இப்னு பஸால் – பயிரியல் மற்றும் உழவியல் வல்லுனர்
இப்னு பஸால் – பயிரியல் மற்றும்
உழவியல் வல்லுனர்
அல்-ஆண்டலஸ் ((Al-Andalus) ) என்ற அரபி வார்த்தை வரலாற்றில் இபெரியன் பெனின்சுலா (Iberian Peninsula)) என்றழைக்கப்படும் முஸ்லிம்கள் ஆட்சி செலுத்திய ஓர் மலைப் பிரதேசமாக இடமாகும். இது ஸ்பெயின் மற்றும் போர்சுகல் நாடுகளோடு தொடர்புடைய ஒரு மலைப் பகுதியாகும். இடைக் கால அரபு காலத்தை சேர்ந்த வரலாறு மற்றும் புவியியல் ஆய்வாளர்கள், அல்-ஆண்டலஸ் பகுதியை தண்ணீர் வளமும் பல் வகையான செடிகளும், பழங்களும் செழித் தோங்கக் கூடிய பகுதியாக வர்ணிக் கிறார்கள்.
1085 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஸ்பெயின் நாட்டின் டோலிடோ பகுதியில் பிறந்தவர் இப்னு பஸால். இவர் சிறந்த பயிரியல் மற்றும் உழவியல் வல்லுனராக விளங்கினார். இவர் தோட்டக்கலை மற்றும் மரங்களை வளர்க்கும் கலை குறித்த ஆய்வுகளை சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மேற்கொண்டவர். மேலே கூறப்பட்டுள்ள அல்-ஆண்டலஸ் பகுதியில் விளையும் செடிகள், மூலிகைகள், காய்கறிகள் ஆகியவற்றை ஆய்வு செய்து ஒரு வேளாண் புத்தகத்தை இப்னு பஸால் தொகுத்துள்ளார்.
பழங்கள், உழவுத் தொழில் பற்றிய கலை குறித்த அவரின் புத்தகமான ‘திவான் அல் ஃபிலாஹா’ (வேளாண்மை திரட்டு) அவரின் சிறந்த நூலாக பார்க்கப்படுகிறது. இந்நூல் அவர் வாழ்ந்த காலத்திலேயே சுருக்கப்பட்டு ‘கிதாப் அல் கஸ்த் வல் பயான்’ (சுருக்கமும் தெளிவுமுள்ள புத்தகம்) என்ற பெயரில் வெளிவந்தது. இந்நூலில் சுமார் 180 செடிகளின் தன்மைகள் குறித்து அவர் விவரிக்கிறார். குறிப்பாக சுண்டல், அவரை, அரிசி, பட்டாணி, ஆளி, அயோசியாமசு, எள், பருத்தி, குசம்பப்பூ, குங்குமப்பூ, கசகசா, மருதாணி, கூனைப்பூ போன்ற செடிகள் குறித்து விவரித்துள்ளார். மூலிகைகள் மற்றும் மசாலா வகைகளான சீரகம், சீமைச்சோம்பு, பெருஞ்சீரகம், சோம்பு மற்றும் கொத்தமல்லி போன்றவற்றை குறித்தும் அந்நூலில் தொகுத்துள்ளார்.
நீர்ப்பாசனம் மற்றும் அதிக தண்ணீரில் வளரக்கூடிய காய்கறிகளான வெள்ளரி, முலாம்பழம், மயக்கம் உண்டாக்கும் செடி, தர்பூசணி, பூசணி, ஸ்குவாஷ், கத்திரிக்காய், வேருணவிற்க்காக வளர்க்கப்படும் ஒருவகைச் செடி, துள்ளு மற்றும் குமட்டி ஆகியனவையும் இப்புத்தகத்தில் விளக்கப் பட்டுள்ளது. வேர் காய்கறிகளான கேரட், முள்ளங்கி, பூண்டு, வெங்காயம், அல்லி மலர் இனத்தைச் சார்ந்த செடி வகை, இள மஞ்சள் நிறக் கிழங்கு, சூடான் மிளகு மற்றும் மாஞ்சிட்டி பற்றியும் விவரித்துள்ளார்.
மேலும் இலை காய்கறிகளான முட்டைக்கோஸ் , காலிஃபிளவர், கீரை, பருப்புக் கீரை மற்றும் வாடா மலர் ஆகியவை குறித்தும் விளக்கியுள்ளார். மரங்களை வளர்க்கும் கலையின் ஒரு முக்கிய அம்சமாக அவற்றின் இனப்பெருக்கம் குறித்தும் அவரது புத்தகம் பேசுகிறது. பனை, ஆலிவ், மாதுளை, சீமை மாதுளம்பழம், ஆப்பிள், அத்தி, பேரிக்காய், செர்ரி, வாதுமை பழம், பிளம், குழிப்பேரி, பாதம் கொட்டை, வாதுமை கொட்டை, ஹே ஸெல் கொட்டை, திராட்சை, எலுமிச்சை, ஆரஞ்சு, இனபறூங் கொட்டை, தேவ தாரு, சைப்ரஸ், மர வகையின் தவிட்டு நிறக்கொட்டை, இலை யுதிர்க்காத சீமை ஆல்வகை, இலையுதிரும் சீமை ஆல்வகை, ஐரோப்பிய பெருமர வகை மற்றும் அப்பிரியதரு ஆகிய மரங்களை குறித்தும் அவரது நூல் விளக்குகிறது.
தொழில்நுட்பமே வளர்ச்சி பெற்றிராத காலகட்டத்தில் தாவரங்கள் குறித்த மிகப்பெரிய ஆய்வை இப்னு பஸல் மேற்கொண்டுள்ளார். இவரது ஆக்கங்கள் பின்வந்த அத்துறை சார்ந்த வல்லுநர் களுக்கு ஒரு வேளாண் களஞ் சியமாக விளங்கியுள்ளது.
Source: unarvu (அக்டோபர்:25 – 31, 2019.)