38) இரண்டு பேர் மட்டும் இருந்தால்…
பொதுவாக ஜமாஅத் தொழுகையின் போது இமாமுடன் ஒருவர் மட்டும் இருந்தால் இருவரும் அடுத்தடுத்து நிற்க வேண்டும். பின்பற்றித் தொழுபவர் இருவர் அல்லது அதற்கு மேல் இருந்தால் இமாமுக்குப் பின்னால் நிற்க வேண்டும் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.
ஆனால் ஜனாஸா தொழுகையில் இமாமுடன் ஒருவர் மட்டும் இருந்தால் அவர் இமாமுக்குப் பின்னால் தான் நிற்க வேண்டும்.
அபூ தல்ஹாவின் மகன் இறந்த போது அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னே நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் அபூ தல்ஹா நின்றனர். அபூ தல்ஹாவின் மனைவி அதற்குப் பின்னால் நின்றார் என்ற ஹதீஸை முன்னர் குறிப்பிட்டுள்ளோம்.
பெண்ணையும், அபூ தல்ஹவையும் சேர்த்து இருவர் நின்றதால் தான் அபூ தல்ஹாவைப் பின்னால் நிற்க வைத்தார்கள் என்று புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நானும், எனது தாயாரும் தொழுத போது என்னைத் தமது வலது பக்கத்திலும், என் தாயாரைப் பின்னாலும் நிற்க வைத்து தொழுகை நடத்தினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
ஜனாஸா தொழுகையிலும், சாதாரண தொழுகையிலும் ஒரு ஆண் ஒரு பெண் இருந்த போது இரண்டுக்கும் வெவ்வேறு முறையில் வரிசையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அமைத்ததால் ஜனாஸாவுக்குத் தனிச் சட்டம் என்பதை அறிந்து கொள்ளலாம்.