இறைநேசர் ஆகிட எளிய வழிகள்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

அவ்லியா என்ற வார்த்தை வலீ என்பதன் பன்மையாகும். வலீ என்றால் பொறுப்பாளன், அதிகாரி, எஜமான், நேசன் என்று பல்வேறு அர்த்தங்களைக் கொண்டது. நாம் இங்கே பார்ப்பது, அல்லாஹ்வின் நேசன் என்ற பொருளில் அமைந்த வலியுல்லாஹ்வைத் தான். இறைநேசராவதற்கு என்ன வழி? சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக் கொள்வோர் இதற்குப் பின்வரும் வழிகளைக் கூறுகின்றனர்.

ஒருவர், அல்லாஹ்வின் நேசர் ஆக வேண்டுமென்றால் அதற்காக அவர் தன்னை ஆன்மீகப் பாதையில் ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும். அது ஒரு நான்கு வழிச் சாலை. ஷரீஅத், தரீக்கத், ஹகீகத், மஃரிபத் என்பது அந்த நான்கு வழிச் சாலைகளுக்குப் பெயர்கள் வழங்கப்படுகின்றன.

ஷரீஅத் என்றால் பாதை. தரீக்கத் என்றால் பாதை. ஹகீகத் என்றால் உண்மை. மஃரிபத் என்றால் அறிதல். பொதுவாகப் பாதை தெரிந்த பின் பயணிப்பது புத்திசாலித்தனம். பாதையைக் கடந்த பின் அறிதல் என்பது பைத்தியக்காரத்தனம் என்பதை இந்த அகமியப் பெயர்கள் அழகாகவே அம்பலப்படுத்தி விடுகின்றன. இதிலிருந்து இதன் இலட்சணத்தையும் இலக்கணத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஆன்மீக உலகத்தில் நுழைந்தவர் ஐம்புலன்களை அடக்கி ஆள வேண்டும். அவர் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ளவும் பட்டை தீட்டிக் கொள்ளவும் இறைநேசராகப் பயிற்சி எடுத்துக் கொள்ளவும் ஓர் ஆன்மீக ஆசானிடம் பாடம் கற்க வேண்டும். தனது ஆசான் சொல்கின்ற கட்டளைக்கு மறு வார்த்தை பேசாமல் அப்படியே கட்டுப்படவேண்டும். அதற்காக ஒரு பைஅத், அதாவது ஓர் உடன்படிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பைஅத்திற்கு பின் ஷைகு என்ற அந்த ஆசானிடம் அப்படியே ஒர் மய்யித்தாக ஆகி விடவேண்டும். அதாவது குளிப்பாட்டப்படும் ஒரு மய்யித் ஏன், எதற்கு என்று கேட்காதோ அது போன்று அவர் தன்னை ஒரு செத்த சவமாக்கி அவரிடம் சரணாகதியாகி விடவேண்டும்.

இன்ன வீட்டில், இன்ன பெண்ணிடம் போய் நீ விபச்சாரம் செய் என்று ஷரீஅத்திற்கு மாற்றமாகச் சொன்னாலும் அவருக்குக் கட்டுப்பட்டு, அந்த கட்டளையை நிறைவேற்ற வேண்டும். ஷைக் விபச்சாரமும் செய்யச் சொல்வாரா? என்று விழிப்புருவங்கள் வியப்புக்குறியில் விசாலமாக விரியலாம். வியக்காதீர்கள். மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்காயும் முன்னே கசக்கும், பின்னே இனிக்கும்.

ஷைக் அனுப்பி வைத்த சீடர் விபச்சாரத்திற்கு என்று சென்றாலும் வீட்டில் சீடர் கண்டதும் கட்டியணைத்ததும் அனுபவித்ததும் கட்டிய மனைவிதான் என்ற விபரம் பின்னர் தான் தெரிய வந்தது. இதற்குத் தான் ஷைகின் சொல்லுக்கு வினா எழுப்பாது, ஷரீஅத்திற்கு மாற்றமாயிற்றே என்று சிந்திக்காமல் விழுந்தடித்து நம்ப வேண்டும். ஷரீஅத்திற்கு மாற்றமாக ஷைக் சொன்ன விஷயத்தைச் சரி தான் என்று நிறுவவும் நிரூபிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும்.

