இறைதூதரின் பிரார்த்தனைகள் (மக்களுக்காக)

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2

முன்னுரை

அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவனிடம் தன் சமுதாயத்திற்காக பல்வேறு பிரார்த்தனைகளை கற்று தந்துள்ளார்கள். அவ்வாறு கற்று தந்த பிரார்த்தனைகளை யாவும் மனிதர்கள் இவ்வுலகம் அழியும் வரை அல்லாஹ்விடத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கேட்க கூடிய பிரார்த்தனைகளாகவும் அமைந்து இருந்தது. நபிகளார் காட்டித்தந்த பிரார்த்தனைகளில் சிலவற்றை இந்த உரையில் காண்போம்.. 

நபி (ஸல்) அவர்கள் தன் சமுதாயத்திற்காக செய்த பிராத்தனை
لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ مُسْتَجَابَةٌ يَدْعُو بِهَا، وَأُرِيدُ أَنْ أَخْتَبِئَ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي فِي الآخِرَةِ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அவர் (தம் சமுதாயத்தாருக்காகப்) பிரார்த்தித்துக் கொள்ள அங்கீகரிக்கப்பட்ட பிரார்த்தனை ஒன்று (வழங்கப்பட்டு) உள்ளது. நான் என்னுடைய பிரார்த்தனையை, மறுமையில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தவே விரும்புகிறேன்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : (புகாரி: 6304) 

«كُلُّ نَبِيٍّ سَأَلَ سُؤْلًا» أَوْ قَالَ: «لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ قَدْ دَعَا بِهَا فَاسْتُجِيبَ، فَجَعَلْتُ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي يَوْمَ القِيَامَةِ»

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘ஒவ்வோர் இறைத்தூதரும் ஒரு (பிரத்தியோக) வேண்டுதல் செய்துவிட்டனர்’ அல்லது ‘ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தம் சமுதாயத்தார் தொடர்பாக) ஒரு (விசேஷப் பிரார்த்தனை உண்டு; அதனை அவர்கள் (இம்மையிலேயே) கேட்டுவிட்டனர். அது ஏற்றுக் கொள்ளப் பட்டுவிட்டது. நான் என்னுடைய பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரை செய்ய வைத்துள்ளேன்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : (புகாரி: 6305) 

பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ
سَيِّدُ الِاسْتِغْفَارِ أَنْ تَقُولَ: اللَّهُمَّ أَنْتَ رَبِّي لاَ إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي، فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ ” قَالَ: «وَمَنْ قَالَهَا مِنَ النَّهَارِ مُوقِنًا بِهَا، فَمَاتَ مِنْ يَوْمِهِ قَبْلَ أَنْ يُمْسِيَ، فَهُوَ مِنْ أَهْلِ الجَنَّةِ، وَمَنْ قَالَهَا مِنَ اللَّيْلِ وَهُوَ مُوقِنٌ بِهَا، فَمَاتَ قَبْلَ أَنْ يُصْبِحَ، فَهُوَ مِنْ أَهْلِ الجَنَّةِ»

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கல்க்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஃதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஃத்து. அபூஉ லக்க பி நிஃமத்திக்க அலய்ய, வ அபூஉ லக்க பி தம்பீ. ஃபஃக்ஃபிர்லீ. ஃப இன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த’ என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும்.

(பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன்.

நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட் கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.)

இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும், தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறப்பவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்துவிடுகிறவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.

அறிவிப்பவர் : ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரலி)
நூல் : (புகாரி: 6306) 

பகலிலும், இரவிலும் நபி (ஸல்) அவர்கள் கேட்ட பாவமன்னிப்புக் கோரல் (உடைய அளவு)
وَاللَّهِ إِنِّي لَأَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ فِي اليَوْمِ أَكْثَرَ مِنْ سَبْعِينَ مَرَّةً

‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது முறைக்கு மேல் ‘அஸ்தஃக் ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி’ என்று கூறுகிறேன் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.

(பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்)

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் : (புகாரி: 6307) 

இறைநம்பிக்கையாளரின் நிலை

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் எங்களுக்கு இரண்டு ஹதீஸ்களை அறிவித்தார்கள். அவற்றில் ஒன்றை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் குறிப்பிட்டார்கள். மற்றொன்றைக் தாமாகக் கூறினார்கள். (அவையாவன:)

1. இறைநம்பிக்கையாளர் தம் பாவங்களை மலைகளைப் போன்று (பாரமாகக்) கருதுவார். அவர் ஒரு மலை அடிவாரத்தில் உட்கார்ந்திருப்பதைப் போன்றும், அந்த மலைத் தம் மீது விழுந்துவிடுமோ என அஞ்சுபவரைப் போன்றும் அவர் இருப்பார். ஆனால், பாவியோ தன் பாவங்களைத் தன்னுடைய மூக்கின் மேல் பறந்து செல்லும் ஈயைப் போன்று (அற்பமாகக்) காண்பான் – இதைக் கூறியபோது இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் தங்களின் மூக்குக்கு மேலே (ஈயை) விரட்டுவது போன்று தம் கையால் சைகை செய்தார்கள்.

பிறகு அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் (பின்வருமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனச்) சொன்னார்கள்:

2. ஒரு மனிதன் (பயணத்தினிடையே) ஓய்வெடுக்க ஓரிடத்தில் இறங்கினான். அந்த இடத்தில் அவனுக்கு (உணவோ, தண்ணீரோ கிடைக்காது என்பதால்) ஆபத்து (காத்து) இருந்தது. அவனுடைய உணவும் பானமும் வைக்கப்பட்டிருந்த அவனுடைய வாகனப் பிராணியும் அவனுடன் இருந்தது. அப்போது அவன் தலையைக் கீழேவைத்து ஒரு (குட்டித்) தூக்கம் தூங்கி எழுந்தான். அப்போது அவனுடைய வாகனப் பிராணி (தப்பி ஒடிப்) போயிருந்தது.

(எனவே அவன் அதைத் தேடிப் புறப்பட்டான்.) அப்போது அவனுக்குக் ‘கடுமையான வெப்பமும் தாகமும்’ அல்லது ‘அல்லாஹ் நாடிய (கஷ்டம்) ஒன்று’ ஏற்பட்டது. அவன், ‘நான் முன்பிருந்த அதே இடத்திற்குத் திரும்பிச் செல்கிறேன்’ என்று கூறியவாறு (அங்கு) திரும்பிச் சென்றான். பிறகு ஒரு (குட்டித்) தூக்கம் தூங்கினான்.

பிறகு தன் தலையை உயர்த்தினான். அப்போது தப்பிப்போன தன்னுடைய பிராணி தன்னருகில் இருப்பதைக் கண்டான். (இப்போது அவன் எந்த அளவுக்கு மகிழ்வான்!) அந்த மனிதன் மகிழ்ச்சி அடைவதைவிடத் தன் அடியான் தவ்பா – பாவமன்னிப்புக் கோரித் தன்னிடம் திரும்புவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்கிறான்.

