இறந்தவர்கள் செவியேற்பார்களா?

கேள்வி-பதில்: நம்பிக்கை தொடர்பானவை

இறந்தவர்கள் செவியேற்பார்களா?

மரணித்தவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை. அவர்கள் எதையும் செவியுற மாட்டார்கள். அவர்களுக்கு எந்த ஆற்றலும் கிடையாது. 

இறைவன் சொல்லிக் காட்டுகிறான்…

கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழிகெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர்.

(அல்குர்ஆன்: 46:5)

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ், தன்னை விடுத்து நீங்கள் வணங்கும் தெய்வங்களை மறுமை நாள் வரும் வரை அழைத்தாலும் அவர்கள் உங்களது அழைப்பை ஒருபோதும் செவியேற்க மாட்டார்கள். ஒரு பேச்சுக்கு அப்படியே அவர்கள் செவியேற்றாலும் திரும்பப் பதில் தர மாட்டார்கள் என்று கூறுகிறான்.

இதை விட ஒரு வழிகேடு வேறு எதுவும் கிடையாது. உயிருடன் உள்ள ஒருவரை அழைத்தால், அவரிடத்தில் ஏதேனும் உதவி கேட்டால் அதை அவர் செவியேற்பார். அதை நிறைவேற்றவும் செய்வார். ஆனால் இறந்து, மண்ணோடு மண்ணாகிப் போன ஒருவரிடத்திலோ, சிலை களிடமோ சென்று கேட்பது என்பது வழிகேடும் மடமைத்தனமும் ஆகும்.

மேலும், இந்த வசனத்தில் அல்லாஹ் நமக்கு 3 விஷயங்களைப் பதிய வைக்கிறான்.

முதலாவது, நீங்கள் இறந்து போனவர்களையோ, சிலைகளையோ அழைத்தால் அவர்கள் செவியேற்க மாட்டார்கள்.

இரண்டாவது, அப்படியே அவர்கள் உங்களது அழைப்பை செவியேற்றாலும் அவர்கள் பதில் தர மாட்டார்கள்.

மூன்றாவது, நீங்கள் அவர்களை அழைப்பதை அவர்கள் அறியாதவர்களாக இருக்கின்றனர்.

இந்த மூன்று தன்மையும் பெற்றவர் எப்படிக் கடவுளாக முடியும்? கடவுள் தன்மை உடையவர் என்று சொல்ல முடியும்? அத்தனையும் அறியும் ஆற்றல் உள்ளவர் என்று சொல்ல முடியும்?

மேலும் இறைவன் கூறுகிறான்…

நீர் இறந்தோரை செவியேற்கச் செய்ய முடியாது. அழைப்பைப் புறக்கணித்து ஓடும் செவிடர்களைக் கேட்கச் செய்ய உம்மால் முடியாது.

(அல்குர்ஆன்: 27:80)

இறந்தோரைச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது. செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது.

(அல்குர்ஆன்: 30:52)

இந்த இரு வசனங்களிலும் இறந்து போனவர்களைச் செவியேற்கச் செய்யும் அதிகாரம் நபிக்கே இல்லை என்று சொல்கிறான். உயிருள்ள – செவியேற்கக் கூடிய ஒருவனிடத்தில் ஒரு செய்தியைச் சொன்னால் அது அவனுக்கு கேட்கும். விளங்கும்.

அதே நேரத்தில், காது கேட்காத ஒருவனிடத்தில் எந்தச் செய்தியைச் சொன்னாலும் அது அவனுக்குக் கேட்காது. விளங்கவும் செய்யாது என்பது மறுக்க முடியாது உண்மை. இவ்வாறிருக்கும் போது இறந்து போன ஒருவரிடத்தில் சென்று நாம் கேட்டால், அழைத்தால் அவர் எப்படி அதைச் செவியேற்பார் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

இறந்து போனவருக்குக் கேட்கும் திறன் இருக்காது என்பதை குர்ஆன் ஹதீஸைப் படித்துத் தான் தெரிய வேண்டுமா? நாம் சிந்தித்துப் பார்த்தாலே இதை விளங்கிக் கொள்ளலாம். இன்னும் சொல்லப் போனால் மனிதன் இறந்து விட்டால் செவியேற்கும் திறன் இல்லாமல் போய்விடும் என்பதனையும், ஒரு மனிதன் இறந்து விட்டால் எந்ததெந்த உறுப்புகள் எவ்வளவு நேரம் வரை செயல்படும்? எப்போது செயலிழக்கின்றது? என்பதையும் மருத்துவ உலகமே கணக்கிட்டுச் சொல்லி யிருக்கின்றது. இதற்கு மேலும் ஆதாரம் தேவையா?

மேலும், இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்பதனை, படிக்காத பாமரர்களும் விளங்கக்கூடிய விதத்தில் இறைவன் ஒரு பாடம் கற்பிக்கிறான். பின்வரும் வசனத்தைப் பாருங்கள்.

குருடனும் பார்வையுள்ளவனும், இருள்களும் ஒளியும், நிழலும் வெப்பமும் சமமாகாது. உயிருடன் உள்ளோரும் இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவரை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.

