இரட்டிப்பு கூலியைப் பெறுவோர்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

முன்னுரை
அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

முஸ்லிம்கள் அனைவர்களும் இறைத்தூதரின் வழிகாட்டுதலின்படி ஓரிறைவனை வணங்கி, வழிபட வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளார்கள். நாம் செய்யும் இந்த வணக்க வழிபாடுகளுக்காக இறைவன் நமக்கு இந்த உலகத்திலேயும் குறிப்பாக மறுமையிலும் நற்கூலி வழங்குவான்.

மறுமையில் நமது வாழ்வு சிறக்க இறைவன் தரும் இந்த நற்கூலிகள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த உலகத்தில் நாம் யாரிடம் வேலை செய்கின்றோமோ அவர் தரும் கூலியை நம்பியே நமது வாழ்க்கைச் சக்கரம் நகன்று கொண்டிருக்கின்றது.

நமது முதலாளியிடத்தில் அதிக சன்மானம் பெற வேண்டும் என்பதற்காக எவ்வளவோ முயற்சிகள் மேற்கொள்கின்றோம். ஏதேனும் பண்டிகை காலம் வந்தால் போனஸ், டபுள் போனஸ் ஆகியவைகளை தரமாட்டாரா? என ஏங்கி அவரையே சுற்றிச் சுற்றி வருகிறோம். இவ்வுலகத்தில் நமது முதலாளி தரும் கூலியின் அவசியத்தை தெரிந்து வைத்திருக்கும் அளவுக்கு, மறுமையில் நமது இறைவன் தர இருக்கின்ற கூலியின் முக்கியத்துவத்தை ஏனோ தெரிந்து கொள்ளவில்லை.

وَالْوَزْنُ يَوْمَٮِٕذِ اۨلْحَـقُّ‌ ۚ فَمَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ فَاُولٰۤٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏ وَمَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗ فَاُولٰۤٮِٕكَ الَّذِيْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ بِمَا كَانُوْا بِاٰيٰتِنَا يَظْلِمُوْنَ‏

”அந்நாளில் மதிப்பீடு செய்தல் உண்மை. (நன்மையின்) எடைகள் கனமாக இருப்போரே வெற்றி பெற்றோர். (நன்மையின்) எடைகள் இலேசாக இருப்போர் தமக்கே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். நமது வசனங்கள் விஷயத்தில் அநீதியாக அவர்கள் நடந்து கொண்டதே இதற்குக் காரணம்.”

(அல்குர்ஆன்: 7:8)

மறுமையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நாளில், இறைக் கூலிதான் நம்மை காப்பாற்றும் கேடயமாக திகழும் என்று இந்த வசனம் கூறுகின்றது. நன்மையின் எடை எவ்வாறு கனமிக்கதாக மாறுகிறது? இறைவன் தரும் கூலிகள்தான் அந்த தராசில் நிறுத்தப்படும். இறைக்கூலி நம்மிடத்தில் அதிகம் இருந்தால் தான் நமது நன்மையின் எடை கனமிக்கதாக மாறும். கொஞ்சம் குறைந்தால் கூட நமது மறுமை வாழ்வே கேள்விக்குறியதாகி விடும்.

இந்த உலகத்திலே கூலிகள் அதிகமாக்கப்பட வேண்டும் என்று பேரார்வம் கொண்டு, அதற்காக பல்வேறு முயற்சிகள், சிரமங்கள் மேற்கொள்கின்ற நாம் இறைவன் தரும் கூலியை அதிகப்படுத்த ஏன் விரும்பக்கூடாது? அது நம்மிடம் அதிகமாக இருந்தால்தானே நமது மறுமை வாழ்வு சிறப்பானதாக அமையும். இறைக்கூலியை அதிகம் பெறுவது ஒன்றும் சிரமமான காரியமில்லை. சிரமமில்லை என்று சொல்வதைவிட மிகவும் எளிதானது என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்தளவிற்கு சில எளிய வழிமுறைகளை இறைவனும் இறைத்தூதரும் கற்றுத்தந்து, இதை செய்தால் இறைவனிடத்தில் ஒன்றுக்கு இரண்டு மடங்காக கூலியைப் பெறலாம் என செழிப்பான மறுமைக்கு வழிகாட்டுகின்றார்கள். அவைகளை நாமும் செய்து, இரட்டிப்புக் கூலியைப் பெற்றுவிட்டால் நம்மை விட பாக்கியசாலிகள் வேறு யாரும் கிடையாது. நடிகர்களை, பெரும் (தர்மம் செய்யாத) செல்வந்தர்களை, அரசியல்வாதிகளை என யார் யாரையெல்லாமோ பாக்கியசாலி என்று மக்கள் கருதுகின்றார்கள்.

