இறைவனுக்கு உறவுகள் இல்லை
அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
அல்லாஹ் தேவையற்றவனாக இருக்கிறான். அவனுக்கு எந்த உறவும் தேவை இல்லை. அவனுக்கு ஏன் உறவுகள் தேவையில்லை.. என்பன போன்ற தகவல்களை இந்த உரையில் காண்போம்..
அதற்கடுத்து, அல்லாஹுஸ்ஸ்ஸமது-الله الصمد-அல்லாஹ் எந்தத் தேவையுமற்றவன் என்பது இதற்குப் பொருள். பகுத்தறிவு பேசுகிறவர்கள் மதத்தை வெறுப்பதற்கு கடவுளின் பெயரால் நடக்கும் சுரண்டல்தான் முக்கிய காரணமாக உள்ளது.
மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் மனிதர்களை மூளைச் சலவை செய்து வயிறு வளர்க்கிறார்கள். சுயநலத்திற்காக கடவுளையே பலவீனமாக்கி சுயலாபம் அடைகிறார்கள். புரோகிதம் என்ற பெயரில் கடவுளை வைத்து கடவுளுக்கு இடைத்தரகராக இருந்து கொண்டு கடவுளை வைத்து ஏமாற்றுகிறார்கள். கடவுளுக்குப் படையல் வைக்க வேண்டும், கடவுளுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும், கடவுளுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும், கடவுளுக்குக் காணிக்கை செலுத்த வேண்டும் என்று கடவுளின் பெயரைப் பயன்படுத்தித்தான் புரோகிதர்கள் தங்களது வயிறுகளை வளர்த்துக் கொள்கின்றனர்.
எந்தப் புரோகிதனும், நான்தான் இந்தக் கோயிலைக் கட்டிக் காக்கிறேன், இந்தக் கோவிலைப் பெருக்குகிறேன், தண்ணீர் ஊற்றிக் கழுவுகிறேன், நான்தான் இதற்காக எல்லா முயற்சிகளையும் செய்கிறேன் என்று கூறி அவன் பெயரைச் சொல்லி மக்களிடம் வசூல் செய்திருந்தால் கூட அதைக் குறைசொல்ல முடியாது. அவர்கள் கடவுளின் பெயரைப் பயன்படுத்தி சுரண்டவில்லை என்று கருதலாம். அவன் செய்வது தவறாக இருந்தாலும் உள்ளதைச் சொல்லித்தான் கேட்கிறான் என்று எடுத்துக் கொள்ளலாம்.
அவ்வாறு இல்லாமல் கடவுளுக்கு காணிக்கை தாருங்கள் என்று போதனை செய்துதான் இந்தச் சுரண்டல் நடக்கிறது. ஆனால் அவை கடவுளுக்குச் செல்வதில்லை. கடவுளுக்குத் தாருங்கள் என்று மக்களிடம் கேட்டுவாங்கிக் கொண்டு தங்களது பாக்கெட்டுக்களை நிரப்பிக் கொள்கின்றனர். கடவுள் பெயரைப் பயன்படுத்தி வயிறு வளர்க்காதீர்கள் என்று சொன்னால் இவர்கள் நிறுத்த மாட்டார்கள்.
அதனால்தான் அல்லாஹ் இந்தத் தீமைக்கு ஆணிவேறாக இருக்கிற அடிப்படையை வீழ்த்துகிறான். உதாரணத்திற்கு ஒரு விஷச்செடியின் காம்பினை வெட்டவெட்ட அது வளர்ந்து கொண்டேதான் இருக்கும். திரும்பவும் வெட்டுவீர்கள். அது திரும்பவும் வளர்ந்து கொண்டேயிருக்கும். இப்படியே வெட்டவெட்ட அது வளர்ந்து கொண்டேதான் இருக்கும். இதற்கு ஒரே வழி வேரோடு விஷச் செடியைக் பிடுங்கி எறிய வேண்டும். விஷச்செடியின் வேரில் ஆசிட்டை ஊற்றி வேறைச் செயலிழக்கச் செய்ய வேண்டும். அதன்பிறகு அறவே அது முளைக்காது.
