இறுதி முடிவு இனிதாகட்டும்!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

நம்முடைய அமல்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஏராளமான போதனைகள் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளன. அவற்றைக் கவனித்துச் செயல்படும் போது மட்டுமே மறுமையில் முழுமையான வெற்றிபெற முடியும். ஆகையால், அது தொடர்பான ஒரு முக்கிய போதனையை இப்போது  இந்த உரையில் அறிந்துக்கொள்வோம். 

செயல்களின் முடிவு இறுதியே

பொதுவாக மார்க்க ரீதியாக எந்தக் காரியத்தைச் செய்தாலும் குர்ஆன், ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு செய்ய வேண்டும். ஆரம்பிக்கும் விதம் மட்டுமல்லாது முடிக்கும் விதமும் சரியாக இருக்க வேண்டும்.

 وَإِنَّمَا الأَعْمَالُ بِخَوَاتِيمِهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘இறுதி முடிவுகளைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன’ என்றார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ (ரலி),
(புகாரி: 6493)

ஒரு செயலுக்குக் கூலி கிடைக்குமா, இல்லையா என்பதெல்லாம் அச்செயலின் முடிவைப் பொறுத்தே அமையும். இந்த அடிப்படை தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற முக்கிய கடமைகளுக்கும் பொருந்தும்; அற்பமாகக் கருதப்படுகின்ற சிறு காரியங்களுக்கும் பொருந்தும்.

இந்த அறிவுரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நல்லறங்கள் செய்யும் போதெல்லாம் மனதில் கொள்ள வேண்டிய ஒன்று. இதை ஒரு முக்கியமான சம்பவத்தின் போது நபிகளார் எடுத்துச் சொன்னார்கள்.

(கைபர் போரின் போது) நபி (ஸல்) அவர்கள் (யூத) இணைவைப்பாளர்களிடம் போரிட்டுக் கொண்டிருந்த ஒரு மனிதரைப் பார்த்தார்கள். அவர் எதிரிகளுக்குப் பதிலடி கொடுப்பதில் முஸ்லிம்களிலேயே மகத்தானவராக இருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘நரகவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புகிறவர் இவரைப் பார்த்துக் கொள்ளலாம்’ என்று கூறினார்கள்.

(அவரைப் பற்றி நபியவர்கள் ஏன் அவ்வாறு கூறினார்கள் என்று அறிந்து கொள்வதற்காக) உடனே அவரை இன்னொரு மனிதர் பின்தொடர்ந்தார். அந்த மனிதரோ (எதிரிகளுடன்) போராடிக் கொண்டு இருந்தார்.

இறுதியில் அந்த மனிதர் (எதிரிகளால் கடுமையாகக்) காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்துவிட விரும்பி, தன்னுடைய வாளின் (கீழ்ப் பகுதியைப் பூமியில் நட்டு வைத்து) கூரான பகுதியைத் தம் மார்புகளுக்கு இடையே வைத்து, அந்த வாளின் மீது உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். வாள் அவரின் தோள்களுக்கிடையே இருந்து வெளியேறியது.

அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘ஓர் அடியார் மக்களின் பார்வையில் சொர்க்கவாசிகளின் நற்செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். (இதைப் போன்றே) ஓர் அடியார் மக்களின் பார்வையில் நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்து வருவார். (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இறுதி முடிவுகளைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன’ என்றார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி)
(புகாரி: 6493, 6607)

இஸ்லாத்தின் மிகச்சிறந்த செயல்களுள் ஒன்று அல்லாஹ்வின் பாதையில் போரிடுவது ஆகும். இது மிகப்பெரும் அறச்செயல். அச்சீரிய செயலின் முடிவு தவறாகிப் போனதால் அதன் நன்மையை அவர் இழக்க வேண்டியதாகி விட்டது. இன்னும் சொல்வதாயின், இந்த எச்சரிக்கை ஒரு குறிப்பிட்ட அமலுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் பொருந்தும். ஒருவர் இறக்கும் போது மார்க்கத்தின் எல்லைக்குள் இருக்க வேண்டும். இல்லாவிடின் மறுமையிலே மோசமான நிலையில் மாட்டிக் கொள்வார்.