அறிவிப்பவர் : ஹாரிஸ் இப்னு சுவைத் (ரஹ்)
நூல் : (புகாரி: 6308) 

اللَّهُ أَفْرَحُ بِتَوْبَةِ عَبْدِهِ مِنْ أَحَدِكُمْ، سَقَطَ عَلَى بَعِيرِهِ، وَقَدْ أَضَلَّهُ فِي أَرْضِ فَلاَةٍ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் வறண்ட பாலைநிலத்தில் தொலைத்துவிட்ட தன்னுடைய ஒட்டகத்தை (எதிர்பாராதவிதமாக)க் கண்டுபிடிக்கும்போது, அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியைவிடத் தன் அடியான் தவ்பா – பாவமன்னிப்புப் கோரி தன்னிடம் திரும்புவதில் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : (புகாரி: 6309) 

அங்க சுத்தி (உளூ) செய்து கொண்டு இரவில் உறங்குவது
قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ، فَتَوَضَّأْ وَضُوءَكَ لِلصَّلاَةِ، ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الأَيْمَنِ، وَقُلْ: اللَّهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ، وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ، رَهْبَةً وَرَغْبَةً إِلَيْكَ، لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ، آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ، وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ، فَإِنْ مُتَّ مُتَّ عَلَى الفِطْرَةِ فَاجْعَلْهُنَّ آخِرَ مَا تَقُولُ ” فَقُلْتُ أَسْتَذْكِرُهُنَّ: وَبِرَسُولِكَ الَّذِي أَرْسَلْتَ. قَالَ: لاَ، «وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ»

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக அங்கசுத்தி (உளூ) செய்வது போன்று அங்கசுத்தி செய்துகொள். பிறகு உன் வலப்பக்கத்தின் மீது சாய்ந்து படு. பிறகு, ‘அல்லாஹும்ம அஸ்லம்த்து நஃப்ஸீ இலைக்க. வ ஃபவ்வளத்து அம்ரீ இலைக்க. வ அல்ஜஃத்து ழஹ்ரீ இலைக்க. ரஃக்பத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா இலைக்க. ஆமன்த்து பி கித்தாபிக்கல்லதீ அன்ஸல்த்த வபி நபிய்யிக்கல்லதீ அர்சல்த்த’ என்று ஓதிக்கொள்.

(பொருள்: இறைவா! உனக்கு நான் கீழ்ப்படிந்தேன். காரியம் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்தேன். என் விவகாரங்கள் அனைத்திலும் உன்னையே சார்ந்திருக்கிறேன். உன் மீதுள்ள ஆவலிலும், அச்சத்திலும் தான் (இவற்றை செய்தேன்). உன்னிடமிருந்து தப்பிக்கவும், ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடமில்லை.

நீ அருளிய உன்னுடைய வேதத்தையும், நீ அனுப்பி வைத்த உன்னுடைய நபியையும் நான் நம்பினேன். (இவ்வாறு நீ பிரார்த்தனை செய்துவிட்டு உறங்கி அன்றைய இரவில் நீ இறந்துவிட்டால் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் இறந்தவனாவாய். இந்தப் பிரார்த்தனையை (இரவின்) இறுதிப்பேச்சாக ஆக்கிக்கொள்.

இந்த நபிமொழியின் அறிவிப்பாளரான பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
‘நான் இவற்றைத் திரும்ப ஓதிக்காட்டுகிறேன்’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறிவிட்டு ஓதிக் காட்டலானேன். (‘நீ அனுப்பிய உன் நபியையும் நான் நம்பினேன்’ என்பதற்கு பதிலாக) ‘நீ அனுப்பிய உன் ரசூலையும் நான் நம்பினேன்’ என்று நான் சொல்லிவிட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘இல்லை; ‘நீ அனுப்பிய உன் நபியை நம்பினேன்’ என்று சொல்’ என (எனக்குத் திருத்தி)ச் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : பராஉ இப்னு ஆஸிப் (ரலி)
நூல் : (புகாரி: 6311)   

உறங்கச் செல்லும் போது ஓத வேண்டியது
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ، قَالَ: «بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا» وَإِذَا قَامَ قَالَ: «الحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ»

நபி (ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது, ‘பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா’ ( (இறைவா!) உன் பெயர் கூறியே இறக்கிறேன்; உயிர் வாழவும் செய்கிறேன்) என்று கூறுவார்கள்.

(உறக்கத்திலிருந்து) எழும்போது ‘அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்லவேண்டியுள்ளது) என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர் : ஹுதைஃபா இப்னு அல்யமான் (ரலி)
நூல் : (புகாரி: 6312) 

இரவில் (இடையே) விழிக்கும் போது ஓத வேண்டியது

நான் (என் சிறிய தாயாரும் நபியவர்களின் துணைவியாருமான) மைமூனா (ரலி) அவர்களிடம் (அவர்கள் இல்லத்தில்) இரவில் தங்கியிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் (இரவில்) எழுந்து தம் இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றார்கள். (பிறகு வந்து) தம் முகத்தையும் கைகளையும் கழுவினார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து தண்ணீர் பையை நோக்கிச் சென்று அதன் (சுருக்குக்) கயிற்றை அவிழ்த்தார்கள். பின்னர் (ஒன்றுக்கும்) அதிகமான முறைகள் உறுப்புகளைக் கழுவாமல், நடுநிலையாக அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அதை நிறைவாகச் செய்தார்கள்.

பிறகு தொழுதார்கள். நானும் (மெல்ல) எழுந்தேன். நான் அவர்களை நோட்டமிட்டுக் கொண்டிருப்பதை அவர்கள் காண்பது எனக்கு விருப்பமில்லாததால் மெதுவாக எழுந்து அங்கசுத்தி செய்தேன். அப்போது அவர்கள் தொழுவதற்காக நின்றார்கள். நான் அவர்களின் இடப்பக்கத்தில் நின்றேன். உடனே அவர்கள் என் காதைப்பிடித்துச் சுற்றி அப்படியே என்னைத் தம் வலப்பக்கத்திற்குக் கொண்டுவந்தார்கள். பிறகு (தொழத் தொடங்கி) பதிமூன்று ரக்அத்களுடன் தம் தொழுகையை முடித்துக் கொண்டார்கள்.

பின்னர் குறட்டைவிட்டபடி உறங்கினார்கள். (பொதுவாக) அவர்கள் உறங்கும்போது குறட்டை விடுவார்கள். அப்போது அவர்களை பிலால் (ரலி) அவர்கள் தொழுகைக்காக அழைத்தார்கள். எனவே, அவர்கள் (எழுந்து புதிதாக) அங்கசுத்தி செய்யாமலேயே தொழுதார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் தங்களின் பிரார்த்தனையில் (பின்வருமாறு) கூறிக் கொண்டிருந்தார்கள். ‘அல்லாஹும்மஜ்அல் ஃபீ கல்பீ நூரன். வ ஃபீ பஸரீ நூரன். வ ஃபீ ஸம்ஈ நூரன். வ அன் யமீனீ நூரன். வ அன் யஸாரீ நூரன். வ ஃபவ்க்கீ நூரன். வ தஹ்த்தீ நூரன். வ அமாமீ நூரன். வ கல்ஃபீ நூரன். வஜ்அல் லீ நூரன்.