(அல்குர்ஆன்: 35:19-22)

நம்மில் யாராவது குருடனையும் கண்பார்வை உள்ளவனையும் சமமானவர்கள் என்று சொன்னால் நாம் ஒத்துக் கொள்வோமா? அவ்வாறு சொன்னால் அவனைப் பைத்தியக் காரன் என்று தான் உலகமே சொல்லும். குளிரும் சூடும் இரண்டுமே ஒன்றுதான் என்று சொன்னாலும் அதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இப்படி இருக்கையில் இறந்து போனவரும் உயிருள்ளவரும் சமம் என்றால் அதை மட்டும் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? சிந்திக்க வேண்டாமா?

அவர் இறந்து விட்டார்; அவர் கபுருக்குள் வைத்து அடக்கம் செய்யப்பட்டு விட்டார் என்று நமக்கு நன்றாகத் தெரிகிறது. இப்படி இருக்கும் போது அவர் இறக்கவில்லை; அவர் உயிருடன் தான் இருக்கிறார்; அவருக்கு நாம் சொல்வது கேட்கும் என்றால் எப்படி இருக்கும். பைத்தியம் என்றுதானே நினைப்பார்கள். அதுபோன்ற பைத்தியக்காரத்தனமான காரியத்தைத் தான் நாம் ஆன்மீகம், வணக்கம் என்ற பெயரில் செய்து வருகின்றோம்.

ஆக, எவ்வாறு சூடும் குளிரும் சமமாக ஆவதற்கு வாய்ப்பில்லையோ சாத்தியமற்றதோ அதே போன்று தான் இறந்தவர்களும் உயிருள்ளவர்களும் சமமாவதற்கும் வாய்ப்பே இல்லை. அது சாத்தியமற்ற செயல்.

அது போன்று மேலும் ஒரு வசனத்தில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

யார் அல்லாஹ்வை விடுத்து அவ்லியாக்களையோ, நபிமார்களையோ, சிலைகளையோ வணங்கு கின்றார்களோ அவர்களுக்கு எதிராக மறுமை நாளில் அவர்கள் வணங்கிய இந்த அவ்லியாக்களும் சிலைகளும் நபிமார்களும் வந்து நிற்பார்கள். இறைவனிடத்தில் மக்கள் செய்த இணைவைப்புச் செயலையே மறுத்துப் பேசுவார்கள் என்பதாகச் சொல்லிக் காட்டுகிறான்.

தங்களுக்கு உதவுவார்கள் என அல்லாஹ்வையன்றி பல கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். அவ்வாறு இல்லை. தங்களை இவர்கள் வணங்கியதை அவர்கள் மறுத்து இவர்களுக்கு எதிராவார்கள்.

(அல்குர்ஆன்: 19:81-82)

மேற்கூறப்பட்ட அனைத்து வசனங்களும் நமக்கு எதைச் சுட்டிக் காட்டுகின்றது என்றால், ஒரு மனிதர் இறந்து விட்டால் அவர் இறந்த பிறகு அவருக்கு உலகத்தில் நடக்கும் விஷயங்கள் எதுவும் தெரியாது. அது இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களாக இருந்தாலும் அவர்கள் இறந்து போன பிறகு அவர்களுக்கும், இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு முறிந்து விடுகிறது. மேலும் அல்லாஹ்வையன்றி நாம் யாரைக் கடவுளாக ஆக்கி அவர்களை அழைக்கின்றோமோ அவர்களுக்கும் இந்த உலகத்தில் நடப்பது தெரியாது. அல்லாஹ்விடத்தில் மறுத்தும் விடுவார்கள். மேலும் நமக்கு எதிராகவும் நம்முடைய இணை வைப்பிற்கு எதிராகவும் வந்து நிற்பார்கள் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக, இறைவன் வாழ்விற்கும் மரணத்திற்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்லிக்காட்டுகிறான்.

முடிவில் அவர்களில் யாருக் கேனும் மரணம் வரும் போது என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள் என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தைதான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப் படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

(அல்குர்ஆன்: 23:99-100)

மேற்கண்ட வசனத்தின் இறுதியில் மனிதன் இறந்த பிறகு அவனுக்கும், இந்த உலகத்திற்கும் இடையில் ஓர் திரை உள்ளது என்பதை ”பர்ஸக்” என்ற வார்த்தையின் மூலம் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

இதில் பர்ஸக் என்பதற்கு ”திரையிடுதல்” என்பது பொருள்.

இதை நாம் இன்னும் எளிதாக விளங்க வேண்டுமென்றால் திருக்குர்ஆனில் அல்லாஹ் வேறு ஒரு வசனத்தில் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறான்.

இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது.

(அல்குர்ஆன்: 55:19-20)

நாம் அந்தக் கடலைப் பார்க்கும் போது இரண்டு கடலும் ஒன்றோ டொன்று ஒட்டி, கலந்திருப்பதைப் போன்று தெரியும். ஆனால் அதற்கு மத்தியில் கண்ணுக்குத் தெரியாத, உடைக்க முடியாத ஒரு திரையை இறைவன் போட்டு வைத்திருக்கிறான்.

