55) இறந்தவரின் மறுமை நன்மைக்காக மற்றவர்கள் செய்ய வேண்டியவை

நூல்கள்: ஜனாஸாவின் சட்டங்கள்

எந்த ஒரு மனிதரும் தமது மறுமைக்கான தயாரிப்புகளைத் தாமே செய்து கொள்ள வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை.

ஒருவர் நன்மை செய்து அதை மற்றவர் கணக்கில் சேர்க்க முடியாது என்பதை இஸ்லாம் தெளிவாகப் பிரகடனப்படுத்துகிறது.

அவர்கள் சென்று விட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்தது குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்.

(அல்குர்ஆன்: 2:134)

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே.

(அல்குர்ஆன்: 2:286)

(பாவம் செய்யும்) எவரும் தமக்கு எதிராகவே சம்பாதிக்கிறார். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான். பின்னர் உங்கள் இறைவனிடமே உங்கள் மீளுதல் உள்ளது. நீங்கள் முரண்பட்டது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான் என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 6.164

நேர்வழி பெற்றவர் தனக்காகவே நேர்வழி பெறுகிறார். வழிதவறுபவர் தனக்கெதிராகவே வழி தவறுகிறார். ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். ஒரு தூதரை அனுப்பாதவரை நாம் (எவரையும்) தண்டிப்பதில்லை.

(அல்குர்ஆன்: 17:15)

ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார். கனத்த சுமையுடையவன் அதைச் சுமக்குமாறு யாரையேனும் அழைத்தால் (அழைக்கப்படுபவன்) உறவினராக இருந்தாலும் அதிலிருந்து எதுவும் அவன் மீது சுமத்தப்பட மாட்டாது.

(அல்குர்ஆன்: 35:18)

ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார். பின்னர் உங்கள் மீளுதல் உங்கள் இறைவனிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான். உள்ளங்களில் உள்ளதை அவன் அறிந்தவன்.

(அல்குர்ஆன்: 39:7)

மூஸா, முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீம் ஆகியோரின் ஏடுகளில் ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை என்று இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?

(அல்குர்ஆன்: 53:36-39)

ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியாது என்ற பொதுவான இந்த விதியிலிருந்து சில காரியங்களுக்கு மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதிவிலக்கு அளித்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதிவிலக்காகக் காட்டித் தந்த அந்தக் காரியங்களை மட்டும் இறந்தவர் சார்பில் உயிருடன் உள்ள அவரது வாரிசுகள் செய்யலாம். அவ்வாறு செய்தால் அதன் நன்மை இறந்தவருக்குப் போய்ச் சேரும்.