(பொருள்: இறைவா! என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் வலப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் இடப்பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு முன்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குப் பின்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு (எல்லாத் திசையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக.)

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : (புகாரி: 6316) 

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) குறைப் (ரலி) கூறினார்.

(உடல் எனும்) பேழையிலுள்ள வேறு ஏழு பொருட்களிலும் ஒளியை ஏற்படித்திடுமாறு நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அப்பாஸ் (ரலி) அவர்களின் புதல்வர்களில் ஒருவரைச் சந்தித்தபோது அவற்றை எனக்கு அன்னார் அறிவித்தார்கள். என் நரம்பிலும் என் சதையிலும் என் இரத்தத்திலும் என் ரோமத்திலும் என் சருமத்திலும் (ஒளியை ஏற்படுத்துவாயாக.) இவ்வாறு கூறிவிட்டு, மேலும் (மனம் மற்றும் நாவு ஆகிய) இரண்டையும் குறிப்பிட்டார்கள்.

நூல் : (புகாரி: 6316) 

உறங்கப் போகும் போது இறைவனிடம் பாதுகாப்புக் கோருவதும் (குர்ஆன் அத்தியாயங்களை) ஓதுவதும்
كَانَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ نَفَثَ فِي يَدَيْهِ، وَقَرَأَ بِالْمُعَوِّذَاتِ، وَمَسَحَ بِهِمَا جَسَدَهُ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் படுக்கைக்குச் சென்றால் இறைப் பாதுகாப்புக் கோரும் (112, 113, 114 ஆகிய மூன்று) அத்தியாயங்களை ஓதி தம் மேனியில் தடவிக் கொள்வார்கள்.

அறிவிபத்பவர் : ஆயிஷா(ரலி)
நூல் : (புகாரி: 6319) 

நள்ளிரவில் பிரார்த்திப்பது
يَتَنَزَّلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا، حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ، يَقُولُ: مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ، مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ، مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சுபிட்சமும், உயர்வும் உடைய நம் இறைவன் ஒவ்வோர் இரவும் கீழ் வானிற்கு இறங்கி இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி இருக்கும்போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரின் பிரார்த்தனையை நான் அங்கிகரிக்கிறேன். என்னிடம் யாரேனும் கேட்டால், பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுகிறான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : (புகாரி: 6321) 

கழிவறைக்குச் செல்லும் போது ஓத வேண்டிய பிரார்த்தனை
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الخَلاَءَ قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الخُبُثِ وَالخَبَائِثِ»

நபி (ஸல்) அவர்கள் கழிவறைக்குள் நுழையும்போது ‘அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் குப்ஸி வல் கபாயிஸி’ என்று கூறுவார்கள்.

(பொருள்: இறைவா! ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்கிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)

அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி)
நூல் : (புகாரி: 6322) 

அதிகாலையில் ஓத வேண்டிய பிரார்த்தனை
سَيِّدُ الِاسْتِغْفَارِ: اللَّهُمَّ أَنْتَ رَبِّي، لاَ إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي، فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ. إِذَا قَالَ حِينَ يُمْسِي فَمَاتَ دَخَلَ الجَنَّةَ – أَوْ: كَانَ مِنْ أَهْلِ الجَنَّةِ – وَإِذَا قَالَ حِينَ يُصْبِحُ فَمَاتَ مِنْ يَوْمِهِ مِثْلَهُ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘அல்லாஹும்ம அன்த்த ரப்பீ. ல இலாஹ இல்லா அன்த்த. கலக்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க வ வஃதிக்க மஸ்ததஅத்து, அபூஉ லக்க பி நிஃமத்திக்க, வ அபூஉ லக்க பி தன்பீ. ஃபஃக்ஃபிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த. அஊது பிக்க மின் ஷர்ரி ஸனஃத்து’ என்பதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல் ஆகும்.

(பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமையாவேன். நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன்.

நீ (எனக்கு) அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக் கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை. நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.

மாலை நேரத்தில் ஒருவர் இதைச் சொல்லிவிட்டு (அன்று மாலையே) அவர் இறந்தால் அவர் (சொர்க்கம் செல்வார்’ அல்லது சொர்க்கவாசியாவார்’ காலை நேரத்தில் ஒருவர் (இதைச்) சொல்லிவிட்டு அன்று பகலிலேயே இறந்தால் அதே போன்றுதான் (அவரும் சொர்க்கம் செல்வார்)

அறிவிப்பவர் : ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரலி)
நூல் : (புகாரி: 6323) 

தொழுகையில் ஓதும் பிரார்த்தனை
كُنَّا نَقُولُ فِي الصَّلاَةِ: السَّلاَمُ عَلَى اللَّهِ، السَّلاَمُ عَلَى فُلاَنٍ، فَقَالَ لَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ: ” إِنَّ اللَّهَ هُوَ السَّلاَمُ، فَإِذَا قَعَدَ أَحَدُكُمْ فِي الصَّلاَةِ فَلْيَقُلْ: التَّحِيَّاتُ لِلَّهِ – إِلَى قَوْلِهِ – الصَّالِحِينَ، فَإِذَا قَالَهَا أَصَابَ كُلَّ عَبْدٍ لِلَّهِ فِي السَّمَاءِ وَالأَرْضِ صَالِحٍ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، ثُمَّ يَتَخَيَّرُ مِنَ الثَّنَاءِ مَا شَاءَ

நாங்கள் தொழுகையில் (அமர்வில்) ‘அஸ்ஸலாமு அலல்லாஹ், அஸ்ஸலாமு அலா ஃபுலான்’ (அல்லாஹ்வுக்கு சாந்தியுண்டாகட்டும்; இன்னாருக்கு சாந்தியுண்டாகட்டும்) என்று கூறி வந்தோம். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களிடம், ‘நிச்சயமாக அல்லாஹ்வே ‘சலாம்’ (சாந்தியளிப்பவன்) ஆவான். எனவே, நீங்கள் தொழுகையில் (இருப்பில்) அமர்ந்தால், ‘அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸலாவாத்து வத்தய்யிப்பாத்து. அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு, அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன்.

பொருள் : (சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும், வணக்கங்களும், பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்களின் மீது சாந்தியும், அல்லாஹ்வின் அருளும், சுபிட்சமும் உண்டாகட்டுமாக! எங்களின் மீதும், அல்லாஹ்வின் நல்லடியார்களின் மீதும் சாந்தி உண்டாகட்டும்)’ என்று கூறுங்கள்.

இவ்வாறு நீங்கள் கூறினாலே வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்களுக்கும் சலாம் கூறினீர்கள் எனலாம்.

