந்து உங்களைச் சேர்வார்?’ எனக் கேட்டதற்கு, ‘உங்களுள் கை நீளமானவரே!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர்கள் ஒரு குச்சியை எடுத்துத் தங்களின் கைகளை அளந்து பார்த்தபோது ஸவ்தா (ரலி)வின் கைகளே மிகவும் நீளமானவையாக இருந்தன.

(ஸைனப் (ரலி) இறந்த) பிறகுதான் கை நீளமானவர் என்பது, அதிகம் தர்மம் செய்பவரைக் குறிக்கிறது என்பதை அறிந்தோம். (ஸைனப்) அவ்வாறு அதிகம் தர்மம் செய்பவராக இருந்தால்தான் நபி (ஸல்) அவர்களை முதலில் அடைந்தார். மேலும் அவர் தர்மம் செய்வதை (மிகவும்) விரும்பக் கூடியவராகவும் இருந்தார்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : (புகாரி: 1420) 

فَسَأَلْتُهَا فَقَالَتْ: أَسَرَّ إِلَيَّ: «إِنَّ جِبْرِيلَ كَانَ يُعَارِضُنِي القُرْآنَ كُلَّ سَنَةٍ مَرَّةً، وَإِنَّهُ عَارَضَنِي العَامَ مَرَّتَيْنِ، وَلاَ أُرَاهُ إِلَّا حَضَرَ أَجَلِي، وَإِنَّكِ أَوَّلُ أَهْلِ بَيْتِي لَحَاقًا بِي». فَبَكَيْتُ، فَقَالَ: «أَمَا تَرْضَيْنَ أَنْ تَكُوني سَيِّدَةَ نِسَاءِ أَهْلِ الجَنَّةِ، أَوْ نِسَاءِ المُؤْمِنِينَ» فَضَحِكْتُ لِذَلِكَ

‘(வானவர்) ஜிப்ரீல் ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறை என்னை குர்ஆனை ஓதச் செய்து வந்தார்கள். இந்த ஆண்டு மட்டும் அவர்கள் என்னை அதை இரண்டு முறை ஓதச் செய்தார்கள். என் வாழ்நாள் முடிவடையும் நேரம் வந்துவிட்ட(தைக் குறிப்ப) தாகவே அதை கருதுகிறேன். என் வீட்டாரில் என்னை முதலில் வந்தடையப் போவது நீ தான்’ என்று கூறினார்கள்.

எனவே, நான் அழுதேன். உடனே, அவர்கள், ‘சொர்க்கவாசிகளில் பெண்களின்… அல்லது இறைநம்பிக்கையாளர்களில்…. பெண்களின் தலைவியாக இருக்க நீ விரும்பவில்லையா?’ என்று கேட்டார்கள். அதைக் கேட்டு (மகிழ்ச்சியால்) நான் சிரித்தேன்’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : (புகாரி: 3624) , 3626, 3716, 4434, 6285

நபி (ஸல்) அவர்கள் தாம் இறந்த பிறகு இருபிரிவினர் சமாதானம் அடைவதாக கூறும் முன்னறிவிப்பு

அலீ (ரலி) அவர்களின் மகனான ஹஸன் (ரலி), முஆவியா (ரலி) அவர்களை மலைகளைப் போன்ற (பிரம்மாண்டமான) படையணிகளுடன் எதிர்கொண்டார்கள். (அவற்றைக் கண்ட முஆவியா (ரலி) அவர்களின் ஆலோசகர்) அம்ர் இப்னு ஆஸ் (ரலி), ‘இவற்றில் உள்ள (போரிடுவதிலும், வீரத்திலும்) சமபலம் வாய்ந்தவர்களை நீங்கள் கொன்று விடாதவரை இந்தப் படைகள் பின்வாங்கிச் செல்லாது என்று கருதுகிறேன்’ என்று கூறினார்கள்.

