65) இறந்தவரைக் குளிப்பாட்டுதல்
ஒருவர் இறந்து விட்டால் அடக்கம் செய்வதற்கு முன் அவரது உடலைக் குளிப்பாட்டுவது அவசியம்.
இறந்தவுடன் கசப் மாற்றுவது’ என்ற பெயரில் ஒரு தடவை குளிப்பாட்டுகின்றனர்.
பின்னர் அடக்கம் செய்தவற்கு முன் ஒரு தடவை குளிப்பாட்டுகின்றனர்.
சில ஊர்களில் இதை விட அதிக எண்ணிக்கையிலும் குளிப்பாட்டுகின்றனர்.
இப்படிப் பல தடவை அல்லது இரண்டு தடவைகள் குளிப்பாட்ட வேண்டும் என்று குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ கூறப்படவில்லை. பொதுவாகக் குளிப்பாட்டுமாறு தான் சொல்லப்பட்டுள்ளது.
எனவே அடக்கம் செய்வதற்கு முன் ஏதேனும் ஒரு நேரத்தில் ஒரு தடவை குளிப்பாட்டுவது தான் அவசியம்.
சுன்னத் என்றோ கடமை என்றோ கருதாமல் உடலிலிருந்து துர்வாடை வரக் கூடாது என்பதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட தடவை குளிப்பாட்டினால் அது குற்றமாகாது.
மார்க்கத்தில் இது வலியுறுத்தப்பட்டுள்ளது என்ற தவறான எண்ணத்தை ஊட்டும் வகையில் இருந்தால் அது தவறாகும்.