இறுதி நிகழ்ச்சி.!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3
முன்னுரை

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

திருமறைக் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் ‘இறுதி நிகழ்ச்சி’ குறித்து சொல்லப்பட்டுள்ளதை இந்த உரையில் வரிசையாக காண இருக்கிறோம்!

இறுதி நிகழ்ச்சி

ஆடம்பர உலகத்தில் வாழக்கூடிய அனைத்தும் (அதாவது வானம் மற்றும் பூமியிலுள்ள மனிதர்கள், மலக்குமார்கள், மற்ற உயிரினங்கள்) ஒரு நாள் மரணிக்ககூடியவை. இந்த உலக மோகத்தின் காரணமாக நன்மை செய்வதை மனிதன் மறந்து விடுகிறான். நாம் மரணித்த பிறகு அல்லாஹ்வின் விசாரணை எப்படி இருக்கும் என்று ஒருவர் சிந்தித்து பார்த்தால் எவரும் இந்த உலக மோகத்தில் ஆசை வைக்கமாட்டார்கள்.

இந்த உலகத்தில் ஆசையுடன், எதிர்பார்ப்புடன் வாழக்கூடிய அனைவரையும் (மனிதர் மற்றும், மற்ற உயிரினங்கள்) மரணிக்க செய்வதற்காக இறுதி காலகட்டத்தில் அல்லாஹ் மலக்குமார்களை அனுப்பி முதலாவது சூரை ஊதுவதற்கு கட்டளையிடுவான். முதலாவது சூர் ஊதப்படும் போது இவ்வுலகத்திலுள்ள (அல்லாஹ் படைத்த) அனைத்தும் அழிந்துவிடும். அவன் நாடியவர்களை தவிர. இன்னும் அவனே எஞ்சியிருப்பான்.

அனைவரும் அழிந்துவிடுவார்கள்

உலக அழிவின் போது இரண்டு முறை சூர் எனும் எக்காளம் ஊதப்படும். முதல் முறை ஊதப்படும் எக்காளம் எழுப்புகின்ற படுபயங்கரமான ஓசையின் அதிர்ச்சியால் அனைத்து உயிரினங்களும் பொருட்களும் அழிந்து விடும். பிறகு இரண்டாவது முறை ஊதப்படும். எக்காளத்தின் ஓசையைக் கேட்டு மடிந்த அனைவரும் உயிர்பெற்று எழுவர். இந்த இரு எக்காளங்களுக்குமிடையே நாற்பது (நாட்கள், அல்லது மாதங்கள், அல்லது வருடங்கள்) இடைவெளி இருக்கும்.

எக்காளம் ஊதுவதற்கென நியமிக்கப்பெற்ற வானவர் இந்தப் பணியை மேற்கொள்வார். விசாரணையின் முடிவில் நல்லவர் யார்? கெட்டவர் யார்? என்பது தீர்மானிக்கப்பட்டு, நல்லோர் சொர்க்கத்திற்கும், தீயோர் நரகத்திற்கும் அனுப்பிவைக்கப்படுவர். இங்கு எக்காளம் என்பதைக் குறிக்க சூர் எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது ஒலிப்பான் வடிவில் அமைந்தள்ள ராட்சச ஊதுகுழலாகும். சில நபிமொழிகளில் கர்ன் எனும் சொல் ஆளப்பட்டுள்ளதால் இதை ஊதுகொம்பு என்றும் கூறலாம்.

 فَغَضِبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى رُئِيَ فِي وَجْهِهِ، ثُمَّ قَالَ: ” لاَ تُفَضِّلُوا بَيْنَ أَنْبِيَاءِ اللَّهِ، فَإِنَّهُ يُنْفَخُ فِي الصُّورِ، فَيَصْعَقُ مَنْ فِي السَّمَوَاتِ وَمَنْ فِي الأَرْضِ، إِلَّا مَنْ شَاءَ اللَّهُ، ثُمَّ يُنْفَخُ فِيهِ أُخْرَى، فَأَكُونُ أَوَّلَ مَنْ بُعِثَ، …

நபி (ஸல்) அவர்களுடைய முகத்தில் கோபக்குறி தென்படுகின்ற அளவிற்கு அவர்கள் கோபமடைந்தார்கள். பிறகு, “அல்லாஹ்வின் நேசர் களுக்கிடையே (“ஒருவர் மற்றவரை விடச் சிறப்பானவர்’ என்று) ஏற்றத் தாழ்வு பாராட்டாதீர்கள். ஏனெனில், (மறுமை நாளில்) எக்காளம் ஊதப்படும். உடனே, வானங்களில் இருப்பவர்களும் பூமியில் இருப்பவர்களும் மூர்ச்சையடைந்து விழுவார்கள்; அல்லாஹ் நாடியவர்களைத் தவிர. பிறகு அது இன்னொரு முறை ஊதப்படும். அப்போது (உயிராக்கி) எழுப்பப்படுபவர்களில் நான் தான் முதல் ஆளாக இருப்பேன்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : (புகாரி: 3414) 

சூர் ஊதப்படும் போது ஏற்படும் கடுமை…

மலக்குமார்கள் எக்காளம் ஊதும் போது அந்தநேரத்தில் ஏற்படும் கடுமை மிகவும் மோசமானதாகும். ஒரு பெண்மனி இரவு அல்லது மற்ற நேரங்களில் தன் குழந்தைகள் அழுதால் குழந்தைக்கு என்ன ஆச்சு என்று பயந்தநிலையில் தன் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காக பால் கொடுப்பார்கள். ஆனால் மறுமை நாளில் மலக்குமார்கள் சூர் ஊதப்படும் போது அல்லாஹ்வின் வேதனையின் காரணமாக தன் குழந்தைகளுக்கு பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்களும் தன் குழந்தைகளுக்கு பாலூட்டுவதை மறந்துவிடுவார்கள்.

