இறுதி வரை தொடரட்டும் இந்த இரவுத் தொழுகை!

பயான் குறிப்புகள்: சந்தர்ப்ப உரைகள்

இறுதி வரை தொடரட்டும் இந்த இரவுத் தொழுகை!

வேதம் கொடுக்கப்பட்ட முந்தைய  சமுதாயமான பனூ இஸ்ராயீலுக்கு அல்லாஹ் தவ்ராத்தை அளித்து அதை அவர்கள் பற்றிப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, தூர் மலையை அவர்கள் தலைமேல் தூக்கி வைத்து உறுதிமொழி எடுத்தான்.

2:63 وَاِذْ اَخَذْنَا مِيْثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّوْرَؕ خُذُوْا مَآ اٰتَيْنٰكُمْ بِقُوَّةٍ وَّ اذْكُرُوْا مَا فِيْهِ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ‏

“நீங்கள் இறையச்சமுடையோராக ஆகிட உங்களுக்கு நாம் வழங்கிய (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொண்டு அதில் உள்ளதைச் சிந்தியுங்கள்!’’ என்று தூர் மலையை உங்களுக்கு மேல் உயர்த்தி உங்களிடம் நாம் உடன்படிக்கை எடுத்ததை எண்ணிப் பாருங்கள்!

(அல்குர்ஆன்: 2:63)

இப்படி உறுதிமொழி எடுத்த பின்பும் அவர்கள் அதற்கு மாற்றமாக நடந்தனர். அந்த வேதத்தை விட்டு விலகினர். அந்த வேதமும் அவர்களிடமிருந்து விலகிக் கொண்டது.

எல்லாம் வல்ல அல்லாஹ், இந்த சமுதாயம் வேதத்தின் படி நடப்பதற்கு இதுபோன்று  தூர் மலையெல்லாம் தலைக்கு மேல் தூக்கி வைக்கவில்லை. புனித மிக்க குர்ஆன் இறங்கிய மாதமான ரமளான் மாதத்தில் நோன்பைக் கடமையாக்கி, அந்த நோன்பின் மூலமாக இந்தச் சமுதாயத்தை  வேதத்தின் திரும்பச் செய்கிறான்.

வேதத்தை விட்டும் காத தூரம் சென்ற மக்களில் பலர் தத்தமது சக்திக்கேற்ப இதன் பக்கம் திரும்பி வந்து தங்களால் இயன்ற அமல்களைச் செய்கின்றனர். அதிலும் ஒரு மாத காலப் பயிற்சி என்பது  ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு பள்ளிக்கூடத்தில் போய் படிப்பதற்குரிய, போதிய கால அவகாசமாகும். இந்த வகையில் ரமளான் மாதம் ஒரு பள்ளிக்கூடமாகவே பாடம் நடத்தி விட்டுப் போயிருக்கின்றது.

முஸ்லிம்களில் நோன்பு நோற்காதவர்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால் மிகக் குறைவான  விகிதாச்சாரம் எனும் அளவில் தான் உள்ளனர். அந்த அளவுக்கு இந்தக் குர்ஆன் அவர்களிடம் குடிகொண்டு ஆட்சி நடத்துகின்றது. நோன்பின் மூலம் அவர்களைத் தன் பக்கம் குர்ஆன் அவர்களை அரவணைத்துக் கொள்கின்றது.

இன்னும் சொல்லப் போனால் முஸ்லிம்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பல்வேறு விதமான பாடங்களை அவர்களிடம் பதிய வைக்கின்றது. தாகமெடுக்கும் போது தண்ணீர் பக்கத்தில் இருக்கின்றது ஆனால் பருகுவதில்லை. பசியெடுக்கும் போது  உண்பதற்குப் பானையில் சோறு அருகில் நிறையவே இருக்கின்றது. ஆனால் ஒரு பருக்கை சோற்றைக் கூட வாயில் போட்டு பதம் பார்ப்பதில்லை. ஆரத் தழுவுவதற்கு அருமை மனைவி  அண்மையில் இருந்தாலும் தடுக்கப்பட்ட பகல் நேரத்தில் ஆசையைத் தணிப்பதற்கு முன் வருவதில்லை.