இதுதான் அவ்லியா ஆவதற்கு வழி என்று சுன்னத் வல் ஜமாஅத்தினர் கூறும் பாதைகளாகும்.
ஷைகுக்கு எல்லாம் தெரியும். எனவே அவர் சொன்னதை அப்படியே நம்ப வேண்டும் என்று கதை விடுவார்கள். ஆனால் விபச்சாரம் செய்வதற்குச் சென்ற சீடர் எந்த நோக்கத்தில் சென்றார்? என்பதை இந்த ஆன்மீகப் பேர்வழிகள் வசதியாகவே மறந்து விடுவார்கள்.

«إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا، أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ

‘செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் இப்னு கத்தாப் (ரலி),
நூல்: (புகாரி: 1) 

அல்லாஹ்விடம் மரியாதை, எண்ணங்களுக்குத்தான் என்பதை மறந்து விடுகின்றார்கள்.

«إِنَّ اللهَ لَا يَنْظُرُ إِلَى أَجْسَادِكُمْ، وَلَا إِلَى صُوَرِكُمْ، وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: (முஸ்லிம்: 5011) 

இந்த ஹதீஸையும் வசதியாக மறந்து விடுகின்றார்கள். இது போன்ற அறியாமையின் காரணமாக அவ்லியா ஆவதற்கு அகமியம் என்ற போர்வையில் இவர்கள் மக்களை வழிகேட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர்.

அடுத்து, வலியுல்லாஹ் ஆக, அதாவது இறைநேசனாக ஆக வேண்டுமென்றால் இவர்களாக உருவாக்கிக் கொண்ட அவ்லியாக்களின் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும். அதாவது இந்த ஆன்மீகப் படையில் சேரவேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கின்றார்கள். இதன் மூலம் அவ்லியாக ஆவதை தனியுடைமையாக ஆக்கி வைத்திருக்கின்றார்கள். ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் இறைநேசர் ஆவதை பொதுவுடைமையாக்கியிருக்கின்றான். இதோ அல்லாஹ் சொல்கின்றான்.

اَلَاۤ اِنَّ اَوْلِيَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ ۖ ۚ‏
الَّذِيْنَ اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَؕ‏

கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை) அஞ்சுவோராக இருப்பார்கள்.

(அல்குர்ஆன்: 10:62,63)

இறைநேசனாக ஆவதற்கு அல்லாஹ் இரண்டே இரண்டு அளவுகோல்களை மட்டுமே சொல்கின்றான். ஒன்று ஈமான் கொள்ள வேண்டும். இன்னொன்று அவனை அஞ்ச வேண்டும். இந்த இரண்டுமிருந்தால் அவர் இறைநேசராக ஆகிவிடலாம்.

ஒவ்வொருவரும் ஈமான் கொண்டு அல்லாஹ்வை அஞ்சி நடக்க ஆரம்பித்து விட்டால் அவர் இறைநேசராகி விடுவார். ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வை ஈமான் கொண்டு அவனை அஞ்சியும் நடக்கின்றார்கள். அதனால் அவர்கள் இறைநேசர்களாகி விடுகின்றார்கள்.

வலியுல்லாஹ்வுக்குரிய அளவுகோள் இது தான். அல்லாஹ் இந்த வசனத்தின் வாயிலாக இறைநேசத்திற்கு ஒளிமயமான ஓர் எளிய வழியைக் காட்டுகின்றான். ஆனால் இவர்களோ ஆன்மீக உலகம் என்ற பெயரில் ஓர் இருள் மயமான உலகத்தைக் காட்டுகின்றார்கள்.

அவ்லியா ஆவதற்குக் கடமையான வணக்கங்களை தாண்டி உபரியான அமல்களை தனக்காகச் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் இந்த ஹதீஸ் குதூஸிய்யில் சொல்கின்றான்.

مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالحَرْبِ، وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ، وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ، فَإِذَا أَحْبَبْتُهُ: كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ، وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ، وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا، وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا، وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ، وَلَئِنِ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ، وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ المُؤْمِنِ، يَكْرَهُ المَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், அல்லாஹ் கூறினான்:

எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான்.

இறுதியில் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: (புகாரி: 6502) 

وَمِنَ النَّاسِ مَنْ يَّتَّخِذُ مِنْ دُوْنِ اللّٰهِ اَنْدَادًا يُّحِبُّوْنَهُمْ كَحُبِّ اللّٰهِؕ وَالَّذِيْنَ اٰمَنُوْٓا اَشَدُّ حُبًّا لِّلّٰهِ ؕ

அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள்.

(அல்குர்ஆன்: 2:165)

ஈமான் கொண்டவர்கள் தன்னை அதிகம் நேசிப்பார்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுவதற்கு ஏற்ப நாம் அல்லாஹ்வை அதிகம் நேசிக்கும் விதமாக, அதிகமான அளவில் கடமையான வணக்கங்களைத் தாண்டி உபரியான வணக்கங்களைச் செய்ய ஆயத்தமாக வேண்டும். இதன் மூலம் அல்லாஹ்வை நேசிப்பதற்கு ஒரு தனிவழி, ஓர் இருட்டு வழி இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும்.

தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் என்று கடமையான வணக்கங்களின் பட்டியல் உள்ளது. அதில் நாம் முதலில் தொழுகையிலிருந்து உபரியான வணக்கங்களை துவக்குவோம். அதிலும் குறிப்பாக, கடமையான தொழுகைகளை பள்ளிவாசல் சென்று ஜமாஅத்துடன் நிறைவேற்ற வேண்டும்.

தஹஜ்ஜத் தொழுகை

 தஹஜ்ஜத் தொழுகையை தொழத் துவங்குவோம்

 وَبِالْاَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُوْنَ‏

அவர்கள் இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள்.

(அல்குர்ஆன்: 51:18)

اَلصّٰــبِرِيْنَ وَالصّٰدِقِــيْنَ وَالْقٰنِتِــيْنَ وَالْمُنْفِقِيْنَ وَالْمُسْتَغْفِرِيْنَ بِالْاَسْحَارِ‏

(அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மை பேசுவோராகவும், (இறைவனுக்கு) கட்டுப்பட்டோராகவும், (நல்வழியில்) செலவிடுவோராகவும், இரவின் கடைசி நேரத்தில் பாவமன்னிப்புத் தேடுவோராகவும் (இருப்பார்கள்.)

(அல்குர்ஆன்: 3:17)

என்று அல்லாஹ் சொல்வதற்கேற்ப அவனிடம் அந்த நேரத்தில் பாவமன்னிப்பு தேட வேண்டும்.

முன், பின் சுன்னத் தொழுகைகள்

அடுத்ததாக, கடமையான தொழுகைகளுக்கு முன் பின் அமைந்த சுன்னத் தொழுகைகளை பேணித் தொழ வேண்டும். குறிப்பாக சுபுஹின் முன் சுன்னத்தை நபி (ஸல்) அவர்கள் விடாது தொழுதிருக்கின்றார்கள்.

«مَنْ صَلَّى اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً فِي يَوْمٍ وَلَيْلَةٍ، بُنِيَ لَهُ بِهِنَّ بَيْتٌ فِي الْجَنَّةِ» قَالَتْ أُمُّ حَبِيبَةَ: فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ عَنْبَسَةُ: «فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ أُمِّ حَبِيبَةَ»، وَقَالَ عَمْرُو بْنُ أَوْسٍ: «مَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ عَنْبَسَةَ» وَقَالَ النُّعْمَانُ بْنُ سَالِمٍ: «مَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ عَمْرِو بْنِ أَوْسٍ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகின்றாரோ அதற்காக அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது. இதை உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை கைவிட்டதேயில்லை.