அதே போன்று கர்ப்பிணியாக இருக்கும் ஒவ்வொரு பெண்களும் தன் குழந்தையை பெற்றெடுத்துவிடுவாள். ஒரு பெண் குழந்தையை பெற்று எடுப்பதாக இருந்தால் அதிகபட்சமாக 10 மாதங்கள் ஆகும். ஆனால் மறுமை நாளில் அல்லாஹ் வேதனையின் கடுமை காரணமாக அந்த பெண்மனி தன் குழந்தையை 6, 7, 8, மாதத்தில் பெற்று எடுத்து விடுவாள்.

அதாவது தாய் தன் குழந்தையை குறைமாதத்தில் பெற்றெடுத்து விடுகிறாள். அதே போன்று திடகாத்திரமாக இருக்க கூடிய ஒவ்வொரு ஆண்களும் மது பானத்தை அருந்தியவர் போன்று தள்ளாடி வருவார்கள். ஆனால் அவர்கள் மது பானத்தை அருந்தியிருக்க மாட்டார். இவை அனைத்தையும் அல்லாஹ்வின் வேதனையாகும்.

يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمْ‌ۚ اِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَىْءٌ عَظِيْمٌ‏
يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّاۤ اَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا
وَتَرَى النَّاسَ سُكٰرٰى وَمَا هُمْ بِسُكٰرٰى وَلٰـكِنَّ عَذَابَ اللّٰهِ شَدِيْدٌ‏

மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அந்த நேரத்தின் திடுக்கம் கடுமையான விஷயமாகும். நீங்கள் அதைக் காணும் நாளில் பாலூட்டும் ஒவ்வொருத்தியும், தான் பாலூட்டியதை மறந்து விடுவாள். ஒவ்வொரு கர்ப்பிணியும், தன் கருவில் சுமந்ததை ஈன்று விடுவாள். போதை வயப்பட்டோராக மனிதர்களைக் காண்பீர்! அவர்கள் போதை வயப்பட்டோர் அல்லர். மாறாக அல்லாஹ்வின் வேதனை கடுமையானது.

(அல்குர்ஆன்: 22:1,2)

சூர் ஊதப்படும் போது பூமியின் நிலைமை…

மறுமை நாளுக்காக வேண்டி சூர் ஊதப்படும் போது மிகபிரமாண்டமான இந்த பூமியை அசைத்து, அதை தன் கையில் ரொட்டி துண்டை போன்று அல்லாஹ் மடிக்கிக்கொள்வான். அதுமட்டுமல்லாமல் இந்த பூமியிலுள்ள முலைகளை தூள், தூளாக ஆக்கி, இலவம் பஞ்சை போன்று மாற்றிவிடுவான். இவ்வளவு பெரிய பூமி மற்றும் மலைகளுக்கே இந்த நிலைமை என்றால் நாம் அனைவரும் சாதாரணமானவர்கள் தான், பலமிக்கவர்கள் இல்லை. நம்முடைய நிலைமைகள் எப்படி இருக்கும் என்று நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

اِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ ۙ‏
لَيْسَ لِـوَقْعَتِهَا كَاذِبَةٌ‌ ۘ‏
خَافِضَةٌ رَّافِعَةٌ
اِذَا رُجَّتِ الْاَرْضُ رَجًّا ۙ‏
 وَّبُسَّتِ الْجِبَالُ بَسًّا ۙ‏
فَكَانَتْ هَبَآءً مُّنْۢبَـثًّا ۙ‏

அந்த நிகழ்ச்சி நடக்கும் போது, அது நிகழ்வதைத் தடுப்பதும் (அதைத்) தாமதப்படுத்துவதும் முன் கூட்டியே நடக்கச் செய்வதும் எதுவுமில்லை. பூமி ஒரேயடியாக அசைக்கப்படும் போது, மலைகள் தூள் தூளாக்கப்படும் போது, அவை பரப்பப்பட்ட புழுதியாக ஆகும்.

(அல்குர்ஆன்: 56:1-6)

وَتَكُوْنُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوْشِؕ

மலைகள் உதிர்க்கப்பட்ட கம்பளி போல் ஆகும்.

(அல்குர்ஆன்: 101:5)

உலக அழிவின் போது எக்காளம் ஊதப்படும். அதையடுத்து இந்தப் பூமி மற்றும் வானங்கள் அனைத்தும் உருத்தெரியாமல் அழிந்து போகும். இவ்வாறு அவை அழிந்து போவதை உருவகப்படுத்திக் கூறும் போது அல்லாஹ் பூமியைக் கைப்பற்றிக் கொள்வான் என்றும் வானங்களைத் தனது வலகக்கரத்தில் சுருட்டிவைத்துக் கொள்வான் என்றும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டடார்கள்.

تَكُونُ الأَرْضُ يَوْمَ القِيَامَةِ خُبْزَةً وَاحِدَةً، يَتَكَفَّؤُهَا الجَبَّارُ بِيَدِهِ كَمَا يَكْفَأُ أَحَدُكُمْ خُبْزَتَهُ فِي السَّفَرِ، نُزُلًا لِأَهْلِ الجَنَّةِ

நபி (ஸல்) அவர்கள், “மறுமை நாளில் இந்த பூமி (அடுப்பில் இருக்கும்) ஒரு ரொட்டியைப் போன்று (சமதளமாக) மாறிவிடும். பயணத்திலுள்ள உங்களில் ஒருவர் தமது ரொட்டியை (அடுப்பிலிருந்து எடுத்துக் கையில் வைத்து)ப் புரட்டுவதைப் போன்று, சர்வ வல்லமைபடைத்த(இறை)வன் பூமியைத் தனது கரத்தால் புரட்டிப்போடுவான். (அதையே) சொர்க்கவாசிகளுக்கு விருந்தாக்குவான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி),
நூல் : (புகாரி: 6520) 

மற்றொரு முறை சூர் ஊதப்படும்

அல்லாஹ் அனைத்து உயிரினங்களையும் அழித்த பிறகு தான் மறுபடியும் எக்காளம் ஊதுவதற்கு அனுமதியளிப்பான். அந்த மலக்குமார்கள் சூர் ஊதுவார்கள்.

 فَغَضِبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى رُئِيَ فِي وَجْهِهِ، ثُمَّ قَالَ: ” لاَ تُفَضِّلُوا بَيْنَ أَنْبِيَاءِ اللَّهِ، فَإِنَّهُ يُنْفَخُ فِي الصُّورِ، فَيَصْعَقُ مَنْ فِي السَّمَوَاتِ وَمَنْ فِي الأَرْضِ، إِلَّا مَنْ شَاءَ اللَّهُ، ثُمَّ يُنْفَخُ فِيهِ أُخْرَى، فَأَكُونُ أَوَّلَ مَنْ بُعِثَ، …

நபி (ஸல்) அவர்களுடைய முகத்தில் கோபக்குறி தென்படுகின்ற அளவிற்கு அவர்கள் கோபமடைந்தார்கள். பிறகு, “அல்லாஹ்வின் நேசர்களுக்கிடையே (“ஒருவர் மற்றவரை விடச் சிறப்பானவர்’ என்று) ஏற்றத் தாழ்வு பாராட்டாதீர்கள். ஏனெனில், (மறுமை நாளில்) எக்காளம் ஊதப்படும். உடனே, வானங்களில் இருப்பவர்களும் பூமியில் இருப்பவர்களும் மூர்ச்சையடைந்து விழு வார்கள்; அல்லாஹ் நாடியவர்களைத் தவிர. பிறகு அது இன்னொரு முறை ஊதப்படும். அப்போது (உயிராக்கி) எழுப்பப்படுபவர்களில் நான் தான் முதல் ஆளாக இருப்பேன்…

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) ,
நூல் : (புகாரி: 3414)

பூமியிலிருந்து வேகமாக வெளியேறுவார்கள்

மலக்குமார்கள் இரண்டாவது முறையாக எக்களாம் ஊதப்படும் போது, பூமியில் புதைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களும் பூமியை பிளந்து கொண்டு மிக விரைவாக வெளியே வருவார்கள். எந்தளவுக்கு என்றால் நாம் வானத்தை நோக்கி ராக்கெட்டை அனுப்பினால் அது எவ்வளவு வேகமாக காற்றை பிளந்து கொண்டு சொல்லுமோ அந்தளவுக்கு நம்முடைய உடல்கள் பூமியை பிளந்து கொண்டு வெளியே வரும்.

يَوْمَ تَشَقَّقُ الْاَرْضُ عَنْهُمْ سِرَاعًا‌ ؕ ذٰ لِكَ حَشْرٌ عَلَيْنَا يَسِيْر

அவர்களை விட்டு பூமி பிளந்து அவர்கள் விரைவார்கள். அது தான் ஒன்று திரட்டப்படும் நாள். இது நமக்கு எளிதானது.

(அல்குர்ஆன்: 50:44)

நிர்வாணமாக எழுப்பபடுவார்கள்.

மனிதர்கள் பூமியை நோக்கி வெளியே வரும் போது செருப்பில்லாமலும், ஆடையில்லாமலும், விருத்த சேதனம் செய்யாதவர்களாகவும் அதாவது கத்னா செய்யாதவர்களாகவும் எழுப்பபடுவார்கள். ஒரு மனிதர் நல்ல காரியத்திற்கு செல்லும் போது தன்னிடத்திலுள்ள புத்தம் புதிய ஆடையை உடுத்திகொள்வான். அந்த ஆடையை உடுத்திக்கொண்டு பிறரிடத்தில் பெருமையடிக்கிறோம். அற்ப உலகத்திற்காக வேண்டி நாம் இதனை செய்கிறோம். ஆனால் மறுமை நாளில் அனைவருக்கும் முன்னால் நிர்வாணமாகவும், செருப்பில்லாதவராகவும் எழுப்பபடுவோம்.

تُحْشَرُونَ حُفَاةً عُرَاةً غُرْلًا» قَالَتْ عَائِشَةُ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، الرِّجَالُ وَالنِّسَاءُ يَنْظُرُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ؟ فَقَالَ: «الأَمْرُ أَشَدُّ مِنْ أَنْ يُهِمَّهُمْ ذَاكِ

“நீங்கள் மறுமைநாளில் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்று திரட்டப்படுவீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நான், “அல்லாஹ்வின் தூதரே! (நிர்வாணமான) ஆண்களும் பெண்களும் சிலரை சிலர் பார்ப்பார்களே?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்படாத அளவுக்கு (அங்குள்ள) நிலைமை மிகக் கடுமையானதாக இருக்கும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி),
நூல் : (புகாரி: 6527) 

அனைவரையும் ஒன்றுதிரட்டுவான்

உலக அழிவுக்குப் பிறகு அனைவரும் உயிர் எழுப்பப்படுவர். அப்போது மக்கள் எந்த இடத்தில் ஒன்று திரட்டப்படுவார்கள் என்பது குறித்து இந்த வசனம் (அல்குர்ஆன்: 14:48) பேசுகிறது. இந்த வசனத்திற்கு இரண்டு வகையான விளக்கம் தரப்பட்டுள்ளது. 1. இந்தப் பூமி அல்லாத வேறொரு சமதளத்தில் மக்கள் ஒன்று திரட்டப்படுவார்கள். 2. இதே பூமியில் தான் மக்கள் ஒன்றுசேர்வார்கள். எனினும் இப்போதைய நிலையில் பூமி இராது. வேறு நிலைக்கும் மாற்றியமைக்கப்படும்.

يَوْمَ تُبَدَّلُ الْاَرْضُ غَيْرَ الْاَرْضِ وَالسَّمٰوٰتُ‌ وَبَرَزُوْا لِلّٰهِ الْوَاحِدِ الْقَهَّارِ‏

அந்நாளில் பூமி, வேறு பூமியாகவும், வானங்களும் (வேறு வானங்களாகவும்) மாற்றப்படும். ஏகனாகிய அடக்கியாளும் அல்லாஹ்விடம் திரளுவார்கள்.