இதுபோன்று கடவுளின் பெயரைப் பயன்படுத்தி மக்களைச் சுரண்டுவதை நிறுத்துவதற்கு, கடவுள் எந்தத் தேவையும் அற்றவன் என்று சொல்லச் சொல்லுகிறான். கடவுளின் இலக்கணத்தை ஒழுங்காகவும் முறையாகவும் புரிந்திருந்தால் கடவுளுக்காக ஏதாவது வேண்டும் என்று மக்களிடம் கேட்பார்களா? அதனால்தான் அல்லாஹ் தன்னைப் பற்றி வர்ணிக்கும்போது, الله الصمد –அல்லாஹ் எந்தவொரு தேவையுமில்லாதவன் என்று கூறுகிறான்.
எனவே கடவுளுக்குத் தேவை என்கிற கருத்துத்தான் எல்லாவிதமான சுரண்டலுக்கும் வழிவகுக்கிறது. கடவுளுக்கு சாப்பாட்டையோ உணவையோ படைக்கிறார்கள். ஆனால் அந்தக் கடவுள் அதில் ஒரு பருக்கையைக்கூட எடுத்ததே கிடையாது. ஆனால் இந்த வயிறு வளர்க்கிற புரோகிதக் கூட்டம், உணவு அப்படியேதான் இருக்கும். அதிலுள்ள சத்துக்களை கடவுள் எடுத்துக் கொள்ளுவார் என்று நம் காதுகளில் பூ சுற்றுவார்கள்.
கடவுளுக்குப் படைப்பதற்கு முன்னால் அந்த உணவை எடைபோடுங்கள். அது ஒரு கிலோ இருக்கும். படைத்த பிறகும் அந்த உணவை எடைபோடுங்கள். அப்போதும் அது ஒரு கிலோவாகத்தான் இருக்கும். அதில் எந்த ஒன்றையும் அந்தக் கடவுள் எடுத்து இருக்கவே மாட்டார்.
சத்தை மட்டும் கடவுள் எடுத்துக் கொள்வார் என்று சொல்கிறீர்களா? அதற்கும் டெஸ்ட் இருக்கத்தான் செய்கிறது. ஒரு கிலோ உணவில் எத்தனை கிராம் கலோரி இருக்கிறது? எத்தனை கிராம் தாதுஉப்புக்கள் இருக்கிறது?
எத்தனை கிராம் புரதச்சத்துக்கள்? என்பதையெல்லாம் புள்ளி விவரமாக எடுத்துக் கொள்ளுங்கள். கடவுளுக்குப் படையல் செய்த பிறகு மீண்டும் அந்த ஒரு கிலோ உணவின் சத்துக்களை டெஸ்ட் செய்தால், படையலுக்கு முன்னால் என்னவெல்லாம் அதில் இருந்ததோ எந்த அளவுக்கு இருந்ததோ அதுவெல்லாம் அந்தந்த அளவில்தான் இருக்கும். கடவுள் இந்த உணவில் இருந்த குளுகோஸை எடுத்துவிட்டார் என்று கண்டுபிடித்தாலாவது ஓரளவுக்கு நம்பலாம். அதுவும் இல்லை.
இப்படியெல்லாம் மக்கள் சிந்திக்காமல் இருக்கிற அறியாமையைப் பயன்படுத்தி புரோகிதக் கூட்டம், கடவுள் தனக்குத் தேவையானது போக மிச்சத்தை வைத்துள்ளார். அதைத்தான் நான் சாப்பிடுகிறேன் என்றுகூறி கடவுளின் பெயரைப் பயன்படுத்தி தங்களது வயிற்றை வளர்க்கிறார்கள். இது கடவுளின் மீது இவர்கள் ஏற்படுத்தியுள்ள தவறான முறையாகும். அதனால்தான் இஸ்லாம் கடவுளைப் பற்றிக்கூறும் போது, எந்த ஒரு தேவையும் இல்லை என்று கூறுகிறது. உணவே தேவையில்லை என்கிற போது சத்து மட்டும் தேவையா? என்றால் இதுவும் போலி வாதமாகும்.