அற்பமான இவர்களையே பாக்கியசாலிகள் என்று கூறும்போது இறைவனிடத்தில் நிலையான, மறுமையில் பெரிதும் பலன்தருகின்ற இரட்டிப்புக் கூலியை பெறுபவர்களை பாக்கியசாலிகள் என்று குறிப்பிடுவதில் தவறே இல்லை. இன்னும் சொல்வதாக இருந்தால் இவர்களுக்குத்தான் இந்தப் பெயர் ஏகப்பொருத்தம். யாரந்த பாக்கியசாலிகள்? இதோ…

இறையச்சமுள்ளவர்
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَاٰمِنُوْا بِرَسُوْلِهٖ يُؤْتِكُمْ كِفْلَيْنِ مِنْ رَّحْمَتِهٖ وَيَجْعَلْ لَّـكُمْ نُوْرًا تَمْشُوْنَ بِهٖ وَيَغْفِرْ لَـكُمْ‌ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ ۙۚ‏

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவனது தூதரை நம்புங்கள். அவன் தனது அருளில் இரு மடங்கை உங்களுக்கு வழங்குவான். உங்களுக்கு ஒளியை ஏற்படுத்துவான். அதன் மூலம் (நல்வழியில்) நடப்பீர்கள். உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன்: 57:28)

யார் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்வாரோ அவருக்கு இரு மடங்கு அருளை அதாவது நற்கூலியை வழங்குவதாக இந்த வசனத்தில் இறைவன் வாக்களிக்கின்றான். நாம் உண்மையிலேயே அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்கிறோமா? சொந்த ஊரில், மக்களின் பார்வையில் இருக்கும்போது கட்டுப்பாடாக, எந்த தீமைகளையும் செய்யாதவர்களாக இருக்கின்றோம்.

அதுவே வெளியூரில், வெளிநாட்டில் மக்களின் கண்காணிப்பு நம்மீது இல்லை என்று நாம் உணர்ந்தால் கட்டுப்பாடற்றவர்களாக, சகல தீமைகளிலும் பங்கெடுப்பவர்களாக மாறிவிடுகின்றோம். இதுதான் இறையச்சமா? இறையச்சம் என்றால் என்னவென்றே நம்மில் பலர் சரியாக புரிவதில்லை.

தனிமையில், வழிகேட்டில் விழுவதற்கான எல்லா வாய்ப்புகளும் கண் முன்னே விரிந்து கிடக்கும்போது, அந்த தவறில் விழாமல் இறைவனின் மீதுள்ள பயத்தால் அவைகளை விட்டும் விலகி நிற்பது தான் உண்மையான இறையச்சம். மாறாக இறைபயத்தின் காரணத்தால் தீமைகளை புறக்கணித்தால் அதுவே இறையச்சத்தின் உள்ளார்ந்த அர்த்தமாகும்.

இந்த இறையச்சத்தை நாம் பெற்றுவிட்டால் நமக்கு இரட்டிப்புக் கூலி நிச்சயம். இதைத்தான் நபிகளார் தனது பிரார்த்தனையில் அனுதினமும் கேட்டார்கள். இந்த இறையச்சத்தை நமது பிரார்த்தனையில் சேர்ப்பதை வழமையாக்கிக் கொண்டால், நாமும் உண்மையான இறையச்சவாதிகளாக மாறிவிடலாம்.

عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهُ كَانَ يَقُولُ
اللَّهُمَّ إِنِّى أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹும்ம! இன்னீ அஸ்அலுக்கல் ஹுதா, வத்துகா, வல் அஃபாஃப வல் ஃகினா என்று பிரார்த்தித்து வந்தார்கள்.

