இறந்த பிறகு கண்தானம் உடல்தானம் செய்யலாமா?

கேள்வி-பதில்: நவீன பிரச்சனைகள்

இறந்த பிறகு கண்தானம் உடல்தானம் செய்யலாமா?

கண் தானம் செய்யலாம்.

ஒருவர் தன்னுடைய கண்களை தானம் செய்கின்றார் என்றால் இதன் மூலம் கண் தெரியாத இரண்டு பேருக்குப் பார்வை அளிக்கின்றார்.

ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்

(அல்குர்ஆன்: 5:32)

என்ற வசனத்தின் அடிப்படையில் கண் தானம் என்பது நன்மையைப் பெற்றுத் தரக் கூடியது என்பதில் சந்தேகமில்லை.

உடல் தானம் செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. ஏனெனில் உடல் தானம் என்பது கண் தானத்தைப் போன்றதல்ல. உடல் தானம் செய்யும் மனிதனின் உடலிலுள்ள பாகங்களை எடுத்து பிற மனிதர்களுக்குப் பொருத்துவதில்லை. மாறாக உடலின் ஒவ்வொரு பாகத்தையும் எடுத்து மருத்துவக் கல்வியின் பாடத்திற்காகவும் ஆய்வுக்காகவுமே பயன்படுத்தப்படுகின்றன. கண் தானத்தின் போது கண்ணோ மற்ற உறுப்புகளோ சிதைக்கப் படுவதில்லை. இறந்தவரின் கண்ணை எடுத்து அடுத்தவருக்குப் பொருத்தப்படுகின்றது. ஆனால் உடல் தானம் செய்வதரின் உறுப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக சிதைக்கப்படுகின்றன. இதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

கொள்ளையடிப்பதையும் ஒருவரின் அங்கங்களை (உயிருடன் இருக்கும் போதோ அல்லது இறந்த பிறகோ) சிதைப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி),

(புகாரி: 2474, 5516)