அதுபோன்று கடவுளுக்குத் தேங்காய் உடைக்கும் போது பார்த்தால், தேங்காயை உடைத்த ஓடு அங்குதான் இருக்கும். தேங்காயை உடைத்தவுடனேயே சுற்றி இருப்பவர்கள் பறித்துக் கொள்வார்கள். தண்ணீரைப் பூமி உறிஞ்சிக்கொள்கிறது. கடவுள் எதைக் எடுத்துக் கொண்டார்? என்று கேட்ட கேள்விக்கு, ஒரு தத்துவத்தை உருவாக்கினார்கள். ‘சத்தம் சாமிக்கு! தண்ணீர் பூமிக்கு! தேங்காய் ஆசாமிக்கு!” என்று நேரத்துக்கு தகுந்தமாதிரியெல்லாம் கடவுளைத் தேவையுடையவர்களாகவே சித்தரித்துக் கொண்டார்கள்.
இந்த இடத்தில் கடவுளுக்கு சத்தும் உணவும் தேவைப்படவில்லை.
அதற்கு மாறாக தேங்காயை உடைக்கும்போது ஏற்படுகிற சப்தம் கடவுளுக்குத் தேவைப்படுகிறது. தண்ணீர், தேங்காய், சப்தம் ஆகிய மூன்றில் சப்தத்தை கடவுள் எடுத்துக் கொண்டார். அவர் விட்டுவைத்த இரண்டைத்தான் நாங்கள் சாப்பிடுகிறோம் என்று சொல்லி கடவுளின் பெயரால் வயிறு வளர்ப்பதையும் பார்க்கிறோம். அதனால்தான், الله الصمد சாப்பாட்டுப் பருக்கை மட்டும்தான் தேவையில்லை என்றில்லை. அல் லாஹ்வுக்கு சத்தும் தேவையில்லை. சப்தமும் தேவையில்லை என்று கூறுகிறான். எதுவும் தேவையில்லை என்று கடவுளைப் பற்றி நம்புகிறபோதுதான் கடவுளின் பெயரால் மனிதன் சுரண்ட இயலாது.
எனவே கடவுளுக்குக் கொடு என்று சொல்லி மனிதன் தங்களது வயிறு வளர்ப்பதை நிறுத்தினால் இந்தச் சுரண்டலை உடைத்தெறிந்து விட்டோமானால், அறிவாளிகளும் பகுத்தறிவாளர்களும் சிந்திக்கிற மக்களும்கூட மதத்தை வெறுக்க மாட்டார்கள். கடவுள் இல்லை என்கிற பகுத்தறிவற்ற மூடத்தனமான தான்தோன்றித்தனமான வாதத்தை வைக்க மாட்டார்கள்.
பெயருக்காக இஸ்லாத்தில் இருக்கிற பெயர்தாங்கி முஸ்லிம்களாக இருந்தாலும் பள்ளிவாசலுக்கு வரும்போது அல்லாஹ்வுக்கு ஏதேனும் தேவையிருக்கிறது என்று கடவுளின் பெயரால் கட்டணத்தை யாரும் வசூலிப்பதில்லை. பள்ளிவாசலைப் பொறுத்தளவுக்கு, உளூச் செய்வதற்குத் தண்ணீர் வசதியும் கழிப்பதற்கு கழிப்பறை வசதியும் செய்துகொடுப்பதற்கு மக்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும். அதைக்கூட யாரும் வசூலிப்பதில்லை. தொழுவதற்குப் பள்ளிவாசலுக்கு வராவிட்டாலும் பாத்ரூம் போவதற்காக மட்டுமே பள்ளிக்கு வருகிற முஸ்லிம்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களிடமும் காசு வசூலிப்பதில்லை.