இறக்கும் இறுதி தருணம்
يُبْعَثُ كُلُّ عَبْدٍ عَلَى مَا مَاتَ عَلَيْهِ

நபி (ஸல்) அவர்கள், “ஒவ்வோர் அடியாரும், தாம் இறக்கும் போதிருந்த (மன) நிலையிலேயே எழுப்பப்படுவார்’’ என்று கூறியதை நான் கேட்டேன்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),
(முஸ்லிம்: 5518)

لَا يَمُوتَنَّ أَحَدُكُمْ إِلَّا وَهُوَ يُحْسِنُ الظَّنَّ بِاللهِ عَزَّ وَجَلَّ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னால், “உங்களில் ஒருவர், அல்லாஹ் குறித்து நல்லெண்ணம் கொண்டிருக்கும் நிலையில் அல்லாமல் மரணிக்க வேண்டாம்’’ என்று கூறியதை நான் கேட்டேன்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),
(முஸ்லிம்: 5517)

ஒருவர் இறைமறுப்பான அல்லது இணை வைப்பான நம்பிக்கையிலோ, செயலிலோ இருந்து பாவமன்னிப்புக் கோராமல் இறந்துவிட்டால் அவருக்குரிய தண்டனை நிரந்தர நரகமே! அவர் தமது வாழ்நாள் முழுவதும் எத்தனை நல்லறங்களைச் செய்திருந்தாலும் அவை அனைத்தும் வீணாகிவிடும். இது குறித்துப் பல்வேறு விதங்களில் நபிகளார் நமக்கு போதித்து இருக்கிறார்கள்.

இந்த விஷயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். இதில் அலட்சியமாக இருந்தால், சத்தியத்தைத் தெரிந்திருந்தும் கூட வழிகேட்டில் விழுந்துவிடக் கூடும். இவ்வாறு அன்று முதல் இன்று வரை பலரும் தடம் புரண்டு இருக்கிறார்கள்.

எந்த ஷைத்தானை விட்டும் பாதுகாக்குமாறு படைத்தவனிடம் மன்றாடுகிறோமோ அந்த இப்லீஸ் ஒரு காலத்தில் உயரிய அந்தஸ்தில் இருந்தவன் தான். ஜின் இனத்தைச் சேர்ந்த அவனுக்கு மலக்குமார்களுக்கு இணையான மதிப்பு இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணியாமல் சாபத்தைப் பெற்றுக் கொண்டான்.

இதே போன்று, மூஸா நபி செய்த அற்புதங்களை நேரிடையாகப் பார்த்துத் திருந்திய மக்களுள் சாமிரியும் ஒருவன். ஆரம்பத்தில் சத்தியத்தில் இருந்தவன், காளைக் கன்றைக் கடவுளாக நினைத்து தானும் கெட்டு, பிறரையும் வழிகெடுத்தான்.

இப்படி சத்தியம் கிடைத்தும் தங்களைக் கெடுத்துக் கொள்வோர் நபிகளாரின் காலத்திலும் இருந்திருக்கிறார்கள். இன்றும் பலர் இருக்கவே செய்கிறார்கள். இந்த இழிவான நிலை ஒருபோதும் நமக்கு ஏற்பட்டுவிடக் கூடாது.

எங்களில் பனுந்நஜ்ஜார் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் இருந்தார். அவர் (இஸ்லாத்தைத் தழுவி) அல்பகரா, ஆலுஇம்ரான் ஆகிய (குர்ஆன்) அத்தியாயங்களை ஓதி முடித்தார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக எழுதுபவராக இருந்தார். பிறகு அவர் (தமது பழைய கிறித்தவ மதத்துக்கே) ஓடிப்போய், வேதக்காரர்களுடன் சேர்ந்து கொண்டார். வேதக்காரர்கள் அவரைத் தூக்கி வைத்துக் கொண்டாடினர். “இவர் முஹம்மதுக்காக எழுதி வந்தார்” என்று கூறி, அவரால் பெருமைப்பட்டுக் கொண்டனர்.