இதே போன்றுதான் இறந்துவிட்ட மனிதனுக்கும், உலகத்திற்கும் மத்தியில் ஒரு கடினமான திரையை இறைவன் போட்டு வைத்திருக்கிறான். அவனுக்கும், இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. இறந்து விட்ட மனிதர்கள் யாரும் திரும்ப இந்த உலகிற்கு வர முடியாது. அவனுக்கும் அவனுடைய உலகம் சார்ந்த செயல்பாட்டிற்கும் இடையில் ஒரு தடை ஏற்பட்டு விடுகிறது. அவர்கள் இறந்து அடக்கம் செய்யப்பட்டாலும் சரி! பூமியின் மேற்பரப்பிலேயே மரணித்தவராக இருந்தாலும் சரி! இந்த உலகத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டு விடும்.

அந்தத் தடையை மீறி யாராலும் இந்த உலகத்திற்கு வரவும் முடியாது. இந்த உலகத்தில் நடக்கும் செயல்பாட்டினை அறிந்து கொள்ளவும் முடியாது என்பதை மேற்கண்ட வசனம் தெளிவுபடுத்துகின்றது. ஆனால் இன்றைய முஸ்லிம்கள், மண்ணறையில் அடக்கம் செய்யப் பட்டவர்கள் நல்லடியார்கள் என்றும், அவர்கள் நாம் செய்யக்கூடிய செயல்களைக் கண்கானிக்கின்றனர் என்றும் கூறி வருகின்றனர்.

மண்ணறைக்குள் வைத்து அடக்கம் செய்யப்படாத, பூமியின் மேற்பரப்பில் இறந்து கிடந்த, முன்னொரு காலத்தில் வாழ்ந்த ஒரு நல்லடியாரைப் பற்றி அல்லாஹ் திருக்குர்னில் குறிப்பிடும் போது,

ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா?) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. “இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக் குவான்?” என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்து “எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்?” என்று கேட்டான். “ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்” என்று அவர் கூறினார்.

“அவ்வாறில்லை! நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர்! உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக! (செத்துவிட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை எடுத்துக் காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டுகி றோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக்கிறோம் என்பதையும் கவனிப்பீராக!” என்று அவன் கூறினான். அவருக்குத் தெளிவு பிறந்தபோது “அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்” எனக் கூறினார்.

(அல்குர்ஆன்: 2:159)

இவ்வசனத்தில் நல்லடியார் ஒருவரின் அற்புத வரலாற்று நிகழ்ச்சி கூறப்படுகிறது. நல்லடியார் ஒருவரை அல்லாஹ் நூறு ஆண்டுகளாக மரணிக்கச் செய்கிறான். அடக்கம் செய்யப்படாமல் பூமியின் மேற்பரப்பிலேயே அவரது உடல் கிடந்தது.

ஆயினும் தாம் எத்தனை ஆண்டுகள் இவ்வாறு இருந்தோம் என்பதை அவரால் அறிய இயலவில்லை. ஒரு நாள் தூங்கியதாகவே அவர் நினைக்கிறார். பூமிக்குள் அடக்கம் செய்யப்படாமல் பூமியின் மேற்பரப்பிலேயே இந்த நல்லடியாரின் உடல் இருந்தும் தனக்கு என்ன நேர்ந்தது என்பதை அவரால் அறிய முடியவில்லை என்றால் பூமிக்குள் அடக்கம் செய்யப்பட்டவர்கள் எவ்வாறு இவ்வுலகில் மற்றவர்களின் நிலைகளை அறிவார்கள் என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இறந்து போன நல்லடியார்களிடம் சில முஸ்லிம்கள் பிரார்த்தனை செய்கின்றனர். அவர்கள் இறந்து அடக்கம் செய்யப்பட்டுப் பல ஆண்டுகள் உருண்டோடிய பின்பும் இவ்வாறு பிரார்த்தனை செய்கின்றனர். ஆனால் இறந்தவருக்கோ இவர் பிரார்த்தனை செய்தது கூடத் தெரியாது என்பதை இந்த வசனத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும், இந்த வசனத்திலிருந்து இன்னொரு செய்தியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது மேற்கண்ட வசனத்தில் குறிப்பிடப்படும் இவர் நல்லடியார் என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும். ஆனால் தர்ஹாக்களில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் நல்லடியார்களாகத்தான் இருப்பார்கள் என்று எந்த உறுதியும் கூற முடியாது. மறுமையில் தான் அது பற்றிய விபரம் தெரியும். எனவே நாமாக ஒருவரை நல்லடியார் என்று சொல்வது அல்லாஹ்வின் அதிகாரத்தில் கை வைத்தவர்களாக ஆகிவிடுவோம் என்பதையும் இந்நேரத்தில் சொல்லிக் கொள்கிறோம்.

ஒருவேளை அப்படியே அவர்கள் நல்லடியார்கள் தான் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் கூட அவர்களிடத்தில் பிரார்த்திப்பது என்பது நியாயமற்ற, இறைவனால் ஏற்றுக் கொள்ள முடியாத, மன்னிக்க முடியாத செயல் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.