மேலும், ‘அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லால்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார்கள் என்றும் நான் உறுதி கூறுகிறேன்)’ என்றும் கூறுங்கள். பிறகு உங்களுக்கு விருப்பமான இறைத் துதிகளைக் கூறலாம்’ என்றார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல் : (புகாரி: 6328) 

عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ:
أَنَّهُ قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: عَلِّمْنِي دُعَاءً أَدْعُو بِهِ فِي صَلاَتِي، قَالَ قُلْ: اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا، وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ، وَارْحَمْنِي، إِنَّكَ أَنْتَ الغَفُورُ الرَّحِيمُ

‘தொழுகையில் (இறுதி அமர்வில்) நான் ஓதவேண்டிய ஒரு பிரார்த்தனையை எனக்குக் கற்றுத் தாருங்கள்’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அப்போது ‘அல்லாஹும்ம இன்னீ ளலம்து நஃப்ஸீ ளுல்மன் கஸீரன். வலா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த. ஃபஃக்ஃபிர்லீ மஃக்ஃபிரத்தம் மின் இன்திக்க வர்ஹம்னீ. இன்னக்க அன்த்தல் ஃகஃபூருர் ரஹீம்’ என்று கூறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

(பொருள்: இறைவா! எனக்கு நானே அதிகமாக அநீதி இழைத்துக் கொண்டேன். உன்னைத் தவிர வேறெவராலும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே, உன்னிடமிருந்து எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக! மேலும், எனக்குக் கருணை புரிவாயாக! நிச்சயமாக நீ மன்னிப்பவனும் கருணையாளனுமாவாய்.)

அறிவிப்பவர் : அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி)
நூல் : (புகாரி: 6326) 

நபி (ஸல்) அவர்கள் பிறருக்காக செய்த பிரார்த்தனை
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَاهُ رَجُلٌ بِصَدَقَةٍ قَالَ: «اللَّهُمَّ صَلِّ عَلَى آلِ فُلاَنٍ» فَأَتَاهُ أَبِي فَقَالَ: «اللَّهُمَّ صَلِّ عَلَى آلِ أَبِي أَوْفَى»

யாரேனும் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ஸகாத் பொருளைக் கொண்டு வந்தால் ‘இறைவா! இன்னாரு(க்கும் அவரு)டைய குடும்பத்தாருக்கும் கருணை புரிவாயாக!’ என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பது வழக்கம்.

என் தந்தை (அபூஅவ்ஃபா (ரலி) அவர்கள்) தமது ஸகாத்தை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இறைவா! அபூஅவ்ஃபாவு(க்கும் அவரு)டைய குடும்பத்தாருக்கும் கருணை புரிவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா (ரலி)
நூல் : (புகாரி: 6332) 

قَالَتْ أُمُّ سُلَيْمٍ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَسٌ خَادِمُكَ، قَالَ: «اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ، وَوَلَدَهُ، وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ»

(என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், ‘அனஸ் தங்களின் சேவகர். (அவருக்காகப் பிரார்த்தியுங்கள்)’ என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வே, அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக! அவருக்கு நீ வழங்கியவற்றில் வளத்தை அளிப்பாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : (புகாரி: 6334) 

سَمِعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَقْرَأُ فِي المَسْجِدِ فَقَالَ: «رَحِمَهُ اللَّهُ، لَقَدْ أَذْكَرَنِي كَذَا وَكَذَا آيَةً، أَسْقَطْتُهَا فِي سُورَةِ كَذَا وَكَذَا»

பள்ளிவாசலில் ஒருவர் குர்ஆன் ஓதிக்கொண்டிருப்பதைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அவருக்குக் கருணை புரிவானாக! இன்ன இன்ன அத்தியாயங்களில் நான் மறந்துவிட்டிருந்த இன்ன இன்ன வசனங்களை அவர் எனக்கு நினைவுபடுத்திவிட்டார்’ என்றார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : (புகாரி: 6335) 

கேட்பதை வலியுறுத்தி கேட்க வேண்டும்
لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ: اللَّهُمَّ اغْفِرْ لِي إِنْ شِئْتَ، اللَّهُمَّ ارْحَمْنِي إِنْ شِئْتَ، لِيَعْزِمِ المَسْأَلَةَ، فَإِنَّهُ لاَ مُكْرِهَ لَهُ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் இறைவா! நீ நினைத்தால் என்னை மன்னிப்பாயாக. இறைவா! நீ நினைத்தால் என் மீது அருள் புரிவாயாக’ என்று பிரார்த்திக்க வேண்டாம். மாறாக, கேட்பதை வலியுறுத்திக் கேளுங்கள். (இது, இறைவனைக் கட்டாயப்படுத்துவதாகாது.) ஏனெனில், அவனைக் கட்டாயப்படுத்துபவர் யாருமில்லை.)

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : (புகாரி: 6339) 

அவசரப்படாத வரையில் அடியானின் பிரார்த்தனை ஏற்கப்படும்
يُسْتَجَابُ لِأَحَدِكُمْ مَا لَمْ يَعْجَلْ، يَقُولُ: دَعَوْتُ فَلَمْ يُسْتَجَبْ لِي

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘நான் பிரார்த்தித்தேன். ஆனால், என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை’ என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : (புகாரி: 6340) 

கிப்லாவை முன்னோக்காமல் பிரார்த்திப்பது
بَيْنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ يَوْمَ الجُمُعَةِ، فَقَامَ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، ادْعُ اللَّهَ أَنْ يَسْقِيَنَا، فَتَغَيَّمَتِ السَّمَاءُ وَمُطِرْنَا، حَتَّى مَا كَادَ الرَّجُلُ يَصِلُ إِلَى مَنْزِلِهِ، فَلَمْ تَزَلْ تُمْطَرُ إِلَى الجُمُعَةِ المُقْبِلَةِ، فَقَامَ ذَلِكَ الرَّجُلُ أَوْ غَيْرُهُ، فَقَالَ: ادْعُ اللَّهَ أَنْ يَصْرِفَهُ عَنَّا فَقَدْ غَرِقْنَا. فَقَالَ: «اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا» فَجَعَلَ السَّحَابُ يَتَقَطَّعُ حَوْلَ المَدِينَةِ، وَلاَ يُمْطِرُ أَهْلَ المَدِينَةِ

நபி (ஸல்) அவர்கள் (ஒரு) வெள்ளிக் கிழமையன்று உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றார். நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனைக்குப் பின்) மேகமூட்டம் உண்டாம் மழை பொழிந்தது. எந்த அளவிற்கென்றால், அந்த மனிதரால் தம் வீட்டுக்குப் போய்ச் சேர முடியவில்லை. அடுத்த வெள்ளிக்கிழமை வரை மழை நீடித்தது.

(அந்த வெள்ளிக்கிழமை) ‘அதே மனிதர்’ அல்லது ‘வேறொருவர்’ எழுந்து, ‘மழையை வேறு பக்கம் திருப்பிவிடுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். (கன மழையினால்) நாங்கள் நீரில் மூழ்கிவிட்டோம்’ என்று கூறினார்.

அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘இறைவா! (இந்த மழையை) எங்கள் சுற்றுவட்டாரங்களுக்குத் திருப்பிவிடுவாயாக! எங்களுக்குப் பாதகமாக இதை ஆக்கிவிடாதே’ என்று பிரார்த்தித்தார்கள்.

அந்த மேகம் கலைந்து மதீனாவின் சுற்றுப் புறங்களுக்குச் சென்றது மதினாவாசிகளுக்கு மழை பொழியவில்லை. 

அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி)
நூல் : (புகாரி: 6342) 

கிப்லாவை முன்னோக்கியவாறு பிரார்த்திப்பது
«خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى هَذَا المُصَلَّى يَسْتَسْقِي، فَدَعَا وَاسْتَسْقَى، ثُمَّ اسْتَقْبَلَ القِبْلَةَ وَقَلَبَ رِدَاءَهُ»

நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்க இந்தத் தொழுகைத் திடலுக்குப் புறப்பட்டார்கள். (இங்கு வந்து) மழை வேண்டிப் பிரார்த்தித்தார்கள். பிறகு கிப்லாவை முன்னோக்கி, தம் மேல்துண்டை (இடம் வலமாக) மாற்றிப் போட்டார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு யஸீத் (ரலி)
நூல் : (புகாரி: 6343) 

துன்பம் நேரும் போது பிரார்த்திப்பது
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو عِنْدَ الكَرْبِ يَقُولُ: «لاَ إِلَهَ إِلَّا اللَّهُ العَظِيمُ الحَلِيمُ، لاَ إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ، وَرَبُّ العَرْشِ العَظِيمِ»

நபி (ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது ‘லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வல்அர்ளி வ ரப்புல் அர்ஷில் அழீம்’ என்று பிரார்த்திப்பார்கள்.

(பொருள்: கண்ணியம் வாய்ந்தோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் மாபெரும் அரியாசனத்தின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.)

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : (புகாரி: 6345) 

வாழ்வையும் சாவையும் வேண்டிப் பிரார்த்திப்பது
أَتَيْتُ خَبَّابًا، وَقَدِ اكْتَوَى سَبْعًا، قَالَ: «لَوْلاَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَانَا أَنْ نَدْعُوَ بِالْمَوْتِ لَدَعَوْتُ بِهِ»

நான் கப்பாப் இப்னு அரத் (ரலி) அவர்களிடம் (அவர்களை உடல் நலம் விசாரிக்கச்) சென்றேன். அவர்கள் (கடும் வயிற்று வலிக்குச் சிகிச்சை பெறுவதற்காகத் தம் வயிற்றில்) ஏழு முறை சூடுபோட்டிருந்தார்கள்.

அப்போது அவர்கள் ‘மரணத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்ய வேண்டாமென நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்திராவிட்டால் மரணத்தை வேண்டி நான் பிரார்த்தனை செய்திருப்பேன்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : கைஸ் இப்னு அபீ ஹாஸிம் (ரஹ்)
நூல் : (புகாரி: 6349) 

لاَ يَتَمَنَّيَنَّ أَحَدٌ مِنْكُمُ المَوْتَ لِضُرٍّ نَزَلَ بِهِ، فَإِنْ كَانَ لاَ بُدَّ مُتَمَنِّيًا لِلْمَوْتِ فَلْيَقُلْ: اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتِ الحَيَاةُ خَيْرًا لِي، وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الوَفَاةُ خَيْرًا لِي

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரும் தமக்கு நேர்ந்த ஒரு துன்பத்தின் காரணத்தினால் மரணத்தை விரும்ப வேண்டாம். அவ்வாறு மரணத்தை விரும்பித்தான் ஆகவேண்டும் என்றிருந்தால், ‘இறைவா! (நான்) உயிர்வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர்வாழச் செய்வாயாக! நான் இறந்துவிடுவதே எனக்கு நன்மையாக இருப்பின், எனக்கு இறப்பைத் தருவாயாக!’ என்று கேட்கட்டும்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : (புகாரி: 6351) 

மண்ணறையின் (கப்றின்) வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல்
كَانَ سَعْدٌ، يَأْمُرُ بِخَمْسٍ، وَيَذْكُرُهُنَّ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَأْمُرُ بِهِنَّ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ البُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الجُبْنِ، وَأَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ العُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا – يَعْنِي فِتْنَةَ الدَّجَّالِ – وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ»

(என் தந்தை) ஸஅத் இப்னு ஆபீ வாக்காஸ் (ரலி) அவர்களுக்கு, நபி(ஸல்) அவர்கள் அந்த ஐந்து விஷயங்களையும் குறிப்பிட்டு அவற்றிலிருந்து பாதுகாப்புக் கோருமாறு கட்டளையிட்டுவந்தார்கள் என்று ஸஅத் இப்னு ஆபீ வாக்காஸ் (ரலி) கூறுவார்கள்:

(அவை:) அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் புக்லி, வ அஊது பிக்க மினல் ஜுப்னி, வ அஊது பிக்க அன் உறத்த இலா அர்தலில் உமுரி, வ அஊ பிக்க மிக் ஃபித்னத்தித் துன்யா, வ அஊது பிக்க மின் அதாபில் கப்ர்.

(பொருள் : இறைவா! உன்னிடம் நான் கருமித்தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். கோழைத்தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். தள்ளாத வயதுக்கு நான் தள்ளப்படுவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக்கோருகிறேன். இம்மையின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், மண்ணறையின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்)’

இம்மையின் சோதனையென்பது தஜ்ஜாலின் சோதனையைக் குறிக்கிறது.

அறிவிப்பவர் : முஸ்அப் இப்னு ஸஅத் (ரஹ்)
நூல் : (புகாரி: 6365) 

دَخَلَتْ عَلَيَّ عَجُوزَانِ مِنْ عُجُزِ يَهُودِ المَدِينَةِ، فَقَالَتَا لِي: إِنَّ أَهْلَ القُبُورِ يُعَذَّبُونَ فِي قُبُورِهِمْ، فَكَذَّبْتُهُمَا، وَلَمْ أُنْعِمْ أَنْ أُصَدِّقَهُمَا، فَخَرَجَتَا، وَدَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ لَهُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ عَجُوزَيْنِ، وَذَكَرْتُ لَهُ، فَقَالَ: «صَدَقَتَا، إِنَّهُمْ يُعَذَّبُونَ عَذَابًا تَسْمَعُهُ البَهَائِمُ كُلُّهَا» فَمَا رَأَيْتُهُ بَعْدُ فِي صَلاَةٍ إِلَّا تَعَوَّذَ مِنْ عَذَابِ القَبْرِ

மதீனா யூத மூதாட்டிகளில் இருவர் என்னிடம் வந்து (பேசிக் கொண்டிருந்தபோது) ‘மண்ணறை வாசிகள் மண்ணறைகளில் வேதனை செய்யப்படுகின்றனர்’ என்று கூறினர். அவர்கள் கூறியதை நம்புவது எனக்குச் சரியாகப் படவில்லை. பிறகு அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டனர். நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான், ‘இறைத்தூதர் அவர்களே! இரண்டு மூதாட்டிகள் (என்னிடம் வந்து இப்படி இப்படிச் சொன்னார்கள்) என்று அவர்களிடம் தெரிவித்தேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இருவரும் உண்மையே சொன்னார்கள். (மண்ணறையிலிருக்கும் பாவிகள்) கடுமையாக வேதனை செய்யப்படுகிறார்கள். அந்த வேதனை(யால் அவதியுறும் அவர்களின் அலறல்)தனை எல்லா மிருகங்களும் செவியேற்கின்றன’ என்றார்கள். அதற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் எல்லாத் தொழுகைகளிலும் மண்ணறையின் வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : (புகாரி: 6366) 

வாழ்வு மற்றும் சாவின் சோதனைகளிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல்
كَانَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ العَجْزِ وَالكَسَلِ، وَالجُبْنِ وَالبُخْلِ وَالهَرَمِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ المَحْيَا وَالمَمَاتِ»

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி, வல்கஸலி, வல்ஜுப்னி, வல்ஹரம். வ அஊது பிக்க மின் அதாபில் கப்ர். வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஹ்யா வல்மமாத்’ என்று பிரார்த்தித்து வந்தார்கள்.

(பொருள்: இறைவா! இயலாமையிலிருந்தும் சோம்பலிருந்தும் கோழைத் தனத்திலிருந்தும் தள்ளாமையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இன்னும் வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.

அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி)
நூல் : (புகாரி: 6367) 

பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல்
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الكَسَلِ وَالهَرَمِ، وَالمَأْثَمِ وَالمَغْرَمِ، وَمِنْ فِتْنَةِ القَبْرِ، وَعَذَابِ القَبْرِ، وَمِنْ فِتْنَةِ النَّارِ وَعَذَابِ النَّارِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الغِنَى، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الفَقْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ المَسِيحِ الدَّجَّالِ، اللَّهُمَّ اغْسِلْ عَنِّي خَطَايَايَ بِمَاءِ الثَّلْجِ وَالبَرَدِ، وَنَقِّ قَلْبِي مِنَ الخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَبَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ المَشْرِقِ وَالمَغْرِبِ»

நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக்க மினல் கஸலி, வல்ஹரமி, வல்மஃஸமி, வல்மஃக்ரமி, வ மின் ஃபித்னத்தில் கப்றி வ அதாபில் கப்றி, வ மின் ஃபித்னத்திந் நாரி வஅதாபிந் நாரி, வ மின் ஷர்ரி ஃபித்னத்தில் ஃகினா. வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால், அல்லாஹும் மஃக்ஸில் அன்னீ கத்தாயாய பி மாயிஸ் ஸல்ஜி வல்பரத். வ நக்கி கல்பீ மினல் கத்தாயா, கமா நக்ககைத்தஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸ். வ பாஇத் பைனீ வ பைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல் மஃக்ரிப்’ என்று பிரார்த்தித்து வந்தார்கள்.

(பொருள்: இறைவா! உன்னிடம் நான் சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும், பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும், மண்ணறையின் சோதனையிலிருந்தும், அதன் வேதனையிலிருந்தும், நரகத்தின் சோதனையிலிருந்தும், அதன் வேதனையிலிருந்தும், செல்வத்தின் தீமைகளிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.

மேலும், நான் உன்னிடம் வறுமையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். (பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.

இறைவா! பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளை என்னிலிருந்து கழுவுவாயாக! மேலும், அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப்படுத்துவதைப் போன்று தவறுகளிலிருந்து என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக)

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : (புகாரி: 6368) 

கோழைத்தனத்திலிருந்தும் சோம்பலிலிருந்தும் (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருவது
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الهَمِّ وَالحَزَنِ، وَالعَجْزِ وَالكَسَلِ، وَالجُبْنِ وَالبُخْلِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ»

நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஹம்மி, வல்ஹஸனி, வல்அஜ்ஸி, வல்கஸலி, வல்ஜுப்னி, வல்புக்லி, வளலஇத் தைனி, வ ஃகலபத்திர் ரிஜால்’ எனப் பிரார்த்தித்து வந்தார்கள்.

(பொருள்: இறைவா! கவலையிலிருந்தும் துக்கத்திலிருந்தும் இயலாமையிலிருந்தும் சோம்பலிருந்தும் கோழைத் தனத்திலிருந்தும் கருமித்தனத்திலிருந்தும் கடன் சுமையிலிருந்தும் மனிதர்களின் அடக்குமுறைகளிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.

அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி)
நூல் : (புகாரி: 6369) 

كَانَ يَأْمُرُ بِهَؤُلاَءِ الخَمْسِ: وَيُحَدِّثُهُنَّ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ البُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الجُبْنِ، وَأَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ العُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ»

(என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் இந்த ஐந்து விஷயங்களிலிருந்தும் பாதுகாப்புக் கோருமாறு கூறி, அவற்றை நபி (ஸல்) அவர்கள் தெரிவித்ததாகக் கூறுவார்கள். (அவை:) அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் புக்லி, வ அஊது பிக்க மினல் ஜுப்னி, வ அஊது பிக்க அன் உறத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வ அஊது பிக்க மின் அதாபில் கப்ற்.

(பொருள்: இறைவா! உன்னிடம் நான் கருமித் தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். கோழைத்தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். தள்ளாத வயதுக்கு நான் தள்ளப்படுவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இம்மையின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)

அறிவிப்பவர் : முஸ்அப் இப்னு ஸஅத் (ரஹ்)
நூல் : (புகாரி: 6370) 

சோம்பலிலிருந்து, கோழைத்தனத்திலிருந்தும் பாதுகாப்பு கோரல்
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَعَوَّذُ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الكَسَلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الجُبْنِ ، وَأَعُوذُ بِكَ مِنَ الهَرَمِ، وَأَعُوذُ بِكَ مِنَ البُخْلِ»

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருவனவற்றிலிருந்து அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரிவந்தார்கள்: அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் கஸலி, வ அஊது பிக்க மினல் ஜுப்னி, வ அஊது பிக்க மினல் ஹரமி, வ அஊது பிக்க மினல் புக்ல்

பொருள்: இறைவா! சோம்பலிலிருந்து நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். கோழைத்தனத்திலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். தள்ளாமையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். கருமித்தனத்திலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.

அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி)
நூல் : (புகாரி: 6371) 

கொள்ளைநோய் முதலான நோய்களை அகற்றுமாறு பிரார்த்திப்பது
«اللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا المَدِينَةَ كَمَا حَبَّبْتَ إِلَيْنَا مَكَّةَ أَوْ أَشَدَّ، وَانْقُلْ حُمَّاهَا إِلَى الجُحْفَةِ، اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي مُدِّنَا وَصَاعِنَا»

நபி (ஸல்) அவர்கள், ‘இறைவா! மக்கா நகரை எங்கள் நேசத்திற்குரியதாக நீ ஆக்கியதைப் போன்று மதீனாவையும் எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்குவாயாக! இங்குள்ள காய்ச்சலை ‘ஜுஹ்ஃபா’ எனும் பகுதிக்கு நீ இடம்பெயரச் செய்திடுவாயாக!