பள்ளிவாயிலின் கட்டிட மராமத்துப் பணிகளைக் கூறி கண்முன் காட்டித்தான் நம்மிடம் விரும்பினால் நன்கொடை கேட்பார்கள். இது நமது வசதிக்காக நாம் செய்து கொள்வதுதான். இப்படி காசு கொடுக்காதவர்கள் யாரும் பள்ளிக்கு வரக்கூடாது என்றெல்லாம் நாம் யாரிடமும் சொல்வதில்லை.எப்படிப் பார்த்தாலும் ஒரு தடவை நாம் பள்ளிக்குச் சென்று வந்தால், நாம்தான் அங்குள்ள பணத்தைப் பயன்படுத்தியவர்களாக ஆவோம்.
பள்ளியில் உள்ள தண்ணீர், தண்ணீரை தொட்டிக்கு ஏற்றுவதற்காக மின்சார மோட்டார் பயன்படுத்தியது, மின்விசிறி பயன்படுத்தியது, பாயில் உட்காருகிற போது ஏற்படுகிற தேய்மானம், தரையில் உட்கார்ந்தால் அதில் ஏற்படுகிற தேய்மானம், செருப்புப் வைக்கிற ரேக்கை சுத்தம் செய்வதற்குண்டான செலவு, பாத்ரூமை சுத்தம் செய்வதற்காக பொருட்களும் சுத்தம் செய்கிறவர்களுக்கான சம்பளம் என்று அப்படி இப்படி என்று பள்ளிக்கு வருகிற ஒரு நபருக்கு சுமார் ஐந்து ரூபாய்களை பள்ளிவாசல் செலவளிக்கிறது.
இப்படி தினமும் இருபத்து ஐந்து ரூபாய்களை பள்ளியிலிருந்து செலவளிக்கிறோமே தவிர நாம் பள்ளிவாயிலில் அல்லாஹ் தேவையாக இருக்கிறான் என்று நமது பணத்தையும் சாப்பாட்டு படையலையும் கொடுக்கவில்லை. இதற்குக் காரணம், அல்லாஹ் எந்தத் தேவையும் அற்றவன் என்கிற நம்பிக்கைதான்.
கடவுள் தேவையற்றவன் என்று நம்புவதினால் சுரண்டல் போன்றவை அடிபட்டுப் போகிறது. இன்னும் சொல்லப்போனால், கடவுளுக்கு தாய், தந்தை, பிள்ளை, தங்கை, தம்பி, மனைவி, கணவன், மாமா, மச்சான், ஒன்றுவிட்ட சித்தப்பா என்றெல்லாம் மனிதர்களுக்கு இருக்கிற உறவுமுறைகளைப் போன்றே கடவுளுக்கும் உறவுமுறைகளை (தங்ப்ஹற்ண்ர்ய்ள்ட்ண்ல்) ஏற்படுத்தியிருப்பதினாலும் பல கேடுகள் ஏற்படுகின்றன.
இப்படி மனிதர்களைப் போன்ற உறவுகளை கடவுளுக்குக் கொடுக்கிறபோது மனிதர்களின் தன்மையைப் போன்றும் மனிதர்களின் பலவீனத்தையும் சுமக்கவேண்டிய பலவீனத்தைக் கடவுள் அடைந்துவிடுவார். அவரும் மனிதர்களைப்போன்று இல்லறத்தில் ஈடுபடுவார். கடவுளுக்கு அப்பாவும் அம்மாவும் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டாலேயே மனிதர்களைப் போன்றுதான் இருவரும் சேர்ந்திருப்பார்கள், உடலுறவில் ஈடுபட்டிருப்பார்கள் என்றெல்லாம் அர்த்தம் தானாகவே வந்துவிடும்.
இப்படியொரு அசிங்கமான முறையில் கடவுளை அறிமுகப்படுத்தும் போதும் மனிதன் கடவுளை வெறுக்கிறான். சிந்திக்கிற மனிதர்கள், கடவுளின் தாயைப் பற்றியும் தந்தையைப் பற்றியும் மனைவியைப் பற்றியும் கணவனைப் பற்றியும் விமர்சிக்கிறான்.