(பொருள்: இறைவா! உன்னிடம் நான் நல்வழியையும் இறையச்சத்தையும் சுயக் கட்டுப்பாட்டையும் தன்னிறைவையும் வேண்டுகிறேன்.)

நூல்: (முஸ்லிம்: 5265) 

நற்பண்புகளுடையவர்

இஸ்லாத்தில் குலகோத்திரம், மற்றும் பிறப்பு அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது என்பதை நாம் நன்றாகவே அறிவோம். இருப்பினும் நற்பண்புகள் ரீதியாக ஏற்றத்தாழ்வு உண்டு. ஒருவன் நல்ல பழக்க வழக்கங்களை, குணநலன்களை கொண்டவனாக இருந்தால் அவன், கெட்ட பண்புகள் உடையவனை விட இறைவனிடத்தில் சிறந்தவனே. இறைவனிடத்திலும், பிறரிடம் பழகுவதிலும் நன்னடைத்தை கொண்டவர்களாக இருந்தால் இறைவனிடத்தில் தனியொரு அந்தஸ்தை பெறுவதோடு இரட்டிப்புக் கூலியையும் மிக எளிதாக பெற்றுவிடலாம்.

اُولٰٓٮِٕكَ يُؤْتَوْنَ اَجْرَهُمْ مَّرَّتَيْنِ بِمَا صَبَرُوْا وَيَدْرَءُوْنَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَ‏

அவர்கள் சகித்துக் கொண்டதாலும், நன்மையின் மூலம் தீமையைத் தடுத்ததாலும், அவர்களுக்கு நாம் வழங்கியதை (நல்வழியில்) செலவிட்டதாலும் அவர்களுக்கு இரண்டு தடவை அவர்களின் கூலிகள் வழங்கப்படும்.

(அல்குர்ஆன்: 28:54)

இந்த வசனத்தில் இறைவன் ஒரு சமுதாயத்திடம் சில நல்ல பண்புகள் இருந்ததாக மிகவும் பாராட்டி பேசுகின்றான். இதன் காரணத்தால் அவர்களுக்கு இரட்டிப்புக் கூலியை கொடுப்பேன் என்று தனது அருளை வெளிப்படுத்துகின்றான். நற்பண்புகள் விஷயத்தில் நபிகளாரை விட ஒரு மிகச்சிறந்த முன்மாதிரியை குறிப்பிட்டுக் காட்டவே முடியாது என்ற அளவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முத்திரை பதித்துள்ளார்கள்.

இஸ்லாத்தின் எதிரிகள் நபிகளாரின் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்துவதற்காக எத்தனையோ பழிகளை சுமத்தினார்கள். பைத்தியக்காரர், கைதேர்ந்த சூனியக்காரர், சூனியம் வைக்கப்பட்டவர் என்றெல்லாம் வீண்பழி சுமத்தியவர்களுக்கு, நபிகளாரின் நற்குண விஷயத்தில் எந்த ஒரு குறையையும் ஏற்படுத்த முடியவில்லை. ஏனெனில் அவ்வாறு கூறியிருந்தாலும் மக்கள் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அந்தளவிற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகளிடம் கூட நற்பெயரை பெற்றிருந்தார்கள். அதைத்தான் இறைவன் பின்வருமாறு கூறுகின்றான்…

وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ‏

நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்.

(அல்குர்ஆன்: 68:4)

لَقَدْ كَانَ لَكُمْ فِىْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِيْرًا ؕ‏

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.

(அல்குர்ஆன்: 33:21)

எல்லா விஷயத்திலும் நபிகளாரை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கின்ற இஸ்லாமிய சமூகம், நற்பண்புகள் விஷயத்தில் நபிகளாரை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள மறந்து போனது. எனவேதான் ஏராளமான ஒழுக்க கேடுகள் இஸ்லாமியர்களிடத்தில் காணப்படுகின்றது.