இதே நிலையில், (ஒருநாள்) அவர்களுக்கு மத்தியில் வைத்து அவரது கழுத்தை அல்லாஹ் முறித்துவிட்டான். ஆகவே, அவருக்காகச் சவக்குழி தோண்டி அவரைப் புதைத்து விட்டனர். காலை நேரமான போது அவரைப் பூமி (குழிக்கு வெளியில்) தூக்கியெறிந்து விட்டிருந்தது. பிறகு மீண்டும் அவருக்காகக் குழி தோண்டி அவரைப் புதைத்தனர். மறுநாள் காலையிலும் பூமி (குழிக்கு வெளியில்) அவரைத் தூக்கியெறிந்து விட்டிருந்தது. பிறகு மறுபடியும் அவர்கள் அவருக்காகக் குழி தோண்டி அவரைப் புதைத்தனர். மறுநாள் காலையிலும் பூமி அவரை (குழிக்கு வெளியில்) தூக்கியெறிந்து விட்டிருந்தது. ஆகவே, அவர்கள் அவரை (புதைக்காமல்) அப்படியே போட்டுவிட்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
(முஸ்லிம்: 5366)

மேற்கண்ட நிகழ்வில் இருக்கும் நபர், நபிகளாரின் எழுத்தர்களில் ஒருவராக இருந்தும் கூட அவரின் மறுமை வாழ்க்கை பாழாகிவிட்டது. காரணம், அவர் இறக்கும் போது மார்க்கத்தின் வரம்புக்குள் இல்லை என்பதுதான். ஆகையால்தான் அருள்மறைக் குர்ஆனில் அல்லாஹ் பின்வருமாறு ஆணையிடுகிறான்.

 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا اللّٰهَ حَقَّ تُقٰتِهٖ وَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْـتُمْ مُّسْلِمُوْنَ‏

நம்பிக்கைக் கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள்.

(அல்குர்ஆன்: 3:102)

وَوَصّٰى بِهَآ اِبْرٰهٖمُ بَنِيْهِ وَ يَعْقُوْبُؕ يٰبَنِىَّ اِنَّ اللّٰهَ اصْطَفٰى لَـكُمُ الدِّيْنَ فَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْـتُمْ مُّسْلِمُوْنَؕ‏‏

என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது என்று இப்ராஹீமும், யஃகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர்.

(அல்குர்ஆன்: 2:132)

அடிக்கடி கோரிக்கையிட வேண்டும்

நாம் வாழும்போது சரியாக இருந்தால் மட்டும் போதாது. மரணிக்கும் போதும் முழுமையான முஸ்லிமாக இருப்பது கட்டாயம். இந்த பாக்கியத்தைக் கொடுக்கும்படி வல்ல ரஹ்மானிடம் அடிக்கடி கோரிக்கை வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்த வழிகாட்டுதல் குர்ஆன் கூறும் நல்லடியார்களின் வாழ்வில் நமக்கு இருக்கிறது.

رَبِّ قَدْ اٰتَيْتَنِىْ مِنَ الْمُلْكِ وَ عَلَّمْتَنِىْ مِنْ تَاْوِيْلِ الْاَحَادِيْثِ‌ ۚ فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَنْتَ وَلِىّٖ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ‌ ۚ تَوَفَّنِىْ مُسْلِمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَ‏

“என் இறைவா! நீ எனக்கு அதிகாரத்தில் (சிறிது) வழங்கியிருக்கிறாய். (பல்வேறு) செய்திகளின் விளக்கத்தை எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறாய்! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! நீயே இவ்வுலகிலும், மறுமையிலும் எனது பாதுகாவலன். என்னை முஸ்லிமாகக் கைப்பற்றுவாயாக! நல்லோர்களில் என்னைச் சேர்ப்பாயாக!’’

(அல்குர்ஆன்: 12:101)

وَمَا تَـنْقِمُ مِنَّاۤ اِلَّاۤ اَنْ اٰمَنَّا بِاٰيٰتِ رَبِّنَا لَمَّا جَآءَتْنَا‌ ؕ رَبَّنَاۤ اَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَّتَوَفَّنَا مُسْلِمِيْنَ‏

‘‘எங்களின் இறைவனின் சான்றுகள் எங்களிடம் வந்த போது அதை நம்பினோம் என்பதற்காகவா எங்களை நீ தண்டிக்கிறாய் (என்று பிர்அவ்னிடம் கூறிவிட்டு), எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக!’’ என்று  கூறினர்.

(அல்குர்ஆன்: 7:126)

இங்கு இன்னொரு விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இம்மை வாழ்வின் அவகாசம் அனைவருக்கும் ஒரே மாதிரி அளிக்கப்படவில்லை. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வாழ்க்கைக் கெடு முடிந்து விடலாம் என்பதை நினைவில் கொண்டு எப்போதும் சத்தியத்தில் நிலைத்திருக்க வேண்டும்.