இதற்கெல்லாம் காரணம் என்ன? அல்லாஹ் அருகில் இருந்து கண்காணிக்கின்றான் என்ற அச்சம் தான். அந்த அச்சத்தை அல்குர்ஆன் ரமளான் மாதத்தில் உருவாக்கி விடுகின்றது.  இது திருக்குர்ஆன் ரமளான் மாதத்தில் ஊட்டுகின்ற முதல் பாடமாகும். இந்த இறையச்சம் இதயத்தில் பதிந்து விட்டால் மற்ற நன்மைகள் தானாகவே ஊற்றெடுக்க ஆரம்பித்து விடும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் ரமளான் மாதம் வந்ததும் தனியாகவும், தொழுகையில் அணியாகவும் (ஜமாஅத்தாகவும்)  இந்தக் குர்ஆனை அதிகம் அதிகம் ஓதுகின்றனர். அதாவது தங்கள் உறவை குர்ஆனுடன் புதுப்பித்துக் கொள்கின்றனர். இப்படி ஒரு நெருக்கத்தை, குர்ஆன் மக்களிடம் உண்டாக்கிக் கொள்கின்றது. இம்மாதத்தில் முஸ்லிம்கள், ஏழைகளுக்கு ஏராளமான தான தர்மங்களைச் செய்கின்றனர். தர்மங்கள் வழங்குதற்கு அவர்களை ஊக்குவித்து இயக்கிய உந்து சக்தியாக இந்தத் திருக்குர்ஆன் தான் திகழ்கின்றது.

ரமளான் மாதம்  என்ற பள்ளிக்கூடம் தருகின்ற பாடங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. அது  தருகின்ற மற்றொரு முக்கியப் பாடம் இரவுத் தொழுகையாகும். சாதாரண காலங்களில் இந்தத் தொழுகையில் நாம் ஆர்வம் காட்டுவது கிடையாது.

‘நம்பிக்கை கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமலான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்‘ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 37)

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டுவதால் நாம் ஆர்வம் காட்டுகின்றோம். இந்தத் தொழுகையை நாம் முன்னேரத்திலும் தொழுகின்றோம். பின்னேரத்திலும் தொழுகின்றோம். குறிப்பாக ரமளானின் பிந்திய பத்து இரவுகளில் பின்னேரத்தில் தான் தொழுகின்றோம். ஏன்? அந்த நேரம் அவ்வளவு சிறப்புக்குரிய நேரமாகும்.

11:81 قَالُوْا يٰلُوْطُ اِنَّا رُسُلُ رَبِّكَ لَنْ يَّصِلُوْۤا اِلَيْكَ‌ فَاَسْرِ بِاَهْلِكَ بِقِطْعٍ مِّنَ الَّيْلِ وَلَا يَلْتَفِتْ مِنْكُمْ اَحَدٌ اِلَّا امْرَاَتَكَ‌ؕ اِنَّهٗ مُصِيْبُهَا مَاۤ اَصَابَهُمْ‌ؕ اِنَّ مَوْعِدَهُمُ الصُّبْحُ‌ؕ اَلَيْسَ الصُّبْحُ بِقَرِيْبٍ‏

“லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள். அவர்கள் உம்மை நெருங்கவே முடியாது. உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படுவது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக்கெடு வைகறைப் பொழுது. வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா?’’ என்று தூதர்கள் கூறினார்கள்.

(அல்குர்ஆன்: 11:81)

இங்கு வைகைறைப் பொழுது என்று அல்லாஹ் குறிப்பிடுவது சுபுஹ் நேரமாகும். அல்லாஹ் லூத்  (அலை) சமுதாயத்தை அழிப்பதற்கு எடுத்துக் கொண்ட நேரம் சுபுஹ் நேரமாகும். அதே சமயம் லூத்  (அலை) சமுதாயத்தின் நல்லவர்களைக் காப்பதற்கு எடுத்துக் கொண்ட நேரம் ஸஹர் நேரமாகும்.