அவருக்கு, முஆவியா (ரலி) அல்லாஹ்வின் மீதாணையாக! அவ்விருவரில் முஆவியாவே, சிறந்தவராக இருந்தார்…’ அம்ரே! இவர்கள் அவர்களையும் அவர்கள் இவர்களையும் கொன்று விடுவார்களாயின் மக்களின் நிர்வாகத்திற்குப் பொறுப்பேற்க என்னிடம் வேறு யார் இருப்பார்கள்? (என் குடி) மக்களின் பெண்களைப் பாதுகாக்க என்னிடம் (வேறு) யார் இருப்பார்கள்? அவர்களின் சொத்துகளைப் பாதுகாக்க என்னிடம் (வேறு) யார் தான் இருப்பார்கள்?’ என்று பதிலளித்தார்கள்.

எனவே, ஹஸன் (ரலி) அவர்களிடம் குறைஷிகளில் பனூ அப்தி ஷம்ஸ் கிளையாரைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அவர்களையும், அப்துல்லாஹ் இப்னு ஆமிர் இப்னி குரைஸ்(ரலி) அவர்களையும் அனுப்பி, ‘நீங்கள் இருவரும் இந்த மனிதரிடம் சென்று விபரத்தை எடுத்துரைத்துப் பேசி, அவரிடம் (சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி) கோருங்கள்’ என்று கூற, அவ்விருவரும் (அவ்வாறே) ஹஸன் (ரலி) அவர்களிடம் சென்று, அவர்களின் அறைக்குள் நுழைந்து பேசினார்கள்; ஹஸன்(ரலி) அவர்களிடம் (முஅவியா(ரலி) அவர்களின் தூதை எடுத்துச்) சொல்லி (அமைதி ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வரும்படி) கோரினார்கள்.

அதற்கு அவ்விருவரிடமும் ஹஸன்(ரலி), ‘நாங்கள் அப்துல் முத்தலிபின் மக்கள்; இந்த செல்வத்தை (எங்கள் தலைமைத்துவத்தின் காரணத்தால்) பெற்றிருக்கிறோம். (அதை எங்கள் குடிமக்கள், படைவீரர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே செலவு செய்து வருகிறோம்.) இந்தச் சமுதாயமோ தன் இரத்தத்தை சிந்திப் பழகிவிட்டது’ என்று கூறினார்கள்.

இதற்கு அவ்விருவரும், ‘முஆவியா (ரலி) உங்களுக்கு இவ்வளவு (மானியம்) தருவதாகக் கூறுகிறார்கள்; மேலும் (சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி) உங்களிடம் கோருகிறார்கள்’ என்று கூறினர். அதற்கு ஹஸன் (ரலி), ‘இந்த விஷயத்தில் எனக்குப் பொறுப்பு யார்?’ என்று கேட்க, அவ்விருவரும் ‘இதில் உங்களுக்கு நாங்கள் பொறுப்பு’ என்று கூறினர்.

ஹஸன் (ரலி) கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் அவர்கள், ‘நாங்கள் உங்களிடம் இதற்குப் பொறுப்பேற்கிறோம்’ என்றே கூறினார்கள். இறுதியாக, ஹஸன் (ரலி), முஆவியா (ரலி) அவர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள். மேலும், ‘(ஒரு முறை) இறைத்தூதர் மிம்பர் மீதிருக்க, அவர்களின் ஒரு பக்கத்தில் ஹஸன் இப்னு அலீ( ரலி) அமர்ந்திருக்க, நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை மக்களை நோக்கியும், மற்றொரு முறை ஹஸன் (ரலி) அவர்களை நோக்கியும் (உரை நிகழ்த்திய வண்ணம்), ‘இந்த என்னுடைய புதல்வர் (கண்ணியத்திற்குரிய) தலைவராவார். முஸ்லிம்களின் இரண்டு பெரும் கூட்டத்தாரிடையே இவரின் மூலமாக அல்லாஹ் சமாதானம் செய்து வைக்க விரும்புகிறான்’ என்று கூறிக் கொண்டிருந்ததை பார்த்தேன்’ என்று அபூபக்ரா (ரலி) கூறியதை கேட்டேன்.

அறிவிப்பவர் : ஹஸன் பஸரீ (ரஹ்)
நூல் : (புகாரி: 2704) , 2706, 3229, 3746, 7109

நபியவர்கள் முன்னறிவித்த கலிஃபாக்களின் மரணங்கள்
صَعِدَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُحُدًا وَمَعَهُ أَبُو بَكْرٍ، وَعُمَرُ، وَعُثْمَانُ، فَرَجَفَ، وَقَالَ: «اسْكُنْ أُحُدُ – أَظُنُّهُ ضَرَبَهُ بِرِجْلِهِ -، فَلَيْسَ عَلَيْكَ إِلَّا نَبِيٌّ، وَصِدِّيقٌ، وَشَهِيدَانِ»

நபி (ஸல்) அவர்களுடன் அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரும் மதீனாவில் உள்ள உஹது மலை மேல் நின்று கொண்டு இருக்கின்றனர். அப்போது திடீரெனெ நில அதிர்வு ஏற்படுகின்றது. அப்போது நபியவர்கள், உஹது மழையே! நிதானமாகு! உன்னுடைய அதிர்வை நிறுத்து. உன் முதுகின் மேல் யார் இருக்கிறார்கள் தெரியுமா ? ஒரு நபி இருக்கிறார்; ஒரு (சித்திக்) உண்மையாளர் இருக்கிறார்;

இரண்டு உயிர் தியாயிகள் (ஷஹீத்) இருக்கிறார்கள்; தானும், அபூபக்கரும் இயற்கையாக மரணிப்பதாவும், உமர் & உஸ்மான் (ரலி) ஆகியோர் மக்களால் கொல்லப்பட்டு மரணிப்பதையே இவ்வாறு நபியவர்கள் கூறுகிறார்கள். இச்செய்தி நடைபெற்ற பல வருடங்களுக்கு பிறகு நபியவர்கள் அறிவித்ததை போன்று நடைபெற்றது. இவை யாவும் ஒரு மனிதனாக சொல்லவே முடியாத ஒன்று. அது அல்லாஹ்வின் வார்த்தையாக இருக்கவே அவ்வாறு நடைபெற்றது.

நூல் : (புகாரி: 3699) 

ஒட்டகப்போரின் முன்னறிவிப்புகள்

நபியவர்கள் அலீ (ரலி) அவர்களை பார்த்து உனக்கும் என்னுடைய மனைவி ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் இடையே ஒரு பெரிய விவகாரம் நடைபெறும் என்றார்கள். அதை கேட்ட அலீ (ரலி), எனக்கும் ஆயிஷாவுக்குமா சண்டை நடக்க போகிறது? அப்படியானால், என்னைவிட துர்பாக்கியசாலி யாரும் இருக்க முடியாது என்று அலீ (ரலி) கூறுகிறார்கள். அதற்கு நபியவர்கள், இல்லை. அப்படி நடக்குமேயானால் ஆயிஷாவை பாதுகாப்பான இடத்திற்கு நீர் அனுப்பி வைக்க வேண்டும் என்று நபி (ஸல்)  கூறினார்கள்.

அபூபக்கர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோரின் ஆட்சிக்கு பிறகு அலீ (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் அவர் மீது இரண்டு விதமான சர்ச்சைகள் இருந்தன. ஒன்று அலீ (ரலி) அவர்கள் தான் உஸ்மானை கொன்றதாகவும், மற்றொன்று உஸ்மானை கொலை செய்தவன் மதீனாவிலே இருக்க அவனை அலீ (ரலி) அவர்கள் தண்டிக்காமல் விட்டதும் ஆகும். மேலும், அலீ (ரலி) அவர்கள் மதீனாவில் தங்காமல் கூபாவிற்கு சென்றதும் மக்களை மிகவும் சந்தேகத்தில் ஆழ்த்தியது. இதே சந்தேகத்தில் ஆயிஷா (ரலி) அவர்களும் அலீ (ரலி) அவர்களுக்கு எதிராக ஒரு படை திரட்டி போர் செய்ய முறைப்பட்ட போது தான் நபியவர்கள் கூறிய முன்னறிவிப்பு நினைவில் வர இருவரும் சமரசம் செய்தனர்.                                                           

நூல் : அஹ்மத், தப்ரானீ

இஸ்லாம் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளின் அடிப்படையில் வாழ்ந்து மரணிப்போமாக! மறுமையில் வெற்றி பெறுவோமாக!