முடியும் வாழ்கை கெடு
بَادِرُوا بِالْأَعْمَالِ فِتَنًا كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ، يُصْبِحُ الرَّجُلُ مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا، أَوْ يُمْسِي مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا، يَبِيعُ دِينَهُ بِعَرَضٍ مِنَ الدُّنْيَا

‘‘இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கு முன்பாக விரைந்து (நற்)செயல்கள் புரிந்து கொள்ளுங்கள். (அக்குழப்பங்களின் போது) காலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒரு மனிதன் மாலையில் இறை மறுப்பாளனாக மாறிவிடுவான்.

மாலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒருவன் காலையில் இறை மறுப்பாளனாக மாறிவிடுவான். இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காகத் தனது மார்க்கத்தையே அவன் விற்றுவிடுவான்’’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
(முஸ்லிம்: 186)

கடமைகளை, நற்காரியங்களைச் செய்ய வாய்ப்பு கிடைக்கும் போது அலட்சியமாக இருப்பது நல்லதல்ல. தீமைகளைத் தூக்கி எறிய தயக்கம் கூடாது. அப்போதுதான் எந்நேரத்தில் மரணம் வந்தாலும் மறுமை வெற்றிக்குத் தகுதியான நிலையில் நாம் இருக்க இயலும்.

إِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ الزَّمَنَ الطَّوِيلَ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ، ثُمَّ يُخْتَمُ لَهُ عَمَلُهُ بِعَمَلِ أَهْلِ النَّارِ، وَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ الزَّمَنَ الطَّوِيلَ بِعَمَلِ أَهْلِ النَّارِ، ثُمَّ يُخْتَمُ لَهُ عَمَلُهُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ

‘‘ஒரு மனிதர் நீண்ட காலம் சொக்கவாசிகளின் (நற்)செயலைச் செய்து கொண்டே வருவார். பிறகு அவரது செயல் நரகவாசிகளின் செயலாக முடிக்கப்படும். ஒரு மனிதர் நீண்ட காலம் நரகவாசிகளின் (தீய)செயலைச் செய்து கொண்டே வருவார். பிறகு அவரது செயல் சொர்க்கவாசிகளின் செயலாக முடிக்கப்படும்’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
(முஸ்லிம்: 5155)

உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாள்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறார். பிறகு அதைப் போன்றே (40 நாள்கள்) அந்தக் கரு ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு அதைப் போன்றே ஒரு சதைப் பிண்டமாக மாறிவிடுகிறது. பிறகு (அதனிடம்) அல்லாஹ் ஒரு வானவரை அனுப்புகிறான்.

அவர் நான்கு விஷயங்களை எழுதுமாறு பணிக்கப்படுகிறார். அந்த மனிதனின் வாழ்வாதாரம், வாழ்நாள், (செயல்பாடு), அவன் துர்பாக்கியசாலியா அல்லது நற்பாக்கியசாலியா (ஆகியவை எழுதப்படும்). பிறகு அவனுள் உயிர் ஊதப்படும்.

இதனால் தான் அல்லாஹ்வின் மீதாணையாக! ‘உங்களில் ஒருவர் நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்து கொண்டே செல்வார். இறுதியில் அவருக்கும் நரகத்திற்கும் இடையே ‘விரிந்த இரண்டு கைகளின் நீட்டளவு’ அல்லது ‘ஒரு முழம்’ இடைவெளி தான் இருக்கும்; அதற்குள் அவரின் விதி அவரை முந்திக் கொள்ள, அவர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து அதன் விளைவாகச் சொர்க்கத்தில் புகுந்து விடுவார்.

(இதைப் போன்றே) ஒருவர் சொர்க்கவாசிகளின் (நற்)செயலைச் செய்து கொண்டே செல்வார். இறுதியில் அவருக்கும் சொர்க்கத்திற்கும் இடையே ‘ஒரு முழம்’ அல்லது ‘இரண்டு முழங்கள்’ இடைவெளி தான் இருக்கும்; அதற்குள் விதி அவரை முந்திக்கொள்ள, அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து அதன் காரணத்தால் நரகத்தினுள் புகுந்துவிடுவார். இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)
(புகாரி: 6594, 5145)

இளமையில் சரியாக இருந்து விட்டு முதுமையில் அலட்சியமாக இருப்பவர்கள் உண்டு. திருமணத்திற்குப் பிறகு சரியாக இருந்து கொள்ளலாம் என்று வாலிப வயதில் கண்மூடித்தனமாக வாழ்பவர்கள் உண்டு. இவ்வாறு இல்லாமல், எல்லாக் கட்டத்திலும் சரியாக இருக்க வேண்டும். மேலும், உலகை வாழ்வை விட்டுப் பிரியும் போது இஸ்லாத்தில் சரிவர இருக்க வேண்டுமென விரும்புவோருக்குச் சில வழிகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தருகிறார்கள்.