54:34 اِنَّاۤ اَرْسَلْنَا عَلَيْهِمْ حَاصِبًا اِلَّاۤ اٰلَ لُوْطٍ‌ؕ نَّجَّيْنٰهُمْ بِسَحَرٍۙ‏

“அவர்களுக்கு எதிராகக் கல் மழையை நாம் அனுப்பினோம். லூத்துடைய குடும்பத்தினரைத் தவிர. அவர்களை இரவின் கடைசி நேரத்தில் காப்பாற்றினோம்”

(அல்குர்ஆன்: 54:34)

இந்த வசனத்தில் இரவின் கடைசி நேரம் என்று அல்லாஹ் குறிப்பிடுவது ஸஹர் நேரமாகும்.

‘நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்குக் கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுவான்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 1145)

நீங்கள் சேவல் கூவுவதைச் செவியுற்றால் அல்லாஹ்விடம் அருளைக் கேளுங்கள். ஏனென்றால் அது மலக்குகளை பார்த்து விட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(முஸ்லிம்: 5275, 4908)

இது ஸஹர் நேரம் பற்றி ஹதீஸ்கள் கூறும் சிறப்பாகும்.

3:16 اَلَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَاۤ اِنَّنَاۤ اٰمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ‌ۚ‏
3:17 اَلصّٰــبِرِيْنَ وَالصّٰدِقِــيْنَ وَالْقٰنِتِــيْنَ وَالْمُنْفِقِيْنَ وَالْمُسْتَغْفِرِيْنَ بِالْاَسْحَارِ‏

“எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!’’ என்று அவர்கள் கூறுவார்கள்.  (அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மை பேசுவோராகவும், (இறைவனுக்கு) கட்டுப்பட் டோராகவும், (நல்வழியில்) செலவிடுவோராகவும், இரவின் கடைசி நேரத்தில் பாவமன்னிப்புத் தேடுவோராகவும் (இருப்பார்கள்.) 

(அல்குர்ஆன்: 3:16-17)

51:17 كَانُوْا قَلِيْلًا مِّنَ الَّيْلِ مَا يَهْجَعُوْنَ‏
51:18 وَبِالْاَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُوْنَ‏

இரவில் குறைவாகவே தூங்கிக் கொண்டிருந்தனர். இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள்.

(அல்குர்ஆன்: 51:17-18)

இந்த வசனங்களில் நல்லடியார்களின் பண்புகளைப் பற்றிக் கூறும் போது  அவர்கள், ஸஹர் நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள் என்றும் இரவில் அவனை நினைப்பதற்காக விழித்திருப்பார்கள் என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.

இந்தப் பண்புகளை வளர்க்கின்ற, வார்க்கின்ற பள்ளிக் கூடமாகவும் பயிற்சிப் பட்டறையாகவும் இந்தப் புனித ரமளான் அமைந்திருக்கின்றது. ஸஹர் உணவு சாப்பிடுவதற்காகவும் பிந்திய 10 இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடி ஸஹர் நேரங்களில் தொழுவதற்காகவும் எழுந்து பழகி ஒரு பாடத்தையும், பயிற்சியையும் பெற்றிருக்கின்றோம். எவ்வளவு தான் இரவில் நாம் கால தாமதமாகப் படுத்தாலும்  ஏதேனும் ஓர் ஏற்பாடு செய்து  அதிகாலையில் எழுவதற்குக் காரணம், ரமளான் ஊட்டிய இறையச்சம் தான்.

இந்த அச்சம் பெருநாளைக்குப் பிறகு பிரியா விடை கொடுத்து விடக் கூடாது. அடுத்த ஆண்டு வரைக்குமல்ல; ஆயுட்காலம் முடிகின்ற வரையில் உள்ள  மிச்ச சொச்சமுள்ள நாட்களிலும் அது தொடர வேண்டும் என்ற பயிற்சியையும், பக்குவத்தையும் அது ஊட்டி விடுகின்றது. தூர்ந்து போன நம் இதயத்தில் இப்படியொரு ஜோதியை ஏற்றி விடுகின்றது. இந்த ஜோதி பெருநாளைக்குப் பிறகு அணைந்து விடக்கூடாது. பெருநாளுக்குப் பிறகு உடலை விட்டு உயிர் பிரியும் நாள் வரை ரமளானில் பற்றிய இந்த ஜோதி பற்றி எரிய வேண்டும்.

73:1 يٰۤاَيُّهَا الْمُزَّمِّلُۙ‏ , 73:2 قُمِ الَّيْلَ اِلَّا قَلِيْلًا ۙ‏, 73:3 نِّصْفَهٗۤ اَوِ انْقُصْ مِنْهُ قَلِيْلًا ۙ‏, 73:4 اَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْاٰنَ تَرْتِيْلًا ؕ‏

போர்த்திக் கொண்டிருப்பவரே! இரவில் குறைவான நேரம் தவிர நின்று வணங்குவீராக! அதில் பாதியளவு, அல்லது அதைவிடச் சிறிதளவு குறைத்துக் கொள்வீராக! அல்லது அதைவிட அதிகமாக்கிக் கொள்வீராக! குர்ஆனைத் திருத்தமாக ஓதுவீராக! (அல்குர்ஆன்: 73:1-4) என்ற வசனங்களின் அடிப்படையில்  இரவுத் தொழுகை ஆரம்பக் கால கட்டத்தில் கடமையாக இருந்தது. 

பின்னர்,

73:20 اِنَّ رَبَّكَ يَعْلَمُ اَنَّكَ تَقُوْمُ اَدْنىٰ مِنْ ثُلُثَىِ الَّيْلِ وَ نِصْفَهٗ وَثُلُثَهٗ وَطَآٮِٕفَةٌ مِّنَ الَّذِيْنَ مَعَكَ‌ؕ وَاللّٰهُ يُقَدِّرُ الَّيْلَ وَالنَّهَارَ‌ؕ عَلِمَ اَنْ لَّنْ تُحْصُوْهُ فَتَابَ عَلَيْكُمْ‌ فَاقْرَءُوْا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْاٰنِ‌ؕ عَلِمَ اَنْ سَيَكُوْنُ مِنْكُمْ مَّرْضٰى‌ۙ وَاٰخَرُوْنَ يَضْرِبُوْنَ فِى الْاَرْضِ يَبْتَغُوْنَ مِنْ فَضْلِ اللّٰهِ‌ۙ وَاٰخَرُوْنَ يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ ۖ فَاقْرَءُوْا مَا تَيَسَّرَ مِنْهُ‌ ۙ وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاَقْرِضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا‌ ؕ وَمَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَيْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ هُوَ خَيْرًا وَّاَعْظَمَ اَجْرًا‌ ؕ وَاسْتَغْفِرُوا اللّٰهَ ‌ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ

“(முஹம்மதே!) நீரும், உம்முடன் உள்ள ஒரு தொகையினரும் இரவில் மூன்றில் இரு பகுதிக்கு நெருக்கமாகவும், இரவில் பாதியும், இரவில் மூன்றில் ஒரு பகுதியும் நின்று வணங்குகின்றீர்கள்’’ என்பதை உமது இறைவன் அறிவான். அல்லாஹ்வே இரவையும், பகலையும் அளவுடன் அமைத்துள்ளான். நீங்கள் அதைச் சரியாகக் கணிக்க மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிவான். எனவே அவன் உங்களை மன்னித்தான். ஆகவே குர்ஆனில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள். உங்களில் நோயாளிகளும், அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணம் செய்வோரும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் உருவாவார்கள் என்பதை அவன் அறிந்து வைத்துள்ளான். எனவே அதில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள்!

ஸகாத் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நீங்கள் முற்படுத்தும் நன்மையை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். அதுவே சிறந்தது. மகத்தான கூலி. அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன்: 73:20)

என்ற வசனங்கள் மூலம் இறைவன் சலுகையை வழங்கி இரவுத் தொழுகையை உபரியான வணக்கமாக ஆக்கிவிட்டான். இந்த விளக்கத்தை அன்னை ஆயிஷா (ரலி) கூறுகின்றார்கள்.

