இறந்தவருக்கு யாஸீன் ஓத ஆதாரம் உண்டா?
இறந்தவருக்கு யாஸீன் ஓத ஆதாரம் உண்டா?
மரணிக்கும் தருவாயில் இருப்பவருக்கு அருகில் யாஸீன் ஓதும் நடைமுறை தமிழக முஸ்லிம்களில் சிலரிடம் காணப்படுகிறது. இதற்கு ஆதாரமாகப் பின் வரும் ஹதீஸ்களைச் சில அறிஞர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்.
உங்களில் மரண வேளை நெருங்கியவர்களுக்கு யாஸீன் ஓதுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர் : மஃகில் பின் யஸார் (ரலி)
நூல்கள் :(அபூதாவூத்: 2814), இப்னுமாஜா 1438
யாஸீன் (அத்தியாயம்) குர்ஆனின் இதயமாகும். அல்லாஹ்வையும், மறுமையையும் நாடி அதை ஓதுபவர் மன்னிக்கப்பட்டவராவார். நீங்கள் உங்களில் மரண வேளை நெருங்குபவர்களிடம் அதை ஓதுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர் : மஃகில் பின் யஸார் (ரலி)
(அஹ்மத்: 19415)
வேறு பல நூல்களிலும் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த அனைத்து ஹதீஸ்களிலும் மஃகில் பின் யஸார் (ரலி) கூறியதாக அபூ உஸ்மான் என்பாரின் தந்தை இந்த ஹதீஸை அறிவிக்கிறார். அவர் கூறியதாக அபூ உஸ்மான் அறிவிக்கிறார்.
அபூ உஸ்மான் என்பவரும், அவரது தந்தையும் யாரென்று அறியப்படாதவர்கள் என்று ஹதீஸ் துறை அறிஞர்கள் கூறுகின்றனர். எனவே இது பலவீனமான ஹதீஸாகும்.
மரணமடையும் எவரது முன்னிலையில் யாஸீன் ஓதப்பட்டாலும் அல்லாஹ் அவருக்கு வேதனையை இலேசாக்காமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியனார்கள்
அறிவிப்பவர் : அபூதர்தா (ரலி), அபூதர் (ரலி)
நூல் : முஸ்னத் பிர்தவ்ஸ்.
இதில் இடம் பெற்றிருக்கும் சாலிம் பின் மர்வான் பலவீனமானவராவார்.
மரண வேளை நெருங்கியவர் முன்னிலையில் யாஸீன் ஓத வேண்டும் என்று வருகின்ற எந்த ஹதீஸுமே சரியான ஹதீஸ் கிடையாது என்பதை நாம் கவனத்தில் கொண்டு இது போன்ற காரியங்களைத் தவிர்க்க வேண்டும்.
இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதினால் அதன் நன்மை அவருக்கு சென்றடையும் என்று நம் சமுதாயத்தில் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு கத்தம் என்று சொல்கின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படிப்பட்ட ஒரு வணக்கத்தை நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லை.
நபியவர்கள் உயிருடன் வாழும் காலத்தில் அவர்களுடைய மனைவி கதீஜா (ரலி) மரணித்தார்கள். நபியவர்களின் மகள் ஸைனப் (ரலி) மரணித்தார்கள். அவர்களின் மகன் இப்ராஹீம் மரணித்தார்கள். இவர்களில் யாருக்காகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆன் ஓதி அதன் நன்மையை அனுப்பி வைக்கவில்லை.
மேலும் நபியவர்கள் காலத்தில் எத்தனையோ நபித்தோழர்கள் மரணித்தனர். இவர்களுக்காக நபியவர்களோ, மற்ற நபித்தோழர்களோ இந்தக் காரியத்தைச் செய்யவில்லை. இது இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வணக்கமாக இருந்தால் கண்டிப்பாக இதை நபியவர்கள் செய்திருப்பார்கள். எனவே இது நரகத்திற்கு இழுத்துச் செல்லும் பித்அத் ஆகும்.
மக்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக போலி ஆலிம்கள் இந்த பித்அத்தை உருவாக்கினார்கள்.
எனவே இறந்துவிட்ட ஒருவருக்காக உயிருள்ளவர்கள் குர்ஆனை முழுமையாக ஓதி அதன் நன்மையைச் சேர்ப்பிக்க இயலாது.