(அல்குர்ஆன்: 14:48)

உலக அழிவின் போது இந்தப் பூமி எவ்வாறு மாறும் என்பதை நபி ஸல் அவர்கள் இங்கு உவமைப்படுத்திக் கூறியுள்ளார்கள். மக்கள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்பட்டு விசாரணைக்காக நிறுத்தப்படும் இடம் (மஹ்ஷர்) ரொட்டியைப் போன்று சமதளமாகவும் செந்தரையாகவும் இருக்கும். நல்லவர்களுக்கு விசாரணை முடியும் வரை விருந்தளிக்கப்படுவதற்காக உணவு தாயார் நிலையில் இருக்கும். பயணிகளின் ஆயத்த உணவுகளைப் போன்று அது தயாராக வைக்கப்பட்டிருக்கும்.

يُحْشَرُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى أَرْضٍ بَيْضَاءَ عَفْرَاءَ، كَقُرْصَةِ النَّقِيِّ، لَيْسَ فِيهَا عَلَمٌ لِأَحَدٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(உமியோ தவிடோ கலக்காத) சுத்தமான மாவினாலான ரொட்டியைப் போன்று, தூய வெண்மையான (சம) தளத்தின் மீது மறுமை நாளில் மனிதர்கள் அனைவரும் ஒன்று திரட்டப்படுவார்கள். அந்தப் பூமியில் (மலை, மடு, காடு, வீடு என) எந்த அடையாளமும் யாருக்கும் இருக்காது.

அறிவிப்பாளர்: சஹ்ல் பின் சஅத் (ரலி)
நூல்: (முஸ்லிம்: 5380)

ஈசலைப் போன்று ஒன்றுதிரட்டப்படுவார்கள்
يَوْمَ يَكُوْنُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوْثِۙ

அந்நாளில் மனிதர்கள் சிதறடிக்கப் பட்ட ஈசல்களைப் போல் ஆவார்கள்.

(அல்குர்ஆன்: 101:4)

மறுமை நாளின் கடுமை

மறுமை நாளில் சூரியன் மக்களுக்கு அருகில் ஒரு மைல் தொலைவில் நெருங்கி வரும். அப்போது மக்கள் தங்களின் செயல்களுக்கேற்றவாறு வியர்வையில் மூழ்குவார்கள். சிலரது வியர்வை கணுக்கால் வரையிலும், சிலரது வியர்வை முழங்கால்கள் வரையிலும், சிலரது வியர்வை இடுப்பு வரையிலும், சிலரது வியர்வை வாய் வரையிலும் எட்டிவிடும்.

يَعْرَقُ النَّاسُ يَوْمَ القِيَامَةِ حَتَّى يَذْهَبَ عَرَقُهُمْ فِي الأَرْضِ سَبْعِينَ ذِرَاعًا، وَيُلْجِمُهُمْ حَتَّى يَبْلُغَ آذَانَهُمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமைநாளில் மனிதர்களுக்கு (அவர்களின் தலைக்கருகில் நெருங்கி வரும் சூரியனால்) வியர்வை ஏற்படும். அவர்களின் வியர்வை தரையினுள் எழுபது முழம் வரை சென்று, (தரைக்கு மேல்) அவர்களின் வாயை அடைந்து, இறுதியில் அவர்களின் காதையும் அடையும்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 6532) 

تُدْنَى الشَّمْسُ يَوْمَ الْقِيَامَةِ مِنَ الْخَلْقِ، حَتَّى تَكُونَ مِنْهُمْ كَمِقْدَارِ مِيلٍ – فَيَكُونُ النَّاسُ عَلَى قَدْرِ أَعْمَالِهِمْ فِي الْعَرَقِ، فَمِنْهُمْ مَنْ يَكُونُ إِلَى كَعْبَيْهِ، وَمِنْهُمْ مَنْ يَكُونُ إِلَى رُكْبَتَيْهِ، وَمِنْهُمْ مَنْ يَكُونُ إِلَى حَقْوَيْهِ، وَمِنْهُمْ مَنْ يُلْجِمُهُ الْعَرَقُ إِلْجَامًا

“மறுமை நாளில் சூரியன் படைப்பினங்களுக்கு அருகில் கொண்டுவரப்படும். எந்த அளவுக்கென்றால், அவர்களுக்கும் அதற்கும் இடையில் ஒரு மைல் தொலைதூரமே இருக்கும். அப்போது மக்கள் தம் செயல்களுக்கேற்ப வியர்வையில் மூழ்குவார்கள். சிலரது வியர்வை அவர்களின் கணுக்கால்கள் வரையிலும், சிலரது வியர்வை முழங்கால்கள் வரையிலும், சிலரது வியர்வை இடுப்பு வரையிலும், சிலரது வியர்வை வாய் வரையிலும் எட்டிவிடும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.

அறிவிப்பாளர்: மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்கள்,
நூல் : (முஸ்லிம்: 5497) 

அர்ஷின் நிழல்

அல்லாஹ்வின் வேதனையில் ஒரு கூட்டம் இருக்கும் போது, மற்றொரு சாரார் அர்ஷின் நிழலில் தங்கியிருப்பார்கள். அவர்கள் அனைவரும் இவ்வுலகத்தில் நேர்மையாக நடந்தவர்கள். நன்மையும் செய்தவர்கள்.

سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ، يَوْمَ لاَ ظِلَّ إِلَّا ظِلُّهُ: الإِمَامُ العَادِلُ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي المَسَاجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ، فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ، أَخْفَى حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ

அல்லாஹ் தனது (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் ஏழு பேருக்கு நிழல் (அடைக்கலம்) அளிப்பான்:
1. நீதி மிக்க ஆட்சியாளர்.
2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.
3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்.
4. அல்லாஹ்வுக்காகவே நட்புக்கொண்டு அந்த நிலையிலேயே (இவ்வுலகிலிருந்து) பிரிந்து சென்ற இருவர்.
5. அந்தஸ்தும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்தபோதும், “நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்” என்று கூறியவர்.
6. தமது வலக் கரம் செய்த தர்மத்தை இடக் கரம்கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர்.
7. தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் வடித்தவர்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல் : (புகாரி: 660) 

உறவினர்கள் அழைப்பார்கள்
كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي دَعْوَةٍ، «فَرُفِعَ إِلَيْهِ الذِّرَاعُ، وَكَانَتْ تُعْجِبُهُ فَنَهَسَ مِنْهَا نَهْسَةً» وَقَالَ: ” أَنَا سَيِّدُ القَوْمِ يَوْمَ القِيَامَةِ، هَلْ تَدْرُونَ بِمَ؟ يَجْمَعُ اللَّهُ الأَوَّلِينَ وَالآخِرِينَ فِي صَعِيدٍ وَاحِدٍ، فَيُبْصِرُهُمُ النَّاظِرُ وَيُسْمِعُهُمُ  الدَّاعِي، وَتَدْنُو مِنْهُمُ الشَّمْسُ، فَيَقُولُ بَعْضُ النَّاسِ: أَلاَ تَرَوْنَ إِلَى مَا أَنْتُمْ فِيهِ، إِلَى مَا بَلَغَكُمْ؟ أَلاَ تَنْظُرُونَ إِلَى مَنْ يَشْفَعُ لَكُمْ إِلَى رَبِّكُمْ، فَيَقُولُ بَعْضُ النَّاسِ: أَبُوكُمْ آدَمُ …

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன், ஒரு விருந்தில் இருந்தோம். அப்போது (வைக்கப்பட்ட) புஜம் (முன்னங்கால்) ஒன்று நபி (ஸல்) அவர்களிடம் நீட்டப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்து வந்தது.

நபி (ஸல்) அவர்கள் (அதைத் தம்) வாயாலேயே (பற்களில்) பற்றிக்கொண்டு அதிலிருந்து சிறிது உண்டார்கள். பிறகு, “நான் மறுமை நாளில் மக்களின் தலைவன் ஆவேன். (மறுமை நாளில்) அல்லாஹ் (மக்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் எவரைக் கொண்டு ஒன்று திரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா?

பார்ப்பவர் அந்த மக்களை பார்க்க முடியும். (தம்மை) அழைப்பவர்களை அவர்களும் செவியேற்பார்கள். சூரியன் அவர்களுக்கு அருகில் வரும். அப்போது மக்கள் சிலர் (மற்ற மக்களை நோக்கி), “நீங்கள் எத்தகைய (துன்பகரமான) நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் உங்களுக்கு எத்தகைய (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கின்றது என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்பவரைத் (தேடிப்) பார்க்கமாட்டீர்களா?” என்று கேட்பார்கள். மக்கள் சிலர், “உங்கள் தந்தை ஆதம் (அலை) அவர்கள் (உங்களுக்காகப் பரிந்துரை செய்வார்கள்)” என்று கூறுவார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள்,
நூல் : (புகாரி: 3340) 

அவர்களை விட்டு ஓடுவான்
فَاِذَا جَآءَتِ الصَّآخَّةُ
يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ اَخِيْهِۙ‏
وَاُمِّهٖ وَاَبِيْهِۙ‏
وَصَاحِبَتِهٖ وَبَنِيْهِؕ‏

அந்தச் சப்தம் ஏற்படும் அந்த நாளில் மனிதன் தனது சகோதரனையும், தனது தாயையும், தனது தந்தையையும், தனது மனைவியையும், தனது பிள்ளைகளையும் விட்டு ஓடுவான்.

(அல்குர்ஆன்: 80:33-36)

கேள்வி கணக்குகாக கொண்டு வரப்படுவான்
وَجَآءَتْ كُلُّ نَفْسٍ مَّعَهَا سَآٮِٕقٌ وَّشَهِيْدٌ‏

ஒவ்வொருவரும், இழுத்துச் செல்பவருடனும் சாட்சியுடனும் வருவர்.

(அல்குர்ஆன்: 50:21)

விசாரனைக்காக கொண்டுவந்தால் அழிவுதான்
لَيْسَ أَحَدٌ يُحَاسَبُ يَوْمَ القِيَامَةِ إِلَّا هَلَكَ» فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَلَيْسَ قَدْ قَالَ اللَّهُ تَعَالَى: {فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا} [الانشقاق: 8] فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا ذَلِكِ العَرْضُ، وَلَيْسَ أَحَدٌ يُنَاقَشُ الحِسَابَ يَوْمَ القِيَامَةِ إِلَّا عُذِّبَ

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,”மறுமை நாளில் விசாரணை செய்யப்படும் எவரும் அழிந்தேபோய் விடுவார்” என்று கூறினார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! “எவரது வினைப் பதிவுச் சீட்டு அவரது வலக்கரத்தில் வழங்கப்படுமோ அவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும்’ என்றல்லவா அல்லாஹ் கூறுகின்றான்?” (அல்குர்ஆன்: 84:8) என்று கேட்டேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று; மாறாக, மனிதர்களின் நன்மை தீமைகளின் பட்டியலை அவர்களுக்கு முன்) சமர்ப்பிக்கப்படுவதுதான். மறுமையில் துருவித்துருவி விசாரணை செய்யப்படும் எவரும் வேதனை செய்யப்படாமலிருப்பதில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி),
நூல் : (புகாரி: 6537) 

தனித்தனியாக விசாரிப்பான்
مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا سَيُكَلِّمُهُ اللهُ، لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجُمَانٌ، فَيَنْظُرُ أَيْمَنَ مِنْهُ فَلَا يَرَى إِلَّا مَا قَدَّمَ، وَيَنْظُرُ أَشْأَمَ مِنْهُ فَلَا يَرَى إِلَّا مَا قَدَّمَ، وَيَنْظُرُ بَيْنَ يَدَيْهِ فَلَا يَرَى إِلَّا النَّارَ تِلْقَاءَ وَجْهِهِ، فَاتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் (தனித்தனியாகப்) பேசாமலிருப்பதில்லை. அப்போது அல்லாஹ்விற்கும் உங்களில் ஒருவருக்கும் இடையே மொழிபெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார். பிறகு அவர் தமது வலப் பக்கம் பார்ப்பார். தாம் ஏற்கனவே செய்த(பாவத்)தைத் தவிர வேறெதையும் அங்கு அவர் காணமாட்டார்.