எனவே உடனே அவைகளை களையெடுக்க வேண்டும். நபிகள் நாயகமே சிறந்த முன்மாதிரி என்று வாயளவில் சொல்வதை நிறுத்தி விட்டு, செயலளவில் கொண்டுவர முயற்சித்தால் நமக்கு இரட்டிப்புக் கூலி சந்தேகமின்றி கிடைத்து விடும்.

அந்த மூன்று பேர்
عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
ثَلاَثَةٌ يُؤْتَوْنَ أَجْرَهُمْ مَرَّتَيْنِ الرَّجُلُ تَكُونُ لَهُ الأَمَةُ فَيُعَلِّمُهَا فَيُحْسِنُ تَعْلِيمَهَا وَيُؤَدِّبُهَا فَيُحْسِنُ أَدَبَهَا ثُمَّ يُعْتِقُهَا فَيَتَزَوَّجُهَا فَلَهُ أَجْرَانِ وَمُؤْمِنُ أَهْلِ الْكِتَابِ الَّذِي كَانَ مُؤْمِنًا ثمَّ آمَنَ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم فَلَهُ أَجْرَانِ وَالْعَبْدُ الَّذِي يُؤَدِّي حَقَّ اللهِ وَيَنْصَحُ لِسَيِّدِهِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பேருடைய நற்செயலுக்குரிய பிரதிபலன் இரண்டு முறை அவர்களுக்கு வழங்கப்படும். அவர்கள்:

1. ஓர் அடிமைப் பெண்ணைப் பெற்றிருந்து அவளுக்குக் கல்வி கற்றுத் தந்து, அதை அழகுறக் கற்றுத் தந்து, அவளுக்கு ஒழுக்கம் கற்பித்து, அதை அழகுறக் கற்பித்து, அவளை (தானே) மணம் புரிந்தும்கொண்ட மனிதர். இவருக்கு (அதற்காக) இரண்டு நற்பலன்கள் கிடைக்கும்.

2. வேதம் வழங்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு நம்பிக்கையாளர். (முந்தைய இறைத்தூதர் மீதும், முந்தைய வேதத்தின் மீதும்) நம்பிக்கை கொண்டிருந்த அவர், பிறகு நபி (ஸல்) அவர்கள் மீதும் நம்பிக்கை கொண்டு விட்டார் எனில், இவருக்கும் இரண்டு நற்பலன்கள் கிடைக்கும்.

3. அல்லாஹ்வின் உரிமையையும் நிறைவேற்றி, தன் எஜமானுக்கும் நலம் நாடுகின்ற அடிமை.

அறி : ஸாலிஹ் பின் ஹய்,
நூல் : (புகாரி: 3011) 

சிரமத்துடன் குர்ஆன் ஓதுபவர்
عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
مَثَلُ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَهْوَ حَافِظٌ لَهُ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ وَمَثَلُ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَهْوَ يَتَعَاهَدُهُ وَهْوَ عَلَيْهِ شَدِيدٌ فَلَهُ أَجْرَانِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனை மனனமிட்டு(ச் சிரமமின்றி) ஓதி வருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க(ளான வானவர்க)ளைப் போன்றவராவார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதனைச்) சிரமத்துடன் தொடர்ந்து ஓதி வருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு.

அறி : ஆயிஷா (ரலி),
நூல் : (புகாரி: 4937) 

குர்ஆனை ஓதுபவருக்கு இறைவன் அளப்பரிய நன்மைகளை வழங்குகின்றான். குர்ஆனில் உள்ள ஒரு எழுத்தை ஓதினால் அதற்கு பத்து நன்மைகள் உண்டு. ஆனால் அதையே நாக்குளறுபவர், திக்கித்திக்கி ஓதினால் அவருக்கு ஒரு எழுத்துக்கு இருபது நன்மைகள் கிடைக்கின்றது. எவ்வளவு அற்புதமான வாய்ப்பு என்று பாருங்கள். குர்ஆனை மனனம் செய்து ஓதுபவருக்கு கூட கிடைக்காத வாய்ப்பு, சிரமத்துடன் ஓதுபவருக்கு கிடைக்கின்றது.

