092. இயலாவிட்டால் வீல் சேரில் தவாஃப் செய்யலாமா?

கேள்வி-பதில்: ஹஜ் உம்ரா

நடந்து தவாஃப் செய்ய இயலாவிட்டால், வீல் சேரில் தவாஃப் செய்யலாமா?

செய்யலாம்.

பொதுவாக, பொருளாதாரம் மற்றும் உடல் சக்தியற்றவர்களுக்கு, ஹஜ் கட்டாயக் கடமையல்ல. எனினும் வயதானவர்கள் ஹஜ் செய்வது தடுக்கப்பட்டதும் அல்ல. மிகவும் நெரிசலான பகுதிகளில், அவர்களால் சமாளிக்க இயலாது, என்பதையும் கவனத்தில் கொள்ளவும். ஹஜ்ஜுக்கு வந்த பிறகு, ஒருவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால், அவர் வீல் சேரில் தவாஃப் மற்றும் மற்ற கிரியைகளைச் செய்வது குற்றமாகாது.

நடந்து தவாஃப் செய்ய இயலாதவர்கள் வாகனத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்யலாம். இவ்வாறு செய்பவர்கள் நடந்து தவாஃப் செய்பவர்களுக்குப் பின்னால் தான் தவாஃப் செய்ய வேண்டும்.

”நான் நோயுற்ற நிலையில் (மக்காவுக்கு) வந்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கூறினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ”மக்களுக்குப் பின்னால் வாகனத்திலிருந்தவாறே தவாஃப் செய்” என்று கூறினார்கள்.”

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

(புகாரி: 464, 1619, 1633, 4853)