இறுதி முடிவை எதிர்பார்த்து

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக அங்கசுத்தி (உளூ) செய்வது போன்று அங்கசுத்தி செய்து கொள். பிறகு உன் வலப்பக்கத்தின் மீது சாய்ந்து படு. பிறகு,

‘அல்லாஹும்ம அஸ்லம்த்து நஃப்ஸீ இலைக்க. வ ஃபவ்வளத்து அம்ரீ இலைக்க. வ அல்ஜஃத்து ழஹ்ரீ இலைக்க. ரஃக்பத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா இலைக்க. ஆமன்த்து பி கித்தாபிக்கல்லதீ அன்ஸல்த்த வபி நபிய்யிக்கல்லதீ அர்சல்த்த’

என்று ஓதிக்கொள். (பொருள்: இறைவா! உனக்கு நான் கீழ்ப்படிந்தேன். காரியம் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்தேன். என் விவகாரங்கள் அனைத்திலும் உன்னையே சார்ந்திருக்கிறேன். உன் மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும் தான் (இவற்றை செய்தேன்). உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடமில்லை. நீ அருளிய உன்னுடைய வேதத்தையும், நீ அனுப்பி வைத்த உன்னுடைய நபியையும் நான் நம்பினேன்.

(இவ்வாறு நீ பிரார்த்தனை செய்துவிட்டு உறங்கி அன்றைய இரவில் நீ இறந்துவிட்டால் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் இறந்தவனாவாய். இந்தப் பிரார்த்தனையை (இரவின்) இறுதிப் பேச்சாக ஆக்கிக் கொள்.

‘நான் இவற்றைத் திரும்ப ஓதிக் காட்டுகிறேன்’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறிவிட்டு ஓதிக் காட்டலானேன். (‘நீ அனுப்பிய உன் நபியையும் நான் நம்பினேன்’ என்பதற்கு பதிலாக) ‘நீ அனுப்பிய உன் ரசூலையும் நான் நம்பினேன்’ என்று நான் சொல்லி விட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘இல்லை; ‘நீ அனுப்பிய உன் நபியை நம்பினேன்’ என்று சொல்’ என (எனக்குத் திருத்தி)ச் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: பராஉ இப்னு ஆஸிப் (ரலி)
(புகாரி: 247, 6311)

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لاَ إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي، فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கலக்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூஉ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த’

என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும்.

(பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.)

இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறப்பவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்து விடுகிறவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.

அறிவிப்பவர்: ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரலி)
(புகாரி: 6306)

மறுமையில் வெற்றி பெறும் வகையில் நமது வாழ்வின் முடிவு இருக்க வேண்டுமென்ற போதனையும் மேற்கண்ட செய்திகளில் உள்ளடங்கியுள்ளது. மேலும், இந்த பாக்கியம் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டுமென விரும்பும் போது செய்ய வேண்டியதை நபிகளார் கற்றுத் தந்திருக்கிறார்கள்.

மற்றவரின் இறுதி நேரத்தில்
لَقِّنُوا مَوْتَاكُمْ لَا إِلَهَ إِلَّا اللهُ

உங்களில் மரணத் தருவாயில் உள்ளவர்களுக்கு லாயிலாஹ இல்லாஹ் என்று சொல்லிக் கொடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
(முஸ்லிம்: 1672, 1523)

«لَقِّنُوا مَوْتَاكُمْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَإِنَّهُ مَنْ كَانَ آخِرُ كَلِمَتِهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ عِنْدَ الْمَوْتِ، دَخَلَ الْجَنَّةَ يَوْمًا مِنَ الدَّهْرِ، وَإِنْ أَصَابَهُ قَبْلَ ذَلِكَ مَا أَصَابَهُ»