பார்க்க:(முஸ்லிம்: 1357, 1233)

இந்த ஹதீஸிலிருந்து இரவுத் தொழுகையின்  முக்கியத்துவத்தை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

இதே 73 வது  அத்தியாயம் 6 வது வசனத்தில் இரவில் எழுவது மிக்க உறுதியானதும், சொல்லைச் சீராக்குவதுமாகும் என்றும் அல்லாஹ் இரவுத் தொழுகை பற்றி சிறப்பித்துக் கூறுகின்றான்.

73:6   اِنَّ نَاشِئَةَ الَّيْلِ هِىَ اَشَدُّ وَطْـاً وَّاَقْوَمُ قِيْلًا ؕ‏

இரவில் எழுவது மிக்க உறுதியானதும், சொல்லைச் சீராக்குவதுமாகும்.

(அல்குர்ஆன்: 73:6)

புனித போர்க் களத்தில் பங்கெடுக்கின்ற போராளிகளாக இருந்த நபித் தோழர்கள் இந்த இரவுத் தொழுகையை நிறைவேற்றுபவர்களாக இருந்துள்ளனர்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)யை எடுத்துக் காட்டாகக் கூறலாம். பின்வரும் ஹதீஸ் இதை தெளிவுபடுத்துகின்றது.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஒருவர் கனவு கண்டால் அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். ஆகவே, நானும் ஒரு கனவு கண்டு அதை நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போது நான் (மணமாகாத) இளைஞனாக இருந்தேன். நபி (ஸல்) அவர்களது காலத்தில் நான் பள்ளிவாசலில் உறங்கக் கூடியவனாக இருந்தேன். (ஒருநாள்) நான் கனவில் இவ்வாறு கண்டேன்:

இரு வானவர்கள் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டு சென்றார்கள். கிணறுக்குச் சுற்றுச் சுவர் இருப்பது போன்று அந்த நரகத்திற்கும் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டிருந்தது. அந்த நரகத்திற்கு இரு தூண்களும் இருந்தன. அந்த நரகத்தில் எனக்குத் தெரிந்த சில மனிதர்களும் இருந்தனர். உடனே நான் “நரகத்திலிருந்து பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்’’ என்று பிராத்திக்கலானேன். அப்போது எங்களை மற்றொரு வானவர் சந்தித்தார். அவர் என்னிடம் “இனி ஒருபோதும் நீர் பீதியடைய மாட்டீர்’’ என்று கூறினார்.

இதை நான் (என் சகோதரியும் நபியவர்களின் துணைவியாருமான) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் விவரித்தேன். ஹஃப்ஸா (ரலி) அவர்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் விவரித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “அப்துல்லாஹ் (பின் உமர்) அவர் ஒரு சிறந்த மனிதர். அவர் இரவின் ஒரு பகுதியில் தொழுபவராயிருந்தால் (நன்றாயிருக்கும்)’’ என்று கூறினார்கள். அதன் பின்னர் இரவில் குறைந்த நேரமே தவிர நான் உறங்குவதில்லை.

(புகாரி: 1121)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தைவிட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. ஷஅபானில் (சில வருடங்களில்) முழு மாதமும் நோன்பு நோற்பார்கள். “உங்களால் இயன்ற அளவுக்கு நீங்கள் அமல்கள் (வணக்கங்களைச்) செய்யுங்கள்’ நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான்!’’ என்றும் கூறுவார்கள். குறைவாக இருந்தாலும் தொடர்ந்து தொழப்படும் தொழுகையே அவர்களுக்கு விருப்பமானதாக இருந்தது! ஒரு தொழுகையை அவர்கள் தொழுதால் அதைத் தொடர்ந்து தொழுவார்கள்.

நூல்: .(புகாரி: 1970)

இந்த ஹதீஸ் அடிப்படையில் குறைவாக இருந்தாலும் நிரந்தரமாகச் செய்வோமாக!

இவையனைத்தும் நம்மிடத்தில் இரவுத் தொழுகை என்ற வணக்கத்தை இறுதி மூச்சு வரை தொடரச் செய்யட்டுமாக! குறைந்தபட்சம் மூன்று ரக்கஅத்துகள் வித்ரையேனும் பின்னேரத்தில் தொழத் துவங்க வேண்டும்.