ஆனால் இந்த வாய்ப்பை இத்தகையவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்களா? எனக்கெல்லாம் குர்ஆன் ஓதவராது என்று முழுவதுமாக விலகி விடுபவர்களாகவே இருக்கின்றார்கள். ஏதோ தங்கத்தை பெட்டியில் வைத்து பாதுகாப்பது போல் திருக்குர்ஆனை மினுமினுக்கும் தங்க உறையில் வைத்து அது போதாதது போல் பீரோவில் வைத்து பாதுகாக்கின்றனர்?

இவர்கள் குர்ஆனை ஓதுவதில்தான் சிரமப்படுவதை விரும்ப மாட்டார்கள். இதுவல்லாத மற்ற உலக காரியங்களில் சிரமப்படுவதை விரும்பவே செய்கின்றார்கள். எனவே குர்ஆனை மனனம் செய்யாதவர் சிரமமாக இருந்தாலும் குர்ஆனை ஓதுவதிருந்து நிராசையாகி விடாதீர்கள். யாவரும் கொஞ்சமேனும் சிரமப்பட்டு பெறுகின்ற இரட்டிப்புக் கூலியை நீங்கள் குர்ஆனை ஓதுவதின் மூலமே பெற்றுவிட முடியும் என்பதை நினைவில் நிறுத்துங்கள். உங்களுக்கு கிடைத்த இந்த அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.

உறவினர்களுக்கு தர்மம் செய்பவர்

தர்மம் செய்வது இஸ்லாத்தில் மிகச்சிறந்த காரியம். இந்த உலகில் நாம் எதையெல்லாம் தர்மம் செய்கின்றோமோ அவையனைத்தையும் இறைவன் மறுமையில் நமக்கே திரும்பத்தந்து விடுவான். நாம் செலவிட்டதை விட அதிகமாகவே நமக்கு திரும்ப நிறைவேற்றுவான்.

இதுவே நாம் நம்முடைய உறவினர்களுக்கு தர்மம் செய்திருந்தால் நமக்கு எத்தனை மடங்கு கூலி தரவேண்டும் என்று இறைவன் நிர்ணயித்தானோ அதை அப்படியே இரட்டிப்பாக்கி இரு மடங்காக நமது கூலியை பெருக்கி தருவான். நமது உறவினர்களுக்கு தர்மம் செய்வதின் மூலமும் இரட்டிப்புக் கூலியை நாம் எளிதாக பெற்று விடலாம்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவி ஸைனப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் பள்ளிவாசலில் இருந்தபோது நபி (ஸல்) அவா்கள், பெண்களே! உங்களின் ஆபரணங்களிருந்தேனும் தர்மம் செய்யுங்கள் எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்கும் மற்றும் என் அரவணைப்பில் உள்ள அநாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும் எனது அரவணைப்பில் வளரும் அநாதைகளுக்காகவும் எனது பொருளைச் செலவழிப்பது ஸதகாவாகுமா? என நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள்! எனக் கூறிவிட்டார். எனவே நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன்.

அவர்கள் வீட்டுவாயிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால் (ரலி) வந்தார். அவரிடம் நான் எனது கணவருக்கும் எனது பராமரிப்பில் உள்ள அநாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என நபி (ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறினோம்.

உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்டபோது நபி (ஸல்) அவர்கள், அவ்விருவரும் யார்? எனக் கேட்டதற்கு அவர் ஸைனப் எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் எந்த ஸைனப்? எனக் கேட்டதும் பிலால் (ரலி), அப்துல்லாஹ்வின் மனைவி எனக் கூறினார். உடனே நபி (ஸல்) ஆம்! ஸைனபுக்கு இரு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது எனக் கூறினார்கள்.

நூல் : (புகாரி: 1466) 

இந்த காலத்தில் உறவினரையெல்லாம் யாரும் கண்டு கொள்வதே கிடையாது. பெற்றெடுத்த பெற்றோர்களையே அனாதை இல்லத்திலும், முதியோர் இல்லத்திலும் சேர்த்து விட்டு, சனியன் தொலைந்தது என்று சுகமாக இருக்கின்றார்கள். இப்படியிருக்கும்போது உறவினர்களுக்கு தர்மம் செய்பவரை தேடிப் பார்த்தாலும் கண்டு பிடிக்க முடியாது.