இறைவா! (எங்களுடைய அளவைகளான) ஸாஉ, முத்(து) ஆகியவற்றில் (அதாவது எங்கள் உணவில்) எங்களுக்கு நீ செழிப்பை (பரக்கத்) ஏற்படுத்துவாயாக’ என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : (புகாரி: 6372) 

தள்ளாத வயது, இம்மைச் சோதனை, நரகத்தின் சோதனை ஆகியவற்றிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல்
تَعَوَّذُوا بِكَلِمَاتٍ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَعَوَّذُ بِهِنَّ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الجُبْنِ، وَأَعُوذُ بِكَ مِنَ البُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ العُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَعَذَابِ القَبْرِ»

நபி (ஸல்) அவர்கள் எந்த வார்த்தைகளால் பாதுகாப்புக் கோரிவந்தார்களோ அவற்றைக் கூறி நீங்களும் பாதுகாப்புக் கோருங்கள். (அவை:) அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஜுப்னி, வ அஊது பிக்க மினல் புக்லி, வ அஊது பிக்க மின் அன் உறத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வ அதாபில் கப்ற்.

(பொருள்: இறைவா! கோழைத்தனத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். கருமினத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நான் தள்ளாத வயதுக்குத் தள்ளப்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், இம்மையின் சோதனையிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.

அறிவிப்பவர் : ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி)
நூல் : (புகாரி: 6374) 

செல்வத்தினால் ஏற்படும் சோதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல்
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَعَوَّذُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ النَّارِ وَمِنْ عَذَابِ النَّارِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ القَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الغِنَى، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الفَقْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ المَسِيحِ الدَّجَّالِ»

நபி (ஸல்) அவர்கள் (பின்வருவனவற்றிலிருந்து அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள்: அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் ஃபித்னத்திந் நாரி, வ மின் அதாபிந் நார். வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் கப்ற், வ அஊது பிக்க மின் அதாபில் கப்ற், வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் ஃகினா, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் ஃபக்ர், வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால்.

பொருள்: இறைவா! நரகத்தின் சோதனையிலிருந்தும், நரகத்தின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மண்ணறையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். செல்வத்தின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.

வறுமையின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும் (பெருங் குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : (புகாரி: 6376) 

வறுமையினால் ஏற்படும் சோதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல்

நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்திப்பவர்களாய் இருந்தார்கள்:
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் ஃபித்னத்திந் நாரி, வ அதாபிந் நாரி, வ ஃபித்னத்தில் கப்றி, வ அதாபில் கப்றி, வ ஷர்ரி ஃபித்னத்தில் ஃபக்ர், அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் ஷர்ரி ஃபித்னதில் மஸீஹித் தஜ்ஜால்.

அல்லாஹும்மஃக் ஸில் கல்பீ பி மாயிஸ் ஸல்ஜி வல்பரத். வ நக்கி கல்பீ மினல் கத்தாயா கமாநக்கைத்தஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸ்.

வ பாஇத் பைனீ வ பைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல் மஃக்ரிப். அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் கஸலி, வல்மஃஸமி, வல்மஃக்ரம்.

(பொருள்: இறைவா! உன்னிடம் நான் நரகத்தின் சோதனையிலிருந்தும், நரகத்தின் வேதனையிலிருந்தும், மண்ணறையின் சோதனையிலிருந்தும், மண்ணறையின் வேதனையிலிருந்தும், செல்வச் சோதனையின் தீமையிலிருந்தும், வறுமைச் சோதனையின் தீமையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! உன்னிடம் நான் (மகாபொய்யன்) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.

இறைவா! பனிக்கட்டியின் நீராலும் ஆலங்கட்டியின் நீராலும் என் உள்ளத்தைக் கழுவிடுவாயாக! அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப்படுத்துவதைப் போன்று தவறுகளிலிருந்து என் உள்ளத்தை நீ தூய்மைப்படுத்துவாயாக!

மேலும், கிழக்கிற்கும் மேற்கிற்கும்இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்கும் இடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக! இறைவா! உன்னிடம் நான் சோம்பலிலிருந்தும், பாவத்திலிருந்தும் கடனிலிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : (புகாரி: 6377) 

சுபிட்சத்துடன் செல்வம் பெருகிடப் பிரார்த்திப்பது
يَا رَسُولَ اللَّهِ، أَنَسٌ خَادِمُكَ، ادْعُ اللَّهَ لَهُ، قَالَ: «اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ، وَوَلَدَهُ، وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ

‘இறைத்தூதர் அவர்களே! அனஸ் தங்களின் சேவகராவார். அவருக்காகப் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘இறைவா! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்கிடுவாயாக! அனஸுக்கு நீ வழங்கிய (எல்லா)வற்றிலும் சுபிட்சத்தை ஏற்படுத்துவாயாக’ என்று பிரார்த்தித்தார்கள்.
இதைப் போன்றே அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து ஹிஷாம் இப்னு ஸைத் (ரஹ்) அவர்களும் அறிவித்தார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி)
நூல் : (புகாரி: 6378) & 6379

மணமகனுக்காகப் பிரார்த்திப்பது
رَأَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَثَرَ صُفْرَةٍ، فَقَالَ: «مَهْيَمْ، أَوْ مَهْ» قَالَ: قَالَ: تَزَوَّجْتُ امْرَأَةً عَلَى وَزْنِ نَوَاةٍ مِنْ ذَهَبٍ، فَقَالَ: «بَارَكَ اللَّهُ لَكَ، أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ»

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களின் (ஆடை) மீது (வாசனைத் திரவியத்தின்) மஞ்சள் நிற அடையாளத்தை நபி (ஸல்) அவர்கள் கண்டபோது ‘விஷயம் என்ன?’ அல்லது ‘என்ன(இது)?’ என்று கேட்டார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள், ஒரு பேரீச்சங்கொட்டை எடையளவு தங்கத்தை (மஹ்ராக)க் கொடுத்து ஒரு பெண்ணை நான் மணமுடித்துக் கொண்டேன்’ என்று பதிலளித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘பாரகல்லாஹு லக்க’ (அல்லாஹ் உங்களுக்கு சுபிட்சத்தை வழங்குவானாக!) என்று பிரார்த்தித்துவிட்டு, ‘ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா-மணவிருந்து அளியுங்கள்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி)
நூல் : (புகாரி: 6386) 

மனைவியிடம் (தாம்பத்திய உறவுகொள்ளச்) செல்லும் போது ஓத வேண்டிய பிரார்த்தனை
لَوْ أَنَّ أَحَدَهُمْ إِذَا أَرَادَ أَنْ يَأْتِيَ أَهْلَهُ قَالَ: بِاسْمِ اللَّهِ، اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ، وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا، فَإِنَّهُ إِنْ يُقَدَّرْ بَيْنَهُمَا وَلَدٌ فِي ذَلِكَ لَمْ يَضُرَّهُ شَيْطَانٌ أَبَدًا

உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவுகொள்ள விரும்பும்போது, ‘பிஸ்மில்லாஹி, அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான் வ ஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸக்த்தனா’

(அல்லாஹ்வின் திருப்பெயரால்… இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானை விலக்கிவைப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் குழந்தைச் செல்வத்தைவிட்டும் ஷைத்தானை விலக்கிவைப்பாயாக) என்று பிரார்த்தித்து, அந்த உறவினால் அந்தத் தம்பதியருக்கு விதிக்கப்பட்டபடி குழந்தை பிறந்தால், அக்குழந்தைக்கு ஒருபோதும் ஷைத்தான் தீங்கிழைப்பதில்லை)

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : (புகாரி: 6388) 

எங்கள் இறைவா! இம்மையிலும் எங்களுக்கு நன்மை அருள்வாயாக! என நபி (ஸல்) அவர்கள் கூறியது
كَانَ أَكْثَرُ دُعَاءِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ»

நபி (ஸல்) அவர்கள் ‘ரப்பனா ஆத்தினா ஃபித் துன்யா ஹஸனத்தன் வ ஃபில் ஆகிரத்தி ஹஸனத்தவ் வக்கினா அதாபந் நார்’ என்றே அதிகமாகப் பிரார்த்தித்துவந்தார்கள்.

