இரண்டாவது ஜமாஅத்திற்கு ஆதாரம் உள்ளதா?
இரண்டாவது ஜமாஅத்திற்கு ஆதாரம் உள்ளதா?
? ஒரு குறிப்பிட்ட நேரத் தொழுகையில் ஒரு ஜமாஅத் முடிந்த பின்னர் இரண்டாவது ஜமாஅத் தொழுவதற்கு ஆதாரம் இல்லை என்று சிலர் கூறுகின்றனர். இரண்டாவது ஜமாஅத்திற்கு ஆதாரம் உள்ளதா? விளக்கவும்.
ஏ.எல். ஹாஸிம், ராஸல் கைமா
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “(இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம்) இவருக்கு லாபம் அளிக்கக் கூடியவர் யார்?” என்று கேட்டார்கள். ஒரு மனிதர் முன் வந்தார். வந்த மனிதர் அவருடன் சேர்ந்து தொழுதார்.
அறிவிப்பவர் : அபூஸயீத் (ரலி),
நூல் : திர்மிதி 204,(அஹ்மத்: 10596)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்குத் தொழுகை நடத்தி முடித்த பிறகு ஒரு மனிதர் பள்ளிக்கு வந்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இவருக்கு தர்மம் செய்யக் கூடியவர் யார்? அவர் இவரோடு சேர்ந்து தொழட்டும்” என்று கூறினார்கள். அந்த சபையிலிருந்த ஒருவர் எழுந்து அம்மனிதருடன் தொழுதார்.
அறிவிப்பவர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி)
ஜமாஅத் முடிந்த பின்னர் வந்த மனிதரை தனியாகத் தொழவிடாமல், ஏற்கனவே தொழுத ஒருவரை அவருடன் சேர்ந்து ஜமாஅத்தாக தொழுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள். அவ்வாறு தொழுவது தனியாகத் தொழுவதை விட நன்மையானது எனவும் குறிப்பிடுகின்றார்கள். “இவருக்கு லாபம் அளிக்கக் கூடியவர் யார்?” என்ற வாசகத்திலிருந்து இதை அறியலாம்.
எனவே முதல் ஜமாஅத் முடிந்த பின்னர் தாமதமாக வருபவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் ஜமாஅத்தாகத் தொழுவதே சிறந்தது. ஒருவர் மட்டும் வந்தால், ஏற்கனவே ஜமாஅத்தில் தொழுதவருடன் சேர்ந்தாவது ஜமாஅத்தாகத் தொழ வேண்டும் என்பது இதிலிருந்து தெரிகிறது.
தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு நன்மை உடையது என்று பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன.