116) இறந்தவர் சார்பில் ஹஜ் செய்தல்

நூல்கள்: ஜனாஸாவின் சட்டங்கள்

இறந்தவர் மீது ஹஜ் கடமையாகி இருந்து அதைச் செய்யாமல் அவர் மரணித்தால் அவர் சார்பில் அவரது வாரிசுகள் ஹஜ்ஜை நிறைவேற்றலாம்.

அது போல் இறந்தவர் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தால் அது கடமையாகி விடுகிறது. எனவே இறந்தவர் நேர்ச்சை செய்திருந்த ஹஜ்ஜை அவரது வாரிசுகள் நிறைவேற்றலாம். இதனால் இறந்தவர் மீது இருந்த ஹஜ் கடமை நீங்கி விடும்.

ஜுஹைனா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ‘என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தார். அதைச் செய்யாமலே மரணித்து விட்டார். அவர் சார்பில் நான் ஹஜ் செய்யலாமா?’ என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘ஆம் அவர் சார்பில் நீ ஹஜ் செய். உன் தாய் மீது கடன் இருந்தால் அதை நீ தானே நிறைவேற்றுவாய். எனவே அல்லாஹ்வின் கடனை நிறைவேற்றுங்கள். நிறைவேற்றப்படுவதற்கு அது தான் அதிகத் தகுதி படைத்தது’ எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(புகாரி: 1852, 7315)

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ‘என் சகோதரி ஹஜ் செய்ய நேர்ச்சை செய்திருந்தார். ஆனால் இறந்து விட்டார்’ எனக் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அவர் மீது கடன் இருந்தால் நீ தானே நிறைவேற்றுவாய்?’ என்று கேட்டார்கள். அவர் ஆம் என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வின் கடனே நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது’ என்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(புகாரி: 6699)

இறந்தவருக்காக மற்றவர்கள் ஹஜ் செய்வதில் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

இறந்தவரின் கடன்களை அடைப்பது யார் மீது கடமையோ அவர்கள் தான் இறந்தவருக்காக ஹஜ் செய்ய வேண்டும். ‘அவர் கடன்பட்டால் நீ தானே அதை அடைப்பாய்?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து இதை அறியலாம்.

இறந்தவரின் தந்தை, மகன், அண்ணன், தம்பி போன்ற உறவினர்கள் தான் இறந்தவருக்காக ஹஜ் செய்ய வேண்டும்

இறந்தவருடன் இரத்த சம்பந்தம் இல்லாத ஒருவரைப் பிடித்து ஹஜ் செய்ய வைக்கின்றனர். அதற்குக் கூலியும் கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இறந்தவருக்காக ஹஜ் செய்யலாம் என்றால் அவர் இறக்கும் போது அவர் மீது ஹஜ் கடமையாகி இருக்க வேண்டும். ஒருவர் மரணிக்கும் போது ஏழையாக இருந்தார். அவர் மரணித்த பின் அவரது பிள்ளைகள் வசதி படைத்தவர்களாகி விட்டனர். இவர்களிடம் ஹஜ் செய்யும் வசதி இருந்தாலும் இவர்களின் தந்தை ஏழையாக மரணித்து விட்டதால் அவர் மீது ஹஜ் கடமையாக இருக்கவில்லை என்பதால் அவருக்காக ஹஜ் செய்யலாகாது.

அல்லாஹ்வின் கடன் என்பது கட்டாயக் கடமையைத் தான் குறிக்கும். நாமாக விரும்பிச் செய்வது கடனாக ஆகாது.