பின்னர் அவர் தமது இடப் பக்கம் பார்ப்பார். தாம் ஏற்கெனவே செய்த(பாவத்)தைத் தவிர வேறெதையும் அங்கும் அவர் காணமாட்டார். மேலும், அவர் தமக்கு முன்னால் பார்ப்பார். தமது முகத்துக்கெதிரே நரக நெருப்பையே அவர் காண்பார். ஆகவே, முடிந்தால் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

அறிவிப்பாளர் : அதீ பின் ஹா(த்)திம் (ரலி) அவர்கள்
நூல்: (முஸ்லிம்: 1846) 

துருவி துருவி விசாரிக்கப்படுவான்

மறுமையில் மனிதர்கள் மூன்று வகையினராக இருப்பர். 1. விசாரணையின்றி சொர்க்கம் செல்வோர் ஒரு வகையினர். 2. குர்ஆனில் (அல்குர்ஆன்: 84:8) ( فَاَمَّا مَنْ اُوْتِىَ كِتٰبَهٗ بِيَمِيْنِهٖۙ – فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَّسِيْرًا ) ஆவது வசனத்தின் படி சுலபமான முறையில் விசாரணையைச் சந்திப்பவர்கள். அதாவது அவர்கள் புரிந்த நன்மை மற்றும் தீமைகள் அவர்கள் முன் சமர்ப்பிக்கப்படும். 3. துருவித்துருவி விசாரணை செய்யப்படுவோர். இவார்கள் வேதனையிலிருந்து தப்பிக்க முடியாது.

مَنْ نُوقِشَ الحِسَابَ عُذِّبَ» قَالَتْ: قُلْتُ: أَلَيْسَ يَقُولُ اللَّهُ تَعَالَى: {فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا} [الانشقاق: 8] قَالَ: «ذَلِكِ العَرْضُ»

நபி (ஸல்) அவர்கள், “எவர் (மறுமை நாளில்) துருவித்துருவி விசாரிக்கப்படுவாரோ அவர் வேதனை செய்யப்படுவார்” என்று கூறினார்கள். நான், “அல்லாஹ் (தன் வேதத்தில்) “வலக் கரத்தில் தமது வினைப் பதிவுச் சீட்டு வழங்கப்பட்டவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும்’ (அல்குர்ஆன்: 84:8) என்றல்லவா கூறுகின்றான்?” எனக் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் “இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று; மாறாக, மனிதர்களின் நன்மை, தீமை பட்டியலை அவர்களுக்கு முன்னால்) சமர்ப்பிக்கப்படுதலாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) அவர்கள்
நூல் : (புகாரி: 6536) 

கால்கள் பின்னிக்கொள்ளும்
   وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِۙ

காலோடு கால் பின்னிக் கொள்ளும் . (அல்குர்ஆன்: 75:29)

விலங்குகள் மாட்டப்படும்

خُذُوْهُ فَغُلُّوْهُ ۙ‏

ثُمَّ الْجَحِيْمَ صَلُّوْهُ

ثُمَّ فِىْ سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُوْنَ ذِرَاعًا فَاسْلُكُوْهُ ؕ‏

அவனைப் பிடியுங்கள்! அவனுக்கு விலங்கு மாட்டுங்கள்! பின்னர் நரகில் கருகச் செய்யுங்கள்! பின்னர் எழுபது முழம் கொண்ட சங்கிலியால் அவனைப் பிணையுங்கள்! (எனக் கூறப்படும்.)

(அல்குர்ஆன்: 69:30-32)

நமக்கு எதிரான சாட்சிகள் வானவர்களின் ஏடு
وَقَالَ قَرِيْـنُهٗ هٰذَا مَا لَدَىَّ عَتِيْدٌ

(எழுதும் வானவராகிய) அவரது கூட்டாளி, “இதோ என்னிடம் எழுதப்பட்ட ஏடு இருக்கிறது” என்பார்.

(அல்குர்ஆன்: 50:23)

சிறிய பாவம் எடுத்து காட்டப்படும்
إِنِّي لَأَعْلَمُ آخِرَ أَهْلِ الْجَنَّةِ دُخُولًا الْجَنَّةَ، وَآخِرَ أَهْلِ النَّارِ خُرُوجًا مِنْهَا، رَجُلٌ يُؤْتَى بِهِ يَوْمَ الْقِيَامَةِ، فَيُقَالُ: اعْرِضُوا عَلَيْهِ صِغَارَ ذُنُوبِهِ، وَارْفَعُوا عَنْهُ كِبَارَهَا، فَتُعْرَضُ عَلَيْهِ صِغَارُ ذُنُوبِهِ، فَيُقَالُ: عَمِلْتَ يَوْمَ كَذَا وَكَذَا كَذَا وَكَذَا، وَعَمِلْتَ يَوْمَ كَذَا وَكَذَا كَذَا وَكَذَا، فَيَقُولُ: نَعَمْ، لَا يَسْتَطِيعُ أَنْ يُنْكِرَ وَهُوَ مُشْفِقٌ مِنْ كِبَارِ ذُنُوبِهِ أَنْ تُعْرَضَ عَلَيْهِ، فَيُقَالُ لَهُ: فَإِنَّ لَكَ مَكَانَ كُلِّ سَيِّئَةٍ حَسَنَةً، فَيَقُولُ: رَبِّ، قَدْ عَمِلْتُ أَشْيَاءَ لَا أَرَاهَا هَا هُنَا ” فَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَحِكَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் நிலை குறித்துப் பின்வருமாறு) கூறினார்கள்:
சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும், நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன். மறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டு வரப்படுவார்.

