36) இறைமறுப்பாளர் கலிமாச் சொன்னால்.!
இறைமறுப்பாளர் ஒருவர் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று
(கலிமாச்) சொன்னதற்குப் பிறகு அவரைக் கொலை செய்வது கூடாது.
மிக்தாத் பின் அம்ர் அல்அஸ்வத் அல்கிந்தீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்) “இறை மறுப்பாளர்களில் ஒருவனை நான் சந்தித்தேன். அவன் என்னிடம் சண்டையிட்டான். அப்போது அவன் என் கைகளில் ஒன்றை வாளால் வெட்டித் துண்டித்துவிட்டான். பிறகு, அவன் என்னை விட்டு ஓடிப்போய் ஒரு மரத்தில் அபயம் தேடி (ஒளிந்து)கொண்டு, “அல்லாஹ்வுக்கு அடிபணிந்(து இஸ்லாத்தில் இணைந்)தேன்” என்று சொன்னான். இதை அவன் சொன்னதற்குப் பிறகு நான் அவனைக் கொல்லலாமா? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(வேண்டாம்) அவனைக் கொல்லாதே!” என்றார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! அவன் எனது கையைத் துண்டித்துவிட்டான். அதைத் துண்டித்த பிறகுதானே இதைச் சொன்னான்!” என்று கேட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவனை நீ கொல்லாதே! அவ்வாறு நீ அவனைக் கொன்றுவிட்டால் அவனைக் கொல்வதற்கு முன்பு நீயிருந்த (குற்றமற்ற) நிலைக்கு அவன் வந்து விடுவான். அந்த வார்த்தையைச் சொல்வதற்கு முன் அவனிருந்த (குற்றவாளி எனும்) நிலைக்கு நீ சென்றுவிடுவாய்” என்று கூறினார்கள்.