114) இறந்தவர் சார்பில் தொழுகையை நிறைவேற்ற முடியாது
ஒருவர் சில தொழுகைகளை விட்டு இறந்திருந்தால் அதை அவர் சார்பில் மற்றவர் நிறைவேற்றலாம் என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை.
நோன்பைப் பொறுத்த வரை நோய், பயணம் போன்ற காரணங்களால் பிரிதொரு நாளில் நோற்க அனுமதி உள்ளதால் நோன்பை ஒருவர் விடுவதற்கும், வேறு நாட்களில் நோற்பதற்கும் நியாயம் உள்ளது. இத்தனை நாட்களுக்குள் நோற்று விட வேண்டும் என்று கால நிர்ணயம் ஏதும் இல்லை.
ஹஜ்ஜைப் பொறுத்த வரை இந்த ஆண்டு தான் செய்ய வேண்டும் என்பது இல்லை. மரணிப்பதற்குள் ஒரு தடவை செய்ய வேண்டும் என்பதால் கடமையான பின்பும் அதைத் தள்ளி வைக்க முகாந்திரம் உள்ளது.
ஆனால் தொழுகையைப் பொறுத்த வரை அது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக உள்ளது.
நோயாளிகளுக்கும், பயணிகளுக்கும் தொழும் முறையில் சில சலுகைகள் உள்ளன. அதிகபட்சம் இரண்டு தொழுகைகளை ஒரு நேரத்தில் ஜம்வு செய்து தொழ சலுகை உண்டு. அதற்கு மேல் தாமதப்படுத்திட எந்த அனுதியும், ஆதாரமும் இல்லை.
மாதவிடாய் நேரத்தில் விட்ட நோன்பை பின்னர் வைக்க வேண்டும் எனக் கூறும் இஸ்லாம், மாதவிடாய் நேரத்தில் விட்ட தொழுகைகளை பின்னர் நிறைவேற்ற வேண்டும் என்று கூறவில்லை.
தொழுகையைத் தவறவிட்டால் தவற விட்டது தான். அதற்காக பாவமன்னிப்புக் கேட்டுத் திருந்தி இனி மேல் உரிய நேரத்தில் தொழுவது தான் அவசியம்.
அவர்களுக்குப் பின்னர் வழித் தோன்றல்கள் வந்தனர். அவர்கள் தொழுகையைப் பாழாக்கினர். மனோ இச்சைகளைப் பின்பற்றினர். அவர்கள் நஷ்டத்தைச் சந்திப்பார்கள். திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
(அல்குர்ஆன்: 19:59) ➚,60
தொழுகையைத் தவற விட்டவர்கள் அதற்காகப் பாவமன்னிப்புக் கேட்டுத் திருந்துவதைத் தான் திருக்குர்ஆன் பரிகாரமாகக் கூறுகிறது. விட்ட தொழுகைகளைத் திரும்பத் தொழுமாறு கூறவில்லை.
தான் விட்ட தொழுகைகளையே மறு நாள் நிறைவேற்ற முடியாது எனும் போது மற்றவர்கள் நிறைவேற்றலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை.