இருப்பதைக் கொண்டு திருப்தியடைவோம்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

மனிதனாகப் பிறந்த அனைவருமே பலவிதங்களில் பலதரப்பட்ட ஆசைகளைக் கொண்டவர்களாக வாழ்கிறோம். நமது ஆசைகள் வெவ்வேறாக இருந்தாலும், செல்வத்தைத் திரட்டுவதில் மட்டும் பாரபட்சமே இல்லாமல் மனித குலம் அனைவரும் ஒரே மாதிரி பேராசை கொண்டவர்களாக இருக்கிறோம்.

இருப்பவர், இல்லாதவர் என்ற பாகுபாடின்றி, மரணத்தைச் சந்திக்கின்ற வரை செல்வத்தில் ஒரு தேடல் இருந்து கொண்டே இருக்கிறது.

இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

 عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

يَكْبَرُ ابْنُ آدَمَ وَيَكْبَرُ مَعَهُ اثْنَانِ: حُبُّ المَالِ، وَطُولُ العُمُرِ

மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக, அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன.

  1. பொருளாசை.
  2. நீண்ட நாள் வாழவேண்டும் என்ற ஆசை.

நூல்: (புகாரி: 6421) 

இவ்வாறான ஆசைகளை மனிதர்கள், எவ்வாறு அணுக வேண்டும் என்று இஸ்லாமிய மார்க்கம்  நமக்கு நிறைய உபதேசங்களை செய்கிறது. அதில் சிலவற்றை இந்த உரையில் காண்போம். 

நிறைவு பெறாத மனம்

பணம் அதிகமாக இருந்தாலும் சரி! குறைவாக இருந்தாலும் சரி! அதுவே மனிதனை அழிக்கக் கூடிய மிகப் பெரும் ஆயுதமாக இருக்கின்றது. செல்வம் அதிகமாக இருக்கும் போது ஆடம்பர வாழ்க்கை, அகங்காரம், அழிச்சாட்டியம் என்று உலக வாழ்வில் மதிமயங்கிப் போய் நன்மைகள் செய்ய மறந்து, இறையருளை நிராகரித்து நன்றி கெட்டவனாக மனிதன் நடக்கிறான்.

அதேபோல் செல்வம் குறைவாக, அளவோடு கொடுக்கப்பட்டாலும் கூட இறைவன் தனக்கு வழங்கிய அருள்வளத்தை மன நிறைவோடு ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வருவதில்லை. நிம்மதியாக வாழும் அளவிற்குப் பொருளாதாரம் இருந்தாலும் கூட, இன்னும் வேண்டும் என்று ஆவல் கொள்வதே மனித குலத்தின் இயல்பாக இருக்கின்றது.

நம்மிடமுள்ள வசதி வாய்ப்புக்கு ஏற்றாற்போல் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றே நமது மார்க்கம் போதிக்கின்றது. ஆனால் மனித மனமோ இருப்பதை விட்டு விட்டு இல்லாத ஒன்றை நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கின்றது.

ஆண்களாவது தங்களது ஏக்கத்தை மனதிற்குள்ளேயே அடக்கிக் கொள்கின்றனர். ஆனால் பெண்களோ அதைத் தங்களது சொல்லாலும், செயலாலும் வெளிப்படுத்தி விடுகின்றனர்.

தம்மைச் சுற்றி வாழக்கூடிய அண்டை வீட்டுப் பெண்கள், சொந்த பந்தத்திலுள்ள பெண்கள் என மற்ற பெண்களோடு தங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்து, தம்மைத் தாழ்த்திக் கொள்கின்றனர். இதனால் சின்னச் சின்ன விஷயங்களைக் கூட சகித்துக் கொள்ள முடியாமல் பெரிய பூதாகரமாக மாறிவிடுகின்றது.

தாம் கேட்டது கிடைக்காத போதும், பிறரை விட வசதி வாய்ப்பு குறைவாக இருக்கும் போதும், “இவள் ராணி மாதிரி வாழ்கிறாள். கொடுத்து வைத்தவள். நான் தான் இப்படிக் கஷ்டப்படுகிறேன்” என்று மற்ற பெண்களைக் கண்டு ஏக்கம் கொள்கின்றனர். அந்த வெறுப்பில் தன் கணவன் செய்யும் அனைத்து நன்மைகளையும் மறந்து, “என் பிறந்த வீட்டில் நான் எப்படி வாழ்ந்தேன் தெரியுமா?

உங்களைக் கட்டிக்கொண்ட பிறகு தான் இப்படிக் கஷ்டப்படுகிறேன்” என்று கூறி ஒரு வார்த்தையில் நிராகரித்து விடுகின்றனர். இந்த நிராகரிப்பு தான் நரகத்திற்குக் கொண்டு செல்லும் வழிப்பாதை என நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கின்றார்கள்.

 أُرِيتُ النَّارَ فَإِذَا أَكْثَرُ أَهْلِهَا النِّسَاءُ، يَكْفُرْنَ قِيلَ: أَيَكْفُرْنَ بِاللَّهِ؟ « قَالَ: يَكْفُرْنَ العَشِيرَ، وَيَكْفُرْنَ الإِحْسَانَ، لَوْ أَحْسَنْتَ إِلَى إِحْدَاهُنَّ الدَّهْرَ، ثُمَّ رَأَتْ مِنْكَ شَيْئًا، قَالَتْ: مَا رَأَيْتُ مِنْكَ خَيْرًا قَطُّ

‘‘எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது, ‘இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்?’ எனக் கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘கணவனை நிராகரிக்கிறார்கள்.

உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் ‘உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை’ என்று பேசிவிடுவாள்’’ என்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: (புகாரி: 29) 

நிராசையான வார்த்தைகள்

நம் சகோதரிகளின் புலம்பல்கள் இத்துடன் நின்று விடுவதில்லை. இதற்கும் ஒரு படி மேலே சென்று, தான் மட்டும் தான் இந்த உலகத்தில் கஷ்டப்படுவதைப் போன்றும், தனக்கு வந்த சோதனை யாருக்குமே – வராததைப் போன்றும், “அல்லாஹ் என்னை மட்டும் தான் இப்படிக் கஷ்டப்படுத்துகிறான். நான் மட்டும் தான் அவன் கண்ணுக்குத் தெரிகிறேன்” என்று சாதாரண மனிதர்களிடம் சலித்துக் கொள்வது போன்று இறைவனிடமும் சலித்துக் கொள்கிறார்கள்.

அத்தியாவசியத் தேவைகளை நிவர்த்தி செய்யும் அளவுக்கு இறைவன் நமக்கு அருள் புரிந்து கொண்டிருக்கும் போது, அதற்கே நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். ஆனால் அதை மறந்து விட்டு அனாவசியத் தேவைகளுக்கெல்லாம் இறையருளை மறந்து விடுகின்றார்கள்.

எல்லாப் பெண்களும் இதே குணம் கொண்டவர்கள் என்று நாம் கூறவில்லை. எனினும், செல்வம் குறைவாக இருந்தாலும் பிறரிடம் கையேந்தாமல், கணவன், குழந்தை, குடும்பம் என நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறோமே என்று எண்ணி சந்தோஷப்படுவதற்குப் பதிலாக, வசதி வாய்ப்புகள் குறைவாக இருப்பது தமக்கு ஏற்பட்ட ஒரு கேவலமாக நினைத்து வாடுபவர்கள் தான் ஏராளமாக இருக்கிறார்கள். மனிதனின் குணமே இது தான் என்று இறைவனும் கூறுகிறான்.

فَاَمَّا الْاِنْسَانُ اِذَا مَا ابْتَلٰٮهُ رَبُّهٗ فَاَكْرَمَهٗ وَنَعَّمَهٗ  ۙ فَيَقُوْلُ رَبِّىْۤ اَكْرَمَنِؕ
وَاَمَّاۤ اِذَا مَا ابْتَلٰٮهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهٗ  ۙ فَيَقُوْلُ رَبِّىْۤ اَهَانَنِ‌ۚ‏

மனிதனை அவனது இறைவன் மரியாதையுடன் வாழச் செய்து இன்பத்தையும் வழங்கி சோதிக்கும்போது “என் இறைவன் என்னைக் கண்ணியமாக நடத்தினான்’’ என்று கூறுகிறான்.

அவனது செல்வத்தை அளவுடன் வழங்கி சோதிக்கும்போது “என் இறைவன் என்னை அவமானப்படுத்தி விட்டான்’’ எனக் கூறுகிறான்.

(அல்குர்ஆன்: 89:15,16)

எளிமையை விரும்புதல்

ஆடம்பரத்தை விரும்பும் மனிதன், எளிமையை அதிகமாக வெறுக்கிறான். அதனால் தான் எவ்வளவு அருள்வளம் கொடுக்கப்பட்டாலும் எதுவுமே இல்லை என்று மறுத்து விடுகிறான். நிறைவு பெறாத இந்த மனநோய்க்கு நபிகளாரின் வாழ்க்கையில் நிவாரணம் இருக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாள் முழுவதும் எளிமையாகவே வாழ்ந்தார்கள். அவர்களின் வாழ்க்கைப் பாடத்தில் ஒரு சிறு துணுக்கை மட்டும் இங்கே குறிப்பிடுகிறோம்.

 فَدَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا هُوَ مُضْطَجِعٌ عَلَى رِمَالِ حَصِيرٍ، لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ فِرَاشٌ، قَدْ أَثَّرَ الرِّمَالُ بِجَنْبِهِ، مُتَّكِئًا عَلَى وِسَادَةٍ مِنْ أَدَمٍ حَشْوُهَا لِيفٌ،

உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களின் அறைக்குள் நுழைந்தேன். அங்கு அவர்கள் ஓர் ஈச்சம் பாயில், ஈச்ச நார்கள் அடைத்த தோல் தலையணை ஒன்றின் மீது சாய்ந்தபடி படுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் (அவர்கள் படுத்திருந்த) அந்தப் பாய்க்குமிடையே விரிப்பு ஏதும் இருக்கவில்லை. எனவே, அவர்களின் விலாவில் அந்த ஈச்சம் பாய் அடையாளம் பதித்திருந்தது.

நூல்: (புகாரி: 5191) 

நபியவர்கள் ஆடம்பரத்தை விரும்பியதே இல்லை. காரணம், ஆடம்பர வாழ்வு நிலையானது இல்லை என்பதை அறிந்திருந்தார்கள். மேலும் தம் சமுதாயத்திற்கும் ஏந்தல் நபியவர்கள் எளிமையைத் தான் போதித்தார்கள். இதே அந்த மாமேதையின் போதனைகள்…

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
تَعِسَ عَبْدُ الدِّينَارِ، وَالدِّرْهَمِ، وَالقَطِيفَةِ، وَالخَمِيصَةِ، إِنْ أُعْطِيَ رَضِيَ، وَإِنْ لَمْ يُعْطَ لَمْ يَرْضَ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பொற்காசு, வெள்ளிக்காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை, சதுரக் கம்பளி ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்டவன் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தியடைவான். (செல்வம்) வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான்.

இதை அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.
நூல்: (புகாரி: 6435) 

أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَنْكِبِي، فَقَالَ: «كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ»

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு ‘உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு’ என்றார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித் அவர்கள் கூறுகிறார்கள்:) ‘நீ மாலை நேரத்தை அடைந்தால் காலை வேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க்குப் பிந்தைய மறுமை நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு’ என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள்.
நூல்: (புகாரி: 6416) 

நேற்று ஓர் இடம், இன்று ஓர் இடம், நாளை ஓர் இடம் என்று எதுவுமே நிலை இல்லாத, சொந்தமில்லாத ஒரு வாழ்க்கை தான் நாடோடியின் வாழ்க்கை. அப்பேற்பட்ட வாழ்க்கையைத் தான் வாழ வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள்  போதிக்கின்றார்கள்.

கீழ்நிலையில் உள்ளோரைச் சிந்தித்தல்

கல்வி, தோற்றம், செல்வம் என அனைத்து விஷயங்களிலும் நமக்கு மேல்நிலையில் இருப்பவர்களைப் பற்றிச் சிந்திக்கும் நாம், நமக்குக் கீழ் நிலையில் உள்ளவர்களைப் பற்றி ஒருபோதும் சிந்திப்பதே இல்லை. அவர்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

إِذَا نَظَرَ أَحَدُكُمْ إِلَى مَنْ فُضِّلَ عَلَيْهِ فِي المَالِ وَالخَلْقِ ، فَلْيَنْظُرْ إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْهُ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
செல்வத்திலும், தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழனாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.
நூல்: (புகாரி: 6490) 

மாட மாளிகையின் மீது எண்ணம் கொள்ளும் நாம், மழையிலும் வெயிலிலும் ஒதுங்குவதற்குக் கூட இடமில்லாமல் வாழக்கூடிய மக்களை நினைத்துப் பார்த்தோம் என்றால் குடிசை வீடு கூட நமக்குக் கோபுரமாகத் தோன்றும்.

விலையுயர்ந்த ஆடை அணிகலன்கள் என்று ஆடம்பரமாய் வாழும் மக்களை நினைத்து ஏக்கம் கொள்ளும் சமயத்தில், உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி பஞ்சம் பட்டினியில் அல்லல்படும் மக்களைச் சிந்தித்துப் பார்த்தோமானால், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் எத்தனை மக்கள் வேதனைப்படுகிறார்கள் என்பதை உணரலாம்.

நாம் அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் ஒருவர் இருந்தால் நாம் குனிந்து பார்க்கும் அளவுக்கு அடிமட்டத்திலும் ஒருவர் இருக்கிறார் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும். அப்போது தான் நாம் நிம்மதியாக, மனநிறைவுடன் வாழ முடியும்.

நாம் எத்தகைய சுகபோக வாழ்வு வாழ்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ளவும், இறைவனுக்கு நன்றி செலுத்தவும் நமக்குக் கீழே உள்ளவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தருகின்றார்கள்.

போதுமென்ற மனம்

நம்முடைய பார்வையில் செல்வம் என்றால் வீடு, பங்களா, சொத்து கை நிறைய பணம் இவை தான் என்று நினைக்கிறோம். ஆனால் நபியவர்களின் பார்வையில் உண்மையான செல்வம் என்பது போதுமென்ற மனம் தான்.

لَيْسَ الغِنَى عَنْ كَثْرَةِ العَرَضِ، وَلَكِنَّ الغِنَى غِنَى النَّفْسِ

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வசதி வாய்ப்புகள் அதிகமாக இருப்பது செல்வம் கிடையாது. போதுமென்ற மனம் தான் செல்வமாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 6446) 

அன்புள்ள சகோதர, சகோதரிகளே! இறைவன் நமக்கென்று எதனை நிர்ணயித்துள்ளானோ அது நம்மை வந்தடைந்தே தீரும். பிறந்த வீடாயினும், புகுந்த வீடாயினும் நமக்கு வழங்கப்பட்ட பொருளாதாரத்தை மன நிறைவோடு ஏற்று, வரவுக்கு ஏற்றாற்போல் வாழ்க்கையை அமைத்துக் கொண்டோமானால் நாமும் மகாராணியாக வாழலாம். மேலும் இறைவன் நம்மைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான்.

நிறைவான மனதை நம் அனைவருக்கும் இறைவன் தந்தருள்வானாக!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.