அப்போது, “இவர் புரிந்த சிறு பாவங்களை இவருக்கு எடுத்துக் காட்டுங்கள்! இவர் புரிந்த பெரும்பாவங்களை இவரைவிட்டு நீக்கிவிடுங்கள்” என்று கூறப்படும். அவ்வாறே அவருக்கு அவர் புரிந்த சிறுபாவங்கள் எடுத்துக் காட்டப்பட்டு, “நீ இன்ன இன்ன நாளில் இன்ன இன்ன (பாவத்)தைச் செய்துள்ளாய்; இன்ன இன்ன நாளில் இன்ன இன்ன பாவத்தைச் செய்துள்ளாய்’ என்று கூறப்படும். அவரும் “ஆம்’ என்று (ஒப்புதல்) கூறுவார்; அவரால் எதையும் மறுக்க முடியாது. தாம் புரிந்துவிட்டிருக்கும் பெரும் பாவங்கள் தம்மிடம் எடுத்துக் காட்டப்பட்டுவிடுமோ என்றும் அஞ்சிக்கொண்டிருப்பார்.

இந்நிலையில் அவரிடம், “நீ செய்த ஒவ்வொரு (சிறு) தவறுகளுக்கும் ஈடாக ஒரு நன்மை உனக்கு உண்டு” என்று கூறப்படும். அப்போது அவர், “இறைவா! நான் இன்னும் பல (பெரும்பாவச்) செயல்களைப் புரிந்திருந்தேனே! அவற்றையெல்லாம் இங்கு நான் காணவில்லையே!” என்று கேட்பார். (இதைக் கூறும்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன்.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி) அவர்கள்
நூல்: (முஸ்லிம்: 314)

வாய்க்கு முத்திரையிடப்படும், நமக்கு எதிராக கண் காது சதை சாட்சி சொல்லும்

மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மறுமை நாளில் எங்கள் இறைவனைக் காண்போமா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மேகமூட்டமில்லாத நண்பகல் நேரத்தில் சூரியனைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்படுவீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், “இல்லை” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மேகமூட்டமில்லாத பௌர்ணமி இரவில் சந்திரனைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்படுவீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள் “இல்லை’ என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! இவ்விரண்டில் ஒன்றைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்படாததைப் போன்றே, உங்கள் இறைவனைக் காண்பதற்கும் நீங்கள் சிரமப்படமாட்டீர்கள்.

இறைவன் அடியானைச் சந்தித்து, “இன்ன மனிதனே! உன்னை நான் கண்ணியப்படுத்தி, உன்னைத் தலைவனாக்கி, உனக்குத் துணையை ஏற்படுத்தவில்லையா? குதிரைகளையும் ஒட்டகங்களையும் நான் உன் வசப்படுத்தவில்லையா? உன்னை (செல்வாக்குள்ள) தலைவனாக்கிப் போர்ச் செல்வங்களில் நான்கில் ஒரு பகுதியை உனக்கு உரியதாக்கவில்லையா?” என்று கேட்பான்.  அதற்கு அந்த அடியான், “ஆம்’ என்பான். இறைவன், “நீ என்னைச் சந்திப்பாய் என எண்ணினாயா?” என்று கேட்பான். அதற்கு அந்த அடியான், “இல்லை’ என்பான். இறைவன், “அவ்வாறாயின், நீ என்னை மறந்ததைப் போன்றே நானும் உன்னை மறந்துவிடுகிறேன்” என்பான்.

பிறகு மற்றோர் அடியானைச் சந்திக்கும் இறைவன், “இன்ன மனிதனே! உன்னைக் கண்ணியப்படுத்தி, உன்னைத் தலைவனாக்கி, உனக்கு(த் தகுந்த) துணையையும் நான் வழங்கவில்லையா? குதிரைகளையும் ஒட்டகங்களையும் நான் உன் வசப்படுத்தவில்லையா? உன்னை (செல்வாக்குள்ள) தலைவனாக்கிப் போர்ச் செல்வத்தில் நான்கில் ஒரு பகுதியை உனக்கு உரிமையாக்கவில்லையா?” என்று கேட்பான்.

அதற்கு அந்த அடியான், “ஆம், என் இறைவா!” என்பான். இறைவன், “நீ என்னைச் சந்திப்பாய் என எண்ணினாயா?” என்று கேட்பான். அதற்கு அந்த அடியான், “இல்லை’ என்பான். இறைவன், “அவ்வாறாயின், நீ என்னை மறந்ததைப் போன்றே நானும் உன்னை மறந்துவிடுகிறேன்” என்பான். பிறகு மூன்றாவது அடியானைச் சந்திக்கும் இறைவன், முன்பு கேட்டதைப் போன்றே அவனிடமும் கேட்பான். அதற்கு அந்த அடியான், “என் இறைவா! நான் உன்னையும் உன் வேதத்தையும் உன் தூதர்களையும் நம்பி, உன்னைத் தொழுது (உனக்காக) நோன்பு நோற்றேன். தான தர்மம் செய்தேன்” என்று கூறிவிட்டு, தன்னால் இயன்ற நல்ல வார்த்தைகளைக் கூறி இறைவனைப் புகழ்வான்.