‘உங்களில் மரணிக்க உள்ளவருக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதைச் சொல்லிக் கொடுங்கள். மரணிக்கும் போது எவரது கடைசி பேச்சு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அமைந்து விடுகிறதோ அவர் என்றாவது ஒரு நாள் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவார். இதற்குமுன் அவரிடமிருந்து எது ஏற்பட்டிருந்தாலும் சரியே’ என்று நபிகளார் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(இப்னு ஹிப்பான்: 3004), (7/272)

كَانَ غُلاَمٌ يَهُودِيٌّ يَخْدُمُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَرِضَ، فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ، فَقَعَدَ عِنْدَ رَأْسِهِ، فَقَالَ لَهُ: «أَسْلِمْ»، فَنَظَرَ إِلَى أَبِيهِ وَهُوَ عِنْدَهُ فَقَالَ لَهُ: أَطِعْ أَبَا القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَسْلَمَ، فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقُولُ: «الحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْقَذَهُ مِنَ النَّارِ»

நபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே அவனை நோய் விசாரிக்க நபி (ஸல்) அவர்கள் அவனிடம் வந்தபோது, அவனது தலைமாட்டில் அமர்ந்துகொண்டு, “இஸ்லாத்தை ஏற்றுக்கொள்!’’ என்றார்கள்.

உடனே அவன் தன்னருகில் இருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர், “அபுல் காசிம் – நபி (ஸல்) அவர்களின் — கூற்றுக்குக் கட்டுப்படு!’’ என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டான். உடனே நபி (ஸல்) அவர்கள், “இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்’’ எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(புகாரி: 1356)

(நபியவர்களின் பெரிய தந்தை) அபூதாலிபுக்கு மரணம் நெருங்கியபோது நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கு அபூஜஹ்ல் பின் ஹிஷாம், அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா ஆகிய இருவரும் இருப்பதைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூதாலிபிடம், “எனது பெரிய தந்தையே! லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) எனச் சொல்லி விடுங்கள்! அதன் மூலம் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காகச் சாட்சியம் கூறுவேன்’’ எனக் கூறினார்கள்.

அப்போது அபூஜஹ்லும், அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும், ‘‘அபூதாலிபே அப்துல் முத்தலிபின் மார்க்கத்தைப் புறக்கணிக்கப் போகின்றீரா?’’ எனக் கேட்டனர். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் ஒருபுறமும் அவ்விருவரும் மறுபுறமுமாக அவரை வற்புறுத்திக் கொண்டிருக்கும்போது அபூதாலிப் கடைசியாக, “நான் அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயே (மரணிக்கின்றேன்)’’ என்று கூறியதோடு ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ எனக் கூறவும் மறுத்துவிட்டார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் தடுக்கப்படும்வரை உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவேன்’’ என்று கூறினார்கள். அப்போது “இணைவைப்பவர்களுக்கு பாவமன்னிப்புக் கோருவது நபிக்கும் ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதன்று’’ எனும் (அல்குர்ஆன்: 9:13) ஆவது வசனத்தை அல்லாஹ் அருளினான்.

அறிவிப்பவர்: முஸய்யிப் (ரலி)
(புகாரி: 1360)

பிறர் வாழ்வில் அக்கறை செலுத்தும் நாம், நமது வாழ்வின் முடிவும் இனிதாக இருக்க என்றென்றும் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். மறுமை வெற்றியைப் பாழடித்துக் கொள்ளாமல் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

குறிப்பாக, குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கமெனத் தெரிந்திருந்தும் பிறருடைய விமர்சனங்களுக்குப் பயந்து அதன்படி நடக்கத் தயங்குபவர்கள், உலக ஆதாயங்களை அடைவதற்காக அடிக்கடி கொள்கையை மாற்றிக் கொண்டு தவறான கொள்கைகளில் தஞ்சம் புகுபவர்கள், பிறரிடம் பேரும் புகழும் பெறுவதற்காக வழிகெட்ட காரியங்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் இனியாவது தங்களை மாற்றிக் கொள்ளட்டும்.

எனவே, கொள்கைச் சொந்தங்களே! ஏகத்துவக் கொள்கையில் கொஞ்சமும் வளைந்து கொடுக்காமல் இறுதி மூச்சு வரை உறுதியாக இருப்போமாக! எப்போதும் அல்லாஹ்வும் அவனது தூதரும் சொன்னவாறு தூய முறையில் வாழ்ந்து ஈருலகிலும் வெற்றி பெறுவோமாக!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.