11) இப்னு ஹிப்பான்

முக்கிய குறிப்புகள்: இமாம்களின் வரலாறு

இப்னு ஹிப்பான்

இயற்பெயர் : முஹம்மத் பின் ஹிப்பான்

குறிப்புப்பெயர் : அபூஹாதிம்

தந்தையின் பெயர் : ஹிப்பான்

குலம் : பனூ தமீம் குலத்தைச் சார்ந்தவர்

பிறப்பு : ஆப்கானிஸ்தானில் உள்ள புஸ்த் என்ற ஊரில் ஏறத்தாழ ஹிஜ்ரீ 280 ல் பிறந்தார்.

கல்வி : ஹிஜ்ரீ 300 ல் கல்வி கற்க ஆரம்பித்தார். சஜஸ்தான் நைசாபூர், ஷாம், மிஸ்ர், ஹிஜாஸ், போன்ற ஊர்களுக்குக் கல்வியைத் தேடி பயணம் செய்தார். இந்தப் பிரயாணத்தின் மூலம் 2000 க்கும் மேலான ஆசிரியர்களைப் பெற்றார். ஹதீஸ் கலையிலும் சட்டத் துறையிலும் சிறந்து விளங்கியதால் நஸா, சமர்கன்த், புல்தான் போன்ற இடங்களில் தீர்ப்பு வழங்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. அத்துடன் இல்லாமல் மருத்துவம் வாணியல் ஆகிய கலையிலும் சிறந்து விளங்கினார். இவர் காலத்தில் இவருக்கும் ஹனஃபி மத்ஹபைச் சார்ந்தவர்களுக்கும் அடிக்கடி விவாதங்கள் நடைபெறும். இமாம் அபூஹனீஃபாவை விமர்சித்து பல புத்தகங்களைத் தொகுத்துள்ளார்.

ஆசிரியர்கள் : அபூ யஃலா இப்னு ஹுஸைமா, ஹசன் பின் சுஃப்யான், அபூ அரூபா இன்னும் பலர்.

இவரது மாணவர்கள்: இவர் கல்விக் கடலாக அந்தக் காலத்தில் விளங்கியதால் பெரும் பெரும் அறிஞர்களான இமாம் தாரகுத்னீ, இமாம் ஹாகிம், இப்னு முன்தஹ், இன்னும் பல மேதைகள் இவரிடம் கற்று இவருக்கு மாணவராகத் திகழ்ந்தார்கள்.

படைப்புகள் : இவர் அனைத்து அறிவிப்பாளர்களைப் பற்றிய விபரங்களை மக்களுக்குத் தருவதற்கு அத்தாரீஹ் (வரலாறு) என்ற பெரும் புத்தகத்தைத் தொகுத்தார். பின்பு‏ கிதாபுஸ்ஸிகாத் (நம்பகமானவர்கள்) என்ற பெயரில் சரியான அறிவிப்பாளர்களைப் பட்டியலிட்டார். பிறகு கிதாபுல் மஜ்ரூஹீன் மினல் லுஅஃபாயி வல்மத்ரூகீன மினர்ருவாத் (பலஹீனமானவர்கள் மற்றும் குறை காணப்பட்டவர்கள்) என்ற பெயரில் பலஹீனமான அறிவிப்பாளர்களைப் பட்டியலிட்டார். இந்த இரண்டு புத்தகமும் அவருடைய அத்தாரீஹ் என்ற பெரும் நூலின் சுருக்கம் தான். இமாம் புகாரி, முஸ்லிம், இப்னு ஹுஸைமா ஆகியோரைப் போல் ஆதாரப்பூர்வமான செய்திகளை மட்டும் தொகுக்கும் பாணியில் சஹீஹு இப்னி ஹிப்பானை தொகுத்தார். இது ஹதீஸ்களை உள்ளடக்கிய நூல். அவர் காலத்தில் வாழ்ந்த மக்கள் அறியாமையால் பலஹீனமான ஹதீஸ்களைக் கடைபிடித்ததைக் கண்டு உத்வேகத்துடன் இப்புத்தகத்தைத் தொகுத்தார். இன்னும் மஷாஹீரு உலமாயில் அம்சார், மற்றும் ரவ்ளதுல் உகலாயி வ நுஸ்ஹதுல் ஃபுளலாயி ஆகிய புத்தகங்களையும் நமக்குக் கிடைக்காத பல புத்தகங்களையும் படைத்துள்ளார்.

குறைகள் : நல்லவரா கெட்டவரா என்று அறியப்படாத அறிவிப்பாளர்களையெல்லாம் இவர் நல்லவர் என்று சான்று தந்துள்ளார். ஒருவரைப் பற்றி நிறை வராவிட்டாலும் குறையில்லாமல் இருந்தால் அவரை நல்லவர் என்று முடிவுகட்டி விடுவார். நல்ல அறிவிப்பாளர்கள் விஷயத்தில் தேவையில்லாத குறைகளையும் கூறியுள்ளார்.

மரணம்: ஹிஜ்ரீ 354 வது வருடத்தில் புஸ்த் என்ற ஊரில் இறந்தார்.