36) இமாம் நிற்க வேண்டிய இடம்
இறந்தவர் ஆணாக இருந்தால் உடலை முன்னால் குறுக்கு வசமாக வைத்து இறந்தவரின் தலைக்கு நேராக இமாம் நிற்க வேண்டும்.
இறந்தவர் பெண்ணாக இருந்தால் அவரது வயிற்றுக்கு நேராக இமாம் நிற்க வேண்டும்.
ஒரு பெண் வயிற்றுப் போக்கில் இறந்து விட்டார். அவருக்குத் தொழுகை நடத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது நடுப்பகுதிக்கு நேராக நின்றார்கள்.
அறிவிப்பவர்: ஸமுரா பின் ஜுன்துப் (ரலி)
ஒரு ஆண் ஜனாஸாவுக்கு நடத்தப்பட்ட தொழுகையில் அனஸ் (ரலி) அவர்களுடன் நான் கலந்து கொண்டேன். அப்போது அவர்கள் ஜனாஸாவின் தலைக்கு நேராக நின்றார்கள். பின்னர் குரைஷ் குலத்துப் பெண்ணின் ஜனாஸாவைக் கொண்டு வந்தனர். ‘அபூ ஹம்ஸாவே! நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்’ என்று மக்கள் கேட்டனர். அப்போது கட்டிலின் மையப் பகுதிக்கு நேராக நின்றார்கள். ‘நபிகள் நாயகம் அவர்கள் பெண் ஜனாஸாவுக்கு நீங்கள் நின்ற இடத்திலும், ஆண் ஜனாஸாவிற்கு நீங்கள் நின்ற இடத்திலும் நின்றதைப் பார்த்தீர்களா?’ என்று அலா பின் ஸியாத் கேட்டார். அதற்கு அனஸ் அவர்கள் ஆம் என்றனர். தொழுகை முடிந்ததும் ‘இதைக் கவனத்தில் வையுங்கள்’ என்றார்கள்.
நூல்கள்:(திர்மிதீ: 955), அபூ தாவூத் 2779,(இப்னு மாஜா: 1483),(அஹ்மத்: 11735, 12640)
இமாம் எந்த இடத்தில் நிற்கிறார் என்பதை வைத்து இறந்தவர் ஆணா பெண்ணா என்பதை மக்கள் அறிந்து கொண்டு, அதற்கேற்ப துஆச் செய்யும் வாய்ப்பு இதனால் மக்களுக்குக் கிடைக்கிறது என்பது மேலதிகமாகக் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.