ஆண் கடவுள் பெண் கடவுளைப் பிடித்து இழுத்ததாகவெல்லாம் பல கற்பனைக் கதைகளை எழுதி வைத்துள்ளார்கள் என்பதையெல்லாம் சிந்திக்கும் மனிதர்களும் கடவுளை வெறுக்கிறார்கள்.
அதனால்தான் மனிதர்களின் கடவுளாகிய அல்லாஹ், لم يلد ولم يولد – அவன் யாரையும் பெறவில்லை. அவன் யாராலும் பெறப்படவுமில்லை என்று இந்த உறவு முறைகளுக்கு சம்மட்டியடி கொடுக்கிறான். கடவுளை புரிந்து கொள்வதாக இருந்தால் கடவுளுக்கு தந்தை என்கிற அப்பா இல்லை. அப்படி கடவுளுக்கு தந்தை என்கிற அப்பா இருந்தால், அந்த அப்பாவே பெரிய கடவுளாக இருந்திருப்பாரே? இவரை ஏன் கடவுள் என்று நாம் வணங்க வேண்டும்? என்று யோசிக்க வேண்டும்.
எனவே மனிதனுக்கு அப்பாவாக இருப்பவர் மனிதனாகத்தான் இருக்கமுடியும். ஆட்டிற்கு தந்தை ஒரு ஆடாகத்தான் இருக்கும். மாட்டிற்குத் தந்தை ஒரு மாடாகத்தான் இருக்கும். அதுபோன்றுதான் கடவுளுக்கு அப்பா இருந்தால் அவரும் கடவுளாகத்தான் இருப்பார். கழுதை கழுதைக் குட்டியைப் போடுவதைப் போன்று, குதிரை குதிரைக் குட்டியைப் போடுவதைப் போன்றும், மனிதன் மனிதக் குட்டியைப் போடுவதைப் போன்றும் கடவுள், கடவுள் குட்டியைத்தான் போடுவார்.
எனவே கடவுளுக்குத் தாய் தந்தை இருக்கிறதெனில், கடவுள் கண்டிப்பாக தனது பெற்றோரைப் படைத்திருக்க மாட்டார். அப்படியெனில் கடவுளையே படைத்த முதல் கடவுளாகிய கடவுளின் தாய் தந்தையையே வணங்கலாமே!, கடவுளை வணங்குவது முட்டாள்தனம் என்றாகிவிடும்.
அப்படி கடவுளுக்கு தாய் தந்தையை வைத்தால் அத்தோடு அந்தக் கேள்விக்கு விடை கிடைக்காது. அந்த தாய் தந்தைக்கு யார் தாய் தந்தை என்று இன்னொரு ஜோடியைக் காட்டியாக வேண்டும். அதற்கு முன்னும் இன்னொரு ஜோடியைக் காட்டியாக வேண்டும். கடைசியில் யாரையாவது ஒரு நபரைத்தான் கடவுள் என்று கூறி இந்த வாதத்தை நிறுத்தியாக வேண்டும்.
இப்படி தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதைப் போன்று சுற்றி வளைத்துக் கொண்டு சொல்லாமல், நேரடியாகவே கடவுள் என்பவன் ஒருவன்தான். அவனுக்கு மனைவிமக்கள் இல்லை என்பதைப் போன்று தாய்தந்தையும் இல்லை என்று ஒரேயடியாக நேரடியாகவே மிகச்சரியான நம்பிக்கையை மனிதனுக்கு இஸ்லாம் ஊட்டுகிறது.
எவனுக்குத் தந்தையில்லையோ அவனே கடவுளாக இருக்கிறான் என்பதை ஒத்துக் கொள்ளுங்கள். அவன்தான் அல்லாஹ். யார் யாருக்கெல்லாம் தந்தையிருக்கிறதோ அவர் கடவுளாக இல்லை என்று சொல்லுங்கள். யாருக்கு தந்தை இருக்கிறதோ… என்று படிப்படியாகத் தேடிவிட்டு கடைசியில் ஒருவருக்கு மட்டும் தந்தை இல்லை என்ற முடிவுக்கு வருவீர்களே, அவன்தான் கடவுள் என்று நேரடியாகவே சொல்லுகிறது இஸ்லாம்.