(பொருள்: எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் நன்மை அருள்வாயாக் மறுமையிலும் நன்மை அருள்வாயாக. நரகத்தின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!) 

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : (புகாரி: 6389) 

இணைவைப்பாளர்களுக்காகப் பிரார்த்திப்பது
قَدِمَ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ دَوْسًا قَدْ عَصَتْ وَأَبَتْ فَادْعُ اللَّهَ عَلَيْهَا، فَظَنَّ النَّاسُ أَنَّهُ يَدْعُو عَلَيْهِمْ، فَقَالَ: «اللَّهُمَّ اهْدِ دَوْسًا وَأْتِ بِهِمْ»

(தவ்ஸ் குலத்தைச் சேர்ந்த) துஃபைல் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின்தூதரே! தவ்ஸ் குலத்தார் (இறைவனுக்கு) மாறு செய்து (இஸ்லாத்தை ஏற்க) மறுத்துவிட்டனர். அவர்களுக்கெதிராகத் தாங்கள் பிரார்த்தியுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார்கள். அவ்வாறே அவர்களுக்கெதிராக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பார்கள் என்று மக்களும் எண்ணினர்.

(ஆனால்) நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! தவ்ஸ் குலத்தாரை நேர்வழியில் செலுத்துவாயாக! அவர்களை (எம்மிடம்) கொண்டுவந்துவிடுவாயாக’ என்று (நல்வழிவேண்டிப்) பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் : (புகாரி: 6397) 

வெள்ளிக்கிழமையன்று (துஆ ஏற்கப்படும்) அந்த நேரத்தில் பிரார்த்திப்பது
«فِي يَوْمِ الجُمُعَةِ سَاعَةٌ، لاَ يُوَافِقُهَا مُسْلِمٌ، وَهُوَ قَائِمٌ يُصَلِّي يَسْأَلُ اللَّهَ خَيْرًا إِلَّا أَعْطَاهُ» وَقَالَ بِيَدِهِ، قُلْنَا: يُقَلِّلُهَا، يُزَهِّدُهَا

அபுல்காசிம் நபி (ஸல்) அவர்கள், ‘வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம் உண்டு. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை’ என்று கூறினார்கள். அந்த நேரம் மிகவும் குறைவான நேரம் என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : (புகாரி: 6400) 

லாயிலாஹ இல்லால்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை’ என்று) கூறுவதன் சிறப்பு
مَنْ قَالَ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ. فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ، كَانَتْ لَهُ عَدْلَ عَشْرِ رِقَابٍ، وَكُتِبَ لَهُ مِائَةُ حَسَنَةٍ، وَمُحِيَتْ عَنْهُ مِائَةُ سَيِّئَةٍ، وَكَانَتْ لَهُ حِرْزًا مِنَ الشَّيْطَانِ، يَوْمَهُ ذَلِكَ حَتَّى يُمْسِيَ، وَلَمْ يَأْتِ أَحَدٌ بِأَفْضَلَ مِمَّا جَاءَ إِلَّا رَجُلٌ عَمِلَ أَكْثَرَ مِنْهُ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்.

(வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கு புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றின் மீதும் வலிமையுள்ளவன்)’

என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமாமா(க நற்பலன் பெற்றுக்கொடுப்பதா)கும்.

மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் செய்த) நூறு தவறுகள் அழிக்கப்படும். மேலும், அந்த நாளின் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும். மேலும், அவர் புரிந்த இந்த நற்செயலைவிடச் சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது; ஒருவர் இதைவிட அதிகமான (முறை இதை ஓதினால், அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர!

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : (புகாரி: 6403) 

சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்’ என்று) கூறுவதன் சிறப்பு
مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ، حُطَّتْ خَطَايَاهُ، وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ البَحْرِ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி’ (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே!

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : (புகாரி: 6405) 

அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவதன் சிறப்பு
مَثَلُ الَّذِي يَذْكُرُ رَبَّهُ وَالَّذِي لاَ يَذْكُرُ رَبَّهُ، مَثَلُ الحَيِّ وَالمَيِّتِ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றுகிறவரின் நிலை உயிருள்ளவரின் நிலைக்கும், தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின் நிலைக்கும் ஒத்திருக்கிறது.

அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி)
நூல் : (புகாரி: 6407) 

லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று கூறுவது
أَخَذَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي عَقَبَةٍ – أَوْ قَالَ: فِي ثَنِيَّةٍ – قَالَ: فَلَمَّا عَلاَ عَلَيْهَا رَجُلٌ نَادَى، فَرَفَعَ صَوْتَهُ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ، قَالَ: وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى بَغْلَتِهِ، قَالَ: «فَإِنَّكُمْ لاَ تَدْعُونَ أَصَمَّ وَلاَ غَائِبًا» ثُمَّ قَالَ: ” يَا أَبَا مُوسَى – أَوْ: يَا عَبْدَ اللَّهِ – أَلاَ أَدُلُّكَ عَلَى كَلِمَةٍ مِنْ كَنْزِ الجَنَّةِ ” قُلْتُ: بَلَى، قَالَ: «لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلَّا بِاللَّهِ»

(நாங்கள் கைபர் பயணத்தில் இருந்த போது) நபி (ஸல்) அவர்கள் ஒரு ‘குன்றில்’ அல்லது ‘மேட்டில்’ ஏறலானார்கள். அதன் மீது ஏறியபோது ஒருவர் உரத்த குரலில் ‘லாயிலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர்’ (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று முழங்கினார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் கோவேறு கழுதையில் இருந்தபடி, ‘(மெதுவாகக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேளாதவனையோ இங்கு இல்லாதவனையோ அழைப்பதில்லை’ என்று கூறினார்கள்.

பிறகு, ‘அபூமூஸா! அல்லது ‘அப்துல்லாஹ்!’ (என்று என்னைக் கூப்பிட்டு) ‘சொர்க்கத்தின் கருவூலமான ஒரு வார்த்தையை உமக்கு நான் அறிவித்துத் தரட்டுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம் (அறிவித்துத்தாருங்கள்)’ என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ‘(அந்த வார்த்தை:) லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹ் (அல்லாஹ்வின் உதவியின்றி பாவங்களிலிருந்து விலகிச் செல்லவோ, நல்லறங்கள் புரிய வலிமை பெறவோ மனிதனால் இயலாது)’ என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூமூஸா அஷ்அரீ (ரலி)
நூல் : (புகாரி: 6409) 

எனவே இது போன்ற பிரார்த்தனைகளை அன்றாடம் அல்லாஹ்விடத்தில் கேட்கும் நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக.!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.