நம்முடைய உறவினர்களில் ஏழ்மை நிலையில் இருப்பவர்களையும், அவர்களின் வறுமையான வாழ்க்கைப் போக்கினையும் நாமறிவோம். தெரிந்து கொண்டே அதை பற்றி சற்றும் கண்டு கொள்ளாமல் இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க காரியம். ஏனெனில் நம்முடைய பொருளாதாரத்தில் இதுபோன்ற நிலையில் இருக்கும் நம்முடைய உறவினர்களுக்கு உரிமை இருக்கின்றது என இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

وَاٰتِ ذَا الْقُرْبٰى حَقَّهٗ وَالْمِسْكِيْنَ وَابْنَ السَّبِيْلِ
فَاٰتِ ذَا الْقُرْبٰى حَقَّهٗ وَ الْمِسْكِيْنَ وَابْنَ السَّبِيْلِ‌ؕ

உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக!

(அல்குர்ஆன்: 17:26 , 30:38)

பிறர் கொடுத்தால் நாம் வாங்கிக் கொள்ளலாம். பிறருக்கு கொடுக்கும் அளவுக்கு நாம் என்ன வசதி படைத்தவர்களா? என சிலர் ஒதுங்கிக் கொள்கின்றார்கள். இந்த நிலை மாறி, நம்மால் எவ்வளவு முடியுமோ அதை தர்மம் செய்வோம். இரட்டிப்புக் கூலியை பெறுவோம்.

சரியான தீர்ப்பளிப்பவர்
إِذَا حَكَمَ الْحَاكِمُ فَاجْتَهَدَ ثمَّ أَصَابَ فَلَهُ أَجْرَانِ ، وَإِذَا حَكَمَ فَاجْتَهَدَ ثُمَّ أَخْطَأَ فَلَهُ أَجْرٌ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீதிபதி தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு ஒரு நன்மை உண்டு.

அறி : அம்ர் பின் அல்ஆஸ் (ரலி),
நூல்: (புகாரி: 7352) 

மேற்கூறப்பட்ட ஹதீஸில் ஆய்வு செய்து சரியாக தீர்ப்பளிக்க கூடிய நீதிபதிக்கு இரண்டு மடங்கு கூலியுண்டு என்று நபிகளார் கூறியுள்ளார்கள். இது மக்களிடையே ஏற்படும் குடும்ப மற்றும் சொத்து பிரச்சினைகள் தொடர்பாக தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இருந்தாலும், மார்க்கம் தொடர்பான சந்தேகங்களை ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அணுகி, சரியான தீர்ப்பை வழங்குபவராக இருந்தாலும் சரி இரண்டுவகை நீதிபதியையும் இது குறிக்கும்.

இறை நம்பிக்கையில்லாத எந்த நீதிபதிக்கும் இரு மடங்கு நன்மைகள் கிடைக்காது. ஏனெனில் இறைவனிடத்தில் நற்கூலி பெற வேண்டுமென்றால் அவனை சரியான முறையில் நம்பி அவனுக்கு கட்டுப்பட வேண்டும்.

ஒரு எஜமானிடம் வேலை செய்யாமல் அவனிடமிருந்து சம்பளம் பெற வேண்டும் என்று நினைப்பது எவ்வளவு முட்டாள் தனமானதோ அதுபோலத்தான், இறைவனுக்கு கட்டுப்படாமல் அவனிடம் கூலி பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பது அவ்வளவு முட்டாள் தனமானதாகும். எனவே முஸ்லிம்களல்லாத நீதிபதிகளுக்கு இருமடங்கு கூலி கிடைத்து விடாது.

ஆனால் மார்க்கச் சட்டங்களை ஆய்வு செய்து சரியான தீர்ப்பளிப்பவராக இருந்தால் அவர் இரட்டிப்புக் கூலியை பெறும் பாக்கியசாலியாக ஆகிவிடுகின்றார்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை பதிவு செய்ய வேண்டும். மார்க்க சட்டங்களை ஆய்வு செய்து தவறாக தீர்ப்பளித்து விட்டால் அவரை ஏதோ கடும் குற்றவாளியைப்போல மக்கள் கருதுகின்றனர். இவ்வளவு காலம் இந்த விஷயத்தில் தவறாக தீர்ப்பளித்து விட்டீர்களே இதுநாள் வரையிலும் உங்கள் தீர்ப்பை ஏற்று நடந்து, அந்த நிலையிலேயே மரணித்து விட்டால் அதற்கு யார் குற்றவாளி, தவறாக தீர்ப்பளித்த நீங்களல்லவா குற்றவாளி என்று தங்களை அதிபுத்திசாயாக நினைத்து இவ்வாறு முட்டாள் தனமான கேள்வியை எழுப்புகின்றார்கள்.

மார்க்கத்தை ஆய்வு செய்து தவறாக தீர்ப்பளித்து விட்டால் அவருக்கு நன்மை உண்டு என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை இதுபோன்று குறைகூறுபவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

நினைத்தவாறு நன்மையை செய்தவர்

இறைவனிடத்தில் நமது கூலியை இரண்டு மடங்காக பெருக்கிக் கொள்ள என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதையும் இதன் மூலம் நமது மறுமை வாழ்வு சிறப்பான முறையில் அமையும் என்பதையும் பார்த்தோம். இறைவன் தரும் கூலியை இரண்டு மடங்காக ஆக்கினாலே நமது மறுமை வாழ்வு நாம் எண்ணிப்பார்த்திராத வகையில் அமைந்து விடும் எனும்போது, அதையே பன்மடங்காக பெருக்கினால் என்ன?

இறைக்கூலியை பெருக்க வேண்டும் என்ற குறிக்கோள் நம்மிடம் வந்து விட்டபோது, அதை இரண்டு மடங்காகத்தான் அதிகரிக்க வேண்டுமா? பன் மடங்காக பெருக்கினால் என்ன? அதற்கு ஏராளமான வழிமுறைகள் இருந்தாலும், எவ்வித சிரமும் இன்றி, யாவரும் கடைபிடிக்கத்தக்க, மிகமிக எளிதான, ஒரேயொரு வழியை இங்கே குறிப்பிடுகின்றோம்.

குறிப்பிட்ட நன்மையை செய்யப்போவதாக மனதில் உறுதி கொண்டு, அவ்வாறு செய்து விட்டால், இறைவன் அவருக்கு கணக்கில்லா கூலியை வழங்குகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

 أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ
يَقُولُ اللَّهُ إِذَا أَرَادَ عَبْدِي أَنْ يَعْمَلَ سَيِّئَةً فَلاَ تَكْتُبُوهَا عَلَيْهِ حَتَّى يَعْمَلَهَا فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا بِمِثْلِهَا وَإِنْ تَرَكَهَا مِنْ أَجْلِي فَاكْتُبُوهَا لَهُ حَسَنَةً ، وَإِذَا أَرَادَ أَنْ يَعْمَلَ حَسَنَةً فَلَمْ يَعْمَلْهَا فَاكْتُبُوهَا لَهُ حَسَنَةً فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا لَهُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِمِئَةٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் (வானவர்களிடம்) கூறுகின்றான்: என் அடியான் ஒரு தீமையைச் செய்ய நாடினால் அதை அவன் செய்யாதவரை அவனுக்கெதிராக அதைப் பதிவு செய்யாதீர்கள். அதை அவன் செய்துவிட்டால் செய்த குற்றத்தை மட்டுமே பதிவு செய்யுங்கள்.

அதை அவன் எனக்காக விட்டுவிட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மை புரிய எண்ணி விட்டாலே அதைச் செய்யாவிட்டாலும்கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அதை அவன் செய்துவிட்டாலோ அதை அவனுக்கு பத்து நன்மைகளிலிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள்.

அறி: அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 7501) 

மேற்கூறப்பட்ட வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் நமது இறைக் கூலியை பெருக்கி கொள்வோமாக! நிம்மதியான மறுமை வாழ்வை பெறுவோமாக!

அப்துல் கரீம், மேலப்பாளையம்