அதனால்தான் கடவுள் ஒருவன் என்று இஸ்லாம் சொல்லுகிறது.
அதாவது தாய்தந்தை சேர்ந்தும் கடவுளைப் பெற்றெடுக்கவில்லை. தந்தை மட்டுமோ அல்லது தாய் மட்டுமோ இருந்து கடவுளைப் பெறவில்லை. எப்போது தாய் தந்தை இல்லை என்று ஆகிவிட்டதோ அப்போதே மற்ற மாமா, மச்சான், சித்தப்பு பெரியப்பு போன்ற எந்தக் கிளைகள் எதுவும் இல்லாமல் ஆகிவிடும்.
தாய் இருந்தால்தான் மாமா என்கிற உறவே இருக்கமுடியும். கடவுளுக்கு தாயே இல்லை என்கிற போது மாமாவும் சின்னம்மாவும் பெரியம்மாவும் ஒருபோதும் இருக்கவே முடியாது. அதுபோன்று கடவுளுக்குத் தந்தையே இல்லை என்கிறபோது எப்படி சித்தப்பாவும் பெரியப்பாவும் இருக்கமுடியும்? இருக்கவே முடியாது.
கடவுளுக்கு தாய்தந்தை இல்லை என்று சொல்லிவிட்டாலேயே அண்ணன் தம்பிகளும் அக்கா தங்கைகளும் இருக்கவே முடியாது.
அல்லாஹ் தனக்கு அண்ணன் இல்லை, அக்கா இல்லை, மாமா, மச்சி, சித்தப்பு, பெரியப்பு, சின்னம்மா பெரியம்மா இல்லை என்று ஒருவரையாகச் சொல்லாமல் ஒரே வார்த்தையில் யாருக்கும் பிறக்கவுமில்லை என்கிற ஒரு வாசகத்திற்குள்ளேயே அனைத்தையும் உள்ளடக்கி சொல்லிவிட்டான். இதுதான் அல்லாஹ்வின் திறமை. அவனது பேசுகிற தன்மை என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.
இந்த கோட்பாட்டை மனிதசமூகத்திற்கு கொடுத்தால் மதம் என்றாலேயே அலர்ஜியாக சிலர் நினைக்கிற வெறுப்புக்கள் ஏற்படாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
முதலில் கடவுளுக்குப் பிள்ளைகள் சந்ததிகள் தேவைதானா? என்பதைச் சிந்தித்துப் பார்த்தால் அது முற்றிலும் தவறானது என்பது புரியும். யாருக்குப் பிள்ளை தேவைப்படும்? மனிதர்களுக்குப் பிள்ளை தேவைப்படக் காரணம், நாம் என்றைக்கும் இதேபோன்று இளமையாகவே இருக்கமாட்டோம். என்றாவது ஒரு நாளில் முதுமையை அடைவோம். நம்மால் நடக்க இயலாமல் படுக்கையிலேயே மலம்ஜலத்தைக் கழிப்போம்.
நம் சோற்றுக்கே நம்மால் சம்பாதிக்க முடியாது. திடகாத்திரமாக இருக்கும்போது பிறருக்கும் கொடுத்திருப்போம். முதுமை ஏற்படுகிற போது நம் ஒருஜாண் வயிற்றுக்கான உணவிற்குக்கூட உழைக்கமுடியாத நேரத்தை எல்லோருமே அடைந்துதான் தீருவோம். அப்போது நமக்கு யாராவது தரவேண்டும். அந்த நேரத்தில்தான் பிறரை விட நம் பிள்ளைகள் நமக்கான உணவையும் உடையையும் தந்து நம்மைப் பேணிப் பாதுகாப்பார்கள் என்று நம்பி எல்லோருமே பிள்ளைகளைப் பெற்றுக் கொள்கிறோம்.
