111) இறந்தவர் வீட்டில் விருந்து அளித்தல்
ஒருவர் மரணித்து விட்டால் அவரது குடும்பத்தினர் சோகத்திலும், கவலையிலும் இருப்பார்கள். அவர்களின் கவலையை மேலும் அதிகரிக்கும் வகையில் இறந்த அன்றோ, மறு நாளோ தடபுடலான விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். அந்தக் குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் மனிதாபிமானமில்லாமல் அக்குடும்பத்தினரின் செலவில் விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். இதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.
இறந்தவரின் வீட்டுக்கு நாம் சென்றால் அவர்களுக்குத் தேவையான உணவுகளைத் தயார் செய்து எடுத்துச் சென்று நாம் தான் அவர்களுக்கு வழங்க வேண்டும். அவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளதால் தமக்காக அவர்கள் உணவு சமைக்கும் மனநிலையில் இருக்க மாட்டார்கள்.
ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் மரணித்த செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவித்துவிட்டு ‘ஜஃபரின் குடும்பத்தினருக்காக நீங்கள் உணவு தயாரியுங்கள்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி)
நூல்கள்:(அபூதாவூத்: 2725),(அஹ்மத்: 1660), திர்மிதி 919, இப்னுமாஜா 1599
இதன் அடிப்படையில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு மற்றவர்கள் தான் உணவு அளிக்க வேண்டுமே தவிர அவர்கள் வீட்டில் சாப்பிடக் கூடாது என்று அறியலாம்.