அறிவிப்பாளர் அம்பசா பின் அபீசுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை கைவிட்டதேயில்லை.

அறிவிப்பாளர் அம்ர் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அம்பசா (ரஹ்) அவர்களிடமிருந்து கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் விட்டதேயில்லை. அறிவிப்பாளர் நுஅமான் பின் சாலிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அம்ர் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை.

நூல்: (முஸ்லிம்: 1319) 

இந்த ஹதீஸில் இடம்பெற்றிருப்பது போன்று 12 ரக்கஅத்துகள் பேணித் தொழவும் இதர சுன்னத்துகளையும் பேணித் தொழவும் முயற்சிக்க வேண்டும்.

லுஹா தொழுகை

அதுபோன்று நபி (ஸல்) அவர்கள் லுஹா தொழுகையைத் தொழுதிருக்கின்றார்கள்.

«يُصْبِحُ عَلَى كُلِّ سُلَامَى مِنْ أَحَدِكُمْ صَدَقَةٌ، فَكُلُّ تَسْبِيحَةٍ صَدَقَةٌ، وَكُلُّ تَحْمِيدَةٍ صَدَقَةٌ، وَكُلُّ تَهْلِيلَةٍ صَدَقَةٌ، وَكُلُّ تَكْبِيرَةٍ صَدَقَةٌ، وَأَمْرٌ بِالْمَعْرُوفِ صَدَقَةٌ، وَنَهْيٌ عَنِ الْمُنْكَرِ صَدَقَةٌ، وَيُجْزِئُ مِنْ ذَلِكَ رَكْعَتَانِ يَرْكَعُهُمَا مِنَ الضُّحَى»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் ஒவ்வொரு காலையிலும் (தமது உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் தர்மம் செய்வது கடமையாகும்; இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும்.
ஒவ்வொரு புகழ்மாலையும் (அல்ஹம்துலில்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு ஓரிறை உறுதிமொழியும் (லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; அவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (அல்லாஹு அக்பர்) தர்மமே!

நல்லதை ஏவுதலும் தர்மமே! தீமைகளைத் தடுத்தலும் தர்மமே! இவை அனைத்திற்கும் (ஈடாக) முற்பகல் நேரத்தில் (ளுஹா) இரண்டு ரக்அத்கள் தொழுவது போதுமானதாக அமையும்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி),
நூல்: (முஸ்லிம்: 1302) 

தஹிய்யத்துல் மஸ்ஜித்

அதுபோன்று தஹிய்யத்துல் மஸ்ஜித் போன்ற தொழுகையையும் கடைப்பிடிக்க வேண்டும்.

 عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَخْطُبُ: إِذَا جَاءَ أَحَدُكُمْ وَالْإِمَامُ يَخْطُبُ أَوْ قَدْ خَرَجَ فَلْيُصَلِّ رَكْعَتَيْنِ

‘உங்களில் ஒருவர் இமாம் உரை நிகழ்த்தும்போது வந்தால் இரண்டு ரக்அத்கள் தொழட்டும்’ என்று தம் சொற்பொழிவின் போது நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி),
நூல்: (புகாரி: 1166) 

தஹிய்யத்துல் உலூ

தஹிய்யத்துல் உலூ தொழுகையையும் தொழ வேண்டும்.

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِبِلاَلٍ: «عِنْدَ صَلاَةِ الفَجْرِ يَا بِلاَلُ حَدِّثْنِي بِأَرْجَى عَمَلٍ عَمِلْتَهُ فِي الإِسْلاَمِ، فَإِنِّي سَمِعْتُ دَفَّ نَعْلَيْكَ بَيْنَ يَدَيَّ فِي الجَنَّةِ» قَالَ: مَا عَمِلْتُ عَمَلًا أَرْجَى عِنْدِي: أَنِّي لَمْ أَتَطَهَّرْ طَهُورًا، فِي سَاعَةِ لَيْلٍ أَوْ نَهَارٍ، إِلَّا صَلَّيْتُ بِذَلِكَ الطُّهُورِ مَا كُتِبَ لِي أَنْ أُصَلِّيَ