அவனது சிறுநீரைக்கூட அவனால் சுயமாக எழுந்துநின்று கழிக்க இயலாது. படுத்த படுக்கையிலும் உடுத்திய உடையிலும் கழிப்பான். அவனது ஆடையை மாற்றுவதற்கே அவனுக்கு உடலில் தெம்பு இராது. அப்போது தன்னைக் கவனிப்பதற்காகத்தான், தன் பிள்ளைகளைப் பெற்றதாக மனிதன் உணர்கிறான். கூலிக்கு வேலைக்கு ஆள்வைப்பது எல்லாருக்கும் சரிவராது. சிலர் கூலிக்கு ஆள்வைத்தாலும் கூலியை யார் கொடுப்பது? அதற்காவது பிள்ளைகுட்டிகள் வேண்டாமா? அதற்குத்தான் பிள்ளைகள் என்பதால் மனிதன் காலங்காலமாக பிள்ளைகளைப் பெற்றுவருகிறான்.
அதுவும் நமது சதையிலிருந்து நமது இரத்தத்திலிருந்து ஒரு பிள்ளை இருந்தால் நமது முதுமைக் காலத்தில் அருவருப்பு இல்லாமல் நம்மைக் கவனிப்பான் என்று ஒரு கணக்கைப் போட்டுக்கொண்டு, பிள்ளை வேண்டுமென்று ஆசைப்படுகிறான்.
மனிதனைப் போன்று இறைவனுக்கு முதுமையும் தள்ளாடுகிற வயோதிகமும் பலவீனமும் ஏற்படுமாயின், அவனுக்கும் நம்மைப் போன்று பிள்ளைகள் தேவைப்படும். ஆனால் கடவுள் இதுபோன்ற பலவீனங்களுக்கு உட்பபட்டவராக இருக்கவே கூடாது. கடவுள் அவன் ஆரம்பத்திலிருந்து எப்படி இருந்தானோ அதைப் போன்று தான் இப்போதும் இருக்கிறான்.
இன்னொரு கோடி வருடங்கள் கழித்தாலும் அப்படியே எப்போதும் இருப்பதைப் போன்றுதான் இருப்பான். அவனிடத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது. கடவுள் சோற்றுக்கு வழியில்லாமல் கவலைப்படப் போகிறானா? அல்லது மனிதனைப் போன்று படுத்த இடத்திலேயே சிறுநீர் கழிக்கப்போகிறானா? இதுபோன்ற எந்த பலவீனமும் இல்லாதவனுக்கு ஏன் பிள்ளை வேண்டும்.
அடுத்து மனிதர்களுடைய பண்புகளில் மிக முக்கியமானதும், அனைவரும் தப்பிக்க இயலாததும் மரணமாகும். இதிலிருந்து எவருமே எதுவுமே தப்பிக்க இயலாது. நாம் மரணித்துவிட்டால் நாம் சம்பாதித்த சொத்துக்கள் வீணாகிவிடக்கூடாது என்பதால் அந்தச் செல்வங்களைக் கட்டிக்காப்பதற்காக ஒரு வாரிசு மனிதனுக்குத் தேவைப்படுகிறது.
அதுபோன்று இறைவனுக்கு மரணம் ஏற்படுமா? கடவுள் செத்துவிட்டால் இந்த வானங்களையும் பூமியையும் கட்டிக்காக்க இன்னொரு வாரிசு கடவுளுக்குத் தேவையா? கிடையாது. எவன் மரணிக்காதவனோ அவன்தான் கடவுள். மரணிக்காத என்றென்றும் இளமையாகவே இருக்கிற நித்திய ஜீவனாக இருக்கிற கடவுளுக்கு எந்தப் பிள்ளைகளும் தேவைப்படாது.
ஆண்களை இருபத்தைந்து வயதிலும் பெண்களை இருபது வயதிலும் இளமையாகவே வைத்திருந்தால் நம்மில் எவருமே பிள்ளை பெற்றுக் கொள்ளமாட்டோம். எவரும் பிள்ளையை விரும்பமாட்டார்கள். அப்படிப் பிள்ளை பெற்றால் நாம் சந்தோஷமாக இருப்பதற்கு அந்தப் பிள்ளை இடையூறாக இருக்கும்.