அப்போது இறைவன், “நீ இங்கேயே நில்” என்று கூறுவான். பிறகு அவனிடம், “இப்போது உனக்கெதிரான நம்முடைய சாட்சியை நாம் எழுப்பப் போகிறோம்” என்று கூறுவான். அந்த மனிதன், தனக் கெதிராகச் சாட்சியம் சொல்பவர் யார் என்று யோசித்துக்கொண்டிருப்பான். அப்போது அவனது வாய்க்கு முத்திரையிடப்படும். அவனது தொடை, சதை, எலும்பு ஆகியவற்றைப் பார்த்து “பேசுங்கள்” என்று சொல்லப்படும். அப்போது அவனுடைய தொடை, சதை, எலும்பு ஆகியவை அவன் செய்தவை பற்றி எடுத்துரைக்கும். அவன் சாக்குப்போக்குச் சொல்லித் தப்பிவிடக் கூடாது என்பதே இதற்குக் காரணம். அவன்தான் நயவஞ்சகன் (முனாஃபிக்) ஆவான். அவன்மீது இறைவன் கடும் கோபம் கொள்வான்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல்: (முஸ்லிம்: 5678) 

وَلَا تَقْفُ مَا لَـيْسَ لَـكَ بِهٖ عِلْمٌ‌ ؕ اِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ اُولٰۤٮِٕكَ كَانَ عَنْهُ مَسْـُٔوْلًا

உமக்கு அறிவு இல்லாததை நீ பின்பற்றாதே! செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை.

(அல்குர்ஆன்: 17:36)

மறுமையில் நஷ்டவாளி

இம்மையில் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக மறுமையில் பழி தீர்த்துக்கொள்ளப்படும். எல்லாக் குற்றவாளிகளும் இம்மையில் தண்டிக்கப்படுவதில்லை. அவ்வாறு தண்டிக்கப்பட்டவர்கள் அனைவரும் குற்றத்திற்கேற்ற தண்டனை அடைந்தார்கள் என்று சொல்லவும் முடியாது. அவ்வாறு இஸ்லாம் கூறியபடி முறையான தண்டனை அடைந்தவர்களில் அனைவரும் தமது குற்றத்திற்காக மனம் வருந்தி திருந்தியவர்கள் என்று கூற முடியாது.

எனவே நீதி நிலைநாட்டப்பட்டு, பாதிப்புப்குள்ளானோர் நிவாரணம் பெறவும், குற்றவாளிகள் முறையாகக் தண்டிக்கப்படவும் வேண்டி மறுமையில் பழி தீர்த்துக்கொள்ளப்படும். மறுமையில் இறைவனின் சன்னிதானத்தில் விசாரணை நடைபெற்று, தக்க பரிகாரம் காணப்படும்.

குடும்பத்தை விற்பான்
يُّبَصَّرُوْنَهُمْ‌ؕ يَوَدُّ الْمُجْرِمُ لَوْ يَفْتَدِىْ مِنْ عَذَابِ يَوْمِٮِٕذٍۢ بِبَنِيْهِۙ‏
وَ صَاحِبَتِهٖ وَاَخِيْهِۙ‏
وَفَصِيْلَتِهِ الَّتِىْ تُــْٔوِيْهِۙ‏
وَمَنْ فِى الْاَرْضِ جَمِيْعًا ۙ ثُمَّ يُنْجِيْهِۙ‏

அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டப்படுவார்கள். அந்நாளின் வேதனைக்கு ஈடாக தன் மகன்களையும், தனது மனைவியையும், தனது சகோதரனையும், தன்னை அரவணைத்த உறவினர்களையும், பூமியில் உள்ள அனைவரையும், பணயம் வைத்து பின்னர் விடுதலையாகலாம் என்று குற்றவாளி விரும்புவான்.

(அல்குர்ஆன்: 70:11-14)

கேள்வி கேட்கும் போது…
وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ اَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِىْۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۙ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِيْنَ‏

உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! “இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே” என்று அப்போது (மனிதன்) கூறுவான். 

(அல்குர்ஆன்: 63:10)

நல்ல அமல் இல்லையென்றால் நஷ்டவாளி.

இவ்வுலக வாழ்க்கையில் செல்வச் செழிப்போடு சுகபோகங்களை அனுபவித்தவர் மறுமையில் நஷ்டவாளியாகி விடுவார். அப்போது அவரிடம் வாழ்க்கையில் நல்லதை நீ அனுபவித்தது உண்டா? என்று கேட்கப்படும். மறுமையில் கேள்வி கணக்கு கடுமையாகும் போது அவர் இம்மையில் சுகித்த சுகங்களையெல்லாம் அடியோடு மறந்துவிடுவார். நான் எந்தச் சுகத்தையும் சத்தியமாக அனுபவிக்கவில்லை என்பார். அந்த அளவுக்கு மறுமையில் விசாரணை கொடூரமாக இருக்கும்.

وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ اَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِىْۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۙ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِيْنَ‏

உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! “இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே” என்று அப்போது (மனிதன்) கூறுவான். 

(அல்குர்ஆன்: 63:10)

இவ்வுலக வாழ்க்கையில் உண்டுகொழுத்தவர்கள், செல்வாக்கோடும் வாழ்ந்தவர்கள் மறுவுலகில் அல்லாஹ்விடம் மதிப்பே இல்லாமல் போய்விடுவர். அவர்களது தீய செயல்களே இதற்கு காரணம். தோற்றத்துக்கு அல்லாஹ்விடம் மதிப்பு இல்லை. நல்லறத்துக்கே மதிப்பு உண்டு. அதாவது ஒருவர் நற்செயல் புரிவதனால் மட்டும் அவர் சொர்க்கம் சென்றுவிடுவார் என்று உறுதியிட்டுக் கூற முடியாது.

மாறாக அவரது நற்செயலை இறைவன் அங்கீகரிக்க வேண்டும். அதற்கும் மேலாக அவர் மீது இறைவன் அன்பும், அருளும் புரிய வேண்டும். அப்போது தான் அவன் சொர்க்கம் செல்ல முடியம். அப்படி நற்செயல்களை அதிகமாக செய்து மறுமையில் இறைவனின் அன்பை பெற்று சுவனம் செல்லும் நன் மக்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள் புரிய வேண்டும்.. என்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்து உரையை நிறைவு செய்கிறேன்.. 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.