ஒரு ஃபஜ்ருத் தொழுகையின்போது பிலால் (ரலி) அவர்களிடம் ‘பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த அமல் பற்றிக் கூறும்! ஏனெனில் உம்முடைய செருப்போசையை சொர்க்கத்தில் கேட்டேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால் (ரலி) ‘இரவிலோ, பகலிலோ நான் உளூச் செய்தால் அவ்வுளூவின் மூலம் நான் தொழ வேண்டுமென்று நாடியதைத் தொழாமல் இருப்பதில்லை. இதுதான் என்னுடைய செயல்களில் சிறந்த செயல்’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: (புகாரி: 1149) 

வித்ரு தொழுகை
أَوْصَانِي خَلِيلِي بِثَلاَثٍ لاَ أَدَعُهُنَّ حَتَّى أَمُوتَ: «صَوْمِ ثَلاَثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ، وَصَلاَةِ الضُّحَى، وَنَوْمٍ عَلَى وِتْرٍ»

ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு நோற்குமாறும் லுஹா தொழுமாறும் வித்ரு தொழுதுவிட்டு உறங்குமாறும் மூன்று விஷயங்களை நபி (ஸல்) அவர்கள் எனக்கு வலியுறுத்தினார்கள். நான் மரணிக்கும் வரை அவற்றை விடமாட்டேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: (புகாரி: 1178) 

இது தொழுகையில் நஃபிலான அதாவது உபரியான வணக்கமாகும்.

மாதம் மூன்று நோன்புகள்

நோன்பிலும் இது போன்ற உபரியான நோன்புகள் உள்ளன. மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதற்கு மேலே இடம்பெற்றுள்ள அந்த ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.

ஷவ்வாலில் ஆறு நோன்பு

இது ஷவ்வால் மாதமாகும். நபி (ஸல்) அவர்கள் ரமளான் முடிந்த கையோடு ஆறு நோன்பு நோற்றிருக்கின்றார்கள்.

أَوْصَانِي خَلِيلِي بِثَلاَثٍ لاَ أَدَعُهُنَّ حَتَّى أَمُوتَ: «صَوْمِ ثَلاَثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ، وَصَلاَةِ الضُّحَى، وَنَوْمٍ عَلَى وِتْرٍ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர், காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி),
நூல்: (முஸ்லிம்: 2159) 

அதனால் இந்த ஹதீஸ் அடிப்படையில் இந்த உபரியான வணக்கங்களைப் புரிந்து அல்லாஹ்வை நெருங்குவோம். அவ்லியாக்களாக மாறுவோம். ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் ஓர் அடியான் செய்ய வேண்டிய அமல்கள் என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் இப்படிப்பட்ட பட்டியலை, நிகழ்ச்சி நிரலைத் தந்திருக்கும் போது இதை நிறைவேற்ற ஓர் ஆன்மீக ஆசான் நமக்குத் தேவை தானா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இது அல்லாமல் அல்லாஹ்வின் தூதர் காட்டித் தந்த அவ்ராதுகள் அதாவது அன்றாடம் எழுந்தது முதல் படுக்கையில் உறங்குகின்ற வரை ஓத வேண்டிய திக்ருகள், தஸ்பீஹுகள், துஆக்கள் என்று ஒரு பட்டியல் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அடிப்படையில் இருக்கின்றன.

அவற்றை இங்கு சுருக்கம் கருதிக் கூறவில்லை. அவற்றையும் சேர்த்தால் நாம் அமல்கள் செய்வதற்கு எந்த ஓர் அந்நிய ஆசானும் நமக்குத் தேவையில்லை. அல்லாஹ்வின் தூதரே நேரலையில் நமக்கு ஆசானாக அமைந்து விடுகின்றார்கள். அதனால் இதற்கு தரீக்கத், ஷைக் என்று எந்த ஏஜண்டுகளும் இடைத்தரகர்களும் தேவையில்லை. தூய குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அமல்கள் செய்வோம், அவ்லியாவாக ஆவோம்.

பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.