என்றும் பதினாறாக இருக்கிற ஒருவனுக்குப் பிள்ளை தேவைப்படாது. ஆனால் நாம் அப்படி இல்லாமல் நமக்கு முதுமை பலவீனம் ஏற்படுவதினால் தான் நமது கடைசி காலம் பாதுகாப்பானதாகவும், சிறப்பாகவும் அமைவதற்கு நமக்கு வாரிசு தேவைப்படுகிறது. எனவே மனிதர்களைப் போன்று கடவுளைப் பார்க்கவே கூடாது. அதேபோன்று கடவுளுக்கு மனைவியும் இல்லை. இந்த வசனத்தில் மனைவியைப் பற்றிப் பேசவில்லையே என்று கேட்கக்கூடாது.
அல்லாஹுஸ்ஸமது என்று சொல்லிவிட்டான். எந்தத் தேவையுமில்லை என்று சொன்னாலேயே அதில் முதலாவதாக மனைவிதான் தேவையில்லை என்று வரும். மனைவி மட்டும் என்றில்லாமல், மனிதனுக்கு எந்தத் தேவையெல்லாம் இருக்குமோ அதில் எதுவுமே கடவுளுக்குத் தேவைப்படாது. அல்லாஹ்வைப் பற்றி ஏதேனும் ஒரு செய்தி விடுபட்டிருக்கலாம் என்று ஆராய்ந்தால், எதுவுமே இந்த அத்தியாயத்தில் விடுபடவில்லை. கடவுளைப் பற்றிய எல்லா இலக்கணமும் முழுமையாகவும் வட்டுருக்கமாகவும் மிகத்தெளிவாகவும் சந்தேகத்திற்கு இடமில்லாமலும் இந்த அத்தியாயத்தில் அல்லாஹ் சொல்லிவிட்டான்.
அப்படி எதனையாவது கொண்டுவந்து இந்த அத்தியாயத்தில் இது இல்லை என்று சுட்டிக் காட்டக்கூடாது என்பதற்காக கடைசி வாக்கியமாக, ولم يكن له كفوا أحد – அவனுக்கு நிகராக எதுவும் எவனும் இல்லை என்று கூறி முழுமைப்படுத்துகிறான். அதன் மூலம் மனிதர்களின் விமர்சனங் களுக்கெல்லாம் ஒரேயடியான ஒரு சிறந்த பதிலை கூறுகிறான்.
வேறு வசனங்களில் கடவுளுக்கு மனைவி தேவையில்லை என்று தெளிவாகவும் சொல்கிறான்.
எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்தது. அவன் மனைவியையோ, பிள்ளைகளையோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை.
(அவன்) வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். அவன் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன்.
எனவே கடவுளுக்கு மனைவி இருப்பதாகச் சொன்னால் அவளும் கடவுளால் படைக்கப்பட்டவளாகத்தான் இருக்கமுடியும். கடவுளால் படைக்கப்பட்டவள் எப்படி கடவுளாக இருக்கமுடியும்? மேலும் கடவுள் நம்மைப் போன்று இச்சை உணர்வுக்கு ஆளாகவராகத்தான் இருக்கவேண்டும்.
இந்த வசனத்தின் கருத்தையும் உள்ளடக்கித்தான்,لم يلد-அவன் யாரையும் பெறவில்லை என்று சொல்லுகிறான். ஒருபேச்சுக்கு நாம் இந்த வசனத்தில் ஏதேனும் குறுக்குவிசாரனை செய்துவிடுவதற்கு நமக்கு வாய்ப்பளிக்க இடம் தரக்கூடாது என்பதினால்தான் لم يكن له كفوا أحد – அவனுக்கு நிகராக எதுவும் எவனும் இல்லை என்றுகூறி முழுமைப்படுத்துகிறான்.
ஆக அல்லாஹ்வுடைய தன்மைகளை புரிந்து வாழும் நன் மக்களாக நாம் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்குவானாக.!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.